Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8

மிழகக் காவல்துறையின் டாப் தலைகள் அத்தனை பேரும் டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்தனர். நீள் வட்ட டேபிளைச் சுற்றியிருந்த அத்தனை நாற்காலிகளும் நிரம்பியிருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது அங்கிருந்த தலைகளின் பெருமையால் தெரிந்தது. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சண்முகநாதன், சென்னை சிட்டி கமிஷனர் ராம்சிங், ஜாயின்ட் கமிஷனர்கள், ஃபாரன்ஸிக் டிபார்ட்மென்டில் இருந்து ஃப்ரெட்ரிக், சைபர் க்ரைம் டிபார்ட்மென்டில் இருந்து மஜூம்தார், கொலைச் சம்பவம் நடந்த ஏரியாக்களின் ஏ.சி-க்கள் டி.சி-க்கள், ஏரியா இன்ஸ்பெக்டர்கள் என அவ்வளவாக ஒன்று சேராத முகங்கள்.

‘‘சென்னையில் மூன்று கொலைகள், பெங்களூரில் ஒரு கொலை... எல்லாமே ஒரே டைப். ஒரு தடயமும் இல்லை. எல்லாம் ஒரே வாரத்தில்.’’ ட்வீட் போல சிக்கனமாகச் சொன்னார் சண்முகநாதன்.

‘‘கொலை நடந்த எல்லா இடங்களிலும் கேமரா இருந்திருக்கு. கொலை நடந்த இடங்களில் ஒரு பெண் இருந்திருக்கா. ஆனா, அவளோட முகம் பதிவாகல’’ என்றார் கமிஷனர். சைபர் க்ரைம் மஜூம்தார், தலையசைப்பில் ‘ஆமாம்’ என்றார்.

‘‘கேமராவில எதுவும் பிரச்னையா? பதிவாகல மீன்ஸ்?’’ க்ரைம் பிராஞ்ச் செக்‌ஷன் அக்பர் கேட்டார்.

யார் கேட்டார்கள், யார் சொன்னார்கள் என்பதை அதற்கு மேல் கவனிக்க முடிவதாக இல்லை. மாற்றி மாற்றி நிறையச் சொல்லிக்கொண்டு போனார்கள்.

எல்லோரும் கோபப்பட்டுக் கத்தி முடிந்த பின்பு நிதானமாகச் சொன்னார் மஜூம்தார். ‘‘சார், அந்தப் பெண்ணோட டிரஸ், வாட்ச், செருப்பு எல்லாம் தெரியுது. முகம் தெரியலை. கை தெரியலை.’’

‘‘ஏன்?’’

‘‘கேமராவில பதிவாகாத அளவுக்கு ஏதோ கெமிக்கல் பயன்படுத்தியிருக்கிறதா சந்தேகப்பட்டோம். ஆனா, ‘இன்விசிபிள் வுமன்’ போல அவளோடு உடம்பு பூசிவிட்டாப்போல இருக்கு. அப்படி ஒரு கெமிக்கல் இருக்குமான்னு ரிசர்ச் போய்க்கிட்டிருக்கு.’’

‘‘நேர்ல பார்க்கிறவங்களுக்குத் தெரிந்தாளா?’’ என்றார் டி.ஜி.பி.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8

‘‘நேர்ல பார்த்திருக்காங்க. ஆனா, யாருக்கும் அடையாளம் சொல்லத் தெரியலை. பார், ஹாஸ்பிடல் ரெண்டுலயும் சொன்னது இதுதான். ஓவர் மேக்கப், லிப்ஸ்டிக், கிளாமரான டிரஸ்... இப்படித்தான் சொல்றாங்க.’’

‘‘நாலு கொலைகளையும் எப்படி கனெக்ட் பண்ணீங்க?’’

‘‘சார் சொன்னாரே... எல்லாம் ஒரே டைப். வாய்ல ரத்தம் பீறிட்டுச் செத்திருக்காங்க. கொலை நடந்த மூணு இடங்கள்லயும் ஒரு பெண் இருந்திருக்கா.’’

‘‘சரியாச் சொல்லணும்னா...’’ மஜூம்தார் எல்லாரையும் ஒருமுறை சம்மதம் கேட்பதுபோல பார்த்துவிட்டு, ‘‘ரத்தம் கக்கிச் செத்திருக்காங்க’’ என்றார்.

‘‘என்ன சொல்றீங்க மஜூம்தார்?’’

