Published:Updated:

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்
நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

நிவேதிதா லூயிஸ் - படங்கள் : லெய்னா

பிரீமியம் ஸ்டோரி

மிழகத்தில் இன்று நாம் காணும் கூத்தாண்டவரின் ஆனந்த தாண்டவச் சிற்பங்களுக்கெல்லாம் முன்னோடி எனச் சொல்லப்படும் சிற்பம், எவ்வளவு தொன்மை வாய்ந்தது? இது எங்கு உள்ளது? கி.பி 7-ம் நூற்றாண்டில் சாதாரணக் குடியானவப் பெண் ஒருவர் அமைத்த குடைவரைக் கோயில், இன்றும் பொலிவுடன் இருக்கிறதா? தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் கற்கோயில் எங்கு உள்ளது? கேள்விகளுக்கு விடை தேடியும் மகாபலிபுரம், காஞ்சிபுரம் தாண்டி, பல்லவர் நிர்மாணித்த அதிகம் அறியப்படாத கோயில்களை நாடியும் பல்லவர் பாதையில் ஒரு பயணம். 

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

சிறு குன்றுகள்சூழ் அன்றைய பல்லவ நாட்டில், குடைவரைகளே வழிபாட்டுத் தலங்களாக இருந்துள்ளன. அலைந்து திரிந்து, ஒருவழியாகக் கண்டுபிடித்துப்போய் இறங்கினால், செங்கல்பட்டை அடுத்த வல்லத்தில் தென்பட்டது கீழ்ப்பகுதியில் உள்ள கரி வரதராச பெருமாள் குடைவரைக் கோயில். ஸ்ரீதேவி, பூதேவி அருகில் இருக்க, வெளிப்புறம் துவாரபாலகர்கள், அழகிய விஷ்ணுதுர்கையின் புடைப்புச் சிற்பம். `பல்லவப் பேரரசர் மகள் கொம்மை தேவகுலம்' என்ற கல்வெட்டின் மூலம் இந்தக் குடைவரையைக் `கொம்மை' என்ற பல்லவ அரசகுலப் பெண் எடுத்ததாகத் தெரிகிறது. நடுவில் அமைந்த குடைவரையை அமைத்தவர் `லக்கச் சோமாசிரியார் மகள் தேவகுலம்' என்கிற அரசு மரபு சாராத பெண் ஒருவர். அடுத்தடுத்து அமைந்த இரு குடைவரைகளும் பெண்களால் அமைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தைத் தர, குன்றின் மேற்பகுதியில் உள்ள வேதாந்தீஸ்வரர் குடைவரையை அடைந்தோம். 

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

குடைவரை முக மண்டபத்துக்கு வெளியே இடப்புறம் தவ்வைத் தாயின் புடைப்புச் சிற்பம். வலப்புறம் திண்டின் மீது சாய்ந்தவாறு இருக்கும் அழகுகொஞ்சும் விநாயகர் புடைப்புச் சிற்பம். உட்புற மண்டபத்தில் அழகிய நாக முப்புரி  அணிந்த துவாரபாலகர்கள் சூழ, கருவறையுள் வேதாந்தீஸ்வரர். எழில்கொஞ்சும் ஞானாம்பிகை, முருகர், சண்டிகேஸ்வரர், நாகர் என வரிசையாகக் கடவுளர் சிலைகள். இவை தவிர, உட்புறத் தூண்களில் முதலாம் மகேந்திரனின் பெயர் தாங்கிய கல்வெட்டு, முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு என வரிசையாக ஆறு கல்வெட்டுகள். இவற்றின் மூலம் இந்தக் குடைவரைகள் கி.பி 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக்கொள்ள லாம். கோயிலின் பரம்பரை அறங்காவலரான செல்லப்பா குருக்கள், வரலாறு, தலப்புராணம் என அனைத்தையும் விளக்க, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

