தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கூட்டுக்குடும்பமா இருக்கிறது எனக்குப் பெரிய ப்ளஸ்!

ஸாஃப்ருன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸாஃப்ருன்

இது யுவன்ஷங்கர் ராஜா வீட்டு ரகசியம்

காதல் டு காஸ்ட்யூம்:

`ஸா ஃப்ருன்' என்று வரவேற்கும் போர்டு தொடங்கி, நுழைவாயில், இன்டீரியர், உள்ளே ஹேங்கரில் தொங்கும் உடைகள் என எங்கெங்கும் பூக்கள்மயம். பூக்களுக்கு மத்தியில் இன்னொரு பூவாக மலர்ந்த சிரிப்புடன் வந்தமர்கிறார் ஸாஃப்ருன். சென்னையின் ஃபேஷன் ஏரியாவான காதர் நவாஸ்கான் சாலையின் புது அடையாளம். ஸாஃப்ருனுக்கு இன்னும் அழகான அறிமுகம் தரலாம். இசையமைப் பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் மனைவி இவர்.

 யுவனுடன்...
யுவனுடன்...

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமான ஸாஃப்ருன், இப்போது தனது பெயரிலேயே பிராண்டை அறிமுகப்படுத்தி, பொட்டிக் ஆரம்பித்துள்ளார். ஸாஃப்ருன் என்றால் `சாஃப்ரான்' என்று அர்த்தமாம். பேட்டியில் கணவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் குங்குமப்பூவாக முகம் சிவக்கிறது ஸாஃப்ருனுக்கு.

‘`ராமேஸ்வரம் பக்கத்தில் உள்ள கீழக்கரையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் குடும்பம் எங்களுடையது. பத்து வயசுவரை இங்கேதான் இருந்தோம். அப்புறம் துபாய் போயிட்டோம். சின்ன வயசுலேருந்தே டிசைனிங் ரொம்ப பிடிக்கும். கிஃப்ட் ராப் பண்றதுலேருந்து, வீட்டோட இன்டீரியர் டெக்கரேஷன்வரைக்கும் வீட்டுல எல்லாரும் என்கிட்டதான் ஐடியாஸ் கேட்பாங்க. என் எதிர்காலம் ஃபேஷன், ஃபைன் ஆர்ட்ஸ்னு எனக்குப் பிடிச்ச ஒரு துறையில் இருக்கணும்னு விரும்பினேன். ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். அப்பவே நிறைய பேர் என்னை ஆன்லைன் ஸ்டோர் ஆரம்பிக்கச் சொன்னாங்க. ஆனா, எனக்கு பொட்டிக் வைக்கணும்னு ஆசை. அதுக்கு இத்தனை வருஷங்கள் ஆகியிருக்கு’’ - தலையை மூடியிருக்கும் துப்பட்டாவை சரிசெய்தபடியே ஆரம்பிக்கிறார் ஸாஃப்ருன்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமான ஸாஃப்ருன், இப்போது தனது பெயரிலேயே பிராண்டை அறிமுகப்படுத்தி, பொட்டிக் ஆரம்பித்துள்ளார்.

‘`ஃபேஷன் டிசைனிங்கை புரொஃபஷனா எடுத்துப் பண்ணணும், பணமோ, புகழோ சம்பாதிக்கணும்கிறதெல்லாம் என் சிந்தனையில இருந்ததே இல்லை. கல்யாணத்துக்குப் பிறகு கணவரின் படத்துல வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. இதோ, இப்போ பொட்டிக் ஆரம்பிச்சிருக்கேன். எல்லாம் இயல்பா நடந்தவை. இதெல்லாம் நடக்காமல் போயிருந்தாலும் நான் டிசைனிங் பண்ணிட்டேதான் இருந்திருப்பேன். ‘பியார் பிரேமா காதல்’ என் கணவர் தயாரித்த முதல் படம். படத்துல காஸ்ட்யூம் டிசைனரா நான் வொர்க் பண்ணட்டுமான்னு கேட்டேன். ஓகே சொன்னார். அந்தப் படத்துல ரைஸா வில்சனுக்கு மட்டும் காஸ்ட்யூம் டிசைன் பண்ணினேன். நான் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைச்சதால எந்த ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம ஜாலியா வொர்க் பண்ணினேன்.