‘‘சார்... யாருக்கும் ஒரு காயமும் இல்லை. வாய் வழியா குடம்குடமா ரத்தம் சிந்தியிருக்காங்க. ஒரு காரணமும் புரியாம இருக்கு.’’

‘‘விட்டா மோகினி அடிச்சுடுச்சுன்னு சொல்வீங்க போல.’’

டி.ஜி.பி கரெக்டா சொல்லிவிட்டார் என்பது போல ஆச்சர்யமும் மகிழ்ச்சியுமாகப் பார்த்தார் மஜூம்தார். ‘‘ஆமாங்கிறீங்களா?’’ டி.ஜி.பி அவருடைய நோக்கத்தை உணர்ந்துவிட்டவர்போல கேட்டார்.

‘‘ஆமா சார்!’’ என்றார்.

‘‘விளையாடறீங்களா மஜூம்தார்?’’

‘‘இல்ல சார். இதில ஏதோ அமானுஷ்யம் இருக்கு. நம்ம லெவலுக்கு மேல! எல்லாக் கொலையும் ஒரு நொடியில் நடந்த மாதிரிதான் எல்லாரும் சொல்றாங்க. பெங்களூரு சாமியார் விஷயத்திலும் இப்படித்தான் சொன்னாங்க. ‘ஒரு பெண் வந்தா. சாமியாரோட அறைக்குள்ள போய் அடுத்த நிமிஷமே வெளிய வந்து மாயமாகிட்டா’ன்னு சொன்னாங்க. ஹாஸ்பிட்டல் என்கொயரியிலயும் இதேதான். ஒரு பெண். அவகிட்ட எந்த ஆயுதமும் இல்லை. ஹாஸ்பிட்டல்லயும் சாமியார் ஆசிரமத்துலயும் மெட்டல் டிடெக்டர் வச்சு செக்கப் பண்ணித்தான் உள்ள அனுப்பறாங்க. அந்த ரெண்டு இடத்திலயும் அவகிட்ட எந்த ஆயுதமும் இல்லை. ஆனா, ஒரு ஹெல்த்தியான ஆளை ஒரு நொடியில ரத்தம் கக்க வெச்சுட்டுப் போயிருக்கா. இது விநோதமா இருக்கு.’’

எல்லோருமே பதிலுக்குப்  பேச வார்த்தைகள் இன்றி கேட்டுக்கொண்டிருந்தனர். ‘‘என்னப்பா பயமுறுத்துறீங்க?’’ என்றார் டிஜிபி.

‘‘ஒரு இடத்திலும் தடயமே இல்லை; கைரேகை இல்லை; ஆயுதம் இல்லை. கேமராவில் முகம் பதிவாகலை. ஒரு பெண் எப்படி ஆம்பளைகளை இவ்வளவு ஈஸியா கொன்னுட்டுப் போக முடியும்? அதுவும் பீச்ல நடந்தது... கற்பனையே பண்ண முடியாதது. செல்போன் திருடிக்கிட்டு ஓடினதைப் பார்த்திருக்காங்க. கொஞ்ச தூரம் ஓடினவன் அப்படியே இருட்டில ரத்தம் கக்கி விழுந்திருக்கான். பார்வையாலேயே கொன்னாத்தான் முடியும்.’’ - ஃப்ரெட்ரிக் தன் பங்குக்குச் சொன்னார்.

‘‘என்ன மோட்டிவ்?’’

‘‘கொஞ்சம் இதையெல்லாம் நம்பித்தான் பேச வேண்டியிருக்கு. பெங்களூரு ஆசிரமத்தில ஜெனிலியான்னு ஒரு பொண்ணு சந்நியாசியா சேர்ந்திருக்கா. திடீர்னு செத்துப்போயிட்டா. அப்ப பெங்களூரு போலீஸை வெச்சு கமுக்கமா கேஸை முடிச்சுட்டாங்க. அந்தப் பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செஞ்சவங்கதான் இப்ப வரிசையா செத்திருக்கிறதாச் சொல்றாங்க. பார்ல செத்த நிமோஷ், டாக்டர் குமரேசன் ரெண்டு பேரும் சாமியார் ஆசிரமத்துக்கு வந்த ஆதாரங்களை லிங்க் பண்ணிட்டோம். பீச்ல செத்துப்போனவன் பத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்கோம்.’’

