Published:Updated:

யாதும் ஊரே யாவரும் கேளிர்: இலங்கை அகதியாக விஜய் சேதுபதி; அரசியலும் சட்டச் சிக்கல்களும்! படம் எப்படி?

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்: மொத்த படமும் புனிதன் என்கிற அகதியின் வழியாகவே பயணிக்கிறது. ஆதரவற்றவரான புனிதனை இலங்கையிலுள்ள ஒரு பாதிரியார் வளர்த்து, லண்டன் இசைப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்கிறார்.

Published:Updated:

யாதும் ஊரே யாவரும் கேளிர்: இலங்கை அகதியாக விஜய் சேதுபதி; அரசியலும் சட்டச் சிக்கல்களும்! படம் எப்படி?

யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்: மொத்த படமும் புனிதன் என்கிற அகதியின் வழியாகவே பயணிக்கிறது. ஆதரவற்றவரான புனிதனை இலங்கையிலுள்ள ஒரு பாதிரியார் வளர்த்து, லண்டன் இசைப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்கிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
உலக அகதிகளின் வலி, அவர்களின் பரிதாப நிலை, அவர்களுக்கான விடுதலையை, அவர்களின் திறமை, அங்கீகாரம் உள்ளிட்டவற்றை ஓர் ஈழத்தமிழ் அகதியின் வாழ்க்கை வழியாகப் பேசுகிறது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம்.

கொடைக்கானலில் இசைக்குழு ஒன்றை நடத்திவருகிறார் மெத்தில்டா (மேகா ஆகாஷ்). அவரின் ஊருக்குப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஜெஸ்ஸி (தபியா மதுரா) விருந்தினராக வர, அவரை வரவேற்கிறார் அந்த ஊரின் சர்ச் ஃபாதர் சேவியர் (விவேக்). ஜெஸ்ஸியின் காரில் அவருடனே வந்து இறங்குகிறார் இசைக்கலைஞர் புனிதன் (விஜய் சேதுபதி). புனிதன் லோக்கல் ஊர்க்காரர் என்று ஜெஸ்ஸியும், ஜெஸ்ஸியுடன் வந்த லண்டன்காரர் என ஃபாதர், மெத்தில்டா உள்ளிட்டவர்களும் மாறி மாறி நினைத்துக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் புனிதன், 'கிருபாநிதி' என்ற பெயரில் குடியுரிமை கேட்டு வந்திருக்கும் ஈழ அகதி என்பது தெரிய வருகிறது.

விஜய் சேதுபதி , மேகா ஆகாஷ்
விஜய் சேதுபதி , மேகா ஆகாஷ்

உண்மையில் இந்தப் புனிதன் யார், 18 ஆண்டுகளாக அவர் எங்கிருந்தார், இசையுலகில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் அவருக்கும் காவல்துறை அதிகாரி ராஜனுக்கும் (மகிழ் திருமேனி) என்ன பகை, இறுதியில் புனிதனுக்கு ஓர் அடையாளம் கிடைத்ததா, அதற்குப் பின்னால் உள்ள சட்டச் சிக்கல்கள் என்னென்ன போன்ற கேள்விகளுக்கு ஆக்‌ஷனையும், காதலையும் கலந்து உணர்ச்சிகரமாகப் பதில்கள் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த்.

நாடற்றவன் என்ற வலி, போர் தந்த ஆறாத வடு, வாழ்க்கை பாடம் தந்த நிதானம், இசையுலகில் சாதிக்க வேண்டும் என்ற பெருங்கனவு, வாழ்வை அழகாக்கும் காதல் என வாழப் போராடும் கணமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி. ஆனால், அதில் 'விஜய் சேதுபதி'யாகவே வந்து ஜஸ்ட் பாஸ் மட்டுமே வாங்கியுள்ளார். ஈழத்தமிழ் உச்சரிப்பிலும், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் இன்னும் 'ஹோம் ஒர்க்' செய்திருக்கலாம். கதாநாயகியாக மேகா ஆகாஷ், சம்பிரதாய காதலியாகக் கால் நனைத்து மட்டும் போகிறார். பிரதான வில்லனாக மகிழ் திருமேனி, தன் முரட்டுப் பார்வையாலும், உடல்மொழியாலும் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார். ஆனால், இறுதியில் அவரும் சம்பிரதாய வில்லன் ஆகிவிடுகிறார்.

