மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12

காரில் இருந்தபடியே அந்த போர்டை மீண்டும் தெளிவாகப் படித்தாள் தீபா.நேவிகேட்டர் வழிகாட்டுதலில், யாரிடமும் வழி கேட்காமல் தெளிவாக அசிஸ்டென்ட் கமிஷனர் ஆபீஸைக் கண்டுபிடித்துவிட்ட திருப்தி. பெயர்தான் பழைய டெல்லி... கட்டடம் புதுசாக இருந்தது.

காரை நிறுத்திவிட்டு இறங்கும் வரை காத்திருந்து, ‘‘கார் பார்க்கிங் பின்பக்கம்’’ என வழிகாட்டினார், வாசலில் இருந்த காவலர். அங்கு கார் நிறுத்த நிறைய இடம் இருந்தது. விரிந்த கூந்தலைச் சிலுப்பி, மேற்கொண்டு விரித்துப் பறக்கச் செய்தபடி காவலரைப் பார்த்தாள். அவளுடைய அலட்சியம், லிப்ஸ்டிக், ஸ்லீவ்லெஸ் உடையிலும் அதைத் தாண்டித் தெரிந்த உடம்பிலும் இருந்த கெத்து என எல்லாமுமாகச் சேர்ந்து காவலரை, தாம் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என எண்ண வைத்தது.

‘‘ஏ.சி-யைப் பார்க்க வந்திருக்கேன். டூ மினிட்ஸ்ல திரும்பிடுவேன்’’ என்றவளைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல், ‘‘ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போங்க’’ என வழிகட்டினார். தீபா முதல் மாடிக்குப் போனதும் சுரேந்தர் சிங் ஏ.சி என போர்டு இருந்த இடத்தில் ஒருவர் அனுமதி வழங்குபவர் போல அமர்ந்திருந்தார். ‘‘டாக்டர் சுசீந்திரனின் ஸ்டூடன்ட் தீபா வந்திருக்கேன்னு சொல்லுங்க’’ என்றாள். ‘‘காலையிலேயே வருவீங்கன்னு சொன்னார்... நீங்க வாங்க’’ என உள்ளே அழைத்துச் சென்றார்.

சுரேந்தர் சிங், ‘‘கம் இன்... உட்காருங்க. உங்க போன் கிடைக்காம தவிச்சுக்கிட்டிருந்தோம். நீங்களாவே பேசினது சந்தோஷம்.’’

‘‘ரெண்டு நாளா என்னோட சிம்ல ஏதோ பிராப்ளம். நிர்மலா மேம்தான் சொன்னாங்க, நீங்க ட்ரை பண்ணீங்கன்னு. அதான் உடனே பேசிட்டுக் கிளம்பி வந்தேன்.’’

‘‘டாக்டரோட மர்டர்ல ரொம்பக்  குழப்பங்கள் இருக்கு. ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு...’’

‘‘கேளுங்க, எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.’’ துணிச்சலாக, நேர்மையாக சிரித்தாள்.

‘‘கட்டுரையை  டாக்டர் அனுப்பிட்டாரான்னு கேட்டீங்களாம். அது என்ன கட்டுரை?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12

‘‘கடவுள் துகள் ஆராய்ச்சின்னு ஒரே பரபரப்பா இருந்ததே... அதுதான். அந்த ஆராய்ச்சி தப்புன்னு டாக்டர் சொன்னாரு. யாரும் கேட்கல. இப்ப திடீர்னு டாக்டருக்கு ஏதோ சிக்னல் கிடைச்சிருக்கு. ‘பூமிக்குப் பெரிய ஆபத்து இருக்கு. அதை எதிர்கொள்றதுக்கு நாம தயாராகணும்’னு செர்ன் அமைப்புக்கு ஒரு கடிதம் எழுதப் போறதா என்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாரு. அந்த முக்கியமான நேரத்துலதான் அவர் இறந்து போனாரு. அதான்... அதை அனுப்பிட்டாரான்னு கேட்டேன்.’’

‘‘அவர் கடிதம் அனுப்பறதை யாராவது தடுக்க நினைச்சாங்களா?’’

‘‘தெரியலை. கடவுள் துகள் ரிசர்ச் மூலமா என்ன பண்ணலாம்னு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வமா இருக்காங்க. அதைப் பொறுத்து இன்வெஸ்ட்மென்ட்ஸ் இருக்கலாம். அதைத் தடுக்கிறாரேன்னு யாராவது நினைச்சுருக்கலாம். உறுதியா சொல்ல முடியாது.’’

