அரசியல்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11

ரவு சாப்பிடக்கூட நேரமில்லாமல் திரும்பிய வினோத், தெரு திருப்பத்தில் தோசை மாவும் முட்டையும் வாங்கிக் கொண்டான். முட்டை தோசைக்கு ஈடு இணையில்லை. அபார்ட்மென்ட் கதவைத் திறந்தபோது, உள்ளே யாரோ இருப்பது போன்ற உணர்வு தோன்ற, ரோமங்கள் சிலிர்த்தன.

முதல் வேலையாக எல்லா லைட்டுகளையும் போட்டுவிட்டு, ராமநாதனை போனில் அழைத்தான். ‘‘ஃப்ரீயா இருந்தா வர்றியா?’’

‘‘ரூம்ல ஃபாரீன் அயிட்டம் ஏதும் இருக்கா?’’

‘‘வேற எதுக்குப்பா கூப்பிடப் போறேன்?’’ உதறலிலும் உதார்விட முடிவது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நல்லவேளையாக ஃப்ரிட்ஜில் மூன்று பியர் பாட்டில்கள் இருந்தன.

வீடு முழுவதும் வெளிச்சமாக இருந்தும், ஏதோ நிழல் நடமாட்டம் இருப்பதுபோலவே தோன்றியது. வெளிக்கதவைத் திறந்தே வைத்து, எந்த நொடியும் தப்பி ஓடுவதற்குத் தயாராகக் கதவு ஓரமாக உட்கார்ந்தான். ரிமோட் எடுத்து டி.வி-யை ஓடவிட்டான். பத்து மணிக்குமேல் வீட்டில் சரக்கு வைத்திருப்பவன் எவனோ, அவனே கோடீஸ்வரன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ராமநாதன் வந்து சேர்ந்தான். வாயெல்லாம் பல்லாக ஒரு சிரிப்புச் சிரித்தான்.

‘‘என்னப்பா... யார் குடுத்தது?’’ என்றான் நா சுரக்க.

‘‘சொல்றேன்.’’

ராமநாதன் எந்த உள்நோக்கமும் இல்லாமல் சமையல் கட்டில் போய்த் தண்ணீர் குடித்துவிட்டு, அப்படியே பாத்ரூம் போய்விட்டு வந்தான். படுக்கை அறையிலும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிட்டால், வீட்டில் வேறு யாரும் இல்லை என முடிவுக்கு வரலாம். ‘‘ராமநாதன், பெட்ரூம் ஷெல்ஃப்ல லுங்கி இருக்கும்... எடுத்துக்க.’’

அவன் அந்த அறையிலும் சாதாரணமாக நுழைந்து, லுங்கியில் நுழைந்தபடி உயிருடன் வெளியே வந்தான். ‘‘என்னடா கூப்பிட்ட வேகத்தைப் பார்த்தா பெரிய ஏற்பாடா இருக்கும்னு நினைச்சேன். இப்படி நோவு கோழி மாதிரி உட்காந்திருக்கே?’’

‘‘பெட்ரூம்ல நல்லா பாத்தியா?’’

‘‘என்னடா சொல்றே... எதை நல்லா பாத்தியா?’’

‘‘கதவைத் திறந்து உள்ள வந்தேன். யாரோ வீட்டுக்குள்ள இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங். அதான் உன்னைக் கூப்பிட்டேன்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11

‘‘அடப்பாவி... ஒரு லுங்கி குடுத்துக் கொல்லப் பாத்தியேடா... நா இப்பவே கிளம்பறேன்!’’

‘‘அதான் உள்ள யாரும் இல்லைனு சொல்லிட்டியே..?’’

‘‘மோகினின்னா திடீர்னு மறையும். திடீர்னு முன்னாடி வந்து நிற்கும். போடா சரிதான்.’’

‘‘ரெண்டு பேரா இருந்தா வராதுடா.’’

‘‘சாமியார் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே?’’

‘‘சாமியார் இல்ல. எங்க பாட்டி சொல்லியிருக்காங்க. ‘ராத்திரி நேரத்தில தனியா போனா மோகினி அடிச்சுடும்’னு சொல்வாங்க.’’

