அலசல்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7

ந்தமுறை சிக்கக் கூடாது என்பதை மட்டும் மூளை அலாரம் அடித்தது. வேகமாகச் சாலையை நோக்கி வந்தான் வினோத். ரத்தம் கொப்பளிக்கக் கடற்கரை மணலில் கிடந்தவன் இன்னும் சில விநாடிகளில் செத்துவிடுவான் எனப் பளிங்குச் சுத்தமாகத் தெரிந்தது. ஏற்கெனவே ரம்யா செய்த இரண்டு கொலைகளை அருகே தரிசித்த அனுபவத்தில் அதை யூகிக்க முடிந்தபோது உடம்பு நடுங்க ஆரம்பித்தது.

இறந்தவனுக்கு 30 வயதுக்குள் இருக்கலாம். லுங்கி கட்டியிருந்தான். ரம்யா அதற்குள் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது அதிர்ச்சியாக இருந்தது. ரம்யாவுக்கு போன் செய்யலாமா என நினைப்பதற்குக்கூடப் பயமாக இருந்தது. கடற்கரையில் வெளிச்சமும் கூட்டமும் அதிகமாக இருந்த இடத்துக்குப் போய் நின்றுகொண்டு போன் செய்தான். நினைத்தது சரிதான். தொடர்பு எல்லைக்கு வெளியே... ஐந்து நிமிட இடைவெளியில் இன்னொருமுறை போன் செய்தான்... ‘சுவிட்ச் ஆஃப்’. எதற்கும் ஒருமுறை பார்த்துவிடலாம் எனக் கடற்கரை மணல்வெளியைக் கண்களால் அலசினான். ரம்யா நிச்சயமாக அங்கே இல்லை. இனி அங்கே நிற்பதும் ஆபத்து என மனதுக்குள் மணி அடித்தது. பைக்கில் ஏறும்போதுதான் கவனித்தான். அங்கே காவல்துறை கண்காணிப்பு கேமரா பொருத்தியிருந்தார்கள். ச்சே!

கஞ்சி போடாத கதர்ச் சட்டை மாதிரி தொளதொளவென வீடு வந்து சேர்ந்தான். அச்சமும் குழப்பமும் அதிகமாக இருந்தது. போலீஸுக்குப் போன் செய்து எல்லா விவரங்களையும் கதை மாதிரி சொல்லிவிடுவது ஆபத்தைக் குறைக்கும் என உள்மனசு சொன்னது. இன்னும் சில நிமிடங்களில் டி.வி-யில் காட்டப்போகும் பிரேக்கிங் நியூஸுக்காக அதை ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தான். போன் அடித்தது. பெயரில்லா எண்ணிலிருந்து வரும் அழைப்பு. லேண்டு லைன். போலீஸாக இருக்குமோ? இரண்டு மூன்று ரிங் அடித்த பிறகு யோசனையுடன் எடுத்தான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7

‘‘வினோத்... நான் ரம்யா. என் போனை ஒருத்தன் பிடுங்கிட்டு ஓடிட்டான். என்ன பண்றதுன்னே தெரியலை. உன்னைத் தேடி ஐஸ்க்ரீம் கடைக்கு வந்தேன். உன்னைக் காணோம். உன் நம்பரும் தெரியாது. தவிச்சுப் போயிட்டேன். இன்னும் பீச்லதான் இருக்கியா?’’

‘‘இல்ல... ரொம்ப நேரம் தேடிப் பார்த்துட்டு இப்பத்தான் ரூமுக்கு வந்தேன்.’’

நம்பும்படியாகவே அவள் காரணம் சொன்னாள்.

‘‘போனைப் பிடுங்கிட்டுப் போனவன் எப்படி இருந்தான்?’’

‘‘இருட்டுல அடையாளம்லாம் பார்க்க முடியுமா? ஒல்லியா அஞ்சடி உயரம் இருந்தான். லுங்கி கட்டியிருந்தான்.’’

‘‘லுங்கி கட்டியிருந்தானா?’’

‘‘ஆமா. நீ பார்த்தியா?’’

‘‘அங்க நிறைய பேர் லுங்கி கட்டியிருந்தாங்க... அப்புறம்?’’

‘‘அவனைப் பிடிக்கலாம்னு ட்ரை பண்ணலை. பயத்துல ரோட்டுக்கு ஓடி வந்துட்டேன். தனியா அங்க நின்னுக்கிட்டிருக்க ஒரு மாதிரியா இருந்துச்சு... உடனே ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டலுக்கு வந்துட்டேன். டைரியில எம்.டி நம்பர் இருந்துச்சு. அவர்கிட்ட உன் நம்பர் வாங்கிப் பேசுறேன். இது ஹாஸ்டல் நம்பர்.’’

தினம் ஒரு கொலை பண்ண வேண்டும் என ஏதாவது வேண்டுதலா? அவளையும் அறியாமல் கொலை செய்யும் நோயா? அறிந்தேதான் கொலை செய்கிறாளா? ஒரு போனுக்காகக்கூடக் கொலை செய்வாளா?

கேள்விகள்... கேள்விகள்...