டிசைனர்ஸ்ல பூர்ணிமா ராமசாமி எனக்கு ரொம்ப க்ளோஸ். கூடப் பிறக்காத சகோதரி மாதிரி. முதல் படம் பண்ணினபோது அவங்ககிட்டதான் நிறைய சந்தேகங்கள் கேட்டுக் கத்துக்கிட்டேன். சாதாரணமா ஒரு படத்துல ஹீரோயினுக்கு அதிகபட்சமா 20, 25 காஸ்ட்யூம்ஸ் இருக்கும். ஆனா, இந்தப் படத்துல ரைஸாவுக்குக் கிட்டத்தட்ட 70 காஸ்ட்யூம்ஸ் டிசைன் பண்ணினேன். புரொடியூசரா என் விஷயத்துல யுவன் எந்தவிதத்திலும் தலையிட்டதில்லை. முதல் படமாச்சே... எப்படிப் பண்ணுவாளோன்னு பயப்படலை. மொத்தப் படத்தையும் முடிச்ச பிறகு ‘உன் தனித்தன்மையை நிரூபிச்சிருக்கே... உன்னைப் பத்தியும் உன் டிசைனிங் ஸ்டைல் பத்தியும் தெரிஞ்சவங்களுக்குப் படத்துல உன் வொர்க் நிச்சயம் பிடிக்கும்’னு சொன்னார். அதைவிட வேற என்ன வேணும்...’’ - கணவரின் பாராட்டை நினைவுகூரும்போது மீண்டும் குங்குமப்பூவாகச் சிவக்கிறது முகம்.

சரி... அடுத்த பாராட்டு எப்போது?

‘`முதல் படம் கணவரின் தயாரிப்பா அமைஞ்சதால என்னால வெளியாட்கள் படங்களில் வொர்க் பண்ண முடியுமானு தெரியலை. ஒய்.எஸ்.ஆர் புரொடக்‌ஷனின் அடுத்த படத்துல நிச்சயம் பண்ணுவேன்’’ - சஸ்பென்ஸ் வைப்பவர், சர்ப்ரைஸ் பிளானும் வைத்திருக்கிறார்.

‘`பெண்களுக்கு நிறைய சாய்ஸ் இருக்கிறதால அவங்களுக்கு டிசைன் பண்றது ஜாலியா இருக்கும். ஆண்களுக்கு ரொம்ப குறைவான சாய்ஸ். அது செம சேலன்ஞ்சிங். ஆனாலும் பண்ணிடலாம். ஆண்களுக்கான பிரின்ட்டடு ஷர்ட்ஸுக்காக தனி செக்‌ஷன் ஆரம்பிக்கிற ஐடியா இருக்கு. என் கணவருக்கு டிசைன் பண்ணினதுல வந்த இன்ஸ்பிரேஷன் இது. ஒரு ஈத் பண்டிகைக்காக அவருக்கு முதல் முதல்ல ஷர்ட் டிசைன் பண்ணிக்கொடுத்தேன். தவிர, அப்பப்போ அவருக்கு ஸ்டைலிங் டிப்ஸ் சொல்றதுண்டு. சிலநேரம் கேட்டுப்பார். சிலநேரம் அவர் இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணுவார். காஸ்ட்யூம் விஷயத்தில் என்னைவிட என் கணவர் எக்ஸ்பெர்ட். ரொம்ப ஸ்டைலிஷ்ஷா டிரஸ் பண்ணுவார். கல்யாணம் நிச்சயமான நேரம் எனக்காக அவர் வாங்கிக்கொடுத்த பேஸ்டல் பீஜ் கலர் பட்டுப்புடவைதான் அதுக்கு உதாரணம். யுவனுக்கு ஷூஸ்னா ரொம்ப பிடிக்கும். அடிக்ட்டுன்னே சொல்லலாம். போன்ல ரொம்ப நேரம் எதையோ தேடிட்டிருக்காரேனு எட்டிப் பார்த்தா ஷூஸ் தேடிட்டிருப்பார்.புது ஷூஸ் வாங்கினா, சின்னக்குழந்தைங்களை மாதிரி, உடனே போட்டுக்க நினைப்பார்’’ - கணவரைப் பற்றி பேச ஆரம்பித்தால் மீண்டும் காதல் கொள்கின்றன அவரின் கண்கள்.