அவசரமாக உள்ளே சென்ற ராமநாதன், பேன்ட் பாக்கெட்டில் இருந்த எலுமிச்சைப் பழத்தை எடுத்துவந்து தலைமாட்டில் வைத்துவிட்டு, டைல்ஸ் தரையில் அப்படியே கால் நீட்டிப் படுத்தான். தன்னிடம் கொடுத்த பழத்தை ஷேவிங் செட் அருகே அலட்சிமாக வைத்தது வினோத் நினைவுக்கு வந்தது. எடுத்துவந்தான். கைவைத்த பனியன் போட்டு லுங்கியுடன் ஹாலில் ராமநாதன் படுத்திருந்த கோலமே பயமுறுத்தும்படிதான் இருந்தது. ‘‘பியர் சாப்பிடறீயா?’’ எனத் தயங்கிய குரலில் கேட்டான் வினோத்.

‘‘பொன் வைக்கிற இடத்தில் பூவாவது வை. எடுத்துக்கிட்டு வா.’’

வினோத் பியர் பாட்டில்களை எடுத்துவந்து ஹாலில் வைத்தான். சமையல்கட்டில் தனியாக நான்கு ஆம்லெட்களையும் முட்டை தோசை இரண்டையும் பத்து நிமிட அவகாசத்தில் செய்தான். இன்னும்கூட முதுகுக்குப் பின்னால் யாரோ நிற்கிற உணர்வு போகவே இல்லை. கதவைச் சாத்திவிட்டு லுங்கிக்கு மாறி, ஹாலில் வந்து அமர்ந்தான்.

‘‘நாளைக்காவது அந்தப் பொண்ணை குருஜிகிட்ட கூட்டிக்கிட்டு வாடா. மேற்கொண்டு மரணங்களைத் தடுக்கலாம்’’ என்றான் ராமநாதன்.

வினோத் குத்துமதிப்பாகத் தன் பெட்ரூமைக் காட்டி, உதட்டின் மீது விரலை வைத்துப் பயமுறுத்தினான். இருவரும் மௌனப் பருகலில் குடிக்கிற நினைப்பே இல்லாமல் குடித்து, விளக்கை அணைக்காமலேயே உறங்கினர்.

எழுந்தபோது இரண்டு பேரும் உயிருடன் இருப்பதற்காகச் சிரித்துக்கொண்டனர். ‘‘ஏண்டா இப்படிப் பண்ணே?’’

‘‘சில நாள் ஓவர் பயமா மாறிடுது.’’ என்றான் வினோத்.

‘‘உன் பயத்துக்கு நான்தான் எலியா?’’

‘‘ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ரம்யாவோட லேப்டாப்ல ஒரு கேம் பார்த்தேன். அது அவளே உருவாக்கின கேம். அந்த கேம்ல ரம்யா மாதிரி ஒரு கேரக்டர். அதுல அவ, அந்த பார்ல பார்த்த பொண்ணு மாதிரியே இருந்தா.’’
‘‘அப்பவே அவகிட்ட அதபத்திப் பேச வேண்டியதுதானே?’’

‘‘அவளுக்குத் தெரியாம அதைக் கண்டுபிடிச்சேன். திக்குனு ஆகிப்போச்சு. எதுவும் கேட்கணும்னு தோணலை.’’

‘‘காலைல முதல் வேலை, அவகிட்ட அதப்பத்திக் கேக்கறதுதான். அப்புறம் குருஜிய பாக்கணும்னு சொல்லு.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11

பகலில் கொஞ்சம் பயம் குறைந்திருந்தது. வினோத் குளித்துவிட்டு அலுவலகம் புறப்பட்டபோது ராமநாதன் சொன்ன இரண்டு விஷயங்களில் முக்கியமாக இருந்தான். ரம்யாவைக் காதலிக்கும் மனநிலை மெல்ல மறைந்து கொண்டிருந்தது. பைக்கை அலுவலக பார்க்கிங் கில் நிறுத்திவிட்டு மேலே சென்றபோது, ரம்யா முதல் ஆளாக வந்து தனியாக அமர்ந்திருந்தாள். கண்ணைச் சிமிட்டி அழைத்தாள்.

‘‘உட்கார். நான் ஒரு கேம் பண்ணியிருக்கேன் வினோத். யூ மே லைக் இட்.’’