அடுத்து, திருமால்பாடி நோக்கி பயணம் தொடர்ந்தது. வந்தவாசியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இந்த அழகிய சிற்றூரின் அருகே குன்றின்மேல் அமைந்திருக்கிறது சோழர் காலத்து ரங்கநாத பெருமாள் கோயில். 106 படிகள் ஏறி, மூச்சுத்திணற கோயில் உள்ளே நுழைந்தால், மரக்காலில் தலைசாய்த்து சயன நிலையில் பக்தர்களைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை அரங்கன். அருகில் பிரகலாதன், சுகபிரம்ம ரிஷி. ``இவர் டிரான்ஸ்ஃபர் பெருமாள் தெரியுமா?” என்றபடி விளக்கம் தருகிறார் சக்கரவர்த்தி பட்டர். வெளிப்பிராகாரத்தில் தாயார் ரெங்கநாயகி, ஆண்டாள், ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. கல்வெட்டுகள்மூலம் கோயில் 1136-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டதை அறிகிறோம். நிறைய கல்வெட்டுகள் இன்னும் படிமம் எடுக்கப்படாமல் உள்ளன. கோயிலின் பின்புறம் அழகிய சுனை ஒன்றுள்ளது.  

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

சுற்றிலும் வயல்வெளி, ஏரி என ரம்மியமான சூழல். கிளம்ப மனமின்றி கீழ் இறங்கினால், பாறைகளில் தட்டுப்பட்டன சில கீறல் ஓவியங்கள். தலையில் பெரிய கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திய படைத்தலைவன், எறும்புத் தின்னி, விநோத உருவங்கள் எனத் தீட்டப்பட்டிருக்கும் இந்த ஓவியங்களின் காலம் சரியாகத் தெரியவில்லை. டாக்டர் கே.ராஜன் என்பவர் தொகுத்திருக்கும் `தமிழகப் பாறை ஓவியங்கள்' தொகுப்பில், `திருமால்பாடி இரும்பு கால ஓவியங்கள்’ என இவை குறித்து எழுதியிருக்கிறார். ராசு பவுன்துரையின் பாறை ஓவியங்கள் ஆய்வுப் புத்தகத்தின் முன்னுரையிலும் `திருமால்பாடி பாறை முற்றத்து ஓவியங்கள்’ என்றே குறிப்பிடப்படுகின்றன.  

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

வெயில் உரத்து அடிக்க, சீயமங்கலம் அடைந்தோம். சுற்றிலும் பச்சைப்பசும் புல்வெளி, மெல்லிய சாரல் என ஓவியம்போல காட்சியளித்தது சீயமங்கலம் தூணாண்டார் கோயில். ஸ்தம்பேஸ்வரர் என்ற தற்காலப் பெயர்கொண்ட கோயிலையொட்டிய குளத்தின் நடுவே சுமார் முப்பது அடி உயரத்தில் நிற்கின்றன ஒரு குத்துக்கல்லும், அதைச் சுற்றிய கல்வட்டமும். `ஸ்தம்பேஸ்வரர்' என்ற பெயர், இந்தக் குத்துக்கல் வழிபாட்டால் வந்திருக்கலாம். குத்துக்கல் வழிபாட்டின் பரிணாம வளர்ச்சியாகவே குடைவரைக் கோயிலைக்கொள்ளலாம். 7-ம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திர வர்மனால் அகழப்பட்ட சீயமங்கலம் குடைவரையின் அழகு, காண்போரை வசீகரிக்கும். கருவறையின் இடப்புற மண்டபத் தூண் ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கிறது தமிழகத்தின் பழைமை வாய்ந்த நடராசர் புடைப்புச் சிற்பம். சடைமுடி பறக்க ஆனந்த தாண்டவம் ஆடும் நடராசர் காலடியில் முயலகன் இல்லை. சிவகணம் ஒன்று முழவைத் தட்டியபடியும், நாகம் கால் அருகில் படம் எடுத்தபடியும் காட்சியளிக்கின்றன. கோயில் குருக்கள் தீப ஆராதனை காட்ட, மஞ்சள் ஒளியில் தகித்தார் நடராசர்.   

