Published:Updated:

பஞ்சலிங்க அருவிக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

ஜி.பழனிச்சாமி
பஞ்சலிங்க அருவிக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!
பஞ்சலிங்க அருவிக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு சமவெளிப்பகுதிகளில்கூட கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. அதிகாலை தாண்டியும்கூட பொழியும் இந்த பனிப்பொழிவை தொடர்ந்து வரும் மாசி, பங்குனி , சித்திரை மாதங்களில் கடுமையான கோடை வெப்பம் வரக்கூடும் என்று ஆரூடம் கூறுகிறார்கள் அனுபவஸ்தர்கள் பலரும். அதனால்தான் என்னவோ? விடுமுறை நாள்களையும் தாண்டி மற்ற நாள்களிலும் மலை, அருவி, ஆறு என்று சுற்றுலா சென்று குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்கள் பொதுமக்கள்.

பஞ்சலிங்க அருவிக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!


அப்படியான ஒரு குளுகுளு அருவி கொட்டும் மலைப்பிரதேசம்தான் ஏழைகளின் குற்றாலம் என்று மேற்கு மாவட்ட மக்களால் அழைக்கப்படும் திருமூர்த்தி மலையில் கொட்டும் பஞ்சலிங்க அருவி.

திருப்பூர் மாவட்டத்தின் தென்கோடி நகரமான உடுமலைப்பேட்டையில் இருந்து நேர் தெற்கே 21 கி.மீட்டர் தொலைவில் உள்ள எழில் கொஞ்சும் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவி. கடந்த இரண்டு மாதங்களாக மிதமான தண்ணீரை கொட்டுகிறது இந்த அருவி. வரப்போகும் கோடை கொடுமையாக இருக்கும். அப்போது குருவிக்குளியல் போடும் வாய்ப்புக்கூட இல்லாமல் போகலாம் என்பதால்தான் என்னவோ, நகரமனமில்லாமல் மணிக்கணக்கில் அருவிக்குளியலை ஆசைதீர அனுபவிக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். அருவியாக விழுந்து ஆறாக ஓடும் தண்ணீரில் தவழ்ந்து நீந்தி தவக்களைபோல பல மணிநேரம் கும்மாளம் போடுகிறார்கள் குழந்தைகள். தை மாதம் முடியும் வரைதான் அருவித்தண்ணீர் கிடைக்கும் என்பதால்தான் என்னவோ?

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று விடுமுறை நாள்களையும் கடந்து வாரத்தின் முதல் நாளான நேற்றுக்கூட அருவியில் குளிக்க கூட்டம் அலைமோதியது. குருவிக்குளியல்போடகூட தண்ணீர் கிடைக்காத கோடை வருவதற்குள் ஆசை தீர அருவிக்குளியல் போட்டுவரலாம்... உடுமலைக்கு வாங்க!