Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 9

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 9
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 9

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 9

வினோத்தும் ராமநாதனும் தாங்கள் என்ன விஷயமாக வந்திருக்கிறோம் என்பதை குருஜியின் அடிப்பொடிகளிடம் சொல்லிவிட்டு, அழைப்புக்காகக் காத்திருந்தனர்.

சுவர்களில் நிறைய செப்புத் தகடுகள் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தன. நாக்கைத் தொங்கப்போட்டபடி காளி படம் ஒன்று பிரதானமாக மாட்டிவைக்கப்பட்டிருந்தது. எலுமிச்சைப் பழம், படிகாரம், மிளகாய், அட்டமுட்டிக் காய்... என ஒரு நீண்ட கறுப்புக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருந்தனர். பேய் நினைவைத் தாங்கி நிற்கும் பழைய கட்டடம். ‘சென்னையின் பிரதானமான பேய் நிபுணர்’ எனப் பலரும் சிபாரிசு செய்திருந்தனர். அவர் பெயரை யாரும் சொல்லவில்லை. ‘முனி குருஜி’ என்றார்கள். ராமநாதன் குருஜி என்றுமட்டும் சொன்னான்.

உள்ளே அழைத்தார். சடைமுடியும் ருத்ராட்சக் கொட்டைகளும் தாங்கிய மார்போடு இடுப்பில் காவி உடுத்தியிருந்தார். உடலில் குங்குமம் பூசியிருந்தார். பத்து ரூபாய் நாணயம் அளவுக்குக் கறுப்புப் பொட்டு. அவர் இருந்த அறை, வெளியே இருந்த அறையைவிட அச்சமூட்டுவதாக இருந்தது. அடங்கிய சிறிய அறை. காற்றோ, ஆவியோ வெளியேறிவிடாதபடி இறுக்கமாக இருந்தது. குண்டு பல்பு ஒளியில், அறையில் வெளிச்சத்தைவிட நிழல் அதிகமாக இருந்தது. கையில் ஆர்னமென்ட்டாக இருந்த குறுந்தடியை உயர்த்தி, அமருமாறு சைகை செய்தார். இரண்டு பேரையும் மிரட்டும் விதமாகப் பார்த்துவிட்டு, கண்களை இறுக மூடி, கையில் இருந்த சோழிகளைக் குலுக்கி, எதிரே இருந்த பலகையில் கொட்டினார். சில மல்லாந்தும் சில கவிழ்ந்தும் கிடந்தன.

அவற்றை ஊன்றிப் பார்த்துவிட்டு, ‘‘தந்த்ரா சாஸ்திரம் என்பது தந்த்ரமும், மந்திரமும் இணைஞ்சது. அதனால சிலர் இதை தாந்த்ரீகம்னு சொல்வாங்க. பேய், பிசாசு, ஆவி, மோகினின்னு நம்மால் நம்பப்படும் சக்திகள், நம் கண்ணுக்குத் தெரியாத உலகத்தில் வாழுகின்றனவே தவிர, இந்த உலகத்தைவிட்டு எங்கும் சென்றுவிடவில்லை. நீங்க மோகினியால பாதிக்கப்பட்டு இங்க வந்திருக்கீங்க. வரிசையா ஆம்பளைகளைக் கொன்னுக்கிட்டு இருக்கு. எல்லாம் டி.வி-யில பார்க்கிறேன். நீங்க இங்க வருவீங்கன்னு தெரியும். மோகினின்னா அழகானவ. அழகு இருக்கிற இடத்தில் ஆபத்தும் இருக்கு. அவளுக்கு அபரிமிதமான அமானுஷ்ய சக்திகள் உண்டு.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 9

ஒரு பெண் திருமணம் ஆகாம... கன்னித்தன்மை நீங்காம இறந்து போனா, அவ மோகினியா மாறுவா. பொதுவா ரெண்டுவிதமான மோகினிகள் உண்டு. ஒண்ணு, சாத்வீக மோகினி, இன்னொண்ணு ராஜஸ மோகினி. சாத்வீகமான மோகினி என்பது விதி முடிந்து இறந்துபோனவ. இந்த மோகினிகள் கெடுதி செய்றது இல்லை. விதி முடியாம செத்துப் போனவளை ராஜஸ மோகினின்னு சொல்லுவாங்க. இதுக்குக் கோபம் மட்டுமே குறியா இருக்கும். தனது செயலால் மத்தவங்க கஷ்டப்பட்டா, அதுகளுக்கு அது ஒரு விளையாட்டாத்தான் தெரியும். நீங்க சொல்ற மோகினி, ராஜஸ மோகினி. என் பிரசன்னத்தில் அவ இன்னும் நாலு பேரைக் கொல்லுவான்னு சொல்லுது. நான் என்ன செய்யணும் சொல்லுங்க?’’ என்று கேட்டபடி கண்களைத் திறந்து பார்த்தார்.

‘‘அடுத்து யாரைக் கொல்லப் போறாள்னு தெரிஞ்சா நம்மால காப்பாத்த வழியிருக்கா? போலீஸுக்குத் தகவல் சொல்லிக் காப்பாத்த முடியுமா?’’ ராமநாதன் கேட்டான்.