கம்ப்யூட்டரில் அந்த கேமை ஓடவிட்டாள். ‘‘பைரவி. எதற்கும் துணிந்தவள். அவளுக்கு மரணமில்லை. அவளை எதிர்ப்பவர்களுக்கு மரணம் மட்டுமே உண்டு. இப்படிச் சில வாக்கி யங்கள். அதன்பிறகு ஒவ்வோர் அயோக்கியனையும் அவள் கொல்வதுதான் கதை. காட்டை அழித்து ஆசிரமம் கட்டி, அங்கே பெண்களை வைத்து ஏமாற்றும் ஒரு கார்ப்பரேட் சாமியாரைக் கொல்கிறாள். பெண்கள் கருத்தரிப்பு மையம் நடத்தி லட்சம் லட்சமாகக் கொள்ளையடிக்கும் ஒரு டாக்டரைக் கொல்கிறாள்...’’

‘‘அடுத்து யாரைக் கொல்லப் போறே?’’ என்றான் வினோத்.

‘‘ஒரு மினிஸ்டர். கரெக்டா இருக்கும் இல்ல?’’ எனக் கொலைக்குத் துணை சேர்த்தாள். அவள் எந்தவித நோக்கமும் இல்லாமல் சொன்னது மாதிரிதான் இருந்தது. ‘‘நல்லா இருக்கும்’’ என்றான் தயக்கமாக.

‘‘சுப்பிரமணின்னு தமிழ்நாட்ல மினிஸ்டர் யாரும் இல்லதான?’’

‘‘ஏன்?”

“மினிஸ்டர் பேரு சுப்பிரமணின்னு வெச்சுருக்கேன்.’’

ஜெனிலியாவின் டைரியில் இருந்த மூன்றாவது பெயர். வினோத் திடுக்கிட்டு இருக்கையைவிட்டு எழுந்தான்.

‘‘என்ன வினோத்? இந்த கேம் உனக்குப் பிடிக்கலையா? ஏன் சைலன்ட்டா இருக்கே? உயிரைக்கொடுத்துப் பண்ணியிருக்கேன்.’’

வினோத் அவளையே உற்றுப் பார்த்தான். ‘‘ரம்யா,  உனக்குத் தெரியாமலேயே என்னென் னவோ பண்ணிக்கிட்டு இருக்கே... நீ சொல்றா மாதிரி ஒரு கார்ப்பரேட் சாமியார் சமீபத்தில கொல்லப்பட்டார்னு தெரியுமா உனக்கு? ஒரு டாக்டர் கொல்லப்பட்டார் தெரியுமா?’’

‘‘என்ன சொல்றே... எங்கயோ ஒரு பேங்க் மேனேஜர் கொல்லப்படறார். எங்கயோ ஒரு வக்கீல் கொல்லப்படறார். இந்த கேமுக்கும் அந்தச் சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம். நாட்ல நடக்கிறதைத்தானே சொல்ல முடியும்?’’

‘‘நான் டைரக்டா ஒரு கேள்வி கேட்கிறேன்... உங்க ஃப்ரெண்ட் ஜெனிலியா ஒரு ஆசிரமத்தில் இறந்துபோனாங்கதானே?’’

மிரளும் விழிகளுடன் பார்த்தாள். ‘‘அது எப்படித் தெரியும்?’’

‘‘சொல்றேன். சென்னையில வரிசையா மூணு கொலைகள் நடந்தன...’’

‘‘பீச்ல ஒண்ணு நடந்ததுதான் தெரியும்.’’

‘‘வரிசையா சொல்றேன்... நீ இங்க வேலைக்குச் சேர்ந்த அன்னைக்கு ஒரு பார்ல கொலை நடந்ததுன்னு சொல்லி என்னை விசாரிச்சாங்களே?’’

‘‘அஃப்கோர்ஸ்... ஆமா. மறந்துட்டேன்.’’

‘‘அதற்கடுத்து நுங்கம் பாக்கத்தில ஒரு டாக்டர் மர்டர். அதுக்கப்புறம்தான் பீச்ல நடந்த கொலை.’’

‘‘என் கதையிலயும் அதே மாதிரி வருதா?’’

