Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13

ம்யாவைக் கைதுசெய்த சில நிமிடங்களிலேயே தொலைக் காட்சிகளில் பரபரப்பாக பிரேக்கிங் நியூஸ் வெளியானது. முதலில் மீடியாக்களுக்கு அறிவித்துவிட்டுத்தான் கைதுசெய்யவே வந்ததுபோல தெரிந்தது. அனிடூன் வாசலில் தமிழ்நாட்டின் அத்தனை டி.வி சேனல்களின் நிருபர் களும் கேமராமேன்களும் காத்திருந்தனர். அங்கிருந்தே லைவ் செய்யும் வசதி யுடனும் சிலர் வந்திருந்தனர். ‘சீரியல் கில்லர் ரம்யா பிடிபட்டார்’ என்றன பிரேக்லைன்கள். ஆங்கில, இந்தி சேனல்களிலும் இந்தச் செய்திக்கு கிராக்கி. ரம்யாவைக் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றுவதும், அவள் அழுது கொண்டே வாகனத்தில் ஏறுவதும் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டன.

‘சென்னையில் நான்கு கொலைகள், பெங்களூரில் ஒரு கொலை, டெல்லியில் ஒரு கொலை என இதுவரை ஆறு கொலைகளில் சம்பந்தப்பட்டவர் ரம்யா. சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றிவரும் இவர், எதற்காகத் தொடர்ந்து கொலைகள் செய்தார் என்பது தெரியவில்லை. சைக்கோ நோயாளியா, பழிவாங்கல் விவகாரமா, மாவோயிஸ்ட் பின்னணி கொண்டவரா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.’ சேனல்கள் இதையே மீண்டும் மீண்டும் நாளெல்லாம் ஒளிபரப்பின. ரம்யா மீது உருவாக்கப் பட்டச் சித்திரம் கொடூரமானதாக இருந்தது. போலீஸ் சொல்வதைக் கேட்டு இவ்வளவு தூரம் கதைகட்டுவார்களா என வினோத் மிரண்டு போனான்.

ரம்யா கொலை செய்தவிதம் என ஒரு சேனலில் படம்போட்டு விவரித்தார்கள். வாய் வழியாக ரத்தம் உறிஞ்சும் காட்சியில் விரசம் அதிகம் இருந்தது. அதிகாரத்தின் மூலம் ஒரு செய்தி எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை வினோத் கண்முன்னால் பார்த்தான். ரம்யாவை கமிஷனர் அலுவலகம் அழைத்துச் சென்று, பிறகு கோர்ட்டில் ஆஜர் செய்யப்போவதாகப் பேசிக்கொண்டார்கள். ரம்யாவுக்கு இரண்டு பக்கமும் இரண்டு பெண் அதிகாரிகள். பின்னாலும் முன்னாலும் ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள். முன் இருக்கையில் ஓர் அதிகாரி... என வாகனம் முழுக்க காக்கிகளின் அணிவரிசை. வாகனம் கிளம்பியதும், காரணமே இல்லாமல் அதன் பின்னால் சிறிது தூரம் வினோத் ஓடினான்.  எம்.டி-தான் கூப்பிட்டு நிறுத்தினார்.

‘‘சார்... என்னன்னு போய்ப் பார்த்துட்டு வர்றேன்’’ என அனுமதி கேட்கும் பாணியில் அறிவிப்பு செய்துவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு விரைந்தான். ராமநாதன் வாயில் பிரஷ்ஷோடு நுரைக்க நுரைக்க ரம்யா கைதானதைப் பற்றி ஏதோ சொல்ல வந்தான். ‘‘தெரியும்... சீக்கிரம் வா’’ என அவனை அழைத்துக்கொண்டு கமிஷனர் ஆபீஸுக்கு வினோத் வந்தான். விஷயம் அறிந்து கட்சி ஆட்கள் சிலரும் சாமியாரின் ஆட்கள் சிலரும் ரம்யாவைக் கண்டித்துக் கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்.

கமிஷனர் ஆபீஸில் ராமநாதன், தான் ரம்யாவுக்காக ஆஜராவதைச் சொன்னான். ‘‘என்ன செக்‌ஷன்னு சொல்ல முடியுமா?’’ எனக் கேட்டான்.

‘‘கோர்ட்டுக்கு வாங்க... இங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க. வெளிய பார்த்தீங்கல்ல?’’ என்றார் கமிஷனரின் உதவியாளர்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13

ரம்யாவுக்கு அழுவதைத் தவிர வேறு எதுவுமே அந்த நேரத்தில் தெரியவில்லை. தன்மீது படிந்த கறையை வாழ் நாளெல்லாம் துடைத்தாலும் அகற்ற முடியாது என்று தோன்றியது. பெண் காவலர்கள் வந்து, உடம்பில் இரண்டு இடங்களிலிருந்து அடையாளங்களைக் குறித்துக் கொண்டனர். இரண்டு உள்ளங்கைகளிலும் மை பூசி ரேகை எடுத்தனர். பெற்றோர், பிறந்த ஊர், நிரந்தர முகவரி, இப்போதுள்ள முகவரி எனச் சாதாரண விசா ரிப்புதான். கொலை செய்ததற்கான காரணத்தைக் கேட்டனர். அவள் அழுது கொண்டே இருந்தாள். ‘‘ஏன் செய்தீர்கள்’’ என்ற கேள்விக்கும் அழுகை. ‘‘நான் எதுவும் செய்யலை’’ என அவள் முனகியதை யாரும் பொருட்படுத்தவில்லை.