‘‘போலீஸ் உங்களை நம்பாது. மோகினியை எதிர்த்து நாம ஒண்ணும் செய்ய முடியாது. ஆவியைச் சாந்தப்படுத்தணும். அது ஒண்ணுதான் வழி.’’

‘‘சாந்தப்படுத்தணும்னா என்ன பண்ணணும்?’’

‘‘அவங்ககூட நெருக்கமா பழகின ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்க. அவங்க மூலமாத்தான் அந்த சாங்கியத்தைச் செய்யணும்.’’

ராமநாதனும் வினோத்தும் ஒரே நேரத்தில் ரம்யாவை நினைத்தனர்.

ராமநாதன் மிகவும் நம்பிக்கையாக, ‘‘குருஜி... ஒருத்தங்க இருக்காங்க. நாளைக்கு அவங்களைக் கூட்டிக்கிட்டு வர்றோம்’’ என்றான். குருஜி ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு இரண்டு எலுமிச்சைப் பழங்களைத் தந்தார். ‘‘எந்த ஆபத்தும் வராது... எப்பவும் பாக்கெட்ல வெச்சுக்கங்க’’ என்றார். எத்தனை நாளைக்கு வைத்திருக்க வேண்டும் எனக் கேட்கத் தைரியமில்லை.

வெளியே வந்து வினோத், அவசரமாக இரண்டு சிகரெட்டுகளை அடுத்தடுத்து ஊதினான். ‘‘நீ என்ன தைரியத்தில நாளைக்குக் கூட்டிக்கிட்டு வர்றோம்னு சொன்னே?’’ என்றான் வினோத்.

‘‘குருஜி சொல்றது நம்பறா மாதிரிதான் இருக்கு. ஆசிரமத்தில அந்தப் பொண்ணு ஜெனிலியாவ சில ஆம்பளைங்க டார்ச்சர் பண்ணியிருக்காங்க. செத்துப் போய், இப்ப ஆவியா வந்து பழிவாங்குறா. ஆனா, எதுக்கு ரம்யா போல வந்து பழிவாங்குறாள்னு தெரியலை.’’

‘‘இதப் பார் வினோத். நாளைக்கு அந்தப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து நாலு கொலைகளைத் தடுப்போம். வேற வழியில்லை. இதில பெரிய செலவு ஒண்ணுமில்ல. ரெண்டு எலுமிச்சைப்பழம். ஆயிரம் ரூபா தட்சணை. அவ்வளவுதான்! கிளம்பும்போது எலுமிச்சைப் பழத்தை நம்மகிட்டயே தந்துடுவார்.’’

‘‘டேய்... நீ ஒருத்தன். ரம்யா வரணுமே?’’

அவர்கள் நின்றிருந்த கடையின் கண்ணாடி டிஸ்ப்ளேவில் டி.வி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ரம்யா சம்பந்தப்பட்ட அடுத்தடுத்த கொலைகளை வரிசையாகக் காட்டினர். பேசும் படம் போல இருக்கவே, ‘‘வாடா, உள்ள போய்ப் பார்க்கலாம்’’ என்றான் வினோத்.

‘‘என்ன மாடல் பாக்கறீங்க சார்’’ என வணக்கம் சொல்லி வரவேற்ற சிப்பந்தியைப் புறக்கணித்து, டி.வி-யை நெருங்கிப் பார்த்தனர்.

‘‘நிமோஷ், குமரேசன், ஆசிரம சாமியார், ஜஸ்டின் கொலைகள் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நான்கு பேரும் ஒரே மாதிரியாகக் கொல்லப்பட்டிருப்பதும், இன்னமும் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் காவல் துறைக்குச் சவாலாக மாறியுள்ளது.’’ செய்தி வாசிப்பவர் சொல்லிவிட்டு நிறுத்தினார். நான்கு கொலைச் சம்பவங்களையும் ஒவ்வொன்றாகக் காட்டினர். ‘‘நான்கு பேருமே ரத்தம் கக்கி இறந்துபோனதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கொலைகளில் தொடர்புடையவர் ஒரு பெண் என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். சி.சி.டி.வி கேமராவில் உருவம் சரியாகப் பதிவாகாததால், கொலைகாரியின் உருவத்தை கம்ப்யூட்டரின் உதவியுடன் ஓவியமாக வரைந்துள்ளனர்.’’ இப்போது அந்த ஓவியத்தைக் காட்டினர். அது கேபரே டான்ஸர் ஒருவரின் சில்அவுட் படம்போல இருந்தது.

‘‘எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை. மெரினாவுல செத்துப் போனது ஜஸ்டின்னு சொல்றாங்க. அது ஜெனிலியா லிஸ்ட்ல இல்லாத பேர். அவன் ஏதோ குறுக்க வந்து செத்தவன்னு வெச்சுப்போம். அப்ப அடுத்துச் சாகப் போகிற சுப்பிரமணி யாரு?’’ வினோத் அச்சத்துடன் கேட்டான்.

