Published:Updated:

``கலைஞரிடம் வாங்கிய மறக்கமுடியாத திட்டு!' - ஓவியர் மணியம் செல்வன்

``கலைஞரிடம் வாங்கிய மறக்கமுடியாத திட்டு!' - ஓவியர் மணியம் செல்வன்
``கலைஞரிடம் வாங்கிய மறக்கமுடியாத திட்டு!' - ஓவியர் மணியம் செல்வன்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நட்பு குறித்து பேசுகிறார், ஓவியர் மணியம் செல்வன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பெயருக்கு ஏற்றவாறு கலை நயத்தோடு வாழ்ந்தவர், கலைஞர். அவர் என்னைப் பாராட்டியும் பார்த்திருக்கிறேன். என்னிடம் கோபப்பட்டும் பார்த்திருக்கிறேன். அந்த நாள்களின் நினைவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது' என ஆரம்பிக்கிறார், ஓவியர் மணியம் செல்வன். 

``1960-ல் முரசொலி பொங்கல் அட்டைப் படத்தை வரைந்து கொடுத்தார், என் அப்பா. என் அப்பாவுக்குக் கலைஞருடன் நேரடித் தொடர்பு உண்டு. அதற்குப் பிறகான கலைஞரின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில்தான், நான் கலைத்துறையில் நுழைகிறேன். கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பெரும்பாலான அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கு நான் படம் வரைந்து கொடுத்திருக்கிறேன். `தமிழ் மாநாடு' என்பதை `செம்மொழி மாநாடு' எனப் பெயர் மாற்றிய பெருமை கலைஞரையே சாரும். அந்த மாபெரும் செம்மொழி மாநாட்டு மலருக்கான படத்தை நான் வரைந்து கொடுத்தேன். அதேபோல செம்மொழி மாநாட்டுக்கான `செம்மொழியான தமிழ் மொழியாம்..' என்ற கவிதைக்கும் படம்  வரைந்தேன். அது பாடலானபோது, ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு இசையமைத்தார். பல பாடகர்கள் இணைந்து அந்தப் பாடலைப் பாடியிருந்தாங்க. அதேபோல், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பிற்கான மலருக்கும் படம்  வரைந்து கொடுத்தேன். தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கும் படம் வரைந்து கொடுத்தேன். பூம்புகார் பதிப்பகம் போன்று பல பதிப்பகங்களில் என் அட்டைப் படம் கலைஞருக்காக வரைந்து கொடுத்திருக்கிறேன்!'' என்றவர், தொடர்ந்தார். 

`மணியம் செல்வன்கிட்ட இருந்து எப்படிப் படம் வாங்குறீங்க?' என இறையன்புகிட்ட கேட்டிருக்கிறார், கலைஞர். ஏனென்றால், நான் ஒரு படத்தை வரைய ஆரம்பித்தால், அதற்காக நிறைய நேரம் எடுத்துக்கொள்வேன். எனக்கு திருப்தி வரும் வரை வேலையை முடிக்கமாட்டேன். அவருடைய நினைவில் நான் இருந்திருக்கேன் என்பது இன்றுவரை எனக்கு சந்தோஷமே. `தொல்காப்பிய பூங்கா' படைப்புக்காக என்னையும் சேர்த்து மூன்று ஆர்ட்டிஸ்ட்களிடம் 25 கவிதைகளை கொடுத்திருந்தார். நூறு கவிதைகளில் ஒவ்வொருவருக்கும் 25 எனப் பிரித்துக்கொடுத்திருப்பார் என நினைத்து, நான் கூடுதலான நாள்களை எடுத்துக்கிட்டேன். ஆனால், அவர் கொடுத்ததோ மூன்று பேருகிட்டேயும் அதே 25 கவிதைகளைதான் கொடுத்திருந்தார். ஒவ்வொருத்தர்கிட்டேயும் நல்ல படைப்பை எதிர்பார்க்கும் ஆர்வத்தை அவரிடம் பார்த்தேன். என்னுடைய முதல் ஸ்கெட்சே அவருக்குப் பிடிச்சிருந்தது. அதனால், 45 படங்கள் பண்ணிக் கொடுக்கமுடியுமானு கேட்டார். அதை ஒப்புக்கிட்டேன். வேலை ஆரம்பித்ததும் காலை எட்டு மணிக்கு ஷார்ப்பா வரச் சொல்லிடுவார். என் வீட்டுக்கு ஆட்டோ வரச் சொல்லி கடகடனு ஸ்கெட்சைத் தூக்கிப் போட்டுட்டு போவேன். ஏழரை மணிக்குள்ள கோபாலபுரம் வீட்டில் காத்திருப்பேன். அந்த நேரத்திலும் உன்னிப்பாகப் பார்த்து, `இந்த மாதிரி மாற்ற முடியுமா?'னு என்கிட்ட கேட்பார்.  இப்படித்தான் பண்ணணும்னு அவர் எப்போவும் கட்டளை போட்டதே இல்லை. அதுதான் அவருடைய மாண்பு. `தொல்காப்பிய பூங்கா' வேலையில் தோட்டத்தில் ஒரு பெண் பூ பறிக்கும் படம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு. `நல்ல திறமை இருக்கு, ஏன் லேட் பண்றீங்க?'னு கேட்டார். அந்தக் காலத்தை நினைக்கும்போது, என் கண் முன்னால் திரை விரிகிறது. கலைஞரின் பேச்சு, அவருடைய குரல், அமர்ந்திருந்த கம்பீரம்.. அப்பப்பா எப்படி ஒரு ஆளுமை...'' என்றவர், 