மறைந்த நடிகர் விவேக், கனிகா, ராஜேஷ் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். ஆனால், எந்தப் பாத்திரங்களும் கதையில் அழுத்தமான பாதிப்பைக் கடத்தவில்லை. இவர்கள் தவிர, பவா செல்லதுரை, மோகன் ராஜா, ரித்விகா, ரகு ஆதித்யா, கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த், இமான் அண்ணாச்சி, வித்யா பிரதீப் என ஒரு டஜன் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு காட்சிகளுக்கு மட்டும் வந்து போகின்றனர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விவேக்
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விவேக்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் அம்மக்கள் இரக்கமின்றி நடத்தப்படுவது, ஒரு மனிதனுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு விடுதலைக்காக ஏங்குவது, அகதி அடையாள அட்டைகளை வாங்கப் பல இன்னல்களைச் சந்திப்பது எனப் பேச வேண்டிய பல அரசியல் சிக்கல்களைப் படம் முன்வைக்கிறது. அகதிகளின் வாழ்க்கை முழுவதும் பின்தொடரும் 'கியூ' பிரான்ச் போன்ற விசாரணை அமைப்புகளால் ஏற்படும் தொந்தரவுகள், இந்திய அரசியலமைப்பு, அகதிகளை எவ்வாறு அணுகுகிறது என்ற நிதர்சனம் என இதுவரையில் தமிழ் சினிமாவில் காட்டப்படாத விஷயங்களையும் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். முக்கியமாக, அகதிகள் முகாமில் தங்கி கல்வி கற்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு சட்டரீதியாகவே மறுக்கப்படும் தகவலையும் பேசியிருக்கிறது. ஆனால், மேற்சொன்னவற்றில் பலவற்றை வெறும் தகவலாக மட்டுமே கடத்தி, ஒரு படமாக முழுமையடையாமல் போயிருப்பது அந்த அரசியல் உரையாடல்களின் வீரியத்தைக் குறைத்திருக்கிறது.

மொத்த படமும் புனிதன் என்கிற அகதியின் வழியாகவே பயணிக்கிறது. ஆதரவற்றவரான புனிதனை இலங்கையிலுள்ள ஒரு பாதிரியார் வளர்த்து, லண்டன் இசைப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்கிறார். பின் இலங்கை ராணுவத்தில் மாட்டுவது, சிறைத் தண்டனை, அங்கிருந்து தப்பித்தல், வேறொரு மாநிலத்தில் வாழ்க்கை என முற்றிலும் ஆழமான, அழுத்தமான பகுதியைக் கொண்டுள்ளது அந்தக் கதாபாத்திரம். ஆனால், காதல், டூயட், ஹீரோயிஸம், சாகச சண்டைக்காட்சிகள், கதாநாயகன் vs வில்லன் மோதல் எனக் கூடவே கமர்ஷியல் விஷயங்களைச் சேர்த்து, அக்கதாபாத்திரத்தை மசாலா ஹீரோவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதி
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதி

புனிதன் கதாபாத்திரத்தின் ஆழத்தை விலக்க, உடன் வரும் கதாபாத்திரங்களாவது உதவுகின்றனவா என்றால், அதுவும் இல்லை. படத்தின் தொடக்கத்திலிருந்தே எக்கச்சக்க கதாபாத்திரங்கள் அழுத்தமின்றி குவியத் தொடங்குகின்றன. கொடைக்கானலில் உள்ள புதையுண்ட சர்ச், அதற்குப் பின்னால் உள்ள கதை, கதாநாயகிக்கான பின்கதை, கதாநாயகியின் தந்தைக்கான பின்கதை பாடல், லண்டன் இசை ட்ரூப், கதாநாயகனைத் துரத்தும் வில்லன் என பல லேயர்களில் அடுக்கடுக்காக கதாபாத்திரங்களும், கிளைக் கதைகளும் உள்ளன. ஆனால், அவை எதுவுமே திரைக்கதையின் மையத்தை நோக்கி நகராமல் ஆங்காங்கே முட்டுச் சந்தில் மோதி நிற்கின்றன. இவை எல்லாவற்றையும் விலக்கி விட்டு, புனிதன் என்கிற கிருபாநிதியைப் பின்தொடர்வதே பெரும்பாடாகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ்
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ்

இலங்கை தேவாலய ஃபாதர் (ராஜேஷ்), கிருபாநிதியின் அக்கா (கனிகா), புனிதனுக்கு உதவும் இலங்கைத் தமிழர் (கரு.பழனியப்பன்) என ஆங்காங்கே வரும் சில கதாபாத்திரங்களும், அதன் கதைகளும் கொஞ்சம் ஆறுதல் தருகின்றன. திரைக்கதையைச் சிறப்பாகச் செப்பனிட்டிருந்தால், தனக்கான அடையாளத்தைத் தரக் கோரி கனிகாவிடம் விஜய் சேதுபதி மன்றாடும் இடம் கண்ணீரையும், அகதிகளுக்கான விடுதலை குறித்து உலக மேடையில் பேசும் இறுதிக்காட்சி கைத்தட்டலையும் பார்வையாளர்களிடமிருந்து பெற்றிருக்கும். ஆனால், அப்படி நடக்காததால் படம் ஒரு மேம்போக்கான அனுபவமாக மட்டுமே முடிந்துபோகிறது.

இலங்கையில் நடக்கும் பின்கதை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் கவனம் பெறுகிறார். நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில், சிலம்பரசன் பாடிய 'முருகா' பாடல் மட்டும் தேறுகிறது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவுமில்லை, படத்திற்குத் தேவைப்படவுமில்லை. ஆக்‌ஷன் காட்சிகளிலும், விறுவிறுப்பான காட்சிகளிலும் பின்னணி இசை ஒர்க் அவுட் ஆகியுள்ளது. உணர்வுப்பூர்வமான இடங்களில் மட்டும் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். படத்திற்குப் பெரும் மைனஸ் ஆக மாறியிருக்கிறது ஜான் ஆபிரஹாமின் படத்தொகுப்பு. நான்-லீனியர் பாணியில் தொகுப்பதாக நினைத்து, மொத்த படத்தையும் ஆங்காங்கே தொங்கவிட்டுள்ளனர். எது பின்கதை, எது சமகாலத்தில் நடக்கிறது, எது கதாபாத்திரத்தின் மனதில் ஓடுகிறது என எந்த வேறுபாட்டையும் படத்தொகுப்பிலும் கலர்டோனிலும் காட்டாமல், வரிசையாக ஒரே மெட்டில் கோர்வையற்று காட்சிகளை அடுக்கியுள்ளனர். பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளில் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருக்கலாம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதி
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதி

அரசியல் ரீதியில் ஒலிக்கும் கூர்மையான வசனங்களும், ஒரு அகதியின் கண்ணீரைப் பேசும் வசனங்களும் படம் முழுவதுமே விரவிக் கிடக்கின்றன. ஆனால், அவை நேர்த்தியான திரைக்கதையில் பொருத்தப்பட்டிருந்தால், கைத்தட்டலோடு சமூகத்தின் பேசு பொருளாகவும் இப்படம் மாறியிருக்கும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' அரசியல் மட்டுமே பேசுகிறது, ஆனால் படமாக ஈர்க்கவில்லை.