ழைய டெல்லியின் மசூதி தெருவில் சயின்டிஸ்ட் சுசீந்திரன் வீடு பரபரப்பாக இருந்தது. ஒரு ஜீப்பில் உயர் அதிகாரிகள் வந்து இறங்கியதால், வீட்டைச் சுற்றி மக்கள் கூடினர். கடந்த வாரத்தில் ஒருநாள் அடையாளம் தெரியாத யாரோ ஒருவரால் சுசீந்திரன் கொல்லப்பட்ட நேரத்தில் இதே பரபரப்பு இருந்தது. அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேந்தர் சிங்கும் ஏரியா இன்ஸ்பெக்டரும் உள்ளே சென்றனர். சுசீந்திரனின் மனைவி நிர்மலாவிடம் இன்னும் அதிர்ச்சியோ, அழுகையோ மறையவில்லை. சிங், ‘‘உங்கள் கணவரைப் பார்க்க வந்தது ஒரு பெண் என்றுதானே சொன்னீர்கள்?’’

‘‘ஆமாம்.’’

‘‘எப்படி இருந்தாள்?’’

‘‘ஜெர்கின் போட்டிருந்தாள்...’’

‘‘டெல்லி குளிருக்கு எல்லோரும் போடுவார்கள்... அவள் பேசியதில்... நடவடிக்கையில்?’’

‘‘‘கடவுள் துகள் சம்பந்தமாக’ அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றாள்.’’

‘‘இதை அன்றே சொல்லிவிட்டீர்கள். அவள் அதுக்கு முன்னாடி வந்ததில்லை, இல்லையா?’’

‘‘இல்லை.’’

‘‘சவுத்ல இதே போல நான்கு கொலைகள் நடந்திருக்கு. ஒரு பிசினஸ் மேன், ஒரு டாக்டர், ஒரு சாமியார், ஒரு பிக்பாக்கெட். எல்லா இடங்களிலும் ஒரு பெண்... வாயிலிருந்து ரத்தம் சிந்துதல்... ஆயுதம் இல்லாத கொலை.’’

‘‘நாகினி சீரியல் மாதிரி இருக்கிறது.’’ இந்த சோகத்திலும் நிர்மலாவுக்கு இப்படி ஓர் ஒப்பீடு நினைவுக்கு வந்தது.

அசிஸ்டென்ட் கமிஷனர் சிரித்தார். ‘‘அப்படியும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சட்டத்தின்முன் அதெல்லாம் செல்லாது. இந்தியா முழுக்க அதிர்ச்சி மரணங்களுக்குக் காரணம் ஒரு 25 வயசுப் பெண். அவள் எப்படி எல்லா இடங்களுக்கும் போகிறாள் என்பதே ஆச்சர்யம். இங்கு எப்படி வந்தாள், டாக்ஸியிலா?’’

‘‘அதைக் கவனிக்கவில்லை. அன்றே செக்யூரிட்டியிடமும் கேட்டார்கள். அவளைப் பார்க்கவே இல்லை எனச் சொல்லிவிட்டார். ஏதோ ‘நாகினி’ போலத்தான் இருக்கிறது.’’

‘‘டாக்டர் இறந்தபிறகு யாராவது தேடி வந்தார்களா... அந்தப் பெண் கேட்டதுபோல ‘ஹிக்ஸ் போஸான்’ பற்றி கேட்டார்களா?’’

நிர்மலா யோசித்தார். ‘‘அவருடைய மாணவி ஒருத்தி ஆறுதல் சொல்லிப் பேசினாள். டாக்டர் கட்டுரையை ‘செர்ன்’ அமைப்புக்கு அனுப்பிவிட்டாரா எனக் கேட்டாள். எனக்கு அதைப்பற்றித் தெரியாது எனச் சொல்லிவிட்டேன்.’’
‘செர்ன்’ என்ற பதம் கடவுள் துகளுடன் சம்பந்தப்பட்டது என நினைவில் இடித்தது.

‘‘அவங்க நம்பர் இருந்தா கொடுக்க முடியுமா?’’

‘‘நம்பர்...’’ என செல்போனை எடுத்துத் தேடினார். சிறிய யோசனைக்குப் பிறகு, ‘‘நான் நம்பரை சேமிக்கவில்லை. 19-ம் தேதி இரவு என நினைவிருக்கிறது.’’

‘‘எப்படி அந்தத் தேதி நினைவிருக்கிறது?’’

‘‘அவர் இறந்தவுடன் நான் என் தோழி வீட்டுக்குப் போய்விட்டேன். மீண்டும் 19-ம் தேதி இரவுதான் வந்தேன். அப்போது போன் அடித்தது.’’

‘‘எத்தனை மணி?’’

‘‘8.30 மணி. நாகினி ஒளிபரப்பாகிற நேரம்.’’

அந்த நாளில் அந்த நேரத்தில் வந்த போன் நம்பரை ஏ.சி எடுத்தார். தன் செல்போன் மூலம் அந்த எண்ணைத் தொடர்புகொண்டார். ‘நீங்கள் தொடர்புகொள்ளும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ எனக் குரல் வந்தது.

(தொடரும்)