
எனக்கு ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கப் பிடிக்கும். தெரிஞ்சிக்கிட்டதை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்க ரொம்பப் பிடிக்கும்.
என்னைப் பார்க்கிற பலரும், பொய்யா மிகைப்படுத்தி எதையும் சொல்லாம உண்மையா ஒரு புராடக்ட் குறித்து ரிவ்யூ பண்றீங்க. நேர்மையான தகவல்கள் இருக்கிறதனாலதான் தொடர்ந்து உங்க சேனல் பார்க்கிறோம்னு சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு’’ எனப் புன்னகைக்கிறார் தமிழ்ச்செல்வன்.
டெக்னாலஜி குறித்த செய்திகளைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ‘TAMIL TECH - தமிழ் டெக்' தளம் உதவியாக இருக்கும். கேஷுவலாக புராடக்ட் ரிவ்யூ பண்ண ஆரம்பித்தவர், இன்று சக்சஸ்புல் யூடியூபரான வெற்றிக்கதை குறித்துப் பேச ஆரம்பித்தார்.
‘‘என்னோட ஊர் கிருஷ்ணகிரி. பெங்களூரில் பி.டெக் படிக்க சீட் கிடைச்சது. பெங்களூருக்குப் போன பிறகுதான் என் கான்பிடன்ட் லெவல் அதிகமாச்சுன்னே சொல்லலாம். தமிழைத் தாண்டி ஐந்து மொழிகள் பேச அங்கே கத்துக்கிட்டேன்.

பி.டெக் படிக்கும்போது டெக்னாலஜி குறித்து பிளாக் எழுதிட்டிருந்தேன். டெக்னாலஜி சார்ந்த விஷயங்களைத் தேடித்தேடிப் படிச்சிட்டிருந்த எனக்கு யூடியூப் தளத்தில் அது குறித்த செய்திகளைப் பார்க்கும்போது, ரொம்பப் புதுசா, ஆச்சரியமா இருந்துச்சு. பி.டெக் படிக்கவே நிறைய செலவானதால கொஞ்சம் பணம் சம்பாதிச்சுட்டு எம்.டெக் பண்ணலாம்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். அதுக்காக, ரெண்டு வருஷம் ஃப்ரீலான்சரா புராஜெக்ட் ஒர்க் பண்ணிக் கொடுத்தேன். அதுதவிர, ஆன்லைன் கிளாஸும் எடுத்தேன்.
எனக்கு ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கப் பிடிக்கும். தெரிஞ்சிக்கிட்டதை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்க ரொம்பப் பிடிக்கும். எனக்குத் தெரிஞ்சதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்னு எம்.டெக் படிக்கும்போது என் பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ஸ்மார்ட் போன் வாங்கினான். அதை ரிவ்யூ பண்ணினேன். அந்த வீடியோவை இருபதாயிரம் பேர் பார்த்திருந்தாங்க. என் ஃப்ரெண்டோட எம்பி3 பிளேயரைத் தொலைச்சிட்டேன். அவனுக்குக் கொடுக்கறதுக்காக புதுசா ஒண்ணு வாங்கினேன். அதோட unboxing வீடியோ பண்ணினேன். அதை நாற்பதாயிரம் பேர் பார்த்திருந்தாங்க. கன்டென்ட் நல்லா இருந்தா மக்கள் பாக்குறாங்கன்னு புரிஞ்சது. பிறகு 2015-ல் எம்.டெக் படிக்கும்போது `HowiSiT'னு ஒரு சேனல் ஆரம்பிச்சேன். அதில், டெக்னால ஜியை மட்டும் அடிப்படையா வெச்சு ஆங்கிலத்தில் பேசி வீடியோ பண்ணலாம்னு முடிவெடுத்தேன்.
என் தம்பி ஆர்க்கிடெக்ட். அவனால் வீட்டில் எப்பவும் இருக்க முடியாதுன்னு தெரியும். என்னால அம்மாவைத் தனியா விட்டுட்டுப் போக முடியாது. அதனால, ஊரிலேயே ஏதாவது ஒரு வேலை பார்த்துட்டு இருக்கணும் என்கிற முடிவில்தான் படிப்பு முடிஞ்சு வந்தேன். அரசு வேலைக்கு முயற்சி பண்ணி கைநழுவிப்போச்சு. அந்தச் சமயம் யூடியூப் மூலமா மாதம் 6,000 ரூபாய் கிடைச்சது. யூடியூப் மூலமா சம்பாதிக்க ஆரம்பித்த துமே, இனிமே இதைத் தான் பண்ணப்போறேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டேன். ஆரம்பத்திலிருந்து இப்பவரை என் விருப்பத்துக்கு அம்மா மறுப்பு சொன்னதே இல்லை. அவங்க சப்போர்ட்தான் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துச்சு.
என்னதான் இங்கிலீஷ் தெரியும்னாலும் தமிழில் சுலபமா சொன்னாதான் எல்லோருக்கும் புரியும் என்கிற விஷயம் தெரிஞ்சது. அதனால 2016-ல் ‘TAMIL TECH - தமிழ் டெக்' சேனலை ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு கிடைச்சது.
புராடக்ட்ஸ் ரிவ்யூவில் அந்த புராடக்ட்டின் ப்ளஸ், மைனஸ் ரெண்டையுமே சொல்லிடுவேன். ஆடியன்ஸ்கிட்ட ‘இந்த போன் நல்லா இருக்கு... நீங்க வாங்கலாம்’னு எப்பவும் சொல்ல மாட்டேன். இதில் இவ்வளவு பாசிட்டிவ், இவ்வளவு நெகட்டிவ் இருக்கு. நீங்க என்ன போன் வாங்கணும்னு முடிவு பண்ணிக்கோங்கன்னு, முடிவை ஆடியன்ஸ்கிட்ட விட்டுடுவேன். சேனல் ஆரம்பிச்ச சில வருஷத்துக்கு புராடக்ட் வாங்குறதில் ரொம்பவே போராட்டம் இருந்துச்சு. ஆரம்பத்தில் என் கைக் காசைப் போட்டு போன் வாங்கி அதை ரிவ்யூ பண்ணிட்டு வித்துடுவேன். பிறகு, அதே பணத்தில் வேற புராடக்ட் வாங்குவேன். என் நண்பர்கள் யாராச்சும் புதுசா வாங்கினாங்கன்னா அவங்ககிட்ட இருந்து வாங்கி ரிவ்யூ பண்ணுவேன். இப்படித்தான் போயிட்டிருந்துச்சு. சேனல் ஓரளவு வளர ஆரம்பிச்சதும் பிராண்டுகள் மூலமா புராடக்ட்ஸ் ரிவ்யூவிற்குக் கொடுக்குறாங்க.

சில பிராண்டுகளில் ‘ரிவ்யூ எப்படி இருந்தாலும் பரவாயில்லை’ன்னு புராடக்ட்ஸ் கொடுப்பாங்க.. சிலர், ‘ரிவ்யூ பாசிட்டிவா இருக்கணும்’னு சொல்வாங்க. ‘அப்படியெல்லாம் என்னால பண்ண முடியாது. அப்படி உங்களுக்குப் பண்ணணும்னா வெறும் unboxing வீடியோ மட்டும்தான் பண்ணுவேன்’னு சொல்லி அதை மட்டும்தான் பண்ணுவேன். ரிவ்யூ பண்ணாதப்பவே என் ஆடியன்ஸ் அதைப் புரிஞ்சுப்பாங்க. சில பிராண்ட் பற்றி நெகட்டிவ் ரிவ்யூ சொல்லியிருந்தால் அவங்க நேரடியா என்ன குறைன்னு கேட்டு அதைச் சரிசெய்றோம்னு சொல்லுவாங்க. புராடக்ட் லான்ச் ஆகிறதுக்கு முன்னாடியே இப்போ ரிவ்யூவிற்காக வர ஆரம்பிச்சிடுச்சு. அதிலும், சில பிரச்னைகள் இருக்கு. ஒரு புராடக்ட் குறித்து ரிவ்யூ பண்ணணும்னா அதை நாம குறைஞ்சது பத்து நாளாச்சும் பயன்படுத்திப் பார்க்கணும். ஒரே நாளில் அதிலுள்ள குறைகளைக் கண்டுபிடிக்க முடியாது. தேவைப்படுற நாள் அவகாசம் கொடுக்காம ரிவ்யூவிற்கு வர்ற புராடக்ட் குறித்தும் நான் பேசுறதில்லை. தவறா ஒரு விஷயத்தை மக்கள்கிட்ட சொல்லிடக் கூடாதுங்கிறதுல ரொம்பவே உறுதியா இருக்கேன்’’ என்றவரிடம், மெனக்கெட்ட வீடியோ குறித்துக் கேட்டோம்.
“ஷேர் மார்க்கெட் குறித்து ஒரு வீடியோ பண்ணியிருந்தேன். ஆடியன்ஸ்கிட்ட கொடுக்கும்போது தவறா அவங்களை வழிநடத்திடக் கூடாதுன்னு நிறைய ரிசர்ச் பண்ணினேன். அந்த வீடியோ நல்ல ரீச் கொடுத்துச்சு. போன வருஷம்தான் சேனலுக்காக குட்டி டீம் ஒண்ணு ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி வரை நானே கேமரா, எடிட்டிங் என ரெண்டையும் பார்த்துட்டிருந்தேன். என் மனைவி எடிட்டிங், கன்டென்ட் இரண்டிலும் எனக்கு உதவியா இருக்காங்க. அதுதவிர, ரெண்டு பேர் எடிட்டிங், கேமரா பார்த்துக்கறாங்க. சமீபத்தில், டெக்னாலஜி தொடர்பான உடனடி அப்டேட்கள் தெரிஞ்சிக்க ‘Tech Thalaiva', vlog மற்றும் ஆடியன்ஸுக்குப் பயனுள்ள தகவல்கள் சொல்ல ‘தமிழ் செல்வன்' என்கிற இரண்டு சேனல்கள் ஆரம்பிச்சிருக்கேன். நிறைய சீரிஸ் பண்றதுக்குத் திட்டமிட்டிருக்கிறோம்!'’
தம்ஸ் அப் காட்டிச் சிரிக்கிறார்.