‘‘உன் கதையில வர்றது மட்டுமில்ல... நீயே கொலை நடந்த அத்தனை இடங்களுக்கும் வந்தே!’’

‘‘நீ சொல்றது எதுவுமே புரியலை.’’

‘‘பார்ல நிமோஷ்ங்கறவன் கொல்லப்பட்ட இடத்தில நீ இருந்தே... டாக்டர் குமரேசன் இறந்த இடத்தில நீ இருந்தே... பீச்ல ஜஸ்டின் இறந்த இடத்தில நீ இருந்தே... அடுத்து மினிஸ்டர் சுப்பிரமணி கொல்லப்படற இடத்திலயும் நீ இருப்பே... இதுதான் ப்ராப்ளம். உனக்கே தெரியாம இதெல்லாம் நடக்குது.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11

ரம்யாவின் கண்களில் செவ்வரி ஓடி, கண்ணீர் கசிந்தது.

‘‘ரம்யா! தயவுசெஞ்சு புரிஞ்சுக்க. இது எதுவுமே உனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். இப்ப இந்த கேம் பார்த்ததும் எனக்கு ஏதோ விர்ச்சுவல் ரியாலிட்டிபோல இருக்கு. ஆனா, என்னன்னு சொல்லத் தெரியலை. இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு பெங்களூரு போய் விசாரிச்சேன். பெங்களூர்ல ஜெனிலியா இருந்த ஆசிரமச் சாமியார் கொல்லப்பட்டது தெரிஞ்சது. ஜெனிலியா எழுதிவெச்சிருந்த ஒரு சின்ன குறிப்புல நிமோஷ், குமரேசன், சுப்பிரமணின்னு கிறுக்கி வெச்சிருந்தா... அவங்கதான் அடுத்தடுத்து செத்துக்கிட்டு இருக்காங்க. நான் சொல்றது உனக்கு அதிர்ச்சியா இருக்கும். இந்த எல்லா இடங்களிலும் நீ உருவாக்கின இந்த பைரவி வந்துதான் கொலை செய்றா. ‘ரா ஒன்’ படத்தில வர்ற மாதிரி.’’

அவள் அழுதுகொண்டே இருந்தாள். ‘‘எனக்கு பயமா இருக்கு வினோத். இது எதுவுமே எனக்குத் தெரியாது.’’

‘‘நீ உருவாக்கின இந்த உருவத்தில ஜெனிலியாவோட ஆவிதான் பழி வாங்கிக்கிட்டு இருக்குன்னு ஒரு சாமியார் சொல்றாரு. ஒரு தடவை ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.’’

‘‘இவ்ளோ நடந்திருக்கு... என்கிட்ட எதுவுமே சொல்லல இல்ல?’’

‘‘என்னன்னு சொல்வேன்... எனக்கு ஒண்ணுமே புரியலை ரம்யா.’’

‘‘இவ கொலைகாரியா, பைத்தியக்காரியா, சைக்கோவா, பேயான்னு என்னென்னவோ நினைச்சிருப்பல்ல?’’

‘‘இல்ல. அந்த மர்மத்தைத் தெரிஞ்சுக்கணும்னு தவிச்சேன்... நான் உன்னைப் பார்த்த முதல் நாள்ல இருந்து தப்பாவே நினைச்சதில்ல.’’

தன்னிரக்கம் சுரந்த கண்ணீரில் நன்றியும் கலந்திருக்க வேண்டும். அவள் சமாளித்து நிதானத்துக்கு வர விரும்பினாள். அலுவலகம் இன்னும் சில நொடிகளில் மனிதர்சூழ் நிலைக்கு மாறிவிடும்.

‘‘போய்ப் பார்க்கலாம்’’ என்ற தருணத்தில் அவளுடைய போன் அடித்தது. ‘‘பெங்களூர்ல இருந்து அம்மா’’ என்றபடி, பட்டை ஒளிர்வைத் தொட்டு, ‘‘சொல்லும்மா?’’ என்றாள்.

‘‘போலீஸ் வந்து நீ எங்க இருக்கேன்னு விசாரிச்சுட்டுப் போனாங்கம்மா’’ என்றது மறுமுனைக் குரல்.

(தொடரும்...)