Published:Updated:

’’கலெக்டராவே ஆனாலும் கூத்துக்கட்டணும்..!’’ சென்னையில் நடந்த அதகளத் தெருக்கூத்து

’’கலெக்டராவே ஆனாலும் கூத்துக்கட்டணும்..!’’ சென்னையில் நடந்த அதகளத் தெருக்கூத்து
’’கலெக்டராவே ஆனாலும் கூத்துக்கட்டணும்..!’’ சென்னையில் நடந்த அதகளத் தெருக்கூத்து

”என்னாது... சென்னையில் தெருக்கூத்தா?!” என ஆச்சர்யத்தோடு பெசன்ட் நகரில் உள்ள ஸ்பேசஸ் அரங்குக்குச் சென்றால், கூட்டம் அலைமோதுகிறது. எல்லோருமே கூத்தைக் காணும் ஆர்வத்தில், தானா சேர்ந்த கூட்டம். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடைபெற்ற தெருக்கூத்து, அங்கு இருந்த பார்வையாளர்களைக் கைக்குள், அல்ல... அல்ல... காட்சிக்குள் வைத்துக்கொண்டது. தானாகவே பாடி ஆடுவது மட்டுமல்லாமல், இசைக்கருவிகளும் தானே இசைக்கும் கலப்படமற்ற நாட்டார் கூத்து அங்கே நிகழ்த்தப்பட்டது. கூத்து வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததும், மதுரை வீரனாக வேடம்கட்டிய கூத்துக் குழுவின் தலைவர் ராமகிருஷ்ணனிடம் பேசினேன்... 

``உங்கள் குழுவைப் பற்றிச் சொல்லுங்கள்?''

`` `ஸ்ரீனிவாசா நாடகக் குழு’ங்கிற பேருல கடந்த அஞ்சு வருஷங்களா நாடகம், கூத்தெல்லாம் போட்டுட்டிருக்கோம். எங்க தாத்தா, எங்க அப்பா, அவங்களுக்கு அப்புறம் நான். எனக்கு அப்புறம் என் பையன்னு நாலு தலைமுறையா இந்தக் கூத்துல இருக்கோம். எங்க தொழிலே கூத்துக்கட்டுறதுதான். மத்தபடி விவசாயம்கூட செய்றதில்லை. எங்க ஊருக்குள்ள பக்கத்துக் கிராமம், அங்க இருக்கிற கோயில்னு நாடகமும் கூத்தும் போட்டுட்டிருந்த எங்களுக்கு, மாற்று ஊடக மையம்தான் ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் குடுத்தது. அதுக்கு அப்புறம்தான் ஏ.எம்.சி-யில மெம்பராகி `ஸ்ரீனிவாசா நாடகக் குழு’ங்கிற பெயரைப் பதிவுசெஞ்சோம். `ஸ்ரீனிவாசா நாடக் குழு'னு சொன்னா தெரியுற அளவுக்கு இப்போ நாங்க வளர்ந்திருக்கிறோம். நாங்க, 18 நாளுக்கான மகாபாரதம் தவிர்த்து, `சிவபுராணம்', `கந்தபுராணம்', `நல்லதங்காள் சரித்திரம்'னு எல்லாத்தையும் கூத்தா போடுவோம்.”

``கூத்துக்கு எப்படித் தயாராகிறீர்கள்?''

``கூத்துக்கு முன்னாடி ரிகர்சல் பார்க்கிற மாதிரியெல்லாம் எதுவும் செய்ய மாட்டோம். கூத்துன்னு சொல்லிட்டா போதும். உடனே கிளம்பிடுவோம். ஏன்னா `மகாபாரதம்', `சிவபுராணம்' எல்லாமே எங்களுக்கு மனப்பாடம்.''

``வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கின்றனவா?''

``இந்த மாதிரியான வெயில் காலங்கள்ல நிகழ்ச்சி தொடர்ந்து கிடைக்கும். மாசத்துக்கு குறைஞ்சது 20 கூத்து நிகழ்ச்சிகளாவது கிடைக்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி-னு மழைக்காலங்கள்லதான் வாய்ப்புகள் கம்மியா கிடைக்கும். அதனாலதான் தமிழக அரசுக்கிட்ட தொடர்ந்து கோரிக்கைகள் வெச்சுக்கிட்டே இருக்கோம்.''

``அரசிடம் என்ன மாதிரியான கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள்?''

``இப்போ 60 வயசுக்குமேல இருக்கிறவங்களுக்கு மாசம் 1,500 ரூபாய் உதவித்தொகையா குடுக்கிறாங்க. அதை உயர்த்திக் குடுக்கணும். முன்னெல்லாம் 100 ரூபாய்க்கு மேக்கப் பவுடர் வாங்கினோம். இப்போ 500 ரூபாய்க்கு வாங்கினாத்தான் பத்துது. அதுக்கும் ஜி.எஸ்.டி எல்லாம் போடுறாங்கா. இதெல்லாம் சொல்லி, கூத்து புக் பண்ண வர்றவங்ககிட்ட அதிக பணம் கேட்டா, கிடைக்கிற கூத்தும் கிடைக்காமப்போயிடும். இந்த வேலை, சொகுசா ஏசி ரூம்ல ஒக்காந்து பார்க்கிற வேலையா என்ன? நாங்களே பாடணும், நாங்களே ஆடணும். எல்லாமே எங்களுக்கு நாங்களே செஞ்சுக்கணும். எங்களுக்கு 60 வயசு வரை வாழ்றதெல்லாம் பெரிய விஷயம். அதனால, எங்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான வயதுவரம்பை 60 வயசுல இருந்து 50 வயசா குறைக்கணும். பெண்களுக்கு அதையே 45 வயசாக் குறைக்கணும். உதவித்தொகையையும் 1,500 ரூபாய்ல இருந்து 5,000 ரூபாயா உயர்த்திக் குடுக்கணும். மத்த மாநிலங்கள்ல இதெல்லாம் குடுத்துட்டுத்தான் இருக்காங்க. அதைத்தான் நாங்களும் கேக்கிறோம்.”

``இவ்வளவு சிரமம் இருக்கும் இந்தக் கூத்துக்கலையில், உங்களின் அடுத்த தலைமுறையையும் ஈடுபடுத்துவதற்கான காரணம் என்ன?''

``நான் என்ன சொல்றேன்னா, நீ கலெக்டராவே ஆனாலும்கூட நிச்சயமா கூத்துக்கட்டணும். படிச்சுட்டு நீ அதுக்கு ஏத்த வேலைக்குப் போ. வேணாம்னு சொல்லலை. ஆனா, அந்த வேலைக்கு இடையில உனக்கு லீவ் கிடைக்கும்போது வந்து கூத்துக்கட்டணும். ஆனா, எங்கள மாதிரி அதை வாழ்க்கையா வெச்சுக்காம, சாப்பாட்டுக்கு தொட்டுக்கிற ஊறுகாயா வெச்சுக்கிட்டா போதும். அப்படி இல்லைன்னா, இந்தக் கலை எங்களோடு போயிடும். அப்புறம் எப்படி இந்தக் கலை வளரும்? இந்தக் கலையை வளர்க்கணும். அதுக்காகத்தான் என்ன படிச்சிருந்தாலும் எங்க பசங்களக் கூத்து கத்துக்கவைக்கிறோம்.”