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

போருக்குத் தயாராகும் வீரர்கள் புடைப்புச் சிற்பங்கள் இரண்டு குகையின் இருமருங்கும் அழகூட்டுகின்றன. அம்பாள், பைரவர் சிலைகளுடன் நேர்த்தியான வாமணன் சிலை ஒன்றும் உள்ளது. கோயிலின் வெளிப்புறச் சுவரில் கல்வெட்டுகள் உள்ளன. அருகில் சிறிய குன்றின் மீது முருகர் கோயில் ஒன்று இருக்கிறது. மதியவேளை நெருங்கிவிட்டதால் உணவு வேண்டும் என்று சிலரும், சமணர் கோயிலைப் பார்த்தே தீருவது என்று ஒரு சாரா ரும் பட்டிமன்றம் நடத்த, இறுதியில் வென்றது சமணர் கோயில்.  

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

சீயமங்கலம் ஸ்தம்பேஸ்வரர் கோயிலில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் சிறிது தொலைவில் உள்ள விஜயாத்ரி எனும் குன்றில் இருக்கிறது, கி.பி 892-893ல் ராஜமல்லனால் அகழப்பட்ட சமணக் குடைவரைக் கோயில். குடைவரைக்கு மேலே இருக்கும் புடைப்புச் சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. மகாவீரர், பரசுவநாதர், பாகுபலி இவர்களுடன், பாகுபலியின் சகோதரிகளான பிராமி மற்றும் சவுந்தரி, யக்ஷர்கள், யக்ஷிகளுடன், ஐராவதம் ஏறிய இந்திரன் எனச் சமணக் கடவுளர்களின் அணிவரிசை இருக்கிறது. குடைவரையினுள் புதிய மகாவீரர் சிலை ஒன்று வழிபாட்டில் உள்ளது. இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் நந்தி சங்கத்தைச் சேர்ந்த சமணப் பள்ளி ஒன்று இருந்ததாகவும் இந்த நந்தி சங்கம் `திராவிடச் சங்கத்'துக்குட்பட்டது எனவும் அறிகிறோம்.   

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

ஒருவழியாகக் குழு காஞ்சியை அடையும்போது, பசி. துரிதகதியில் சிற்றுண்டியை விழுங்கிவிட்டு கயிலாசநாதரைத் தேடி ஓட்டம்பிடித்தோம். தென்னிந்தியாவில் கட்டுமானம் செய்யப்பட்ட முதல் கற்கோயில் காஞ்சி கயிலாசநாதர் திருக்கோயில் என அறிஞர்கள் கருதுகின்றனர். கி.பி 685-705ல் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவரால் வேகவதி ஆற்றின் கரையில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கலைக்களஞ்சியத்தில் மொத்தம் 58 சந்நிதிகள் உள்ளன. கருங்கல் அடித்தளத்தின் மீது மணற்கல்கொண்டு செதுக்கப்பட்ட சிற்பங்களும் பிராகாரங்களுமாக உள்ள இந்தக் கோயிலை, வாழ்வில் ஒருமுறையேனும் நாம் காண வேண்டும். `ராஜராஜ சோழனுக்கே தஞ்சை பெரிய கோயிலைக் கட்டும் உத்வேகம் கொடுத்த கோயில் இது' எனக் கூறுவதும் உண்டு.  

நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்

சிற்பங்களின் மீதான ஓவியங்கள் அழிந்துவிட்டாலும், ஆங்காங்கே வண்ணங்களின் மிச்சம் தொக்கி நிற்கிறது. மகிஷாசுரமர்த்தினி, ஹிரண்ய வதம் செய்யும் நரசிம்மர், ஜலந்தர சம்ஹாரம், தக்ஷிணாமூர்த்தி, மாந்தன் மற்றும் மாந்தியுடன் தவ்வை, உமாமகேஸ்வரர், லிங்கோத்பவர், கார்த்திகேயர், திருபுரந்தகர், கங்காதரர் என எண்ணில் அடங்கா சிற்பங்கள் கொட்டிக்கிடக்கின்றன. வீணையைக் கையில் ஏந்திய சிவனும் இதில் அடக்கம். கருக்கலின் வெளிச்சத் தீற்றலில் ஓவியமாகத் தெரிந்த கோயிலைப் பார்த்தபடி மதி மயங்கி அமர்ந்திருந்தோம்.

பயணம், உங்கள் வார்த்தைகளைக் களவாடுகிறது. பிறகு அதுவே உங்களைக் கதைசொல்லியாக மாற்றுகிறது.

பயணப்படுங்கள்... வாழ்வைக் கொண்டாடுங்கள்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு