Published:Updated:

நலிவடைந்த உலகப் புகழ் திண்டுக்கல் பூட்டுத் தொழில்! கலெக்டர் கொடுத்த அட்வைஸ்

ஆர்.குமரேசன்
நலிவடைந்த உலகப் புகழ் திண்டுக்கல் பூட்டுத் தொழில்! கலெக்டர் கொடுத்த அட்வைஸ்
நலிவடைந்த உலகப் புகழ் திண்டுக்கல் பூட்டுத் தொழில்! கலெக்டர் கொடுத்த அட்வைஸ்

'பூட்டு' என்றாலே திண்டுக்கல்தான் நினைவுக்கு வரும். பெரிய பெரிய பூட்டுகள், அலமாரிகள், லாக்கர்கள் என திண்டுக்கல் பூட்டுக்கு வரவேற்பு அதிகம். ஆனால், அத்தனை புகழ் இருந்தும், தற்போது நிலவும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பூட்டுத் தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் பூட்டுத்தொழிலை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, இன்று, முதற்கட்டமாக, பூட்டுத் தொழிலாளர்கள், பூட்டு ஆலை உரிமையாளர்கள், லாக்கர் உற்பத்தியாளர்கள், பூட்டு விற்பனையாளர்கள், சிறு குறு வியாபாரிகள் என அனைவரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் கலெக்டர் வினய்.

வங்கியாளர்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், தொழில்துறை அலுவலர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பூட்டுத் தொழிலை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது. அதை உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய கலெக்டர் வினய், ‘‘தனி நபராக இல்லாமல் இருபது நபர்கள் இணைந்து ஒரு குழுவாகப் பூட்டுத் தொழிற்சாலை அமைக்கலாம். அதற்கு அதிகபட்சமாக மூன்று கோடி ரூபாய் வரை அரசு கடனுதவிக்கு ஏற்பாடு செய்துகொடுக்கும். நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள், ஆலோசனைகள் அளிக்கப்படும். மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் கடன் தேவைப்பட்டால் மத்திய அரசிடம் விண்ணப்பித்து வாங்கித்தர முயற்சி எடுக்கப்படும். உற்பத்தியாகும் பூட்டுகளை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சந்தையில் திண்டுக்கல் பூட்டுக்குப் போட்டியாக அலிகர் பூட்டு உள்ளது. நாம் இன்னமும் லாக்கர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். அவர்கள், பின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களைப்போல நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்துவதன் மூலம் மட்டுமே சந்தை போட்டியைச் சமாளிக்க முடியும். எனவே பூட்டுத்தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், கடனுதவி, விற்பனை என அனைத்து வகையிலும், உதவ அரசு தயாராக இருக்கிறது. இதை பூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‘‘ என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற பூட்டு உற்பத்தியாளர்கள், ‘‘பூட்டுத் தொழிற்சாலைகள் அமைக்க அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களுக்குப் பூட்டுகள் வாங்கும்போது, வெளிமாநிலத்தில் தயாராகும் பெரிய தனியார் நிறுவனங்களின் பூட்டுக்களை வாங்குவதற்கு பதிலாக, திண்டுக்கல் பூட்டுக்களை வாங்க வேண்டும். மேலும், பூட்டு, லாக்கர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி இருக்கிறது. இது மிகவும் அதிகம். இதனால் இந்தத் தொழில் நலிவடைந்து வருகிறது. அதை 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ எனத் தெரிவித்தனர்.