``ஒரு முறை நான் வரைந்த படத்தை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது, தாமதமாகிடுச்சு. நான் கோபாலபுரம் வீட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்குறேன், அவர் கார் போகுது. `நீங்கதான் மணியம் செல்வனா... சார் உங்களை முரசொலி ஆபீஸூக்குக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்' என என்னை காரில் அழைத்துச் சென்றார்கள். `உங்க அப்பாக்கிட்டேயும் வேலை வாங்கியிருக்கேன், உங்கக்கிட்டேயும் வேலை வாங்கியிருக்கேன்' எனக் கலைஞர் சொன்னபோது பெருமையாக இருந்தது. ``நான் ஒரு வாரத்தில் `தொல்காப்பிய பூங்கா' எழுதி முடிச்சிட்டேன். ஆனா, நீங்க படம் வரைய ஒரு மாதம் எடுத்துக்கிறீங்களே?"னு கேட்டார். என்னால் அந்த இடத்தில் பேச முடியல. வீட்டுக்குப் போனதும், ஒரு வாரத்தில் வேலையை முடிச்சேன். 

நான் பொதுவாகவே காலைல ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வரைய ஆரம்பிச்சிடுவேன். அப்போலாம் காலர் ஐடி கூட கிடையாது. ஒரு நாள் காலை ஆறு மணிக்கு போன் வருது. `யார் பேசுறீங்க?'னு கேட்டேன். `நான் கலைஞர் பேசுறேன் தம்பி' என்கிறது, அந்தக் குரல். உற்சாகத்தில் துள்ளிக் குதித்து எழுந்து நின்றேன். `சொல்லுங்க ஐயா' என்றேன். `நீங்க பண்ணுங்க. தப்பு கிடையாது. கலைத்திறமை எல்லோருக்கும் அமையிறதில்லை. உங்கள் திறமையைக் காட்டுங்க'னு ஊக்கப்படுத்திப் பேசினார். அப்போதுதான் எந்த அளவுக்கு அவர் கலை மீது ரசனையும், ஈடுபாடும் கொண்டவராக இருக்கிறார் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. கலைநயத்தோடு பேசவும் கூடியவர், கலைஞர். நல்ல நகைச்சுவையாளர். ஆனால், இதுவரைக்கும் அவர்கூட தனியா ஒரு படம்கூட எடுத்துக்கலை. நமக்குப் பிடித்தமானவர்களுடன் படம் பிடிச்சிக்கணும்னு இல்ல. ஆனால், மனதில் பதிய வெச்சுக்கணும் என்பதுதான் நான் நினைப்பது. இந்த மாதிரியான பழக்கங்களையெல்லாம் என் அப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். அவருடைய ஆசி என்றும் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு இருக்கும். அவருடைய 100 சதவிகித தைரியம், தன்னம்பிக்கைக்குக் காரணம் அவருடைய எழுத்துதான். அதுதான் அவரை இவ்வளவு வருடம் அரசியலில் பயணிக்க வெச்சிருக்கு. புகழ் என்பது வேறு, கீர்த்தி என்பது வேறு. கீர்த்தியோடு இருப்பவர் நமக்கு முன்னால் நின்றால், அந்த ஆளின் அடையாளமே தெரியாது. அப்படிப்பட்ட கீர்த்தியுள்ள கலைஞருடன் சிறிது காலம் இருந்திருக்கிறேன். அந்த மனநிறைவு போதும்" எனக் கலைஞர் பற்றிய நினைவுகளோடு கண் கலங்குகிறார், இந்தக் கலைஞர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு