அலசல்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16

வினோத், தீபா இருவருமே பரஸ்பர அவநம்பிக்கையுடன்தான் பேசினர்... பழகினர்... உதவினர்.

தீபாவுக்கு வினோத் மீதே ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது, ‘ரம்யாவும் அவனுமே கூட்டாக இத்தனை வேலைகளையும் செய்திருப்பார்களோ’ என. ‘இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்கிறவர்கள். ஒவ்வொரு கொலையின்போதும் சில மைக்ரோ செகண்டுகளுக்கு முன்பு வரை அவன் ரம்யாவுடன் இருந்திருக்கிறான். அவள்மீது வினோத்துக்குக் காதல் இருப்பதாகத் தோன்றுகிறது. அதன் காரணமாக அவளை மீட்க நினைக்கிறான்’. இப்படியெல்லாம் யோசித்தாள் தீபா.

ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத காரணங்களாக அவளுக்கே பிசிறடித்தன. எதற்காக ஊர் ஊராகச் சென்று கொலை செய்யவேண்டும்? காதலிக்கிற பெண்ணாக இருந்தாலும், இத்தனை கொலைகள் செய்தவளைக் காப்பாற்றிக் குடும்பம் நடத்துவானா? ரம்யாவும் வினோத்தும் அப்பாவிகளா? நிர்மலா மேடம் ‘கொலை செய்ய வந்தவள் ரம்யாதான்’ என உறுதியாக அடையாளம் காட்டுகிறார். ஒரு பெண் எப்படி எல்லா நகரங்களிலும்... அவளைப் போலவே வேறு ஒருத்தியா?
அதுதான் சரியாகப் பொருந்துகிறது.

தீபாமீது வினோத்துக்கு இருந்த ஒரு சந்தேகம், ‘பேராசிரியர் இப்படி ஒரு கடிதம் எழுதுவது அவளுக்கு மட்டும்தானே தெரியும்’ என்பது. அவளா? அவள் மூலமாக வேறு ஒருவரா? கவின், தீபா இருவரும் சேர்ந்து இந்த நாடகம் ஆடுகிறார்களா?

வினோத் போனில் ‘தீபா’ என்ற பெயர் ஒளிர்ந்தது. சிந்திப்பதைக் கண்காணிக்கிறாளா எனச் சற்றே திடுக்கிட்டான்.

‘‘ஏர்போர்ட் கிளம்பிட்டீங்களா?’’ என்றாள்.

‘‘டாக்ஸிக்குச் சொல்லியிருக்கேன்.’’

‘‘கேன்சல் பண்ணுங்க. நான் இப்ப வர்றேன்.’’

டாக்ஸியைக் கேன்சல் பண்ணச் சொன்னாளா, ஃப்ளைட்டையா எனக் கேட்பதற்குள் வைத்துவிட்டாள். ஐந்து நிமிடங்களில் ரிசப்ஷனிலிருந்து போன். தீபா.

டைட்டாக ஜீன்ஸ் பேன்ட், டி ஷர்ட். தைப்பார்களா, இல்லை ஒட்டிவிடுவார்களா, தெரியவில்லை. ‘‘நீங்கள் சென்னை செல்வதற்குள் சில விஷயங்களைப் பேசிவிடலாம் என்றுதான்... இவர் மிஸ்டர் சுரேந்தர் சிங். அசிஸ்டென்ட் கமிஷனர். இவர்கிட்ட நீங்க வந்ததைச் சொன்னேன். பார்க்கணும்னு சொன்னார்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16

அவர், சீருடை தவிர்த்து ரேமண்ட் ஜென்டில்மேன்போல இருந்தார். கைக்குலுக்கலில் ‘இதுதான் ஆரம்பம்’ போன்ற தோரணை.

வினோத் எதிர்பாராத விருந்தாளிபோலக் கொஞ்சம் விழித்தான். சுருக்கமாகத் தான்செய்யும் பணியையும் தன்னுடன் வேலை பார்க்கும் பெண் இதில் சிக்கியிருப்பதையும் சொன்னான்.

கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ‘‘ஃப்ளைட்டை கேன்சல் செய்ய வேண்டுமா?’’ என்றான்.

‘‘நோ... சாரி’’ எனப் பதறிய படி, ஏர்போர்ட் வரைக்கும் பேசிக்கிட்டுப் போனா போதும்’’ என்றார்.