‘‘போன் மிஸ் ஆனதுக்கு கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கணுமா?’’ என்றாள் அக்கறையாக. ‘கொலைக்குத்தான் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்’ என நினைத்தான். ‘ரம்யாவாக இருக்காதோ? அது எப்படிக் கொலை நடந்த மூன்று இடங்களிலும் அவள் இருக்கிறாள். ஆனால், யதேச்சையாக நடப்பதாக நினைக்க முடியுமா? அதுவும் ஒரே மாதிரி கொலை... வாயில் சுடுவாளோ? வாய்க்குள் கத்தியைச் சொருகி இழுப்பாளோ? இப்படி ரத்தம் கொப்பளிக்கிறதே! என்ன வக்கிரம் இது?’

‘‘எதுவும் வேலையா இருக்கியா வினோத்?’’

‘‘இல்லை. கம்ப்ளைன்ட் கொடுப்பது சம்பந்தமாத்தான் யோசிக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச அட்வகேட் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட விசாரிக்கிறேன்.’’

அதற்கு அவசியமே இல்லாமல், டி.வி-யில் ‘மெரினா கொலை’ பிரேக்கிங் நியூஸ் வந்து கொண்டிருந்தது. நிருபர் ஒருவர் கொலை நடந்த இடத்திலிருந்து பிரகாசமான வெளிச்சத்துக்கு நடுவே மைக்கில் முழங்கிக்கொண்டிருந்தார்.
‘‘அப்படியே லைன்ல இரு ரம்யா.’’

டிவி-யில் நிருபர், ‘பீச்சில இளைஞர் ஒருவரின் மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடற்கரையில் மர்மமாக இறந்து கிடந்த அவருடைய டவுசரில் பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தன. அவர் செல்போன் திருடுபவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். செல்போன் திருடும்போது யாராவது அவரைத் தாக்கியதால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’  எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘‘டி.வி-யில ஒரு கொலை நியூஸைக் காட்டறாங்க. யாரோ செல்போன் திருடனாம். உன்கிட்ட செல்போன் திருடினவன் அவன்தானா பாரு...’’

‘‘கொஞ்சம் இருங்க.’’

ஹாஸ்டலில் டி.வி இருக்கும் இடத்துக்கு ஓடி அவசரமாகப் பார்த்து விட்டு வந்தாள். ‘‘ஆமா. அவனேதான்.’’

‘‘நீ அங்க இருக்கும்போது அவனை யாராவது துரத்திக்கிட்டுப் போறதைப் பார்த்தியா?’’

‘‘இல்லையே.’’

‘துரத்திக்கிட்டுப் போனதே நீதானே?’ என்ற மனக்குரலை ஒதுக்கி, ‘‘இப்ப உன் போன் அவன்கிட்ட இருக்கிறதால எப்படியும் போலீஸ்கிட்ட இருந்து போன் வரும். அதுக்கு முன்னாடி பீச் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி உன்னோட போன் மிஸ் ஆனதைச் சொல்லிடு.’’

‘‘எனக்குப் பயமா இருக்கு வினோத்.’’

‘‘சரி. நான் அட்வகேட் மூலமா சொல்றேன். அதுதான் சேஃப்டி.’’

‘‘ப்ளீஸ்!’’

ரம்யாவின் நாடகத்தில் தானும் ஒரு மௌன அங்கமாக இருப்பதை நினைத்துப் பார்த்தான் வினோத். எதற்கும் இவற்றை ராமநாதனின் காதில் போட்டுவிடுவது சரி எனப்பட்டது. ராமநாதன் பெயரை செல்போனில் தேடிக் கொண்டிருந்தபோதே அவனிடமிருந்து போன் வந்தது.

‘‘உனக்குத்தாம்பா போன் பண்ண இருந்தேன்.’’

‘‘டி.வி-யில பார்த்தேன். அதே டைப்போல இருக்கே.’’

‘‘அதேதான். நானும் அவளும்தான் பீச்சுக்குப் போயிருந்தோம். ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வர்றதுக்குள்ள கூட்டத்தில காணாமப் போயிட்டா. கொஞ்ச நேரத்தில இந்தக் கொலை. ‘என்கிட்டருந்து யாரோ போனைப் பிடுங்கிட்டுப் போயிட்டாங்க. அதனாலதான் கான்டாக்ட் பண்ண முடியாம வீட்டுக்கு வந்துட்டேன்’னு சொல்றா. இப்ப செத்துப்போனவன் பாக்கெட்ல அவளுடைய போன் இருக்கு.’’

‘‘தலையே சுத்துது. எப்படியும் அவகிட்ட என்கொயரிக்கு வருவாங்க.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7

‘‘போன் மிஸ் ஆகிடுச்சுன்னு ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துருவமா?’’

‘‘உனக்கு ஏன்டா தலைவலி. விடு. ஒரு கொலைகாரி. சீரியல் கொலைகாரி. மாட்டிக்கிட்டுச் சாகட்டும். தூக்குத் தண்டனை கிடைக்கட்டும். உனக்கென்னடா?’’