கமிஷனர் அலுவலகத்தில் ஃபார்மாலிட்டி முடிந்து கோர்ட்டுக்கு வந்தபோது... அங்கும் கட்சிக்காரர்கள், சாமியாரின் பக்தர்கள் ஏராளமானோர் இருந்தனர். நீதிபதியிடம் விவரத்தைச் சொல்லி, அதை வழக்காகப் பதிவுசெய்கிற சம்பிரதாயங்கள் நடந்தன.

போலீஸ் அதிகாரி, நீதிபதியிடம் வேகமாகவும் சீராகவும் விஷயத்தைச் சொன்னார். ‘‘ஓர் அமைச்சர், ஒரு விஞ்ஞானி, ஒரு சாமியார், ஒரு டாக்டர் எனச் சமூகத்தில் முக்கியமான நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் இவர்தான் செய்தார் என்பதற்கு இவரே ஆதாரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் உருவாக்கிய வீடியோ கேமில் இவர் கொன்ற அனைவரையும், ‘எப்படிக் கொல்வது’ என முதல் நாளே ஒத்திகை பார்த்தது தெரிகிறது. ஒவ்வொரு கொலை செய்வதற்கு முன்பும், அந்தக் கொலையை வீடியோவாக உருவாக்குவது இவருடைய சுபாவம். அதற்கான ஆதாரம் இது’’ என்றார் காவல்துறை அதிகாரி.

வீடியோவை ஓடவிட்டார்கள்.

‘‘வீடியோ உருவாக்கப்பட்ட நேரமும் பதிவாகியிருக்கிறது. அதன்பிறகு நிஜக் கொலைகள் அரங்கேறியிருக்கின்றன. அது மட்டுமல்ல... கொலையைப் பார்த்த பலரும் இவருடைய உருவத்தை உறுதிசெய்திருக்கிறார்கள் யுவர் ஆனர். மேற்கொண்டு இவரை விசாரிக்க, 20 நாள்கள் போலீஸ் காவல் வழங்க வேண்டும் யுவர் ஆனர்.’’ காவல்துறை அதிகாரி சார்பில் அரசு வழக்கறிஞர் வேண்டுகோள் வைத்தார்.

ராமநாதன் டிஃபன்ஸ் தரப்பில் பெட்டிஷன் போட்டுவிட்டு, ‘‘கொலைக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. வீடியோ கேம் ஓர் ஆதாரம் இல்லை. அது அவருடைய வேலை. அதைப் போலவே சம்பவங்கள் நடந்திருப்பது ஒரு செயல்பாடு. பலர் சேர்ந்து இந்தக் கொலைகளைச் செய்திருக்கிறார்கள். 10 நாள்களுக்குள் ஆறு கொலைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு பெண்ணால் செய்ய முடியாது. பயண நேரமே பொருந்தாது. இவர் சென்னையில் ஓர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். வீடு பார்க்க வேண்டி ஒரு நாள் விடுப்பு எடுத்தது தவிர மற்ற எல்லா நாள்களும் இவர் அலுவலகத்தில் இருந்ததற்கான எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன யுவர் ஆனர்.’’

ராமநாதனை நீதிபதி ஏற இறங்கப் பார்த்தார். ரம்யாவைப் பார்த்தார். ‘‘அப்ஜெக்‌ஷன் ஓவர்ரூல்டு. 14 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடுகிறேன்.’’ நீதிபதி கறாராகச் சொல்லிவிட்டார். இத்தனை பிரமுகர்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் விசாரிப்பதற்குத் தடை இருக்காது என்பதை ராமநாதன் உணர்ந்திருந்தான். வினோத் மட்டும் ‘‘விட்ருவாங்களா?’’ எனக் குழந்தைத்தனமாகக் கேட்டான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13

‘‘விசாரணையின்போது வழக்கறிஞரும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் யுவர் ஆனர்.’’

‘‘காலையும் மாலையும் தினமும் சந்திக்கலாம்.’’

அதற்குமேல் எதுவும் பேச முடிய வில்லை. விசாரணைக் கைதிகளுக்கான பிரிவுக்குப் பெரிய கூட்டமாக போலீஸார் சூழ்ந்தபடி அழைத்துச் சென்றனர். எல்லாமே சம்பிரதாயமாக நடந்தன. ஒரு பெண்ணுக்கு நேர்ந்த வீண்பழியை, வலியை யாரும் உணர்வதாக இல்லை. ‘‘14 நாள்கள் கழிச்சுத்தான் எதையும் பண்ண முடியும்’’ என்றான் ராமநாதன்.

