விஷாலின் `லத்தி' காவல்துறையின் சொல்லப்படாத பக்கங்களைப் பற்றிப் பாடம் எடுத்து கவனம் ஈர்த்ததா அல்லது மற்றுமொரு மசாலா படமாக நமக்கே லாடம் கட்டியதா?
சிட்டியைக் கைக்குள் போட்டுக்கொண்டு போலீஸையே நடுங்க வைக்கும் மிகப்பெரிய தாதாவின் கொட்டத்தையும், அப்படியே இலவச இணைப்பாய் நூற்றுக்கணக்கான ரவுடிகளையும் ஒழித்துக்கட்டும் ஒரு கான்ஸ்டபிளின் புத்திசாலித்தனமான ஆயுதமே இந்த லத்தி! அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமாரின் 'லத்தி' கதை என்ன?
நீலாங்கரை காவல் நிலையத்தில் 'லத்தி ஸ்பெஷலிஸ்ட்'டான கான்ஸ்டபிள் விஷால், தன் லத்தியாலேயே ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்பட்டு வீட்டில் இருக்கிறார். வேலைக்குச் சேரத் துடியாய் துடிக்கும் விஷால், சீனியர் அதிகாரியான தலைவாசல் விஜய்யின் உதவியை நாட, அவர், அவருக்கு சீனியரான பிரபு மூலம் 6 மாதத்தில் சஸ்பென்ஷன் நீக்கப்பட்டு மீண்டும் விஷால் வேலையில் சேர உதவுகிறார்.

தன் சஸ்பென்ஸனுக்குக் காரணமான லத்தி ட்ரீட்மெண்ட்டையே இனி யாருக்கும் செய்ய மாட்டேன் என மனதுக்குள் சத்தியம் செய்துகொண்டு சாதுவான போலீஸாகப் பணியைத் தொடரும் விஷாலுக்கு, திரைக்கதை விதிப்படி பிரச்னை பிரபு ரூபத்தில் வருகிறது, மீண்டும் வேறு வழியின்றி லத்தியைக் கையில் எடுக்கிறார். ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் பாதையில் அரசியல்வாதிகளையே மிரட்டும் தாதா சுறாவின் மகன் வெள்ளை குறுக்கே வர, நிலவரம் கலவரமாக, தன்னையும் தன் மகனையும் வில்லன் மற்றும் ஆயிரக்கணக்கான ரவுடிகளிடமிருந்து விஷால் காப்பாற்றிக்கொண்டாரா என்பதே படத்தின் கதை.
விஷாலுக்குக் கச்சிதமாய் பொருந்திப்போகும் போலீஸ் ரோல். ஆனால், அதிகாரியாகப் பார்த்துப் பழகிய அவருக்கு கான்ஸ்டபிள் ரோல் புதுசு. கான்ஸ்டபிள் முருகானந்தம் பாத்திரத்துக்கு வாகான உடல்வாகு வரை மெனக்கெட்டிருக்கிறார். லத்தியை வைத்துக்கொண்டு அத்தனை பெரிய ரவுடி கூட்டத்தையும் கன்ட்ரோல் செய்யும் திறமைசாலி போலீஸாய் ஆக்ஷனில் அதகளம் செய்கிறார். க்ளைமாக்ஸில் வில்லன் கூட்டத்தினரிடம் அவர் போடும் சண்டைக் காட்சியாகட்டும், அதற்காக அவர் எடுத்திருக்கும் ரிஸ்க்குகள் ஆகட்டும், ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மிளிர்கிறார். மகனுக்காக உருகிக் கண்ணீரோடு கெஞ்சிப் பிதற்றும்போது மட்டும் நடிப்பில் சற்றே ஓவர்டோஸ்!

விஷாலின் மனைவியாக வரும் சுனைனா, கொஞ்சம் வெடுக் துடுக்கிலும் ஜிலீர் ரொமான்ஸிலும் வசீகரிக்கிறார். மற்றபடி வழக்கமான போலீஸ் மனைவி ரோல்தான். ஒரு பெரிய தாதா வில்லன் சன்னியைவிட அவர் மகனாக வரும் ரமணா கொஞ்சம் பயமுறுத்துகிறார். கவரை வைத்து முகத்தை மூடிக்கொண்டு இடைவேளை வரை அவருக்கு பில்டப் ஏற்றுகிறார்கள். அந்த பில்டப்புக்கு இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். வில்லன் கூட்டத்தில் சீனியராக வரும் வினோத் சாகர் தனித்துத் தெரிகிறார். குழந்தை நட்சத்திரம் லிரிஷின் நடிப்பும் அருமை.
பில்ட்-அப்போடு அறிமுகமாகும் தாதா சுறாவைப் பார்த்தால் பயமாகவே இல்லை. சுகர் மாத்திரையைத் தவறவிட்டுவிட்டு, மெடிக்கல் ஷாப்பைத் தேடும் சொந்தக்கார சித்தப்பாவைப் போலவே இருக்கிறார். இவரைப் பார்த்துதான் ஒட்டுமொத்த போலிஸூம் அரசியல்வாதிகளும் நடுங்குகிறார்கள் என்பதை நம்பவே முடியவில்லை. "என் பையன் மேல குறை இருக்கலாம்... ஆனா, கரைதான் இருக்கக்கூடாது" போன்ற சுறாவின் பன்ச்சுகள் எல்லாம் 'ஒய் திஸ் கொலவெறி' சொல்ல வைக்கின்றன.
படத்தில் விஷாலைப் போல விஷாலின் லத்தியும் ஒரு கேரக்டராய் படம் முடிந்தபிறகும் வருகிறது. அதேபோல சிட்டிக்குள் இருக்கும் அந்த கட்டிமுடிக்கப்படாத கட்டடமும் சற்றே பெரிய ஆக்ஷன் சீனுக்குப் பக்காவாய் துணை நிற்கிறது.

இத்தனை இருந்தும் படத்தில் இல்லாதது லாஜிக் என்ற வஸ்துதான். தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸைப் பார்த்திருப்போம். ஆனால், இத்தனை 'ரவுடி ப்ரெண்ட்லி' போலீஸை இதற்குமுன் பார்த்திருக்கவே முடியாது. சுவாரஸ்யமாய் இருந்தாலும் சிட்டி லிமிட்டில் இருக்கும் போலீஸ்காரர்களின் ரிங் டோனை போலீஸ் ஸ்டேஷனுக்கே போய் ரவுடிகளே கால் பண்ணி செக் பண்ணிக் கொள்வதெல்லாம் ஓவரோ ஓவர். காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பிரமாண்ட கட்டடத்தில் போலீஸோ பொதுஜனமோ... அவ்வளவு ஏன் ஒரு ஈ காக்கா கூடவா 'இங்கே என்னப்பா சத்தம்?' என எட்டிப்பார்க்க மாட்டார்களே?!
வில்லன் வெள்ளையாக வரும் ரமணாவின் கோபம் ஓ.கே. அதற்காக அந்த இற்றுப்போன பாலித்தீன் கவரை அவனைக் கண்டுபிடிக்கும்வரை தலையிலிருந்து கழற்றமாட்டேன் என்று அவர் சூளுரைத்து, அப்படியே கவரோடு திரிவதெல்லாம் என்ன லாஜிக்கோ? போலீஸ் யூனிபார்மில் இருக்கும் விஷாலைக் கைவைத்தால் பிரச்னை ஆகிவிடும் என்று அவர் யூனிபார்மை கழட்டும் வரை காத்திருந்து தாக்குவதற்காக விரதமிருக்கும் வில்லன்களை எந்த மொழி சினிமாவிலும் பார்க்க முடியாது.
"அவன நாம இங்கே வரவைக்கல... அவன்தான் நம்மள இங்க வரவெச்சிருக்கான்" போன்ற க்ளிஷே டயலாக்குகளும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.

இத்தனை லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், 500 பேரையும் தன் ஒற்றை லத்தியால் அவெஞ்சர் போல அடித்து அட்வெஞ்சர் செய்யும் காட்சியைச் செதுக்கி வடிவமைத்திருக்கும் சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்னின் உழைப்புக்கு சல்யூட் வைக்கலாம். அந்த ஆக்ஷனை சிந்தாமல் சிதறாமல் சுழன்று படம்பிடித்திருக்கிறது பாலசுப்பிரமணியெம் - பாலகிருஷ்ணா தோட்டாவின் கேமரா. பக்கா கமர்ஷியல் காக்டெய்லுக்கு செமையாய் ஒத்துழைத்திருக்கிறது என்.பி.ஸ்ரீகாந்தின் எடிட்டிங் டேபிள். பாடல்களில் ஈர்க்க முடியாத யுவன், பின்னணி பின்னணி இசையால் மட்டும் விறுவிறுப்பைக் கூட்டுகிறார்.
இடைவேளை வரை புத்திசாலித்தனமாக யோசித்தவர்கள் இடைவேளைக்குப் பிறகு லத்தியை மட்டுமே நம்பி புத்தியை விட்டுவிட்டார்கள். கொஞ்சம் லத்தியை நீட்டாமல் புத்தியையும் தீட்டியிருந்தால், நம் மனதில் இந்த `லத்தி'யின் தடம் அழுத்தமாய் பதிந்திருக்கும்.