சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

யாத்திசை - சினிமா விமர்சனம்

யாத்திசை -  சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
யாத்திசை - சினிமா விமர்சனம்

வெல்ல முடியாத வீரன் ரணதீரப்பாண்டியனாக சக்திமித்ரன். ‘இவர்தான் மாவீரன் ரணதீரன்' என்று முகம் காட்டுவதற்கு முன்பு சொல்லப்படும் எல்லாப் புகழ் மொழிக்குமான உருவமாக நியாயம் சேர்த்திருக்கிறார்.

தாய்நிலத்தை மீட்டல், உரிமைக்கான வேட்கை, இனத்தின் விடுதலை என எந்தப் பெயரில் நிகழ்த்தப்பட்டாலும் எல்லாப்போர்களும் அதிகாரத்தை நோக்கியவையே; எல்லா அதிகாரங்களும் ஒடுக்குமுறையும் பாகுபாடும் வன்முறையும் நிறைந்தவையே என்பதைப் பழந்தமிழர் வரலாற்றுப் பின்னணியில் விளக்கும் படமே ‘யாத்திசை.'

ஏழாம் நூற்றாண்டில் பாண்டியப் பேரரசை வீழ்த்த சேர, சோழப் படைகள் பழங்குடி இனக்குழுக்களுடன் இணைந்து போர் தொடுக்கின்றன. கடும் யுத்தத்துக்குப் பின் எல்லாப் படைகளையும் வீழ்த்தி ஈடு இணையற்ற வீரனாகத் தன்னை நிலைநாட்டிக்கொள்கிறான் பாண்டிய மன்னன் ரணதீரன். தோல்வியால் புலம்பெயரும் எயினர் குலம், விவசாயத்தை இழந்து பாலைநிலத்தில் அவதியுறும் வேட்டைக்குடியாக மாறுகிறது. மீண்டும் தங்கள் நிலத்தைக் கைப்பற்ற உறுதியேற்கும் எயினர் குல இளைஞன் கொதி, பாண்டியர்களைத் தோற்கடிக்க சோழர்களுக்கு அழைப்பு விடுக்கிறான். ‘முதலில் நீங்கள் பாண்டியர்களின் கோட்டையைக் கைப்பற்றுங்கள். பிறகு நாங்கள் வருகிறோம்' என்று மங்கிய நம்பிக்கையுடன் தெரிவிக்கும் சோழர்கள், புலிக்கொடியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறார்கள். கொதியின் தலைமையிலான எயினர் குழு பாண்டியர் படைகளை வீழ்த்தியதா, சோழர்கள் வந்தார்களா என்பதைக் கற்பனையின் மீதெழும் வரலாற்றுப்பின்னணியுடனும் வலுவான பண்பாட்டுத்தளத்துடனும் காட்சிகளாக விரிக்கிறது திரைப்படம்.

யாத்திசை -  சினிமா விமர்சனம்
யாத்திசை - சினிமா விமர்சனம்

எயினர் குல இளைஞன் கொதியாக சேயோன். மண்ணின் கூறுகளை உள்வாங்கிய உடல்மொழியுடனும் லட்சிய வேட்டம் கொண்ட மன உறுதியுடனும் விளங்கும் ஆதிக்குடி இளைஞனாகவே மாறியிருக்கிறார். சாத்தியமே இல்லாத கனவு என்றாலும் அதனை நோக்கிய எத்தனமாக, பாண்டியர்களை வீழ்த்தும் போருக்காகத் தன் இனத்தைத் திரட்டுவது, சோழர்களிடம் வேண்டு கோள் விடுப்பது, போர் உத்திகள் மூலம் பாண்டியர் படைகளை முறியடிப்பது போன்ற காட்சிகளில் தேர்ந்த நடிகராக மிளிர்கிறார். அதிகாரத்தைக் கைப் பற்றும் வரையுள்ள உடல்மொழிக்கும் அரண்மனைக்குச் சென்றபின் மாறும் உடல்மொழிக்குமான வித்தியாசங்களை நுட்பமாகப் பிரதிபலிக்கிறார்.

வெல்ல முடியாத வீரன் ரணதீரப்பாண்டியனாக சக்திமித்ரன். ‘இவர்தான் மாவீரன் ரணதீரன்' என்று முகம் காட்டுவதற்கு முன்பு சொல்லப்படும் எல்லாப் புகழ் மொழிக்குமான உருவமாக நியாயம் சேர்த்திருக்கிறார். ‘தான் தோற் கடிக்கப்பட்டுவிட்டோம்' என்பதை உணர்ந்து குறுகும் தருணம், அதேநேரத்தில் ‘தோற்றுவிட்டோமே தவிர வீழ்த்தப்படவில்லை' என்று நம்பிக்கையில் மீண்டு அடுத்தடுத்த உத்திகளை வகுக்கும் மீட்சி என்று பல்வேறு பரிமாணங்களைத் தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேவரடியாராக ராஜலெட்சுமி. பரதத்துக்கும் சதிராட்டத்துக்கும் இடையிலான நாட்டிய முத்திரைகளைக் காட்டுவதாகட்டும், தங்கள் காம இச்சைக்காக வைதீக அந்தணர்கள் தங்களை இடமாற்றம் செய்வதை உணர்ந்து வருந்துவதாகட்டும், அதிகாரம் கைமாறினாலும் தங்கள் நிலை மாறப்போவதில்லை என்ற எதார்த்தத்தை உணரும் நிலையாகட்டும், எல்லாக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேநேரம் ராஜலெட்சுமிக்கான வெளி இன்னும் விரிவடைந்திருக்கலாம். போருக்கு ஆயத்தமாகும் எயினர் இனக்குழுவின் பலிச்சடங்கை நிகழ்த்தும் பூசாரியாக மெய்சிலிர்க்க வைக்கிறார் குருசோமசுந்தரம். பாண்டியர்களுக்குத் தோள்கொடுக்கும் பெரும்பள்ளி இனக்குழுவின் தலைவியாக வரும் சுபத்ராவும் பாத்திரம் உணர்ந்து பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

