சினிமா
Published:Updated:

ரைட்டர் - சினிமா விமர்சனம்

ரைட்டர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரைட்டர் - சினிமா விமர்சனம்

அரசு இயந்திரத்தில் சிக்கி நசுங்கும் எளிய காவலதிகாரிகளின் உளவியலை இவ்வளவு விரிவாய் இதற்கு முன் தமிழ்சினிமா பேசியதில்லை

பஞ்ச் டயலாக்கில் கர்ஜிக்கும் சிங்கங்கள், எதிரிகளைத் துளைத்தெடுக்கும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்களுக்கு மத்தியில் அதிகார வர்க்கத்தால் கசக்கிப் பிழியப்படும் கடைநிலை ஊழியரே இந்த ‘ரைட்டர்.’

35 ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்த பழுத்த போலீஸ் ரைட்டர் சமுத்திரக்கனி. அதிகாரத்தின் ஏவல்சக்தியாய் இருந்தாலும் அதே அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கவும் தயங்காதவர். காவல்துறைக்கு யூனியன் வேண்டும் என இவர் நடத்தும் வழக்கால் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். இங்கே வந்து செட்டிலாவதற்குள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தன்னால் தொடங்கிய சிக்கல் இது என உணர்பவர் அதைத் தீர்க்க முயற்சி செய்ய, அதிகார வர்க்கம் அதற்குத் தடையாய் நிற்கிறது. இறுதியில் வென்றது யார் என்பதை உண்மைக்கு நெருக்கமாய் நின்று உணர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர்.

சமுத்திரக்கனியின் உடலுக்குள் நிஜமாகவே ஒரு எழுத்தரின் ஆவி புகுந்ததைப் போன்ற நடிப்பாற்றல். தளர்ந்த நடை, வளைந்து கொடுத்தே கூனிப்போன உடல்மொழி, முகத்தில் தேங்கி நிற்கும் இயலாமை என அச்சு அசல் அப்படியே கடைநிலை காவலதிகாரியின் வார்ப்பு. படத்தின் யதார்த்தத் தன்மைக்கு பலம் சேர்க்கிறது அவரின் உழைப்பு.

ரைட்டர் - சினிமா விமர்சனம்

சட்டத்தின் உடும்புப்பிடியில் மாட்டி மூச்சுவிடத் திணறும் இளைஞனாய் ஹரி கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். கதைக்கு மேலும் கனம் சேர்க்கிறது சுப்ரமணிய சிவா, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, கவின் ஜெய்பாபு ஆகியோரின் நடிப்பு. மகேஸ்வரி, திலீபன், கவிதாபாரதி, குமரேசன் என அத்தனை பேரும் இயல்பாய்ப் பொருந்திப்போகிறார்கள்.

பின்னணி இசையில் என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. ராஜாவின் கலை இயக்கம் கம்பீரமான போலீஸ் உலகத்தின் இண்டு இடுக்குகளையும் நம் கண்முன் நிறுத்துகிறது. பதற்றம், குற்றவுணர்வு, ஆதிக்க மனநிலை என கதைமாந்தர்களின் உணர்ச்சிகளுக்கேற்ற வகையில் பயணிக்கிறது பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு.

அரசு இயந்திரத்தில் சிக்கி நசுங்கும் எளிய காவலதிகாரிகளின் உளவியலை இவ்வளவு விரிவாய் இதற்கு முன் தமிழ்சினிமா பேசியதில்லை. இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப்பின் நேர்மைக்குப் பாராட்டுகள். சாதிய வன்கொடுமை, அரச பயங்கரவாதம் என விளிம்புநிலை மனிதர்களை பலி கேட்கும் சமூக அவலங்களைக் கோத்து ஒரு திரைக்கதையாய்ப் பின்னி அதைத் த்ரில்லராய் மாற்றியவகையில் மிளிர்கிறார்.

ரைட்டர் - சினிமா விமர்சனம்

ஆர்.டி.ஐ-யில் விவரம் கேட்பது ஒரு உயரதிகாரியை இவ்வளவு தவிப்புக்குள்ளாக்குமா? நூற்றில் ஒரு தற்கொலையாக அந்த மரணம் இருக்கும்போது ஏன் வலியச் சென்று இவரே மாட்டுகிறார்? பத்திரிகையில் வெளியான செய்தியை இன்னும் பூதாகரமாக்குவது போல ஏன் காவல்துறை நடந்துகொள்ளவேண்டும் போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

எனினும் காவல்துறையின் அறியப்படாத பக்கங்களையும் அதிகார வர்க்கத்தின் கோரமுகத்தையும் அதிர்ச்சியூட்டும் வகையில் காட்சிப்படுத்தியதில் நெஞ்சு நிமிர்த்துகிறார் இந்த ‘ரைட்டர்.’