அவருடைய இனோவாவில் முன் இருக்கையில் தீபாவை உட்காரச் சொல்லிவிட்டு, நடு இருக்கையில் வினோத்தும் சுரேந்தரும் அமர்ந்தனர். டெல்லிச் சாலைகளில் கார் விரைந்தது.

‘‘ரம்யாவோட புரொஃபைல் எல்லாம் பார்த்தேன். அவளால் இத்தனை கொலை களைப் பண்ணியிருக்க முடியும் என்று தோன்றவில்லை.’’

‘‘அவளால ஒரு எறும்பைக்கூடக் கொல்ல முடியாது சார்.’’ வேகமாகத் திருத்தினான். சிங் சிரித்தார்.

‘‘இருக்கலாம்.’’ யோசனையுடன் சாலையைப் பார்த்தார். ‘‘எல்லா இடங்களிலும் அவளைச் சந்தேகிக்க வாய்ப்பாகிவிட்டது.  தினமும் வேலைக்குப் போய்க்கொண்டே அப்படி வர முடியாது என்பதும் லாஜிக்கல் குழப்பம்.’’

‘‘ஆமாம். அவளை நல்ல கிராஃபிக் டிசைனர் என கவின் சொல்லியிருக்கிறான். ஜெனிவா போயிருந்தபோது, வீடியோ கால்போட்டு என்னை அவளுடன் பேசச் சொன்னான். அவளுடைய உருவத்துக்கும் இந்தக் கொலை களுக்கும் சம்பந்தமே இல்லை.’’ தீபா, பின்புறம் திரும்பிச் சொன்னாள்.

‘‘எனக்கு இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்துங்கள் வினோத்... ரம்யா இரட்டைப் பிறவியா? ரம்யாவோ, பெற்றோரோ மறைக்கிறார்களா என்பது தெரிய வேண்டும். சினிமாவில் வருவதுபோல யோசிப்போமே... அவர்களுக்கே தெரியாமல் பிறந்தபோதே ரம்யாவின் சகோதரியைக் கடத்திவிட்டார்களா இது ஒன்று. அதாவது, இன்னொரு ரம்யாவுக்கான வாய்ப்புகள்...’’

‘‘பிறந்த ஆஸ்பத்திரிக்கே போய் விசாரித்து விடுகிறேன்.’’

‘‘நாங்கள் ஏற்கெனவே அனுப்பிவிட்டோம். உங்கள் தரப்பில் விசாரியுங்கள். ரெண்டாவது விஷயம்... கவின். புரொபஸரின் கட்டுரையைப் படித்திருப்பீர்கள்.’’

‘‘எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஆபத்து என்பதைத்தவிர.’’

‘‘எனக்கும்தான்... ஆனால் தீபா ஓரளவுக்குச் சொல்லிவிட்டாள்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16

புரொபஸர் சுசீந்திரனின் கட்டுரைப் பின்னணியைச் சுருக்கமாகச் சொன்னாள் தீபா. ‘‘ஒன்றுமில்லை. 1,400 கோடி வருஷங்களுக்கு முன்னால் இயற்கையாக ஒரு பிக்பாங் ஏற்பட்டு இந்தப் பிரபஞ்சம் உருவானது. ஐரோப்பாவில் செர்ன் உருவாக்கியிருப்பது ஒரு குட்டி பிக்பாங். இது பிரபஞ்சத்தின் ஏதோ ஓர் இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புரொபஸரின் கணிப்பு. அதனால் ஏற்படும் பாதிப்பு பூமியை அழித்துவிடக்கூடும் என அஞ்சியிருக்கிறார். அவருடைய அச்சத்துக்கு இன்னொரு முக்கியக் காரணம், வேற்று கிரகத்திலிருந்து அவருக்குக் கிடைத்த சிக்னல். காஸ்மிக் ஸ்பெக்ட்ரா அனாலிஸிசில் புரொபஸருக்கு ஆர்வம். ஸ்டீபன் ஹாக்கிங்போல ஏதாவது கிரகங்களைத் தேடும் வேலையில் இருப்பார். அப்போதுதான் அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அதை முழுவதுமாக அறியும் வேலையில் இருந்தபோதுதான் கொல்லப் பட்டார். வந்தவர்கள் முக்கியமாக அந்தக் கட்டுரையைக் களவாடியிருக்கிறார்கள். நல்லவேளையாக கூகுள் டாக்கில் இருந்ததால் என்னால் எடுக்க முடிந்தது. கட்டுரை சேவ் ஆன நேரத்துக்கும் அவர் கொல்லப்பட்ட நேரத்துக்கும் சுமார் ஐந்து நிமிட இடைவெளிதான்.’’் தீபா சொல்லி முடித்தாள்.

