மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6

வினோத்துக்கு இப்போது சிறிய வெளிச்சம் கிடைத்தது... ஜெனிலியா கொல்லப் பட்டதாக நினைத்து மனநோயில் பாதிக்கப்பட்டிருக்கிறாள் ரம்யா. ஜெனிலியா இறந்ததற்கு சாமியார்தான் காரணம் என்பது அவளுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. சாமியாரைக் கொன்றிருக்கிறாள். சாமியார் கொல்லப்பட்டதற்குக் காரணம் கிடைத்துவிட்டது. ஆனால், சென்னையில் செத்துப்போன இரண்டு அப்பாவிகளின் மரணத்துக்குத்தான் காரணம் தெரியவில்லை. வினோத் பிசிறு பிசிறாக எல்லாவற்றையும் ஒட்டவைத்துப் பார்த்தான். ஒரு சைக்கோ யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்தானே?

ராகுலிடமிருந்து விடைபெற்று வந்தபோது பெங்களூரு கொஞ்சம் சூடாகியிருந்தது. ஆட்டோ பிடித்து, ‘‘சாமியார் ஒருவர் கொல்லப்பட்டாரே, அந்த ஆசிரமம் எங்கு இருக்கிறது தெரியுமா? அங்கு போ’’ என்றான்.

போனான்... போனான்... போய்க்கொண்டே இருந்தான். பெங்களூருக்கு வெளியே கன்னஹல்லி என்ற அம்புக்குறி போட்ட சாலையில் போய், ஒரு பெரிய காம்பவுண்டு போட்ட தோட்டத்தின் முன் நிறுத்தினான். எல்லா பக்கங்களும் பசுமையாக இருந்தன. ஆங்காங்கே சில பெரிய சைஸ் காம்பவுண்டு வீடுகள் இருந்தன. பிற்காலத்தில் பணக்கார ஏரியாவாக மாறும் அத்தனை வாய்ப்புகளோடும் அது உருவாவதை அனுமானிக்க முடிந்தது. ஆசிரம வாசலில் போலீஸார் அதிகம் தென்பட்டார்கள். ஆட்டோவைவிட்டு இறங்காமல் காத்திருந்தான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6

ஒரு மரத்தடியில் ராமநாதன் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். ‘இவனுக்கும் சாமியாருக்கும் என்ன சம்பந்தம்’ என்பதை யூகிக்கப் பொறுமையில்லாமல் ஆட்டோவை இருக்கச் சொல்லிவிட்டு ராமநாதனிடம் வந்தான்.

‘‘அட, நீ என்னப்பா இங்க?’’ என்றான் முந்திக்கொண்டு.

‘‘நீ எதுக்கு வந்தே?’’

பக்கத்தில் இருந்தவரைக் காட்டி,  ‘‘இவர் ரிப்போர்ட்டர். தமிழ் ஆளு. இவர் மூலமாத்தான் பிராப்பர்ட்டி டிஸ்போஸ் வேலையை முடிக்கிறேன். சென்னையில ஒரு ரிப்போர்ட்டர் ஃபிரெண்டு மூலமா பழக்கம். இவர் இங்க இருக்கறதா சொன்னார். அதான்... நேத்து டி.வியில காட்டினாங்களே அந்தச் சாமியார் மடம்தான் இது... மர்டர் கேஸ்.’’

‘‘தெரியும்... அதனாலதான் வந்தேன்.’’

ராமநாதன் புரியாமல் பார்த்தான். ‘‘வாயேன்... ஒரு காபி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.’’ வினோத் எதிரில் இருந்த ஸ்நாக் பாருக்கு அழைத்துப்போனான்.

‘‘இந்தக் கொலையிலயும் ரம்யாவுக்கு சம்பந்தம் இருக்குன்னு தோணுது.’’ ரகசியக் குரலில் ஆரம்பித்தான் வினோத்.

‘‘என்னப்பா இது? உலகத்தில நடக்கிற எல்லா கொலைகளுக்குமே ரம்யா மேல பழியப் போடுற?’’

