மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 17

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 17
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 17

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 17

முத்துராஜாவின் திறமை அபாரம். ரம்யாவும் வினோத்தும் இல்லாத இந்த ஒரு வாரத்திலும் இலக்கை எட்டியிருந்தார். சொல்லப்போனால், தலைமை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட தற்காலிகப் பொறுப்பு உணர்வினால் மிகச் சிறப்பாகவே அனிமேஷன் வேலைகள் நிகழ்ந்திருந்தன. பொன்னியின் செல்வனைப் படமாக எடுக்க  எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரும் முயற்சி செய்தும் சாத்தியமாகாத வெற்றிடத்தை இந்த முப்பரிமாண உலகம் சாத்தியமாக்கியிருந்தது.

கிட்டத்தட்ட 22 அத்தியாயங்கள் வரை நெருங்கிவிட்டார்கள். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் வெட்டி வீழ்த்தும் காட்சியைப் படுகொடூரமாகச் செய்திருந்தார்கள். அந்தக் காட்சியை மட்டும் வினோத் நீக்கிவிட்டான். ஆதித்த கரிகாலன் கோபமாகக் கத்தியை ஓங்குவதுடன் நிறுத்தினான். பெரும்பாலும் குழந்தைகளும் இளைஞர்களுமே இந்த விளையாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள் என்பதால், கேமில் வன்மம் வேண்டாம் எனப் பொதுவாகச் சொல்லி வைத்தான். இடையிடையே சில கொசுறு வேலைகள் பாக்கி. படமாக ஓடிக் கொண்டிருந்த வீடியோவில், விளையாட்டுக்கான சில திருப்பங்கள் தேவையாக இருந்தன. கேம் ஆப்ஷன்கள் துரிதமாக இல்லை. அதைத்தான் வினோத் இரவும் பகலுமாக உட்கார்ந்து சரி செய்தான்.

டெல்லி போய்வந்த விஷயம் அத்தனை உவப்பாக இல்லை. கண் முன்னாடியே ரம்யா மூழ்கிக்கொண்டிருப்பது கவலையாக இருந்தது. முத்துராஜாவும் ‘இனி விவகாரம் நம் கையில் இல்லை’ என விலகிக்கொண்டார். ‘‘நம்மால் முடிந்ததெல்லாம் சிறைக்குச் சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வருவதுதான்’’ என மீட்டிங்கில் சொன்னார். சிறைக்குச் சென்று பார்க்கக்கூட ஆர்வம் காட்டாதவர்களும் ஆபீஸில் இருந்தனர். வினோத் மட்டும்தான் இன்னமும் காதலின் விசையால் செயல்பட்டுக்கொண்டிருந்தான்.

வீட்டுக்குக் கிளம்பியபோது, ராமநாதனை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் அருகே வரச் சொல்லியிருந்தான். ரம்யாவின் பெற்றோர் சென்னையில் அந்தப் பகுதியில் தங்கியிருக்கும் தகவலை ராமநாதன் காலையி லேயே சொன்னான். சாயங்காலம் போய்ப் பார்க்கலாம் என முடிவெடுத்திருந்தனர். ரம்யாவுக்காக வாதாடும் வக்கீல் என்பதால், அவர்களாகவே ராமநாதனிடம் பேசியுள்ளனர். ஏற்கெனவே அந்த வீட்டுக்கு வந்திருந்தாலும்,  ராமநாதன் குத்துமதிப்பாகத்தான் அந்த வீட்டைக் கண்டுபிடித்தான். அவர்களுக்குத் தெரிந்த யாரோ இருப்பதால் மேற்கு மாம்பலம் பகுதியில் வீடெடுத்ததாகவும் பெங்களூருவில் அவர்கள் வீடு விசாலமானது எனவும் கூடுதல் விளக்கம் கொடுத்தனர். சில நாள்கள் இருப்பதற்கான சொற்பப் பொருள்கள் மட்டும் இருந்தன. இரண்டு பிளாஸ்டிக் சேர்கள்தான். ரம்யாவின் பெற்றோர் தரையில் பாய் விரித்து உட்கார்ந்து கொண்டனர். மகள் பேரில் இருக்கும் ஒவ்வொரு புகாருக்கும் அதிர்ந்தனர். ‘‘அவகிட்ட ஒரு செத்துப்போன எறும்பைக் கொடுத்தாகூட மிதிக்க மாட்டா’’ என எதார்த்தமாக கவிதை சொன்னார் ரம்யாவின் அம்மா. டெல்லியில் அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேந்தர் சிங்கிடம் இதே உவமையைச் சொன்னதை வினோத் நினைத்துப் பார்த்தான். செத்த எறும்பு என்பது மேலும் உயர்த்திக்காட்டியது.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 17

ராமநாதனைவிட்டே அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கவைத்தான். ‘இரட்டைக் குழந்தை எல்லாம் இல்லை’ எனச் சொல்லிவிட்டார்கள். ‘‘இரட்டைக் குழந்தையாக இருந்தால் உங்கள் ரம்யா தப்பிக்க ஒரு வழி இருக்கிறது’’ என்றும் ராமநாதன் சொல்லிப் பார்த்தான். ‘‘அப்படி ஒண்ணு பொறந்திருந்து சின்ன வயசுலயே காணாமப் போயிருந்தா நல்லா இருந்திருக்குமா?’’ என அப்பாவியாகக் கேட்டார்கள்.

கண்களைச் சுற்றிக் கறுப்பு நிழல் படிந்த, பூசலான அம்மா. கொஞ்சம் குட்டையாகக் கட்டையாகத் தெரிந்தார். அப்பா ஒல்லி. வெள்ளை கோட் போட்டால் டாக்டர் வேடத்தில் நடிக்கலாம்.

வெகு நேரம் பேசியதில் ரம்யா பிறந்தது, பெங்களூரு சில்க் சிட்டி அருகே சாருலதா நர்சிங் ஹோம் என்பது தெரிந்தது. பிறந்த தேதியையும் கேட்டான். ‘‘என்ன செய்யப் போகிறீர்கள்’’ என்றார் அப்பா. ‘‘கன்ஃபர்ம் பண்ணிக்கிறோம்’’ என்று மட்டும் சொன்னான்.

ராமநாதன் தன் பெங்களூரு நிருப நண்பர் ராஜ்மோகனிடம் சொல்லி, அந்த மருத்துவமனையில் 1992, டிசம்பர் 24-ம் தேதியில் பிறந்த குழந்தைகளின் விவரங்களை வாங்கித்தர முடியுமா எனக் கேட்டான்.

ரவு 11 மணி விசாரணைகளுக்கு நல்ல பலன் இருந்தது. ரம்யா மெல்ல மெல்ல ராஜேஸ்வரிக்குக் கட்டுப்பட்டுக்கொண்டிருந்தாள். தன் வாழ்க்கை இனி இவர்கள் வகுத்தபடிதான் நடக்கும் என்ற முடிவுக்கு மாறியிருந்தாள். சர்க்கஸ் யானை, ஒரு கட்டத்தில் மூன்று காட்சிகளிலும் பேன்ட் சட்டை போட்டு, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டப் பழகிக்கொள்வதுபோல. அவர்கள் வாழச் சொல்கிற வாழ்க்கையை வாழ்ந்துவிடச் சம்மதித்தாள். கட்டை கட்டையாக நான்கு கான்ஸ்டபிளை அழைத்துப் போய் நிறுத்தி, ‘‘இன்னிக்கு நைட் இவங்க நாலு பேரும் இங்கதான் இருக்கப் போறாங்க... உண்மையை ஒப்புக்கிட்டா நல்லது. உன்னை வெளிய கொண்டாறதுக்கு நானே ஹெல்ப் பண்ணுவேன். இந்த வாரம் எங்களுக்குத் தேவை ஒரு கொலைகாரி. எங்க தலைவலி முடிஞ்சிடும். அப்புறம் நீ உள்ளே இருந்தா எங்களுக்கு என்ன? ரிலீஸ் ஆனா எங்களுக்கு என்ன?’’ ராஜேஸ்வரி சாமர்த்தியமாகப் பேசினாள்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 17

ரம்யா அந்த நான்கு பேரையும் பார்த்தாள். தயார் நிலையில் இருந்தனர்.

‘‘என்னைத் துன்புறுத்தினா உண்மை வெளிய வரும்னு நினைக்கிறீங்க... என்கிட்ட இருக்கிற உண்மையே அவ்வளவுதான் மேடம்.’’

‘‘அப்ப பொய் சொல்லு. ‘நான்தான் கொன்னேன்’னு சொல்லு.’’

‘‘இவங்களை அனுப்பிடுங்க மேடம். நீங்க சொல்றபடி கேட்கிறேன்.’’

ராஜேஸ்வரி தீர்க்கமாகப் பார்த்தாள். ‘‘நீங்க போங்கப்பா.’’ போய்விட்டார்கள். ‘‘சொல்லு.’’

‘‘நான் ஒரு வீடியோ கேம் செஞ்சேன். நாட்டுல நடக்கிற அக்கிரமங்களை ஒரு பொண்ணு தட்டிக்கேட்கிற மாதிரி. ஆனா, அந்த வீடியோவுல அவ யாரையெல்லாம் தீர்த்துக்கட்டுறாளோ... அவங்க நிஜத்திலயும் கொல்லப்பட்டாங்க.’’

‘‘குட்..?’’

‘‘அது எப்படினு எனக்குத் தெரியலை மேடம்... அதை நீங்க சொன்னீங்கன்னா நான் அப்படியே கோர்ட்ல சொல்லிடறேன்.’’

‘‘உங்க வக்கீல் வந்தா மாற மாட்டீயே?’’

‘‘சத்தியமா மாற மாட்டேன். இப்போ போலீஸை நம்பறதுதான் ஒரே வழின்னு தெரியுது.’’

ராஜேஸ்வரி யோசித்தாள்... ‘அவளுக்கே தெரியாமல் சைக்கோ கில்லர்போலக் கொன்றாள் என முடிப்பதா, கேம் என்ற பெயரில் ட்ரையல் பார்த்துவிட்டு, அவளேதான் கொன்றாள் என முடிப்பதா?’ பிறகு சொன்னாள்... ‘‘நீ இப்பச் சொன்னியே, அதை மட்டும் சொல்லு. மீதியை நாங்க செட் அப் பண்ணுவோம்.’’

ராஜேஸ்வரி நல்லதுக்காகத்தான் சொல்கிறாள் என்பதாக ரம்யா தலையசைத்தாள்.

இனி போலீஸ் எழுத வேண்டிய திரைக்கதைதான் பாக்கி. ஒரு கமிட்டி உருவாகியிருந்தது. டெல்லி, கர்நாடக போலீஸ் தரப்பில் கிடைத்திருக்கிற தகவல்களை வைத்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்... அல்லது கேஸை முடிக்க வேண்டும். ராஜேஸ்வரி இப்போதைக்கு கேஸை முடிக்க விரும்பினாள். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த மாதிரி விவகாரங்களை ஒருவழியாக முடித்துக்காட்ட வேண்டும். மினிஸ்டர், டாக்டர், பிசினஸ்மேன் தரப்புகளில் தனித்தனியாக வக்கீல் வைத்து நச்சரிக்க ஆரம்பித்திருந்தனர். ‘ரம்யாதான் கொலைகாரி... அவளுக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டும்’ என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. இப்போதைக்கு அந்தத் தலைவலி முடிவுக்கு வந்துவிடும்.

ராஜேஸ்வரிக்கு ‘அப்பாடா’ என இருந்தது. ரம்யா வழிக்கு வந்துவிட்டது நிம்மதியாக இருந்தது.

