மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14

மிஷனர் அலுவலகத்தில் விசாரணைக் கைதிகள் இருந்த பகுதிக்கு வந்தார் மஜூம்தார். அவருக்குத் தேவை ரம்யாவின் ஒரே ஒரு தலைமுடி. இவள்தான் அவளா என்பதை நிரூபிக்க அதுபோதும். காவல்துறை அதிகாரி ராஜேஸ்வரியிடம் விஷயத்தைச் சொன்னதும், ‘‘எத்தனை முடி வேணும் இப்பவே பிச்சிடலாம்’’ என்றாள்.

‘‘ஒண்ணு போதும்.’’

‘‘நான் கொஞ்சம் பேசிப் பார்க்கட்டுமா?’’ என்றார்.

‘‘வாங்க சார். அவளோட அட்வகேட் இருக்காரு. ஏடாகூடமா எதுவும் கேட்டுடாதீங்க.’’

‘‘ஏடாகூடம்லாம் எனக்குத் தெரியாது. அது உங்க டிபார்ட்மென்ட். எனக்குச் சில தகவல் வேணும்.’’

நீண்ட காரிடாரில் நடந்து, பூட்டைத் திறந்து கடக்க வேண்டிய பகுதிகளைத் தாண்டி அந்த அறைக்குள் நுழைந்தபோது, சுருண்டு அமர்ந்திருந்த அவளைப் பார்த்து முதலில் பரிதாபப்பட்டார்.

ராமநாதன், ‘‘இவர் யார்?’’ எனக் கேட்டான்.

‘‘இவர், ஃபோரன்சிக் டிபார்ட்மென்ட். கொலை செஞ்ச பொண்ணோட தலைமுடி இவர்கிட்ட இருக்கு. இவளோட தலைமுடியோட கம்பேர் பண்ணி பார்க்கணும்.’’ ராஜேஸ்வரி தன் அதிகபட்ச நாகரிகத்தில் பேசினாள்.
‘‘பீச்ல செத்துப்போனானே ஒரு செல்போன் திருடன்... அவன் கையில ஒரு தலைமுடி சிக்கியிருந்தது.’’

ரம்யாவிடம் அவர் விளக்கியதைப் புரிந்துகொள்ளாமல், ராஜேஸ்வரி, ‘‘ஓகே?’’ என்றாள்.

ராமநாதன், ‘‘அவன், ரம்யாவோட செல்போனைத் திருடிகிட்டு ஓடினான். அதனால, அதுல இவங்க தலைமுடி இருக்கலாம். அதைவெச்சு கொலைகாரியாக்கிடுவீங்களா?’’ என்றான்.

ராஜேஸ்வரி, ‘‘வக்கீல் சார்... விசாரணையப்போ நீங்க கூட இருக்கலாம்னுதான் சொன்னாங்க. விசாரணைய நீங்க நடத்தணும்னு சொல்லல’’ என முறைத்தார்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14

‘‘மேடம், நான் விசாரணை எதுவும் நடத்தலை. விளக்கம்தான் கேட்டேன். நீங்க நடத்துங்க.’’

மஜூம்தார் அந்தச் சூழ்நிலையை நிதானத்துக்குக் கொண்டுவர விரும்பினார். ‘‘லாயருக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்லணும்னு நினைக்கிறேன். ஆக்சுவலா அவன் கையில ரெண்டு முடி இருந்துச்சு. ரெண்டும் ஒரே பொண்ணோட தலைமுடி. ஆனா, வெவ்வேறு நேரத்தில எடுத்தது. ரைட்?... ரம்யாகிட்ட இதுக்கு முன்னாடியே ஒரு தடவை அவன் செல்போன் திருடினானா? அதுதான் கேட்கணும்னு வந்தேன்.’’

‘‘இல்லை சார்... என்கிட்ட இருந்தது ஒரு போன்தான். ஒரு தடவைதான் திருடினான்.’’

ரம்யாவின் பதில் குயுக்திகள் அற்ற நேரடியான பதிலாக இருந்தது. அடுத்த கேள்வியையும் கேட்டுவிடத் தயாரானார்.

‘‘உங்களுக்குக் குடிப்பழக்கம் இருக்கா? எப்பவாவது ரேரா பார்ட்டியில சாப்பிடற மாதிரி பழக்கம் இருந்தாலும் சொல்லலாம்.’’

‘‘இல்ல சார்.’’

‘‘ஷ்யூர்?’’

