சினிமா
தொடர்கள்
Published:Updated:

யானை - சினிமா விமர்சனம்

அருண் விஜய்  - பிரியா பவானிசங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண் விஜய் - பிரியா பவானிசங்கர்

குடும்பக் கதையாகப் படத்தை நகர்த்திச் செல்ல நினைத்த இயக்குநருக்கு அசுரபலம் ராதிகா. இரண்டு மூன்று காட்சிகள்தான் என்றாலும் நெஞ்சை கனக்கச் செய்கிறார்.

பார்த்துப் பழகிய பழைய ஹரி மசாலாவில் காலத்திற்கேற்ப கொஞ்சம் சாதி எதிர்ப்பு, கொஞ்சம் பெண் விடுதலை(?) எல்லாம் கலந்து தூவினால் அதுதான் `யானை.'

ஊர்ப் பெரியவர் ராஜேஷுக்கு முதல் தாரம் வழியாக மூன்று மகன்கள். இரண்டாவது மனைவி ராதிகா வழியாக ஒரு மகன் - அருண் விஜய். தம்பியை `மாற்றாந்தாய் மகன்' எனத் தள்ளியே வைத்திருக்கிறார்கள் அண்ணன்கள். ஒருகட்டத்தில் விரிசல் பெரிதாக, குடும்பம் பலதுண்டுகளாகச் சிதறுகிறது. இது இவர்களின் பொது எதிரியான வ.ஐ.ச.ஜெயபாலன், மகன் ராமசந்திர ராஜு இருவருக்கும் வசதியாக, கலங்கிய குட்டையை அவர்கள் மேலும் குழப்புகிறார்கள். இறுதியில் குடும்பமாய்ச் சேர்ந்து எதிரிகளை அவர்கள் வென்றார்களா இல்லையா, அதற்காக அருண் விஜய் எத்தனை ஆயிரம் தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது என்பதையெல்லாம் தன் ஸ்டைலில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.

யானை - சினிமா விமர்சனம்

சிலகாலம் கழித்து அருண் விஜய் மீண்டும் ஊர்ப்பக்கத்துப் பையனாய் என்ட்ரி கொடுத்திருக்கிறார். உடல்வாகு, மொழி உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் தெரிகிறது அவரின் மெனக்கெடல். ஹரியின் ஹீரோக்கள் இதற்கு முன்னர் பலதடவை ஏற்றுச் செய்த அதே கதாபாத்திரம்தான் என்றாலும் முடிந்தவரை வித்தியாசம் காட்டப் போராடுகிறார். ஹீரோயின் பிரியா பவானிசங்கருக்கு ஹீரோவுக்காக உருகி, மருகி கண்ணீர் சிந்தும் ரெகுலர் வேடம்.

குடும்பக் கதையாகப் படத்தை நகர்த்திச் செல்ல நினைத்த இயக்குநருக்கு அசுரபலம் ராதிகா. இரண்டு மூன்று காட்சிகள்தான் என்றாலும் நெஞ்சை கனக்கச் செய்கிறார். சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், தலைவாசல் விஜய், ஐஸ்வர்யா என மற்றவர்கள் அனைவரும் பரபர டெம்ப்ளேட்டில் சிக்கிக் காணாமல்போகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசை பெரும் ஏமாற்றம். பல இடங்களில் நெய்தல் பரப்புகளையும் சில இடங்களில் திரைக்கதையையும் சேர்த்தே தூக்கிச் செல்கிறது கோபிநாத்தின் ஒளிப்பதிவு.

யானை - சினிமா விமர்சனம்

கிறக்கம் - மயக்கம், சப்போர்ட்டு - ரிப்போர்ட்டு என இன்ஸ்டன்ட் பாடலாசிரிய நடிகர்கள்போல மொத்த ஊரும் வசனம் பேசிக்கொண்டே இருப்பது சலிப்பு. பல நிமிடங்கள் நீளும் தனி காமெடி ட்ராக்கில் ஒருசில விநாடிகள் சிரிப்பு வந்தாலே ஆச்சர்யம். சொந்தக் குடும்பத்தில் நிலவும் சாதிவெறியை ஹீரோ திரும்பத் திரும்ப உரக்க விமர்சிப்பது, மாற்றுமதம் குறித்து கவனமாய்க் கையாண்டிருப்பது, பெண்கள் குறித்தான வசனங்கள் என ஹரி ஒரு படைப்பாளியாய் நிறையவே பண்பட்டிருக்கிறார். ஆனால் இன்னமும் `பெத்தவங்க சம்மதத்தோடதான் காதல் கல்யாணம் பண்ணணும்' என மேலோட்டமாய்ப் பேசுவது உறுத்தல்.

ஹரி ஸ்டைலில் சொல்வதானால் மொத்தமாகத் தடம் மாறிவிடாமல், சிறந்த கம்பேக்காகவும் உருமாறாமல், தட்டுத் தடுமாறிக் கரையேறுகிறது யானை.