Published:Updated:

“இயக்குநர் ஆகப்போறேன்!”

 வேல.ராமமூர்த்தி
News
வேல.ராமமூர்த்தி

நடிக்க வருவதற்கு முன்பே திரைத்துறையில் நிறைய நண்பர்கள் இருந்தர்கள்.

எழுத்தாளர், நடிகர் அடையாளங்களுடன் இயக்குநர் என்னும் அடையாளமும் சேரப்போகிறது வேல.ராமமூர்த்தி பெயருக்கு முன்னால். ஊரடங்கு காலத்தில், தான் இயக்கப்போகும் திரைப்படத்துக்கான திரைக்கதைப் பணியில் கவனம் செலுத்திவருகிறார்.
 வேல.ராமமூர்த்தி
வேல.ராமமூர்த்தி

“நடிப்பதும், எழுதுவதும் தற்செயலாக நிகழ்ந்தது. திரைப்பட இயக்கம் அப்படியானதல்ல. நிதானமாகச் செயல்படுத்த வேண்டியது. இந்த ஊரடங்கு காலத்தில் திரைக்கதை ஒன்றை எழுதிக் கொண்டி ருக்கிறேன். சலவைத் தொழிலாளர்களின் வாழ்வியல் சார்ந்த கதை. தமிழ் சினிமாவில் சலவைத் தொழிலாளர்கள் பற்றிய பதிவு மிகக் குறைவு. கதாபாத்திரமாகக் கடந்து செல்பவர்களாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைப்பாடு துயர மானது. அந்த உழைக்கும் மக்களின் வாழ்வை அழுத்த மாகப் பதிவுசெய்யும் படைப் பாக இருக்கும். வழக்கமான தமிழ் சினிமாவாக அது இருக்காது. அசல் தமிழ் அடையாளத்துடன் கூடிய படமாக இருக்கும்.”

 வேல.ராமமூர்த்தி
வேல.ராமமூர்த்தி

“ராணுவப்பணி, எழுத்தாளர், நடிகர்... இந்தப் பயணங்கள் பற்றி?”

“ராணுவத்தில் சேர்ந்தது தற்செயலானது. என் நண்பன் ஒருவன் வீட்டில் சண்டையிட்டு சென்னைக்குக் கிளம்பினான். அவனோடு நானும் கிளம்பி வந்தேன். திரும்பிச்சென்றால் வீட்டில் திட்டுவார்கள் என ராணுவத்தில் சேர்ந்தேன். பயிற்சியிலிருந்து வீட்டுக்குக் கடிதம் எழுதினேன். வீட்டில் அனைவரும் பயந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்த வருடம் அது. ‘நிலாவுக்கே செல்கிறார்கள். உன் மகன் இராணுவத்துக்குச் சென்றால் என்ன?’ என்று என் தம்பி அம்மாவைச் சமாதானப்படுத்தினார். நம் மண்ணை விட்டு, மொழியை விட்டுப் பிரிந்திருக்கையில் அதன்மீதான பிடிப்பு இன்னும் அதிகமானது. அண்ணா, நெடுஞ்செழியன் போன்ற திராவிட இயக்கப் பேச்சாளர்களின் பேச்சு ஒருபுறம். கண்ணதாசன் மறுபுறம். இப்படி மொழிமீதான ஈர்ப்பும் சமமாக வளர்ந்தது. கொள்கை மார்க்சியம் பக்கம் நின்றது. 74-ல் இராணுவத்திலிருந்து வந்து அஞ்சல்துறைப் பணியில் சேர்ந்தேன். முதல் சிறுகதை 74-ல் செம்மலரில் வெளியானது. பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, தோழர் எஸ்.ஏ.பி, பெ.மணியரசன் போன்றவர்கள் மத்தியில் என் முதல் சிறுகதை மார்க்சிய இதழில் வெளிவந்தது பெருமிதமாக இருந்தது. 40 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். நடிக்க வருவதற்கு முன்பே திரைத்துறையில் நிறைய நண்பர்கள் இருந்தனர்.

 வேல.ராமமூர்த்தி
வேல.ராமமூர்த்தி

நடிக்கும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. ஒருநாள், ‘நான் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர். என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என விக்ரம் சுகுமாரன் பேசினார். ஆர்வமில்லை எனத் தவிர்த்தேன். பின் நேரில் சந்தித்துக் கதை சொன்னார். நான் நடிப்பதற்கு ஏற்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் நடிக்கச் சம்மதித்தேன். பிறகு அதுவே ஒரு நீண்ட பயணமாகிவிட்டது. இப்போது இயக்குநராக அடுத்த பயணம்!’’