சிங், எங்கிருந்து சிக்கெடுப்பது எனத் தோராயமாகத்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். ‘‘அவர் எழுதின கட்டுரை என்ன ஆச்சுன்னு தெரியலை... அவருடைய லேப்டாப்பை உடைச்சுப் போட்டுட்டு ஹார்டு டிஸ்க்கை எடுத்துட்டுப் போயிட்டாங்க. அவங்களுடைய நோக்கம் அந்தக் கட்டுரை வெளியாகக் கூடாதுங்கிறதுதான்னு தெரியுது.’’

தீபாவும் ‘‘ஆமாம்’’ என்றாள்.

‘‘அந்த ஆராய்ச்சிக்கு டாக்டர் ஏன் பயந்தார்னு ஏதாவது தெரியுமா?’’

‘‘அது பிரபஞ்ச ரகசியத்தைத் தெரிஞ்சுக்கிற ஆராய்ச்சி. செயற்கையா ஒரு பிக்பாங் உருவாகிறது இந்தப் பிரபஞ்சக் கட்டமைப்பைக் குலைச்சுடும்னு பயந்தார்.’’

தீபா ஏதோ மேற்கொண்டு சொல்ல நினைத்த நேரத்தில் சிங் அதைக் கவனிக்காமல், ‘‘டாக்டர் இறந்த முறையிலயே சவுத்ல நாலு பேர் செத்துப் போயிருக்காங்க. எல்லாமே ஒரு பொண்ணு செஞ்ச கொலைன்னு சொல்றாங்க... ஏதாவது லிங்க் கிடைக்குதா?’’ என்றார்.

‘‘பேப்பர்ல பரபரப்பா எழுதியிருந்தாங்க. ஒரு பொண்ணு எப்படிச் சுத்தி சுத்திக் கொலை பண்ணிக்கிட்டே இருப்பா? அவ எப்படி டிராவல் பண்றான்னே தெரியலை.. ஏதோ இயக்கம் மாதிரி நாலஞ்சு பொண்ணுங்க சேர்ந்து பண்றாங்களான்னு தோணுச்சு.’’

‘‘குட். டாக்டரோட பாஸ்வேர்டை ட்ரேஸ் பண்ண முடியுமா? மெயில்ல ஏதாவது சேவ் பண்ணி வெச்சுருக்காரா, அவருக்கு ஏதாவது மிரட்டல் இருந்ததான்னு தெரியணும்.’’

‘‘ட்ரை பண்றேன் சார்.’’

பேசி முடித்துவிட்டு காரை எடுக்கும்போது, ஏ.சி-யிடம் சொல்ல நினைத்த விஷயத்தை மீண்டும் சென்று சொல்லிவிட்டு வரலாமா என்று சோம்பலாக யோசித்தாள் தீபா. ‘அத்தனை அவசரமாகத் தெரியவில்லை... அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்’ என விட்டுவிட்டாள்.

ண்ணா நகர் சரவண பவன் பின்புறம் பெல்லி ஏரியாவில் இருந்தது அந்த வீடு. பெரிய காம்பவுண்டு சுவர், பெரிய கேட் எனப் பிரமாண்டம் அதிகம் இருந்தாலும், வீதியில் வெளிச்சம் குறைவாக இருந்தது. ஊர் உறங்கிய 11 மணி இரவு. இரும்பு கேட்டை தட்டினாள் ரம்யா. இப்போதைக்கு கிராஃபிக்ஸ் ரம்யா... அல்லது மோகினி ரம்யா.. அல்லது இயக்க ரம்யா. செக்யூரிட்டி முகம் தெரியும் அளவுக்குக் கேட்டைத் திறந்து, ‘‘யார் வேணும்?’’ என்றார்.

‘‘மினிஸ்டரைப் பார்க்கணும்.’’

‘‘காலைல எட்டு மணிக்கு மேல வந்து பாருங்க.’’