‘‘ஷ்யூர்.’’

ராஜேஸ்வரி பொறுமையிழந்து, ‘‘சார்... இப்படிலாமா கேப்பீங்க? ஷ்யூர்... ஷ்யூர்னு. குடிப்பியா, இல்லையா?’’ என மிரட்டலாகக் கேட்டார்.

‘‘கோக் கூட குடிக்க மாட்டேன், மேடம்.’’

‘‘ஏய்... கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும். நான் விசாரிச்சு வைக்கிறேன், நீங்க போயிட்டு வாங்க சார்.’’

‘‘லெட் மி எக்ஸ்ப்ளைன். ஒரே பெண்ணோட ரெண்டு தலைமுடி... அதுல ஒரு தலைமுடி அவங்க குடிச்சிருந்ததா காட்டுது. இன்னொண்ணு நார்மல். வெவ்வெறு நாள்ல எடுத்திருக்கணும். முதல் தடவை எடுத்தப்போ குடிக்காம இருந்திருக்க ணும். இரண்டாவது தடவை எடுத்தப்போ குடிச்சிருக்கணும்.’’

ராமநாதன், ‘‘இவங்களுக்கு அந்தப் பழக்கமே இல்லைன்னு சொல்லிட்டாங்களே?’’ என்றான்.

மஜூம்தார் ஆரம்பத்தில் இருந்தே குழப்பத்தில் இருந்தார். வெவ்வேறு சந்தர்ப்பத்தில் சிக்கிய இரண்டு முடிகள் எப்படி ஒருவன் பாக்கெட்டில் பத்திரமாக இருக்க முடியும்? அவருடைய மோகினி கான்செப்ட் ஓரளவுக்குப் பொருந்துகிறது. ரம்யா... ரம்யா உடம்பில் புகுந்த மோகினி ஆவி. மோகினியாக இருந்தபோது குடித்திருக்கலாம். கொல்ல வந்தபோது அவளுடைய முடி சிக்கியிருக்கலாம். ரம்யாவை அச்சத்துடன் பார்த்தார். அவளும் அவரை அச்சத்துடன் பார்த்தாள்.

‘‘எனக்குப் போதும்.’’ மஜூம்தார் எழுந்தார்.

‘‘அட்வகேட்... உங்களுக்குக் கொடுத்த ஒரு மணி நேரம் முடிஞ்சுடுச்சு. கிளம்புங்க.’’

ரம்யா கலக்கத்துடன் ராமநாதனைப் பார்த்தாள். விடைபெறும் வாக்கியமாக, ‘‘கவலைப் படாதீங்க. வினோத் டெல்லி போயிருக்காரு. நமக்குச் சாதகமாத்தான் இருக்கு’’ என்றான்.

அந்த போலீஸ் அதிகாரிக்குச் சற்றே தயக்கம் இருந்திருக்க வேண்டும். டெல்லி என்ற வார்த்தைக்கு ஒரு மரியாதை இருந்தது. அமைதியாக இருந்தாள்.

ஏர்போர்ட்டிலிருந்து டாக்ஸி பிடித்தான் வினோத். ஓல்டு டெல்லி மவுலானா சையித் அகமது மசூதிக்கு அருகே இருந்தது சயின்டிஸ்ட் சுசீந்திரனின் வீடு. சென்னை ஐ.ஐ.டி  பேராசிரியர் தயவில், நிர்மலாவின் எண்ணை வாங்கித் தந்தான் ராமநாதன். டாக்டர் கொலை சம்பந்தமாக சில விஷயங்களைப் பேச விரும்புவதாக நேரம் கேட்டு, பெரிய தவிப்புக்கும் பரபரப்புக்கும் இடையில்தான் புறப்பட்டு வந்தான் வினோத்.

சுசீந்திரன் பெயர் போட்ட பலகை ஒன்று அவர் வீட்டுக்கு அடையாளம் காட்டியது. காலிங் பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். எதிர்பாராத விதமாக ஓர் இளம்பெண் வந்து கதவைத் திறந்தாள்.

‘‘வினோத்?’’ என்றாள் எதிர்பார்த்தவளாக.