வினோத் எல்லாவற்றையும் சொன்னான். அந்த ரிப்போர்ட்டர் அவற்றையெல்லாம் கேட்டானா என்பது தெரியவில்லை. பாதி நேரம் யாரிடமோ போனில் பேசிக்கொண்டே இருந்தான். அவன் போன் பேசிய களைப்பில் சற்றே ஆசுவாசமாக இருந்த நேரத்தில் வினோத், ‘‘என்ன பிரச்னையாம்... ஏதாவது தெரியுதா?’’ எனப் பேச்சுக்கொடுத்தான்.

‘‘சந்நியாசினிகளை வெச்சு மிஸ்யூஸ் பண்ணினதா சொல்றாங்க. பல பொண்ணுங்க அடிக்டட்... பெரிய ஆளுங்க ஆசிரமத்துக்கு வரும்போது அவங்களைக் கவனிச்சுக்கிறது இந்தப் பொண்ணுங்கதான்.’’

‘‘ஓ.’’

‘‘சாமியார் நிறைய சொத்து சம்பாதிச்சதும், நிறைய விரோதம் சம்பாதிச்சதும் அந்த விஷயத்திலதான்.’’

‘‘ஜெனிலியான்னு ஒரு பொண்ணு இறந்துபோச்சாமே?’’

அந்த நிருபர் உடனே அதிர்ச்சியுடன் தலை உயர்த்திப் பார்த்தான். ‘‘சார், சத்தமா பேசாதீங்க’’ என்றபடி ‘அந்த இடத்தைவிட்டு வெளியே போய்விடலாம்’, எனச் சைகையால் அழைத்தான். வினோத், தான் வந்த ஆட்டோவை அனுப்பியதும், மூவரும் ராமநாதனின் காரில் ஏறினர். அந்த நிருபரின் நடவடிக்கைகள் ஆர்வமூட்டுபவையாக இருந்தன. அவனாகச் சொல்லட்டும் என இருவரும் காத்திருந்தனர். ஆனால், அவன் ஆரம்பிக்கற கதையாக இல்லை.

ராமநாதன் தயக்கமே இல்லாமல் சகஜமாக, ‘‘இப்பச் சொல்லு’’ என ஆரம்பித்தான்.

‘‘எது?’’ என்றவன், அப்போதுதான் நினைவு வந்தது போல ‘‘அதுவா?’’ என்றான். அவனுக்கு இன்னும் தயக்கம் இருந்தது.

‘‘பை த பை... இவர்தான் நான் சொன்ன ரிப்போர்ட்டர். ராஜ்மோகன்.’’

வினோத், ‘‘வினோத்’’ என்றான்.

‘‘சொல்லுப்பா... நம்ம ஆளுதான்.’’

‘‘ஜெனிலியா செத்தப்போ பெரிய கலாட்டா. போலீஸ் ரொம்பக் கெடுபிடி செய்தாங்க. சாமியார் அப்படியே எல்லாத்தையும் அமுக்கிட்டார். பிரஸ்ஸை அலோ பண்ணவே இல்ல. நான்தான் முதல் ஆளா வந்தேன். அதனால உள்ள வந்துட்டேன். ஜெனிலியா இருந்த அறைக்குள்ளே போலீஸ் துழாவிட்டு இருந்தாங்க. நான் ஜன்னல் வழியா பாத்துக்கிட்டு இருந்தேன். அங்க எனக்கு ஒரு டைரி கிடைச்சது. டைரின்னா குட்டி பாக்கெட் நோட்டு. ஆரம்ப ரெண்டு பக்கங்கள்லதான் ஏதோ கிறுக்கியிருந்தது.’’

‘‘என்ன எழுதியிருந்துச்சு?’’ என வினோத் அவசரப்பட்டதும் அவன் நிறுத்திவிட்டான்.

‘‘நீ வேற... அதைத்தான் பெரிய நியூஸா அடிக்கணும்னு மோகன் நினைக்கிறாப்ல. ஆனா, நாங்க யாரும் ரிப்போர்ட்டர் இல்ல... தாராளமா சொல்லலாம்.’’

‘‘இல்ல சார்... நாளைக்குச் சொல்றேன்’’ என இறுக்கமாகி விட்டான். கார் பெங்களூரு ஆர்.டி. நகருக்குள் நுழைந்தபோது, ‘‘பியர் சாப்பிட்டுட்டுப் போறீயா?’’ எனத் தன் கடைசி அஸ்திரத்தை எய்து பார்த்தான் ராமநாதன்.
‘‘இல்ல சார்... நைட் நியூஸ் கொடுக்கணும். நான் ஆபீஸ் கிளம்புறேன்.’’

திங்கள்கிழமை காலை... அலுவலகம் அவசரமாகத் திரண்டது. ரம்யாவும் வந்திருந்தாள். வினோத் ஆச்சர்யப்பட்டான். 10.30 மணிக்கே மீட்டிங் வைத்திருந்தாள். கண்ணுக்குத் தெரிந்து மூன்று கொலைகள் செய்தவளுக்குப் பொன்னியின் செல்வனைப் பற்றி என்ன கவலை? போலீஸ் இன்னும் இவளைச் சுற்றி வளைக்காதது ஏன்? வினோத் மனத்தில் பொங்கி எழுந்த கேள்விகள் பதில் கிடைக்காமல் தவித்தன.

மீட்டிங்கில் ரம்யா கோபமாக இருந்தாள். ‘‘ஷெட்யூல் படி இப்ப நாம விண்ணகரக் கோயில் ஆரம்பிச்சிருக்கணும். ஏன் முடிக்கலை... யார் காரணம்?’’ கடுகடுப்பாகக் கேட்டாள்.

‘‘காம்பிசிட் வேலை எல்லாத்தையும் நான் முடிச்சுட்டேன். ரிக்கிங் வேலை கொஞ்சம் பாக்கி. வினோத் சார்கிட்ட , அன்னிக்கு  வந்தியத்தேவனோட குதிரையைக் காட்டி சரி செய்யச் சொன்னேன். பரந்தாமன் கொடுத்தார்னா முடிச்சுடலாம்.’’

‘‘ராம்குமார், இந்த மாதிரி பதிலை நான் எதிர்பார்க்கல. அவர் தந்தார்னா நான் முடிச்சுடுவேன்னு சொல்லக்கூடாது. அவர் உங்க பக்கத்திலதானே இருக்கார். கேட்டு வாங்கி முடிக்கணும். அந்த ஷெட்யூல்ல முடியலைனா அதில சம்பந்தப்பட்ட எல்லாரும்தான் பொறுப்பு. வினோத்தான் ஏதோ போலீஸ் இஷ்யூல ஒருநாள் வரமுடியாமப் போச்சு... மத்தவங்களுக்கு என்ன? வேலைகளை ஷெட்யூல்படி முடிங்க.’’ அவள் இவ்வளவு கறாராகப் பேசுவாள் என யாரும் நினைக்கவில்லை. ஓர் அமைதி நிலவியது.

‘‘வினோத்... நீங்க இருங்க! மத்தவங்க வொர்க்கைப் பார்க்கலாம்.’’

கடைசி ஆளும் போனதும் கண்ணாடிக் கதவு சுத்தமாக மூடிவிட்டதா எனப் பார்த்துவிட்டு, வினோத் பக்கம் திரும்பினாள். ‘‘என்ன ஆச்சு வினோத்... போலீஸ் பிரச்னையெல்லாம் முடிஞ்சுதா? உன்கிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறேன். கொஞ்சம் தொடர்ந்து ஃபாலோ பண்ண வேண்டியிருக்கு.’’ சற்றே நெருங்கி, ‘‘விரட்டி வேலை வாங்கினாத்தான் முடியும்’’ என்றாள்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6

மூன்று கொலைகள் செய்தவளா... நாமதான் தப்பா முடிவு பண்ணிட்டமா? வினோத் மைக்ரோ விநாடியில் மனப் போராட்டங்களுக்கு ஆளாகி, மீள முடியாமல் தவித்தான். ஜீரணிக்கத் திராணியற்றவனாக இருந்தான்.

‘‘என்ன வினோத்... ஏதோ யோசனையா இருக்கீங்க?’’

‘‘வெள்ளிக்கிழமை நைட் உங்களை நுங்கம்பாக்கத்தில ஒரு ஹாஸ்பிடல்ல பார்த்தேன்...’’ என நேரடியாக ஆரம்பித்தான்.

‘‘எந்த ஹாஸ்பிடலுக்கும் போனதில்லை, சென்னையில. யாரையோ பார்த்திருக்கீங்க.’’

‘‘நுங்கம்பாக்கத்துக்கு நீங்க வரவேயில்லையா?’’

‘‘வெள்ளிக்கிழமையா... இல்லையே’’ என நியாயமாகவும் நிஜமாகவும் யோசித்தாள்.