‘‘ஒரே ஒரு டவுட். என்கிட்ட இருந்து ஒருத்தன் போனைப் பிடுங்கிட்டுப் போய்ட்டான்னு சொல்றா. பதறிப்போய் ரூமுக்கு வந்துட்டு, எம்.டி-கிட்ட நம்பர் வாங்கி என்கிட்ட மன்னிப்புக் கேட்கிறா. அட்வைஸ் கேட்கிறா. ஒருவேளை இவளா இருக்காதோன்னு பத்து பர்சென்ட் பரிதாபம் வருது.’’

‘‘ஒவ்வொருமுறை கொலை நடக்கிற இடத்திலும் அவ இருக்கிறாளே... அது எப்படி?’’

‘‘அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாக் கொலை நடந்த இடத்திலும் அவ இருந்தா மாதிரியே நானும் இருந்திருக்கேன். நான் கொலை செய்யலைன்னு சொல்றதுக்கான வாய்ப்பு இருக்கிற மாதிரி... அவ செய்யலைங்கிறதுக்கும் ஒரு சான்ஸ் இருக்கு இல்லையா?’’

‘‘நீங்க ரெண்டு பேரும் இருக்கிற இடத்தில இந்தக் கொலையை வேற ஒருத்தர் செய்றார்னு புதுக்கதையா?’’

வினோத் யோசித்தான். ‘ஒவ்வொரு சம்பவத்திலும் நாங்கள் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? எங்கள் முன்னிலையில் பழிவாங்க நினைக்கிறார்களா? ரம்யா முன்னிலையில் என்பது சரி. நான் எதற்குக் கொசுறு?’ கொஞ்சம் பழைய கதைதான். இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தான். ‘‘மோகினி பிசாசுன்னு சொல்லுவாங்களே அப்படி ஏதாவது?’’

‘‘இதப்பார் வினோத். உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பே வேணாம்னு கட் பண்ணிடு வேன்.’’ ராமநாதன் உஷ்ணமாகிவிட்டான்.

‘‘எதுக்குச் சொல்றேன்னா... அந்த பார், அந்த ஹாஸ்பிடல், பெங்களூரு விசிட் எதுவுமே அவளுக்குச் சம்பந்தமில்லாம இருக்கு. நான் சென்னைக்கு வந்து எங்கயுமே போகலைன்னு சொன்னா. அதற்குப் பிறகுதான் பீச்சுக்குப் போகலாம்னு ப்ளான் பண்ணோம்.’’

‘‘ஸ்ஸ்ஸ்... பார்த்துடா! உன் வாய்ல இருந்து ரத்தம் எடுத்துறப் போறா.’’

‘‘கரெக்ட். எல்லாருமே ரத்தம் கக்கிச் சாகிறதைக் கவனிச்சியா? அதனாலதான் ஏதோ ஓர் அமானுஷ்யம் இருக்குன்னு சொல்றேன்.’’

ராமநாதனிடம் பதில் இல்லை. யோசிக்கிறான் எனத் தெரிந்தது.

‘‘என்ன யோசிக்கிறே?’’

‘‘ஒரு குருஜி ஞாபகம் வந்தாரு... சரி, அது இருக்கட்டும். இப்ப அந்த ரிப்போர்ட்டர் போன் பண்ணான்.’’

‘‘எந்த ரிப்போர்ட்டர்?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7

‘‘அந்த பெங்களூரு ரிப்போர்ட்டர். ராஜ்மோகன். அந்த டைரிக்குறிப்பைச் சொன்னான். ஜெனிலியா டைரி... ரெண்டு பக்கம் கிறுக்கியிருந்ததா சொன்னானே...’’

‘‘ஆமா.’’

‘‘பத்திரிகையில் அந்த டைரி விவரத்தை எழுதிட்டானாம்... இனிமே டீடெய்ல் கொடுக்கிறதில தப்பில்லைனு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னான்.’’

‘‘என்ன கிறுக்கியிருந்ததாம்?’’

‘‘சில பெயர்களை எழுதி வச்சிருந்தாளாம்!’’

‘‘என்னென்ன பெயர்லாம் இருந்ததாம் அந்த டைரியில?’’ என்றான் வினோத்.

‘‘நிமோஷ், குமரேசன், சுப்ரமணி... அவ்வளவுதான். முதல் பக்கத்தில அன்புடைய ரம்யாவுக்குன்னு எழுதிவெச்சிருக்கா.’’

ரம்யா தெரிகிறது. மற்ற மூவர்?

அவசரமாக டேபிள் மீதிருந்த பழைய செய்தித்தாள்களைப் புரட்டினான். நினைத்தது சரிதான். நிமோஷ்... அந்த பார் இளைஞன். குமரேசன், அந்த ஹாஸ்பிடல் டாக்டர். சுப்ரமணி? இந்த பீச் பையனா? ஜெனிலியா குறிப்பிட்ட அந்த நபர்கள் எல்லாருமே காலி. ரம்யாதான் கொல்கிறாளா? இல்லை... ஜெனிலியாதான் ரம்யா உடம்பில் ஆவியாகப் புகுந்து நடத்துகிறாளா?

வினோத்துக்கு நடுங்கியது.

(தொடரும்...)