‘‘கவின்..?’’ என்றான் வினோத்.

‘‘கவின் பற்றிய தகவல்கள் வேண்டும். எப்படிப்பட்டவர்... பின்னணி... அவருடைய ஆசை, பேராசை போன்றவை.’’

‘‘விசாரிக்கிறேன். ஆனால், இதற்கும் நீங்கள் ஆள் அனுப்பியிருப்பீர்களே?’’

சிங் சிரித்தார். ‘‘எனக்கு வேறு ஒரு தரப்பிலிருந்து விவரங்கள் வேண்டும். தேவைப்பட்டால் உங்களுக்கும் ஓர் ஆள் போடுவோம்... போலீஸ் புத்தி.’’

‘‘இனிமேல்தான் போடப்போகிறீர்கள் என்பதை நம்ப வேண்டுமா?’’ என்றான் சகஜமாக.

ஏர்போர்ட் நெருங்கியது. ஏ.சி புண்ணியத்தில் நேராக வாசலில் போய் இறங்கினான்.

‘‘கோர்ட்ல கேட்டா யார் பதில் சொல்றது? இப்படியா கத்தையா முடியை வெட்டுவீங்க?’’ கமிஷனர் கோபமாகக் கேட்டார்.

‘‘இல்ல சார்... ஃபோரன்சிக்ல இருந்து கேட்டாங்க... அதான்’’ என்றாள் ராஜேஸ்வரி.

‘‘அந்த அட்வகேட் ‘கோர்ட்ல வெச்சுப் பாத்துக்கி றேன்’னு கத்தறான். வெளிய தெரியற மாதிரி எந்த டார்ச்சரும் வெச்சுக்கக் கூடாது. பேச்சிலயே மிரட்டினா போதும்... ஏதாவது சொன்னாளா?’’ என்றார்.

‘‘அழுதுக்கிட்டே இருக்கா.’’

‘‘அவளைப் பார்த்துக்கிறதும் பயமுறுத்தறதும் உன்னோட வேலை. பார்த்து.’’

‘‘புரியுது சார்.’’

‘‘இன்னும் ஒரு வாரம்தான் நம்ம கஸ்டடியில இருப்பா. அதுக்குள்ள நமக்கு உண்மை தெரிஞ்சாகணும்.’’

ராஜேஸ்வரிக்குப் பெரிய சவாலாக இருந்தது. எப்பேர்ப்பட்ட குற்றவாளிகளையும் நொடியில் வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள். ரம்யா விஷயத்தில் ஆசையாகப் பேசிப் பார்த்துவிட்டாள், அதட்டிப் பார்த்துவிட்டாள்... எதற்கும் பலன் இல்லை. கொஞ்சம் அவுட் ஆஃப் த வே போய்தான் விசாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிபதி தள்ளுபடி செய்ய நேரிட்டால்... காவல்துறைக்கு அல்ல, ராஜேஸ்வரிக்குக் களங்கம்.

கமிஷனர் கிளம்பிப் போனார்.

ராஜேஸ்வரி இரவு 11 மணிக்கு ரம்யாவை விசாரிக்க நேரம் குறித்துவிட்டு வீட்டுக்குப் போய் ஃப்ரெஷ்ஷாக வந்தாள். படு கேஷுவல் ஆடை. ரம்யா சோர்ந்து போய்ப் படுத்திருந்தாள்.

‘‘ரம்யா’’ என்றாள் முதுகில் தட்டி. ரம்யா திடுக்கிட்டு எழுந்தாள்.

‘‘எப்படி உன்னால தூங்க முடியுது... இத்தனை கொலைகளைப் பண்ணிட்டு?’’

