சினிமா
Published:Updated:

Shareபட்டா பரம்பரை: “என் வாழ்க்கையைத்தான் அனிமேஷன் ஆக்குறேன்!”

சோனியா
பிரீமியம் ஸ்டோரி
News
சோனியா

என்னோட பசங்க அதிகமா கார்ட்டூன் பார்ப்பாங்க. அவங்களுக்காக ரைம்ஸ் பேசி நாமளே ஏன் கார்ட்டூன் ரெடி பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு.

குமரி வட்டார வழக்கில் காமெடி அனிமேஷன் செய்து அசத்தும் யூடியூப் சேனல் sonia mahi. எப்படி இந்த ஐடியா தோன்றியது என்று விரிவாகப் பேசத் தொடங்கினார், சேனலை நடத்திவரும் சோனியா.

“என்னோட சொந்த ஊர் ஆவரைகுளம். எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டமாக இருந்தாலும் கன்னியாகுமரி பக்கம் என்பதால் நெல்லை பாஷையும் இல்லாம, கன்னியாகுமரி பாஷையும் இல்லாம ரெண்டும் கலந்த கலவையா எங்க ஊர் பாஷை இருக்கும். என் கணவர் மகேஷ், வக்கீலாக இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு கணவருடைய ஊரான கன்னியாகுமரிக்கு வந்துட்டேன். ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்துக்கிட்டிருந்தேன்.

லாக்டௌன் போட்டப்ப ஸ்கூல் மூடிட்டாங்க. அதனால, வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிச்சது. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் என்கிட்ட போன் கிடையாது. கல்யாணத்துக்குப் பிறகு என் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்த போனில், யூடியூப் ஆப்பில் ‘Sonia Mahi’ன்னு ஒரு சேனல் ஆரம்பிச்சேன். அதில் எங்களுடைய தோட்டம், சமையல் வீடியோன்னு அப்பப்ப வீடியோ போட்டுட்டு இருந்தேன்.

Shareபட்டா பரம்பரை: “என் வாழ்க்கையைத்தான் அனிமேஷன் ஆக்குறேன்!”
Shareபட்டா பரம்பரை: “என் வாழ்க்கையைத்தான் அனிமேஷன் ஆக்குறேன்!”

என்னோட பசங்க அதிகமா கார்ட்டூன் பார்ப்பாங்க. அவங்களுக்காக ரைம்ஸ் பேசி நாமளே ஏன் கார்ட்டூன் ரெடி பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. கார்ட்டூன் மேக்கிங் ஆப்பில் சும்மா பசங்களுக்குப் பிடிச்ச ரைம்ஸைப் பண்ணினேன். அது பசங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நாம ஏன் பெரியவங்களுக்குப் பிடிக்கிற மாதிரியான கார்ட்டூன் ரெடி பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு.

எனக்குக் கதை பேசுறது ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்து நிறைய கதைகள் எல்லாம் கேட்டிருக்கேன். நாம கேட்ட, நாம பார்த்த கதைகளையே ஸ்கிரிப்ட் மாதிரி ரெடி பண்ணி கார்ட்டூன் பண்ணலாம்னு தோணுச்சு. என்னுடைய ஸ்கூலில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை கார்ட்டூன் பண்ணி என் கணவர்கிட்ட காட்டினேன். அவர் ‘ரொம்ப நல்லா இருக்கு... இதை யூடியூபில் போடு’ன்னு சொன்னார். நானும் போட்டேன். அந்த வீடியோவிற்கு நல்ல ரீச் கிடைச்சது.

Shareபட்டா பரம்பரை: “என் வாழ்க்கையைத்தான் அனிமேஷன் ஆக்குறேன்!”

எனக்கு ஒரு அக்கா, மூணு தம்பிங்க, ஒரு தங்கச்சி. மூன்று தம்பியில், ஒரு தம்பி மட்டும் கொஞ்சம் வாலு. அவன் பேரு சுபின். அதனால, என்னுடைய கார்ட்டூனில் கொஞ்சம் துறுதுறுன்னு இருக்கிற பையனுக்கு சுபின் எனப் பெயர் வச்சிட்டேன். அதே மாதிரி ராணி, சத்யா, சோபியா எல்லாமே என் குடும்ப உறுப்பினர்களுடைய பெயர்கள்தான். என் கார்ட்டூனில் ஒரு கதாபாத்திரத்திற்கு `பூமாரி’ன்னு பெயர் வச்சிருப்பேன். அது என் தோழியின் பெயர்.

ஹாஸ்டலில் நான் இருந்தப்ப அங்கே நடந்த விஷயங்கள், ஸ்கூல் கதை, அக்கா - தங்கச்சி சண்டை, அண்ணன் - தங்கச்சி சண்டை, அக்கம் பக்கம் புரணி பேசுறதுன்னு என் வாழ்க்கையில் நடந்த, நான் கேட்ட எல்லாக் கதைகளையும் அனிமேஷன் மூலமா வெளிப்படுத்திட்டு இருக்கேன். என் அக்கா, தங்கச்சி, என் ஃப்ரெண்ட்ஸ் பலரும் எனக்கு ஐடியா கொடுப்பாங்க. ஆரம்பத்தில் என் கணவர் என்னுடைய வீடியோ எதையும் பார்க்க மாட்டார். பிறகு, அவர் எல்லாத்தையும் பார்த்துட்டு என்னைப் பாராட்டினார்.

Shareபட்டா பரம்பரை: “என் வாழ்க்கையைத்தான் அனிமேஷன் ஆக்குறேன்!”

சில நேரம் கார்ட்டூன் கிரியேட் பண்ணி, வாய்ஸ் ஓவர்லாம் பேசி முடிச்சிட்டு அவுட் போட்டா திடீர்னு ஸ்ட்ரக் ஆகி, அதுவரைக்கும் பண்ணின எல்லாமே அழிந்து ஆரம்பத்திலிருந்து பண்ண வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் ரொம்ப எரிச்சலா இருக்கும். சில நேரம், ஒரு வீடியோவிற்கே ரெண்டு, மூணு நாள் ஆகும். வாய்ஸ் பொறுத்தவரை அந்த ஆப்பில் சில அட்ஜஸ்மென்ட் பண்ணிக்கலாம். ஒரு குரலில் 2, 3 வாய்ஸ் மாத்திக்கலாம். அதுதவிர, எப்பவாச்சும் என் கணவரைப் பேசச் சொல்லுவேன். சின்னப் பிள்ளை கேரக்டர்னா என் பசங்களைப் பேசச் சொல்லுவேன். என்னோட பேச்சு வழக்கே இப்படித்தான் இருக்கும் என்பதால் சுலபமா எங்க ஊர் பாஷையில் பேச முடியுது.

எனக்கு அனிமேஷன் படிச்சு நாமளே சொந்தமா கார்ட்டூன் கிரியேட் பண்ணணும்னு ஆசைதான். என் கணவரும் என் ஆசைக்கு சப்போர்ட் பண்றாரு. ஆனா, என்னால அதற்கான நேரம் ஒதுக்க முடியல. இப்போ சமீபமா, ஷார்ட் பிலிம் டைரக்ட் பண்ணணும்னு ஆசை வந்திருக்கு. என் கதையை நான் எதிர்பார்க்கிற எமோஷனோட ஒருத்தர் நடிச்சு அதைத் திரையில் பார்க்கணும்னு ஆசையா இருக்கு” என்கிறார்.

கனவு மெய்ப்படட்டும் சோனியா!