ஒரே நாளில் தன் வாழ்க்கை இப்படிப் புரட்டிப் போடப்படும் என ரம்யா நினைக்கவில்லை. நேற்றுதான் வினோத் ஏதோ சொல்ல வந்தான். சாமியாரைப் பார்க்கலாம் என்றான். பெங்களூரிலிருந்து அம்மாவும் அப்பாவும் ‘போலீஸ் வந்து விசாரித்தார்கள்’ என்றார்கள். இன்று கைது செய்வது என்பது அவகாசம் இல்லாத நெருக்கடியாக இருந்தது. யாராவது வந்து கேட்டால், நமக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லி போலீஸுக்கு உதவுவோம் என்றுதான் நினைத்தாள்.
வாகனத்தில் நிறைய போலீஸ்காரர்கள் இருந்தார்கள். துப்பாக்கி வைத்திருந்தார்கள். ஒரு பெண் காவலதிகாரி, ரம்யாவுக்கு இடமே விடாமல் சீட் முழுக்க உட்கார்ந்திருந்தார். இதுதான் நாம் வெளி உலகத்தைப் பார்க்கிற கடைசித் தருணமா என ஜன்னலில் தெரிந்த வெளியைக் கண்களால் பாதுகாத்துக்கொள்ள முனைந்தாள்.

கமிஷனர் அலுவலக வளாகத்தில், முன்னும் பின்னுமாகக் கடும் காவலுக்கு மத்தியில்தான் அவளை அழைத்துச் சென்றனர். அவள், அந்த முரட்டுச் சூழலுக்கு மத்தியில் பஞ்சு போல இருந்தாள்.

ஓர் அறையில் அழைத்துச் சென்று அமரவைத்தனர். குற்றங்களின் வாசனையை நுகர முடிந்தது. வாகனத்தில் உடன் வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, ‘‘எல்லாத்தையும் ஒழுங்காச் சொல்லிட்டு நிம்மதியா ரெஸ்ட் எடு. வீணா அடிவாங்கிச் சாகாதே’’ என்றார். கெடுபிடி போலவும் இல்லை. மிரட்டல் போலவும் இல்லை... ஆனால் மிகுந்த அச்சமாக இருந்தது. தனி அறையில் விட்டுவிட்டுப் போய்விட்டார். காலியான அறையின் நடுவில் ஒரு டேபிளும் எதிரெதிரே இரண்டு நாற்காலிகளும் இருந்தன.  சிறிது நேரத்தில் மஃப்டியில் ஒரு பெண் அதிகாரி வந்தார். குண்டாக இருந்தார். அவருக்கு இடுப்பு, முதுகு பக்கங்களிலும் தொப்பை இருந்தது. பல ஆண்டுகளாகச் சிரிக்க மறந்த முகம். தூங்கும்போதும் கடுகடுப்பாகத்தான் இருக்கும்போல இருந்தது.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13

‘‘என்னம்மா, மினிஸ்டரையே கொல்ற அளவுக்கு என்னா நெஞ்சழுத்தம் உனக்கு?’’ என்றார்.

‘‘நான் யாரையும் கொல்லல’’ என்றாள் ரம்யா.

அவர் எந்தவித முகக் குறிப்பையும் காட்டாமல் ரம்யாவை நெருங்கி, தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தார். ‘‘வீடியோவுல ட்ரையல் பாத்துட்டுத்தான் கொல்லுவ... இல்ல?’’

‘‘அப்படில்லாம் இல்ல மேடம். அது ஒரு கேம்.’’

‘‘அது எப்படி கேம்ல வர்றது எல்லாம் நிஜத்தில நடக்குது?’’

‘‘எனக்குத் தெரியாது மேடம்.’’

‘‘சரி. இதெல்லாம் வேற யாருக்குத் தெரியும்?’’

‘‘நீங்க கேக்கறது புரியலை.’’

‘‘யார் உங்களுக்கெல்லாம் லீடர்? இல்ல, நீதான் எல்லாருக்கும் லீடரா?’’

‘‘அய்யோ... அதெல்லாம் இல்ல மேடம்.’’

‘‘எதுக்கு இதெல்லாம்? உன் ஃப்ரெண்டை தொல்லை பண்ணாங்களா இவங் கல்லாம்?’’

‘‘தெரியாது.’’

‘‘அதுக்காகத்தானே பழி வாங்கறே?’’

‘‘இல்ல.’’

‘‘இன்னும் யாரெல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க?’’

‘‘தெரியாது மேடம்.’’

‘‘வாய் வழியா உறிஞ்சிக் கொல்லுவியாமே... எப்படின்னு சொல்லு.’’

ரம்யா துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள்.

‘‘ஏய்... நடிக்காத. இந்த 14 நாள்கள்ல உன்னை எப்படிப் பிழியணும்னு எனக்குத் தெரியும்டி’’ என்றார்.

(தொடரும்...)