
வலி மிகுந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி'யாகவே வந்துபோகிறார். ஈழத்தமிழ் பேசுவதிலும் உணர்வுகளை வெளிக்காட்டுவதிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
அகதிகள் சந்திக்கும் சட்டச் சிக்கல்கள், அவர்களின் வலி உள்ளிட்டவற்றை ஓர் ஈழத்தமிழ் அகதியின் வாழ்க்கை வழியாகச் சொல்லும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.'
கொடைக்கானலுக்கு விருந்தினராக வரும் லண்டன் இசைக்கலைஞர் ஜெஸ்ஸியை (தபியா மதுரா), உள்ளூரில் இசைக்குழு நடத்தும் மெத்தில்டாவும் (மேகா ஆகாஷ்), பாதிரியார் சேவியரும் (விவேக்) வரவேற்கின்றனர். ஜெஸ்ஸியுடன் இசைக்கலைஞரான புனிதனும் (விஜய் சேதுபதி) வருகிறார். புனிதன் உள்ளூர்க்காரர் என ஜெஸ்ஸியும், லண்டனைச் சேர்ந்தவர் என்று சேவியரும் மெத்தில்டாவும் மாறி மாறி நினைத்துக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் புனிதனின் பெயர் கிருபாநிதி என்றும், அவர் ஈழத்து அகதி என்பதும் தெரிய வருகிறது. மற்றொருபுறம் அவரைக் கொல்ல, கொலைவெறியுடன் சுற்றுகிறார் காவல் அதிகாரி ராஜன் (மகிழ் திருமேனி). விஜய் சேதுபதி உண்மையில் யார், அவரின் பிரச்னை என்ன என்பதை சுற்றலில் விட்டுச் சொல்கிறது படம்.

வலி மிகுந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி'யாகவே வந்துபோகிறார். ஈழத்தமிழ் பேசுவதிலும் உணர்வுகளை வெளிக்காட்டுவதிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சம்பிரதாயக் காதலியாக மேகா ஆகாஷ், உடல்மொழியில் மட்டும் மிரட்டும் வில்லனாக மகிழ் திருமேனி, அதிக ஆழமிருந்தும் கதையில் தாக்கத்தை ஏற்படுத்தாத வேடத்தில் விவேக், ஜெயம் ராஜா, கதையில் தாக்கமிருந்தும் ஆழமில்லாத பாத்திரங்களில் ராஜேஷ், கனிகா, கரு.பழனியப்பன் என அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனதில் நிற்க மறுக்கின்றனர்.
அகதி முகாம்களில் உள்ள சிக்கல்கள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அடையாள அட்டை வாங்குவதில் இருக்கும் குழப்பங்கள் எனத் தமிழ் சினிமா அதிகம் தொடாத பிரச்னைகளைப் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த். ஆனால் அனைத்துமே தகவல்களாக அடுக்கப்படுகிறதே தவிர, ஒரு படமாகக் கோவையாக இல்லாமல் இருப்பது அதன் வீரியத்தையும் சுவாரஸ்யத்தையும் குறைத்திருக்கிறது. கமர்ஷியல் காட்சிகளைத் திணித்ததும் படத்தின் தீவிரத்தன்மையைச் சிதைத்திருக்கிறது. கதாநாயகியின் பின்கதை, இலங்கை பாதிரியார், நாடற்றவனின் பயணம் எனத் திரைக்கதையில் பல அடுக்குகள் இருந்தும் அனைத்துமே மையக்கதைக்கு உதவாமல் தனித்தனியே நிற்கின்றன.

புதையுண்ட தேவாலயம், உடைந்த புத்தர் சிலை போன்ற இடங்களில் கிராபிக்ஸ் சுமார் ரகம் என்றாலும் பிற காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன். நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் சிம்புவின் குரலில் வரும் ‘முருகா' பாடல் மட்டும் ஆறுதல் பரிசு பெறுகிறது. ஜான் ஆபிரஹாமின் படத்தொகுப்பு, காட்சிகளை முழுமையடையச் செய்வதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
கூர்மையான அரசியல் வசனங்கள், துணிச்சலான கேள்விகள் போன்றவற்றை இன்னும் நேர்த்தியானதொரு திரைக்கதையில் பொருத்தியிருந்தால் இந்த அரசியல் உரையாடல் வலிமையானதாய் மாறியிருக்கும்.