‘‘அந்த ஆசிரமத்துல பாதிக்கப்பட்ட யாரோதான் இதுக்கெல்லாம் பின்னால இருக்காங்க. அங்க இருந்த எல்லாப் பெண்களோட பேக்கிரவுண்டையும் பிடிங்க. குறிப்பா ஜெனிலியா. ஆளைப் பிடிச்சுட்டா... இதில் இருக்கிற டெக்னிக்கல் ஆஸ்பெக்டை அப்புறம் பிடிக்கிறது ஈஸி. என்ன டெக்னிக்ல கொல்றாள்னு அவகிட்டக் கேட்டுக்கலாம்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8

‘‘வேற ஏதாவது?’’

‘‘பீச்ல செத்துக்கிடந்தவன் கை விரல்ல தலைமுடி சிக்கியிருக்கு. நீளமா, லேடியோட ஹேர்தான். அக்யூஸ்ட் லிஸ்ட்ல மேட்ச் பண்ணிப் பார்க்கணும்.’’ கொலையில் சம்பந்தப்பட்டது ஒரு பெண்தான் என்று கையில் இருக்கிற இன்னொரு ஆதாரத்தைச் சொன்னார் மஜூம்தார்.

‘‘ஹோம் செக்ரட்டரி டீடெய்ல்ஸ் கேட்டிருக்கார்... இன்னும் ரெண்டு நாள்ல ரெக்கார்ட்ஸ் அவர் டேபிளுக்குப் போகணும். ஓகே?’’ என்றார் டி.ஜி.பி.

அடுத்த வாரத்தில் சட்டசபை கூடுவதாக இருக்கிறது. போலீஸ் தரப்புக்கு இந்த கேஸ் சங்கடம் தரக்கூடியதுதான். குற்றவாளியை நெருங்கிவிட்டது போலவும், விசாரணைத் தீவிரமாக நடப்பதுபோலவும் அறிக்கை தயாரித்து பிரஸ் ரிலீஸ் ஒன்றையும் கையோடு அனுப்பிவிட்டுக் கலைந்தனர்.

தேவையில்லாத கற்பனைகள்தான் உலகில் மிகப் பெரிய அச்சமாக மாறுகின்றன. காலையில் ரம்யா போனை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே சிரித்தபடி வந்தாள். அவளுடைய போன் அவள் கைக்கு வந்துவிட்டது. அவள் சொன்னது அத்தனை சாதாரணமாக இருந்தது. ‘‘காலையில மெரினா போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செஞ்சு ‘போன் மிஸ் ஆகிடுச்சு’ன்னு சொன்னேன். ஒரு லேடி கான்ஸ்டபிள் பேசினாங்க. ‘உங்க போன்தான் என்பதற்கு ஏதாவது ப்ரூஃப் கொண்டுவாங்க’னு சொன்னாங்க. போன் வாங்கின பில் இருக்குன்னு காட்டினேன். போனைக் கொடுத்துட்டாங்க’’ என்றாள்.

‘‘வேற ஒண்ணுமே கேட்கலையா?’’

‘‘எப்படி தொலைஞ்சதுன்னு கேட்டாங்க. பீச்ல போன்ல பேசிக்கிட்டு இருந்தப்ப ஒருத்தன் பிடுங்கிட்டு ஓடிட்டான்னு சொன்னேன். கொலை சம்பந்தமா நான் எதுவும் பேசிக்கலை’’ என்றாள்.

‘‘உனக்கு சிஸ்டர்ஸ் இருக்காங்களா?’’ வினோத் ஆதாரமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.

‘‘இல்லையே... என்ன வினோத். என்னை மாதிரியே யாரையோப் பார்த்தேன்னு சொன்னே... இப்ப எனக்கு சிஸ்டர்ஸ் இருக்காங்களான்னு கேட்கிறே?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8

‘‘நிமோஷ், குமரேசன், சுப்ரமணி... இந்தப் பெயர்கள்ல யாரையாவது உனக்குத் தெரியுமா?’’

அவள் நெற்றியைச் சுருக்கி அழகாக யோசித்தாள். நெற்றிச் சுருக்கம் அப்படியே இருக்க, உதடு மட்டும் பிதுக்கம் காட்டி ‘இல்லை’ என்றது. ரம்யாவுக்கு இந்தக் கேள்விகளெல்லாம் புதிதாகவும் புரியாததாகவும் இருந்தன. உதடுகள் இப்போது புன்னகைக்கு மாறின. தொடர்ந்து கொலைசெய்பவளால் இப்படியெல்லாம் சிரிக்கவே முடியாது. ‘‘உன் மனசுல என்னவோ இருக்கு. முழுசா கேட்டுடு’’ என்றாள்.