கேட்டை மூட எத்தனித்த செக்யூரிட்டியின் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டாள் ரம்யா. ஓர் இருபத்தி சொச்சம் வயசுக்காரியிடம் இப்படி ஒரு முரட்டுத்தனத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நிலைகுலைந்து சரிய, இழுத்து செக்யூரிட்டி ரூமுக்குள் தள்ளினாள். கேட்டிலிருந்து வீட்டுக்குச் செல்வதற்கு ஒரு பூங்காவைக் கடக்க வேண்டியிருந்தது. டியூட்டியில் இருந்த போலீஸ் இளைஞன் கவனித்துவிட்டு, துப்பாக்கியுடன் ஓடிவந்தான். ‘இவ்வளவு அழகான பெண்ணா’ எனச் சுடத் தயங்கினான். அந்தக் கட்டைத் துப்பாக்கியைப் பிடுங்கி அவன் தலையில் ஒரே போடாகப் போட்டாள். நெற்றியில் சுட்டுவிரல் அகலத்தில் ரத்தம் வழிய, குலைந்து விழுந்த அவனை ஓர் உதைவிட்டு நாகலிங்க மரத்தின் கீழ் தள்ளினாள். வீட்டின் முன் ஓர் அல்சேஷன் அவளைப் பார்த்துவிட்டு குரைக்க மறந்துபோய் ஒரு தினுசாக, குழைவாக ஊளையிட்டது. அவள் கதவருகே சென்றபோது, நாய் சத்தம் கேட்டு விளக்கை எரிய விட்டார்கள். ‘‘சண்முகம்... யாரு?’’ என்றார் மினிஸ்டர். அவன் நாகலிங்க மரத்தடியில் கிடந்தான். ‘‘செக்யூரிட்டி’’ என்றார் ஜன்னல் வழியாக. ‘‘எல்லாரும் பீடி பிடிக்கப் போயிருப்பானுங்க’’ என அலுத்தார். அப்போதுதான் அவர் வந்திருந்ததால், பணம் எண்ணும் வேலையில் இருந்தார். எண்ணிய வரை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு, அறையை விட்டு வெளியே வந்தார். நாய் மட்டுமே தொடர்ந்து குழைந்து  கொண்டிருந்தது.

‘‘யாருடா... டைகர்?’’ என ஓர் அதட்டல் போட்டார். பதில் வராமல் போகவே, கதவில் இருந்த வியூ பாயின்ட் மூலம் பார்த்தார். யாரும் தெரியவில்லை. கதவு திறக்கும் சத்தம். வாசல் விளக்கைத் தட்டி, கையில் ஒரு தடியுடன் ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்தார். ஒரு பெண் நிற்பதைப் பார்த்தும், டி.வி-யில் வந்த கொலை நிகழ்ச்சிகள் எல்லாம் விநாடியில் மனத்திரையில் ஓடின. வேகமாகக் கதவைச் சாத்த முற்பட்டார். தடிமனான தேக்குக் கதவு. ரம்யா கதவைச் சாத்தவிடாமல் பிடித்தாள். இன்னொரு கையால் அவருடைய தலையைப் பிடித்துக் கதவுக்கு வெளியே இழுத்தாள். கழுத்துவரை கதவுக்கு வெளியே நீண்டிருந்தது தலை. ‘‘ஏய்... ஏய் பொண்ணு!’’ கோரிக்கையுடன் எச்சரித்தார்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12

அவள் சட்டென அவருடைய வாயுடன் வாய் வைத்து, சிவுக் என உறிஞ்சினாள். குபுக் என அவருடைய வாயிலிருந்து ரத்தம் பொங்கியது. கண்கள் பிதுங்கி நிலைக்குத்தி நின்றன. அவள் சாவகாசமாக உதட்டைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். கேட்டுக்கு வெளியே அமைச்சர் சுப்பிரமணி, பொதுப்பணித் துறை என இருந்தது. அந்தப் பலகையைப் பார்த்துவிட்டு, இருட்டில் தடயமே இல்லாமல் காணாமல் போனாள்.

காலையில் உண்மையிலேயே வெகு நாள்களுக்குப் பிறகு அனிடூன் ஆபீஸில் வெகு ஈடுபாட்டுடன் வேலை நடந்துகொண்டிருந்தது. ரம்யாவுக்கு இருந்த வீடியோ கேம் அறிவு அசாதாரணமாக இருந்தது. படு வேகமாக எல்லா மாடலிங்கிலும் கருத்துச் சொன்னாள். குறிப்பாக ரிக்கிங். ஒரு பசுவின் அசைவுக்கும் யானையின் அசைவுக்கும் அவள் சொன்ன விளக்கம் அபாரமானது. ஆதித்த கரிகாலன் கொலையில் ஒரு ட்விஸ்ட் வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள். கல்கியின் கதையில் மாற்றம் செய்வது வினோத்துக்குப் பிடிக்கவில்லை. ஆதித்த கரிகாலனின் கொலையில் நந்தினிக்கு சம்பந்தம் இருக்கலாம் என்ற கல்கியின் சந்தேகத்தையே உறுதிப்படுத்தினால் கேம் நன்றாக இருக்கும் என்பது அவளுடைய வாதம். முத்துராஜாவும் விளையாட்டின் சுவாரஸ்யத்துக்கு அது தவறாக இருக்காது என்றே சொன்னார். வசனம் எழுதும் ராஜசேகருக்கு போன் செய்து கேட்டபோது, ‘‘எப்போது விளையாட்டுக்கு ஏற்ப கதையை மாற்ற ஆரம்பிச்சமோ, அப்பவே இந்த மாதிரி சேஞ்சஸ் எல்லாம் பிரச்னை இல்லை’’ என்று சொல்லிவிட்டார்.