‘`யுவன் எப்போதுமே ரொம்ப சப்போர்ட்டிவ் ஹஸ்பண்ட். நான் பண்ற விஷயங்கள், எடுக்கும் முடிவுகள்னு எல்லாத்துக்கும் எனக்குத் துணையா இருப்பார். அப்பாவா யுவன் ரொம்ப அன்பும் அக்கறையும் உள்ளவர். எங்க குழந்தை ஸியாவுக்கு நாலு வயசாகுது. என் மகளை நான் பார்த்துக்கிறவதைவிடவும் யுவன் நல்லா பார்த்துப்பார். ஸியாகிட்ட யாரைப் பிடிக்கும்னு கேட்டீங்கன்னா, யோசிக்காம டாடின்னு சொல்வாள். அவளுக்கு சாப்பாடு ஊட்டறது, தூங்கவைக்கிறதுனு எல்லாம் பண்ணுவார். அவ பிறந்து, முதல் ஆறு மாசங்களுக்கு டயாப்பர்கூட மாத்தி யிருக்கார். ஸியா பிறந்தபோது அவளை அவர்தான் குளிப்பாட்டுவார். ஸியா வந்த பிறகு அவரது வாழ்க்கை, உலகம் எல்லாம் அவளைச் சுற்றியே மாறிடுச்சுனு சொல்லலாம். ஸ்டூடியோ... அதைவிட்டா வீடு... வீட்டுக்கு வந்ததும் குழந்தையோடு விளையாட ஆரம்பிச்சிடுவார். டைம் கிடைச்சா என்னை வெளியில் கூட்டிட்டுப் போவார். பொதுவா செலிபிரிட்டீஸ் இப்படிப் பொது இடங்களுக்குப் போகும்போது பிரைவசி பாதிக்கப்படும்னு யோசிப்பாங்க, ஆனா, என் கணவர் அதையெல்லாம் பார்க்க மாட்டார். யாராவது போட்டோ எடுக்க வந்தாலும் அன்பாதானே கேட்கறாங்கன்னு சொல்வார்.

எனக்கு ஒரே ஒரு குறைதான். கல்யாணமானது லேருந்து எனக்கு பாஸ்தா பண்ணித் தரேன்னு சொல்லிட்டிருக்கார். இன்னிக்கு வரைக்கும் அது நடக்கலை. ஆனாலும், அப்பப்போ எனக்கு டீ போட்டுத் தருவார். நடுராத்திரியில பசிக்குதுன்னு சொன்னாலும் ஓடிப்போய் சாண்ட்விச் வாங்கிட்டு வந்து தருவார். பிரெட்ல நட்டெல்லா போட்டுத் தருவார்’’ - திகட்டத் திகட்ட காதல் சொன்னவர், கணவரின் இன்னொரு முகத்தை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்கிறார்.

‘`யுவன் ரொம்ப சாஃப்ட், அதிகம் பேச மாட்டார்னுதான் நிறைய பேர் நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, அவர் அப்படி யில்லை. அவருக்குத் தெரிஞ்ச, பழகின ஆட்கள்னா, டீஸ் பண்ணி அழவெச்சிடுவார். பயங்கரமா மிமிக்ரி பண்ணுவார். அதுல நான்தான் அவர்கிட்ட அடிக்கடி மாட்டுவேன். என் பேச்சில் கீழக்கரை ஸ்லாங் அதிகம் இருக்கும். உதாரணத்துக்கு நாங்க வந்தாங்க, போனாங்கனு சொல்றதுக்குப் பதில் ‘வந்தாஹ... போனாஹ...’னு சொல்வோம். `எல்லாத்துக்கும் மேல'னு சொல்றதுக்குப் பதிலா ‘ஆக மேல'னு சொல்வோம். நான் அவரைப் பாடச் சொல்லிக் கேட்டா, என் ஸ்லாங்கை எல்லாம் வெச்சு பாட்டா பாடிக் கிண்டலடிப்பார். அதனால அவரை பாடச் சொல்லவே பயப்படுவேன். ஆனாலும், எனக்கு அவருடைய மியூசிக் மேல தனி லவ். கல்யாணத்துக்கு முன்னாடி அவர் மியூசிக்ல என் ஃபேவரைட்ஸ்னா ‘ராம்’ படத்துல ‘ஆராரி ராரோ’வும், `காதல்கொண்டேன்' பாடல்களும், `ஒரு கல் ஒரு கண்ணாடி'யும், `போகாதே'வும் ரொம்ப ஸ்பெஷல். இப்போ கொஞ்ச நாளா `பேரன்பு' படத்துல ‘செத்துப்போச்சு மனசு’தான் மனசுக்குள்ளே ரீவைண்டு ஆயிட்டே இருக்கு. நம்பிக்கையில்லாத மூடில் தொடங்கி, பயங்கர எனர்ஜியோடு, நம்பிக்கையோடு முடியும் அந்தப் பாட்டு.

ஸாஃப்ருன்
ஸாஃப்ருன்

ஸியா என்னைவிட பயங்கரமான யுவன் ரசிகை. அப்பாவும் மகளும் சேர்ந்துட்டாங்கன்னா எப்போதும் பாட்டும் ஆட்டமும்தான். இப்போ லேட்டஸ்ட்டா `ஹீரோ' படத்துல அவ தாத்தா பாடின ‘ஆயிரம் முகங்கள்’ பாட்டு ஸியாவுக்கு ரொம்பப் பிடிக்குது. டிராவல் பண்ணும்போது திரும்பத் திரும்ப நான்ஸ்டாப்பா கேட்கற அளவுக்கு ரசிக்கிறா’’ - அம்மாவாகவும் மனைவியாகவும் இரட்டை பூரிப்பு முகத்தில். இவர்களின் காதல் கதை பகிர இந்தப் பேட்டி போதாது என்பதால் மீண்டும் கொஞ்சம் டிசைனிங் பக்கம் வருவோம்.

``ஃப்ளோரல் டிசைன்ஸ் இப்போ டிரெண்டுல இருக்கு. ஆனா, எனக்கு எப்போதுமே ஃப்ளோரல்ஸ் பிடிக்கும். பூக்கள்னா அவ்வளவு இஷ்டம். என்னுடைய டிசைன்களை நானே கிரியேட் பண்ணி, பிரின்ட்டும் பண்றேன். டிஜிட்டல் பிரின்ட் எடுத்து, அதை என் டிசைன்ஸ்ல யூஸ் பண்ணுவேன். புதுசு புதுசா நிறைய யோசிப்பேன். புடவைன்னா அது இந்தியன் ஸ்டைல்லயும் இந்தியன் கலர்ஸ்லயும்தான் இருக்கணுமா... ஏன் இங்கிலீஷ் டைப்பில் இங்கிலீஷ் கலர்ஸில் இருக்கக்கூடாதுன்னு யோசிப்பேன். அதே மாதிரி டிசைனர் வேர்னாலே காஸ்ட்லியாதான் இருக்கணும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனா, அப்படியோர் அபிப்ராயம் மக்கள் மத்தியில இருக்கு. பிராண்டடு டிரஸ்ஸும் டிசைனர் உடைகளும்தான் அழகான ஆடம்பரமான தோற்றத்தைக் கொடுக்கும்னு சொல்றதையும் நான் ஏத்துக்க மாட்டேன். சாதாரண ஷிஃபான் சேலையிலகூட ஒருத்தங்க சூப்பரா காட்டிக்க முடியும். இதுதான் நம்ம பட்ஜெட்டுன்னா, அதுக்குள்ளேயும் அழகா டிரஸ் பண்ணிக்க முடியும். பிராண்டுகளுக்கு அடிமையாக வேண்டியதே இல்லை.

டிசைனர்களில் என் ஃபேவரைட் சப்யா சாச்சியும் டால்ஸ் அண்டு கபானாவும். சப்யா சாச்சியின் டிசைன்ஸைப் பார்த்தாலே அவர் பெயர் இல்லாட்டாலும் அவர் ஞாபகத்துக்கு வருவார். அதுதான் ஒரு டிசைனருக்கான அடையாளம்னு நினைக்கிறேன். அப்படியொரு ஃபீலிங்கை என் கஸ்டமர்ஸுக்கும் கொண்டுவரணும்ங்கிறதுதான் என் ஆசை. என் கடைக்குள்ளே நுழையறவங்க அதை ஃபீல் பண்ணுவாங்க. இன்டீரியர்லேருந்து சகலத்தையும் நானே டிசைன் பண்ணியிருக்கேன். என் டிசைனிங் ஸ்டைல் எல்லாத்திலும் பிரதிபலிக்கற மாதிரி ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கேன்’’ - ஸாஃப்ருன் சொல்லாமலே அதை நம்மால் ஃபீல் பண்ண முடிகிறது.

அப்புறம்?

‘`கூட்டுக்குடும்பமா இருக்கிறது எனக்குப் பெரிய ப்ளஸ். குழந்தையை அம்மா, அப்பா பார்த்துப்பாங்க. நான் பிசியா இருந்து என் கணவர் ஃப்ரீயா இருந்தா, அவர் குழந்தையைப் பார்த்துப்பார். அதனாலதான் என்னால டிசைனிங்கையும் பார்க்க முடியுது. பொட்டிக் தொடங்கினதுக்கும் பணம் சம்பாதிக்கிறதோ, பிரபலமாகணும்கிறதோ நோக்கமில்லை. எனக்குப் பிடிச்ச விஷயத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு போயிருக்கேன். அவ்வளவுதான். மத்தபடி பெரிய ஆசைகள் கிடையாது. பீரியாடிக் மூவியில் காஸ்ட்யூம் டிசைனரா வொர்க் பண்ணணும். டிசைனரா என் திறமையை நிரூபிக்க அதுதான் சரியான சவாலா இருக்கும்னு நினைக்கிறேன். அப்படியொரு வாய்ப்பு வந்தா, அது ஒய்.எஸ்.ஆர் புரொடக்‌ஷனா இல்லைன்னாலும் யோசிக்கலாம்!’’ - ஆசையைச் சொல்கிறார்.

ஒய்.எஸ்.ஆர் ஏதும் சொல்ல மாட்டாஹளா?