
வழக்கமாக ஜாம்பி படங்களின் கதை என்னவாக இருக்குமோ, அதேதான் இந்த `ஜாம்பி’ படத்தின் கதையும்.
குடும்ப வாழ்க்கையை நினைத்து நொந்து நூலாகி, புண்பட்ட மனதை புட்டியைக் கொண்டு ஆற்றலாமென பாருக்குச் செல்கிறார்கள் மூன்று இளைஞர்கள். அங்கே இருவர் இந்த மூவருடன் நண்பர்களாக, ஐவரும் சேர்ந்து ஒரு ரிசார்ட்டுக்குச் செல்கிறார்கள். அந்த ரிசார்ட்டில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட சிலர் ஜாம்பிகளாக மாறி, மற்றவர்களை இழுத்துப்போட்டுக் கடிக்க, இவர்களையும் ஒரு பெண்ணையும் தவிர எல்லோருமே ஜாம்பியாகிவிடுகிறார்கள். இந்த ஜாம்பிக் கூட்டத்திலிருந்து அந்த ஆறு பேரும் தப்பித்தனரா, இல்லையா என்பதே படத்தின் கதை.

பிஸ்டல் ராஜ் எனும் ரௌடி கதாபாத்திரத்தில் யோகிபாபு. அவரைத் திரையில் பார்த்தாலே மக்கள் சிரிக்கிறார்கள். அதற்கான, நியாயத்தையும் படத்தில் ஓரளவு செய்திருக்கிறார். அவர் அடிக்கும் சில கவுன்டர்கள் `குபீர்’ ரகம். ஆனால், நடிக்கும்போது வாயில் பபிள்கம்மை மென்றுகொண்டு டப்பிங்கில் ஒப்பேற்றினாற்போல் வசனங்களும் வாயசைவும் ஒட்டவேயில்லை.
`பரிதாபங்கள்’ கோபி-சுதாகர், `பிளாக் ஷீப்’ அன்பு, பிஜிலி ரமேஷ் என யூடியூப் நடிகர்கள் எல்லோரும் வெள்ளித்திரை நடிகர்களாக மாறி நடித்திருக்கிறார்கள். அதில், சுதாகர் தனியாக நம் கவனம் ஈர்க்கிறார். யாஷிகா ஆனந்த், டி.எம்.கார்த்திக், ஜான் விஜய் என எல்லா நடிகர்களும் ஜாலியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அது ஜாலியாக இருக்கிறதா என்பது வேறு கதை. காமெடி நடிகர்கள் ஃப்ரேமில் வந்து நின்றாலே அது காமெடிப்படம் என இயக்குநர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வீ பாவம்!
மீம் பேஜ்கள், யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா ஏரியாக்களிலும் டிரெண்ட் ஆனவற்றை வைத்துப் படம் பண்ணியிருக்கிறார் இயக்குநர் புவன் நல்லான். படத்தில் புதுமை எல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் அதற்காக மெனக்கெடவும் இல்லை. இந்தப் படத்தில் லாஜிக் எல்லாம் பார்த்தால் நம்மையும் ஜாம்பி கடித்துவிடும்.

இசைக்காட்டேரி பிரேம்ஜி அமரனின் இசையில், `ஆர் யூ ஓகே பேபி’ ஓகே. ஆனால், பின்னணி இசையில், ஏற்கெனவே வந்த ஹிட்டான பாடல்களை எல்லாம் வெட்டி, ஒட்டி வீடியோ மீம் க்ரியேட்டர்களுக்கே சவால் விடுத்திருக்கிறார்.
ரத்த வாடையைக் குறைத்து, அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரங்களைத் தவிர்த்து, புதுமை என்ற வார்த்தையையாவது படத்தில் சேர்த்திருந்தால், இந்த `ஜாம்பி’ சங்கைக் கடித்திருக்காதே!