வீடு திரும்பி காம்பவுண்டுக்குள் காரை நிறுத்திவிட்டு, லிஃப்ட்டுக்காகக் காத்திருந்தபோது, யாரோ காருக்குப் பின்னால் நின்றபடி தன்னைப் பார்ப்பதுபோல உணர்ந்தாள். லேசாகத் தலையைத் திருப்பி, ஓரக்கண்ணால் பார்த்தாள். ஒரு பெண். இருட்டில் அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. காரிடார் லைட்டைத் தட்டிவிட்டுப் பார்த்தாள். அந்தப் பெண் அங்கேயே நின்றிருந்தாள். ஊன்றி கவனித்தபோது ராஜேஸ்வரிக்கு அதிர்ச்சி. போலீஸ் உதாரில், ‘‘ஏய்?’’ என்றாள். செக்யூரிட்டி ஓடிவந்து, ‘‘என்னம்மா’’ என்றார். அறுபதுக்குச் சமீபமான வயது அவருக்கு.

‘‘அங்க ஒரு பொண்ணு நிக்கிறா பாரு. அவளைப் பிடி.’’

‘‘எங்கம்மா?’’

‘‘காருக்குப் பின்னாடி.’’

செக்யூரிட்டி ஓடிப் போய்ப் பார்த்துவிட்டு, ‘‘யாரும் இல்லையேம்மா’’ என்றார்.

ராஜேஸ்வரி யோசனையுடன் கமிஷனர் ஆபீஸுக்குப் போன் போட்டு, ‘‘அங்கே ரம்யா இருக்கிறாளா?’’ என விசாரித்தாள்.

லிஃப்ட் ஏறி இரண்டாவது மாடியில் வந்து இறங்கினாள். போன் வந்தது. ‘‘இருக்கா மேடம். தூங்குறா.’’

‘‘அவகிட்ட போனைக் குடு.’’

‘‘என்ன மேடம்?’’ என்றாள் ரம்யா. ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தாள் ராஜேஸ்வரி... கார் அருகே ரம்யா நின்றுகொண்டிருந்தாள். ராஜேஸ்வரி அதிர்ந்துபோய், கமிஷனருக்கு போன் போட்டாள். ‘‘சார், என் வீட்டுக்கு ரம்யா மாதிரியே ஒருத்தி வந்திருக்கா. இவதான் கொலைகாரியா இருப்பாள்னு சந்தேகமா இருக்கு. ஒரிஜினல் ரம்யா நம்ம கஸ்டடியில இருக்கா.’’

‘‘நான் உடனே பந்தோபஸ்துக்குச் சொல்றேன். நீங்க சேஃப்டியா இருங்க...’’

‘‘சீக்கிரம் சார்.’’

கதவைச் சாத்திவிட்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள். இவ்வளவு நாளும் எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த உண்மை எலும்பு வரை உறைத்தது. 12 மணி ராத்திரியில் தெரியாத எண்ணிலிருந்து போன் அடித்தது.
‘‘நான் சுரேந்தர் சிங்... அசிஸ்டென்ட் கமிஷனர். டெல்லி.’’ நிதானமான ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொண்டார். ‘‘இப்பத்தான் சென்னை சிட்டி கமிஷனர்கிட்ட பேசினேன். நீங்கள் இப்போது இன்னொரு ரம்யாவைப் பார்த்ததாகச் சொன்னார். ரம்யாபோல இன்னொரு பெண் இருப்பது உறுதியாகிக்கொண்டு வருகிறது. நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.’’

‘‘ஓகே. சார்... தாங்க் யூ.’’

தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு ஃபிரிட்ஜைச் சாத்திவிட்டு ராஜேஸ்வரி நிமிர்ந்தபோது, எதிரே ரம்யா நின்றிருந்தாள்.

‘‘ஏய்... யார் நீ? எப்படி உள்ளே வந்தே?’’

‘‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’’ என்றாள் அவள்.

(தொடரும்...)