கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

யூகி - சினிமா விமர்சனம்

யூகி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
யூகி - சினிமா விமர்சனம்

கதை போகும் திசையெல்லாம் அலைந்து திரிந்து படம் பிடித்திருக்கிறது புஷ்பராஜ் சந்தோஷின் கேமரா.

காணாமல்போகும் பெண், அவரைத் தேடிப்போகும்போது வெவ்வேறு குற்றப்பின்னணிகள் விரிந்தால்... அதுதான் யூகி.

கர்ப்பிணிப்பெண்ணாக இருக்கும் ஆனந்தி திடீரென்று காணாமல்போகிறார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பிரதாப் போத்தனின் உத்தரவின்பேரில் டிடெக்டிவ் நரேன் தலைமையில் ஒரு டீமும், தமிழக அமைச்சர் உத்தரவின் பேரில் ‘அடியாள்' நடராஜ் தலைமையில் ஒரு டீமும் காணாமல்போன பெண்ணைத் தேடுகிறார்கள். இந்த இரண்டு டீமும் தேடுவது ஒரே பெண்தானா, எந்த டீம் கண்டுபிடித்தது, காணாமல் போனதன் காரணம் என்ன என்பதை தலையைச் சுற்றி, காதைப்பிடித்து, கண்ணைக் குத்தி, மூக்கைத் தொட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

யூகி - சினிமா விமர்சனம்

நரேனும் சரி, கதிரும் சரி, படம் முழுவதும் எதையோ பறிகொடுத்த உணர்விலேயே வந்துபோகிறார்கள். ஆனந்திக்குப் பரிதாபத்துக்குரிய பாத்திரம் என்பதால் வரும் காட்சிகளிலெல்லாம் கண்கலங்குகிறார். ஜான் விஜய் வழக்கம்போல் அலட்டல் உடல் மொழியுடன் அநாயாசமாக நடித்திருக்கிறார். நட்டி பாத்திரம் மூலம் கடைசியில் நம் காதில் முந்நூறு முழம் பூ சுற்றுகிறார்கள். வினோதினி வைத்தியநாதனுக்கு வில்லி பாத்திரம். நிறைவாகவே செய்திருக்கிறார்.

கதை போகும் திசையெல்லாம் அலைந்து திரிந்து படம் பிடித்திருக்கிறது புஷ்பராஜ் சந்தோஷின் கேமரா. ரஞ்சின் ராஜ் இசையில் ‘பேசும் மழையே' பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

‘யூகி' என்ற டைட்டிலுக்கு ஏற்றாற்போல் பார்வையாளர்களே எதிர்பார்ப்புடன் இருக்கும்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதில் பல திருப்பங்களை அறிமுக இயக்குநர் ஜாக் ஹாரிஸ் உருவாக்கியது சுவாரஸ்யமான ஐடியாதான். ஆனால் ஆனந்திக்கான கதை, சிலைத் திருட்டு வழக்கு, பிரதாப் போத்தன் - நரேனுக்கு இடையேயான உறவு, ஆனந்தியை நட்டி தேடுவது, கதிர் - பவித்ராவுக்கு இடையேயான காதல்(?), ஜான் விஜய்க்கான கதை, கதிர் - ஆனந்தி உறவு என்று ஏகப்பட்ட விஷயங்களைத் திணித்து, நம்மை எதனுடனும் ஒட்ட விடாமல் செய்தது பெரிய மைனஸ். ட்விஸ்ட் வைக்கிறேன் என்ற பெயரில் வரும் நம்பகத்தன்மையற்ற ஏராளமான காட்சிகள் அதைவிடப் பெரிய மைனஸ். உதாரணத்துக்கு, மாநில அமைச்சர் உத்தரவு போட்டுச் செயல்படும் சி.பி.ஐ அதிகாரி.

யூகி - சினிமா விமர்சனம்

ஒரு நல்ல த்ரில்லர் கதையில் தேவையற்ற விஷயங்களைத் திணித்துத் திரைக்கதையைக் குழப்பியிருப்பதால் யு-டர்ன் அடித்திருக்கிறது ‘யூகி.'