ஜெனிலியா பற்றிக் கேட்கலாமா என நினைத்தான். ‘எப்படித் தெரியும்’ எனக் கேட்பாள். பெங்களூரு சென்று விசாரித்தது அத்துமீறலான செயல் எனக் கோபப்படுவாள்.

‘‘முழுசா கேட்கணுமா... அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா கேட்டேன். நாம இப்ப வேலையைப் பார்ப்போம். சேந்தன் அமுதன், அந்தப் பேச முடியாத அம்மா எல்லாம் ரெடியாகிடுச்சு. குந்தவை, வானதிக்குக் கொஞ்சம் வித்தியாசம் காட்டச் சொன்னேன். குந்தவைக்கு மணியம் வரைந்த மாதிரியே நீண்ட கொண்டை போட்டாச்சு.’’ வினோத், கிராஃபிக்ஸ் பொன்னியின் செல்வன் கேரக்டர்களை அடுக்கிக்கொண்டே போனான். அவன் திசை திருப்புவது ரம்யாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவன் போக்குக்கே வந்தாள்.

‘‘வினோத், ஒண்ணு புரிஞ்சுக்கங்க. இது கேம். சினிமா மாதிரி போய்க்கிட்டே இருக்கக் கூடாது. ‘அன்ரியல் இன்ஜின்’ல எல்லாமே ஆட்டோ ரெண்டரிங்தான். சும்மா சும்மா ரெண்டரிங் போட்டு டைம் வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை. இன்னொரு விஷயம். சில அத்தியாயங்கள்ல கேம் ஆப்ஷன் இன்ட்ரஸ்டிங்கா இல்ல. ஸ்க்ரிப்ட் ரைட்டர்கிட்ட கொஞ்சம் பேசுங்க. இல்ல, நாளைக்கு வரச் சொல்லுங்க. முக்கியமா 12-வது அத்தியாயத்தில நந்தினியை பழுவேட்டரையர் கடத்திக்கிட்டுப் போறதைத் தட்டையா சொன்னா போதாது. நந்தினிக்கு என்ன ஆச்சுன்னு ரெண்டு ஆப்ஷன் வைக்கணும். பாண்டிய மன்னனைக் கொன்னது போல அவளையும் கொன்னுட்டாங்களா, இல்லை உயிரோட இருக்காளான்னு.’’

‘‘உனக்குக் கொலைன்னா ரொம்பவும் பிடிக்குமா ரம்யா?’’ விளையாட்டாகக் கேட்கிறமாதிரி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அவளுடைய முகக் குறிப்பைக் கவனித்தான். ரம்யாவின் நெருக்கத்தில் ரம்யமான பாடி ஸ்ப்ரேவை நுகர முடிந்தது. அபத்தமான கேள்விக்கான பதில்வினையாக ஒரு சிரிப்பை வழங்கினாள்.

‘‘அப்பத்தானே கதையில சுவாரஸ்யம் இருக்கும்’’ என்றாள் சாதாரணமாக.

மதிய உணவுக்குப் பிறகு கீழே சென்று, ஒரு தம் போட்டுவிட்டு சாவகாசமாக மாடிக்கு வந்தான் வினோத். ரம்யாவின் அறையில் அவள் இல்லை. அவளுடைய சிஸ்டத்தில் ஏதோ கிராஃபிக்ஸ் அனிமேட் ஆகிக்கொண்டிருந்தது. யோசனையோடு உள்ளே சென்று பார்த்தான். மானிட்டரில் ரம்யா... கிராஃபிக்ஸ் ரம்யா. ஏதோ பாரில் துப்பாக்கி முனையால் கன்னத்தைச் சொறிந்தபடி இருந்தாள். இவளுடைய பிரத்யேக கேம். சப்த நாடியும் தகிக்க, ஒரு சுதாரிப்பில் அதைத் தன் செல்போனில் படம் எடுத்துக்கொண்டான். விரைவாக தன்னுடைய இருக்கைக்கு வந்து படத்தை செல்போனில் இன்னொரு தரம் பார்த்தான். கிட்டத்தட்ட பாரில் பார்த்த உடை... கிட்டத்தட்ட அதே ரம்யா.

(தொடரும்...)