கண்களைக் கசக்கிக்கொண்டு ‘விடிந்து விட்டதா’ என ஜன்னலைப் பார்த்தாள். தார் பூசிய இருட்டு. ‘‘நான் எதுவும் பண்ணலை மேடம்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16

‘‘நீ உண்மையச் சொல்ல மாட்டே... கரன்ட் ஷாக் கொடுத்துதான் வெளிய கொண்டாரணும்.’’

‘‘என்னை விட்டுடுங்க மேடம். எனக்கு எதுவும் தெரியாது.’’

‘‘இதப்பார்... நீ சொல்றத கேட்டுட்டுப் போறதுக்காக இந்தப் பாதி ராத்திரியில இங்க வர்ல. கொலை நடந்த எல்லா இடங்கள்லயும் நீ இருந்திருக்குறே. அதைப் பார்த்த சாட்சி இருக்கு. உன் ஃப்ரெண்டை அந்த ஆசிரமத்துல வெச்சு நாலு பேர் ரேப் பண்ணிட்டானுங்க. அதுக்காகத் தான் நீ பழி வாங்கினே... இதுதான் நாங்க சொல்ற கதை. நடுவுல அந்த சயின்டிஸ்ட்டை எதுக்குடீ கொன்னே? அந்த ஆளும் ஆசிரமத்துக்கு வந்தானா? அது வேற பஞ்சாயத்தா?’’

‘‘அந்த சயின்டிஸ்ட்டை எனக்குத் தெரியாது மேடம்.’’

‘‘அங்கயும் நீ கொலை பண்ணினதுக்கு ஆதாரம் இருக்குடீ... நேர்ல பார்த்த சாட்சி இருக்கு.’’

‘‘என்னை மாதிரியே வேற யாரோ இருக்காங்க... அவங்கதான் இதுக்கெல்லாம் காரணம்.’’

‘‘நல்லா இருக்குடி... ஊழல் பண்ற எல்லா அரசியல்வாதிகளுக்கும் இந்த டெக்னிக்கைச் சொல்லிடலாம். ‘என்னை மாதிரியே வேற ஒருத்தன் இருக்கான்’னு. டபுள் ஆக்ட் படம்னு டகுள் உட்றியா? த பார்... சீவிடுவேன். சரிப்பட்டு வராதவ கதைய எப்படி முடிச்சிருக்கேன்னு தெரிஞ்சுக்கோ. பாத்ரூம்ல கரன்ட்ல ஷாக் அடிச்சுச் செத்துட்டாள்னு கதைய முடிச்சுடுவேன்.’’

ராஜேஸ்வரி பேசிக்கொண்டிருக்கும்போது ரம்யா ஜன்னல் வழியாக மிரண்டுபோய்ப் பார்த்தாள். ‘‘அங்க பாருங்க மேடம்.’’

பார்த்துவிட்டு, ‘‘என்னது?’’ என்றாள்.

‘‘என்னை மாதிரியே ஒருத்தி நின்னுக்கிட்டு இருந்தா மேடம்.’’

‘‘என்னடீ பேச்சைத் திருப்புற? நாளைக்கு நான் வரமாட்டேன். நாலு ஆம்பளைங்க வருவாங்க. அவனுங்க எப்படி விசாரிப்பானுங்கன்னு எனக்குத் தெரியாது. எவ்வளவு சீக்கிரம் உண்மையக் கக்குறீயோ அவ்வளவு நல்லது. வர்ட்டா.’’

ராஜேஸ்வரி போய்விட்டாள். அவளுடைய மிரட்டலை ஜன்னலில் தோன்றிய உருவம் கலைத்துப்போட்டுவிட்டது.

ரம்யா ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தாள். யார் அவள்? என்னை மாதிரியே இருக்கிறாளே... எல்லோரும் சொன்ன ‘அது’ இதுதானா? இவ்வளவு காவலை மீறி எப்படி வந்தாள்? ரம்யா ஜன்னலை நெருங்கிச் சென்று பார்த்தாள். ஓர் உருவம் அந்த இடத்தைவிட்டு நிதானமாகக் கடந்து போனது. அது இருட்டின் ஆழத்தில் கலந்து மெல்ல மறைந்தது.

(தொடரும்...)

திருத்தம்:
கடந்த இதழ் அத்தியாயத்தில் ‘தீபா’ என்ற பெயர் ‘கீதா’ என வெளியாகிவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.