‘‘ஞாயித்துக்கிழமை பெங்களூரு போனீங்களா?’’

‘‘போலீஸ் சகவாசம்... என்கொயரி பண்ற மாதிரியே கேட்கறீங்க.’’

‘‘போனீங்களா?’’

‘‘நானே வீடு கிடைக்காம... ஹாஸ்டல் ஹாஸ்டலா சுத்தி சண்டேதான் செட்டிலானேன். ஏன் கேட்கறீங்க?’’

பாரில் பார்த்ததையும் சொல்லலாம் என நினைத்தவன் நிறுத்திக்கொண்டான். ‘‘உங்களை மாதிரியே ஒருத்தரைப் பார்த்தேன். அதான்.’’

‘‘பெங்களூர்ல இருந்து வந்ததில் இருந்து சரியா இருக்கு வேலை. நான் ஒருத்திய நம்பி வந்தா, அவ திடீர்னு கல்யாணம்னு ஊருக்குப் போயிட்டா.அவசரமா ஹாஸ்டல் தேட வேண்டியதாப் போச்சு. சென்னையில இன்னும் எங்கயுமே போகலை.’’

நம்பும்விதமாகவே சொன்னாள். நம்பலாம் என வினோத்தின் மனமும் சொன்னது. அலுவலகத்தில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாததை நம்மிடம் மட்டும் தெரிவிக்கும் ஓர் அந்நியோன்யம் காதலுக்கு நெருக்கமாக இருந்தது. கண்ணால் காண்பது பொய் மனநிலையை ஏற்படுத்தியது அந்த நெருக்கம். சந்தேகங்களை மொத்தமாக ஒதுக்கிவைத்தான். ஒவ்வொன்றாக அவிழ்க்கலாம் என நினைத்தான்.

‘‘சென்னையில முக்கியமா பார்க்க வேண்டிய இடம் எது?’’ ஆசையாகக் கேட்டாள்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6

‘‘எனக்கு மெரினா.’’

‘‘ஆபீஸ் முடிஞ்சதும் போவோமா?’’

வினோத்துக்கு திகிலும் த்ரில்லும்  ஊற்றெடுத்தன. ஏழு மணிக்கு கிளம்பினார்கள். அவனுடன் பைக்கில் பயணித்தாள். டிராகுலா மாதிரி கழுத்துப் பக்கமாக வந்து கடித்துவிடுவாளோ என்ற பயத்தைக் காற்றில் பறந்துவந்து முகத்தில் மோதிய அவளுடைய கூந்தல் துடைத்தெறிந்தது. மெரினாவில் காந்தி சிலை அருகே பைக்கை நிறுத்திவிட்டு, இருவரும் கடல் நோக்கி நடந்தபோது, ‘‘ரொம்ப நல்லாருக்கு’’ என்றாள். கடல் அவளுக்கு அளித்த பரவசத்தை வினோத் கவனித்தான். நிலவில் மின்னும் அந்தக் கண்கள், கடல் அலையில் நனைந்துவிடாமல் தொட்டுவிட்டு ஓடிவரும் அவளுடைய குழந்தைமை... அவளைச் சந்தேகிக்க எப்படித் தனக்கு மனம் வந்தது என நினைத்தான்.

‘‘ரம்யா... இங்கயே இரு. ஏதாவது வாங்கிட்டு வர்றேன்.’’

‘‘ஐஸ்க்ரீம் கிடைக்குமா?’’ அலையோசையைமீறி அவள் கத்த வேண்டியிருந்தது.

தம்ஸ் அப் காட்டிவிட்டு, ஐஸ்க்ரீம் கடையை நோக்கி நடந்தான். இரண்டு குல்ஃபி வாங்கிக்கொண்டு கால் புதையும் மணலில் கவிதை மனசு ததும்ப வந்தபோது, ஒருவன் மணலில் அச்சுறுத்தும் அலங்கோலத்துடன் கிடந்தான். கூர்ந்து பார்த்தபோது, ரத்தம் கொப்பளிக்கும் வாயுடன் இறுதிமூச்சுக்கு ஏங்குவது தெரிந்தது. பார்வையை அவசரமாகச் சுழற்றிக் கடற்கரையில் பார்த்தான். ரம்யா அங்கே இல்லை.

(தொடரும்...)