பண்பாட்டுத் தடயங்களை அழியாமல் ஏந்திச்செல்லும் எயினர் குல இனக்குழு வாழ்வியல், இசையாலும் நடனத்தாலும் பொலியும் தேவரடியார்களின் கலைவாழ்க்கை, ரத்தத்தால் சிவக்கும் யுத்தம் மற்றும் போருக்கான பலிச்சடங்குகள் ஆகியவற்றுக்கான மன ஒத்திசைவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது சக்கரவர்த்தியின் இசை. வெயில் காந்தும் பாலைநிலப்பகுதி, மௌனத்தையும் மர்மத்தையும் போர்த்தி நிற்கும் அடர்ந்த வனம், அமைதியைக் குத்திக்கிழித்து ஆர்ப்பரிக்கும் அருவி, ஆடற்கலை நிகழும் கோயிற்கூடம், தங்கம் ததும்பும் பாண்டியர் அரண்மனை என அனைத்தையும் அதனதன் இயல்புக்கேற்ப பதிவு செய்திருக்கிறது அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவு. ஓம் சிவ பிரகாஷின் சண்டைக் காட்சிகள், சுரேஷ் குமாரின் உடை அலங்காரம், ரஞ்சித்குமாரின் கலை இயக்கம், வினோத் சுகுமாரனின் ஒப்பனை ஆகியவை பக்கபலங்கள். பெரிதாகக் குறை துறுத்தாத வரைகலை.

பெரும் பொருட்செலவில்லை, ஓரிருவரைத் தவிர அனைவருமே அறிமுக நடிகர்கள். ஆனாலும் ஒரு பிரமாண்டப் படம் பார்க்கும் உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதுடன் கலைநேர்த்தி குறையாமல் படைப்பைத் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரனுக்கு வாழ்த்துகள். வரலாற்றுப்படம் என்றாலே பிரமாண்ட அரண்மனைகள், பகட்டான ஆடை அணிகலன்கள் என்று பழக்கப்பட்ட மனச்சித்திரங்களை உடைத்து அவர்களை உண்மையின் வெளிச்சத்தில் நிறுத்தியிருப்பதே தரணி ராசேந்திரனின் முதல் வெற்றி.

யாத்திசை -  சினிமா விமர்சனம்

சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பழந்தமிழ் வசனங்கள், தமிழ்மரபுடன் இயைந்த ஆடை அணிகலன்கள், போர் நடைபெறுவதற்கு முன்பு நடைபெறும் சடங்குகள், தன்னைத் தானே பலி கொடுத்துக்கொள்ளும் நவகண்டம் என்னும் தொல்தமிழ் மரபு ஆகியவற்றை முதன்முதலில் தமிழ்ப்பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது யாத்திசை. அதிலும் குறிப்பாக பழங்குடித் தன்மை மாறாத எயினர்களுக்கும் பேரரசாக உருப்பெற்ற பாண்டியர்களுக்கும் இடையில் வழக்குமொழி, ஆடை அணிகலன்கள், போர்க்கருவிகள் ஆகியவற்றில் உள்ள வித்தியாசங்களை நுட்பமாகக் காட்டியிருக்கிறார்கள். எந்த அரசு அமைந்தாலும் தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தந்திரமிக்க வைதீகர்களையும் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வழக்கமான சரித்திரப்படங்களின் போர்க்காட்சிகள் நம்மை வியப்பிலாழ்த்தி ரசிக்கவைக்கும். ஆனால் இந்தப் படத்திலோ போர் என்பது எவ்வளவு பெரிய அழிவுச்செயற்பாடு என்பதை அதன் கொடூர வெப்பத்துடன், ரத்தக்கவுச்சியுடன் காட்சிப்படுத்தியிருப்பது முக்கியமானது. அந்தவகையில் போருக்கும் அதிகாரத்துக்கும் எதிரான அரசியலைப் படைப்புநுட்பத்துடன் முன்வைத்திருக்கிறது இந்தப் படம்.

அதேநேரம் தேவரடியார்கள் பாத்திரம் முழுமையடையாதது, சடங்குகளைத் தாண்டி எயினர்களின் ஊர் மற்றும் பெண்களின் வாழ்க்கை பதிவுசெய்யப்படாதது, ஆங்காங்கே காணப்படும் தொழில்நுட்பப்பிசிர்கள் மற்றும் போதாமைகள் சுட்டிக்காட்டப்பட வேண்டிய குறைகள்.

என்றாலும், காட்சியமைப்புகளிலும் பேசுபொருளிலும் புதிய திசை காட்டியிருக்கும் ‘யாத்திசை'யை வரவேற்கலாம்.