‘‘ஆதித்தனைக் கொன்றது நந்தினி என்றே ஃபிக்ஸ் பண்ணிடுங்க’’ என ரம்யா சொல்லிக்கொண்டிருந்த போது, திடும் என நான்கைந்து போலீஸ்காரர்கள் நுழைந்தனர்.

இன்ஸ்பெக்டர் ரமேஷை ஏற்கெனவே வினோத்துக்கு நன்றாகத் தெரியும். ‘‘ஐ’ம் ரமேஷ்... இன்ஸ்பெக்டர். இங்க யார் ரம்யான்னு தெரிஞ்சுக்கலாமா?’’ என்றார்.

ரம்யா குழப்பமாகக் கையை உயர்த்தினாள். ரமேஷ் அவளுடைய முகத்தைப் பார்த்தார்.

‘‘நந்தினி யாரு?’’

‘‘அப்படி யாரும் இங்க இல்லையே?’’

‘‘நான் வரும்போது சொல்லிட்டிருந்தீங்களே... ஆதித்தனைக் கொன்னுட்டான்னு.’’

‘‘சார், அது கல்கி எழுதின கதை. பொன்னியின் செல்வன்னு பேரு.’’

‘‘ரம்யாகிட்ட கொஞ்சம் பேசணும்.’’

முத்துராஜா, ‘‘பை த பை நான் இந்த கம்பெனியோட எம்.டி. எதுக்காகனு தெரிஞ்சுக்கலாமா?’’ என்றார்.

‘‘இன்னைக்கு மினிஸ்டர் மர்டர் பேப்பர்ல பாத்திருப்பீங்க... அது சம்பந்தமா?’’

‘‘மர்டருக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘விசாரிச்சாத்தான் தெரியும்’’ என ரம்யாவின் சம்மதத்தைப் பார்த்தார்.

முத்துராஜா, ‘‘உன் கேபினுக்குக் கூட்டிட்டுப் போய் பேசுங்க’’ என்றார் ரம்யாவிடம்.

ரம்யா, ‘‘ப்ளீஸ் கம்’’ என்றபடி வினோத்தைப் பார்த்தாள். ரம்யா, இன்ஸ்பெக்டருக்கு வழிகாட்டியபடி தன் கேபினுக்குச் சென்றாள். உடன் வந்த வினோத்தை, ‘‘கொஞ்சம் வெளிய இருங்க’’ எனச் சொல்லிவிட்டு, ரம்யாவின் பின்னால் உள்ளே சென்றார் ரமேஷ்.

கண்ணாடி கேபின். ஆபீஸே அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12

ரமேஷ், ‘‘ஜெனிலியா உங்க ஃப்ரெண்டுதானே?’’ என்றார்.

ரம்யாவுக்குப் பயத்தில் ஜுரம் போல உடம்பு கொதித்தது. தலையை மட்டும் அசைத்தாள்.

‘‘அவங்க எப்படி இறந்தாங்கன்னு தெரியுமா?’’

‘‘தெரியாது.’’

‘‘ஆசிரமத்தில இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானங்களா?’’

கண்ணாடி வழியாகப் பரிதாபமாக வினோத்தைப் பார்த்தாள். ‘‘சொல்லியிருக்கா.’’

‘‘பிசினஸ் மேன் நிமோஷ், டாக்டர் குமரேசன், மினிஸ்டர் சுப்பிரமணி இவங்களைப் பத்தி எதுவும் சொன்னாங்களா?’’

‘‘தெரியாது.’’

‘‘ஆனா, அவங்க மூணு பேரையும் நீங்கத்தான் கொலை பண்ணியிருக்கீங்க.’’

ரம்யா, ‘‘நானா?’’ என அதிர்ந்து, பின் அழ ஆரம்பித்தாள்.

(தொடரும்...)