பின்னாடியே வந்த நிர்மலா, ‘‘வாப்பா’’ என்றார் தமிழில். ‘‘இவ, என் ஹஸ்பண்டோட ஸ்டூடன்ட்... தீபா. ரிஸர்ச் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. அதான் இவளையும் வரச்சொன்னேன்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14

அவர் சுட்டிக்காட்டிய சோபாவில் உட்கார்ந்து, எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘காபி சாப்பிடறீங்களா?’’ என நிர்மலாவும், ‘‘புரொபஸரோட டெத்ல உங்களுக்கு ஏதாவது ரகசியம் தெரிஞ்சா சொல்லுங்க’’ என்று தீபாவும் ஒரே நேரத்தில் பேச்செடுத்தனர்.

இரண்டுக்குமாக, ‘‘சரி’’ எனத் தொடங்கினான்.

நிர்மலா, சமையல்காரம்மாவிடம் தலையசைத்துவிட்டு, ஆர்வமாக வினோத் பக்கம் திரும்பினார்.

வினோத், முதன்முதலாக நடந்த கொலையில் இருந்து வரிசையாகத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொன்னான்.

‘‘ஒரே ஒரு விஷயம்தான். முதல்ல அந்த ஆசிரமத்தில தப்பு நடந்திருக்கு. டாக்டர், அந்த பிசினஸ்மேன், அரசியல்வாதி பேர் எல்லாம் ஜெனிலியான்னு ஒரு பொண்ணு எழுதிவெச்சிருக்கா. அவ அந்த ஆசிரமத்தில இருந்தவ. அவங்கெல்லாம்தான் வரிசையா இறந்திருக்காங்க. மெரினா பீச்ல இறந்துபோன ஜஸ்டின், புரொபஸர் இவங்க ரெண்டு பேரோட சாவுக்குத்தான் காரணம் தெரியலை. ஜஸ்டின், பெங்களூர் பக்கமே போனதில்லை... பிசினஸ்மேன், அந்த டாக்டர் யார்கிட்டயாவது அடியாளா இருந்தானான்னுகூட கேட்டுப் பார்த்துட்டேன்... ஒண்ணுமே புரியலை. இதுல எப்படி புரொபஸர்  வர்றார்னே தெரியலை.’’

‘‘என்ன சொல்ல வர்றீங்க மிஸ்டர்?’’ எனக் கோபப்பட்டார் நிர்மலா.

‘‘மேடம்... தப்பா நினைக்காதீங்க. ஆசிரம விவகாரத்தோட இவரை லிங்க் பண்ணலை.  ஏன் சம்பந்தமே இல்லாம இவரைக் கொன்னாங்கன்னு தான் கேட்கிறேன்... அதான் என் கேள்வி.’’

தீபா, ‘‘எந்த விதத்திலயும், செத்துப்போன யாருடனும் புரொபஸருக்குச் சம்பந்தமே இல்ல. இவர் தனி. ஒரு பத்து வருஷமாவே இவரோட ரிஸர்ச் எல்லாம்... ஹிக்ஸ் போஸான் பத்தித்தான். வேற பேசிப் பார்த்ததில்ல. வேற யாரையும் மீட் பண்ணினதும் இல்ல’’ என்றாள்.

‘‘அதைத்தான் கேட்கிறேன்... ஹிக்ஸ் போஸானுக்கும் செத்துப்போன இவங்களுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு? இவரைப் போலவே அவங்களும் ஆராய்ச்சியை நிறுத்த விரும்பினாங்களா எந்தவிதத்திலாவது? திசை திருப்பறதுக்காக ஜெனிலியாவைக் கோத்துவிட்டிருக்காங்களா?’’

‘‘சென்னை போலீஸ், ஜெனிலியா ஆங்கிள்லதான் இப்ப ஒரு பொண்ணை அரெஸ்ட் பண்ணியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்’’ என்றாள் தீபா.

‘‘ஆமா... அவ என்கூட வொர்க் பண்ற பொண்ணு. எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு. கொலை நடந்த சமயங்கள்ல எல்லாமே அவ வேற ஒரு இடத்தில இருந்திருக்கா. குறிப்பா புரொபஸர் இறந்த அன்னைக்கு சென்னையில தங்கறதுக்கு ரூம் தேடி அலைஞ்சுகிட்டிருந்தா. பெங்களூர்லயும் டெல்லியிலயும் வந்து கொலை செஞ்சிட்டு போற அவகாசமே இல்ல. டெய்லி என் கூட அவ ஆபீஸ்ல இருந்திருக்கா... நீங்க தர்ற ஏதாவது ஒரு தகவல் அவளைக் காப்பாத்த உதவும்னுதான் இங்க வந்தேன்.’’ வினோத் தயங்கித் தயங்கிச் சொல்லி முடித்தான்.

‘‘சாரோட ஆராய்ச்சிக்கட்டுரைல என்ன சொல்ல வந்தார்னு தெரியலை. அதைத்தான் ஹார்ட் டிஸ்க்கோட எடுத்துட்டுப் போயிட்டா. அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பிக்கிறவங்க எல்லாருமே ஒரு வேலை வரிசையா கொல்லப் பட்டிருப்பாங்களோ?’’ என ஒரு தொடர்பு கொடுத்தாள் தீபா.

நிர்மலா, ‘‘இப்ப நீங்க ரெண்டு பேர்தான் அடுத்து தேடிக்கிட்டு இருக்கீங்க’’ எனச் சிரித்தார். காபி வந்தது. குடித்து முடிக்கிறவரை ஏனோ எல்லோருமே அமைதியாக இருந்தனர். ‘‘அப்படி இல்ல மேம். அசிஸ்டென்ட் கமிஷனரும் தேடிக்கிட்டு இருக்கார்.’’ தீபா கப்பை வைத்துவிட்டு துப்பட்டாவால் உதட்டை ஒத்தி எடுத்தாள்.

வினோத், சீரியஸாக, ‘‘எனக்கென்னமோ இது விளையாட்டாத் தெரியலை. நம்மையும் தேடி வரலாம்னுதான் தோணுது’’ என்றான்.

‘‘பயமுறுத்தாதீங்க வினோத். சென்னையில் இறந்த நாலு பேரும் இதற்கான சம்பந்தமே இல்லாதவங்க. பெங்களூர் சாமியாரும்தான்.’’

‘‘ஏதோ லிங்க் இருந்து நமக்குத் தெரியாம இருந்திருந்தா?’’

‘‘ஒரே ஒரு லிங்க் இருக்கு.’’

‘‘என்ன மிஸ்டர் வினோத்?’’

‘‘அந்த நாலு இடங்கள்லயும் கொலை நடந்தப்ப என்னோட ஃப்ரெண்ட் இருந்ததா, அங்க பார்த்தவங்க சாட்சி சொல்றாங்க.’’

‘‘நீங்கதான், அவங்க உங்களோட வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்கன்னு சொல்றீங்களே?’’

‘‘ஆமா. அதாவது என்னோட ஃப்ரெண்ட் ரம்யாவைப் போல வேற ஒருத்திய பார்த்திருக்காங்க.’’

‘‘அது எப்படி அதே போல இன்னொரு பொண்ணு.’’

‘‘அதே போல பொண்ணுன்னு நான்தான் சொல்றேன். சாட்சி சொல்றவங்க ‘அதே’ பொண்ணுதான்னு சொல்றாங்க.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14

‘‘ஓ!’’ அழகாகக் கண் இடுக்கி வியந்தாள் தீபா.

‘‘நிர்மலா மேம்... நீங்க அந்தக் கொலைகாரிய பார்த்தீங்க இல்ல? நீங்க என்ன நினைக்கிறீங்க?’’ என வினோத் கேட்டான்.

‘‘இப்ப அரெஸ்ட் பண்ணியிருக்கப் பொண்ணை நான் பார்க்கவே இல்லையே?’’

‘‘டி.வி-யில காட்டினாங்களே?’’ என்றான் வினோத்.

‘‘எங்க வீட்ல டிவி இல்லைப்பா. அவர் அப்பாஸ் பாணியில ‘இடியட் பாக்ஸ்’னு சொல்லுவார்.’’

வினோத் செல்போனில் இருந்த ரம்யாவின் படத்தை எடுத்து நிர்மலா மேடமிடம் காட்டினான்.

நிர்மலாவின் இமைகள் படபடத்தன. ‘‘ஆமாம்பா இதே பொண்ணுதான்’’ என்றார் கண்கள் பிரமிக்க.

தீபாவும் அந்த அதிர்ச்சியில் பங்குகொள்ளும் விதமாக அந்த போட்டோவை வாங்கிப் பார்த்தாள். ‘‘இவ... கிராபிக் அனிமேட்டர்தானே? ஐ நோ ஹர். இவ அண்ணன் செர்ன்ல வேலை பார்க்கிறான். ஜெனீவா போனப்ப பாத்திருக்கேன்’’ என்றாள்.

வினோத் அதிர்ச்சியுடன் திரும்பினான்.

தொடரும்