அலசல்
சமூகம்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 19

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 19

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 19

திகார மையம் அடுத்தவர் படும் துன்பத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. ‘டூப்ளிகேட் ரம்யா கிடைக்கும்வரை இவள் உள்ளே இருக்கட்டும்’ என சிம்பிளாக முடிவெடுத்தனர். சட்டம், காவல், அரசு எல்லாமே ஒரே நேர்க்கோட்டில் இருந்தன. ரம்யாவை விடுவிப்பதில் என்ன சிக்கல் என யாருமே கேட்கவில்லை. சட்டம்-ஒழுங்கில் சட்டம் மட்டும்தான் இருந்தது... ஒழுங்கு இல்லை. சட்டப்படி அவள் குற்றவாளி என்பதுதான் அதில் இருந்த ஒரே லாஜிக். தர்க்கங்களுக்கு நியாயங்கள் தேவைப் படுவதில்லை... அது தர்க்க நியாயம் என விளிக்கப்பட்டாலும்கூட!

ரம்யா சிறையில் இருந்தபோதும் அதே பாணியில் கொலைகள் நடப்பதைக் காரணம் காட்டி அவளை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி விண்ணப்பித்தான் ராமநாதன். ‘‘ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பெண்களுக்கு இந்தக் கொலையில் சம்பந்தம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வழக்கின் போக்கு இப்படி இருப்பதால், அந்த இன்னொரு பெண்ணையும் கைது செய்தபிறகே உண்மையை உணர முடியும்’’ என்று தமிழக டி.ஜி.பி சண்முகநாதன் தரப்பில் பதில் சொல்லப்பட்டது. ரம்யாவை மேலும் 15 நாள்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சுரேந்தர் சிங், தான் விசாரித்து அறிந்த அனைத்துத் தகவல்களையும் கோர்ட்டில் சொன்னார். ‘ஆதாரங்களையும் அந்தப் பெண் ணையும் நீதியின்முன் நிறுத்துவது மட்டும்தான் ஒரே விடையாக இருக்க முடியும்’ என்று நீதிபதி எளிமையாகச் சொன்னார்.

கிளம்புவதற்குமுன் சுரேந்தர் சிங்கிடம் சில விஷயங்களை அவசரமாகப் பகிர்ந்து கொண்டான் வினோத். அவர் போலீஸ் அதிகாரிபோல மிடுக்காகவே பேசினாலும், ரம்யா விஷயத்தில் அவருக்கு இருக்கும் ‘மென் திருப்பம்’ காரணமாகக் காதுகொடுத்துக் கேட்டார். அதனால், வினோத் சில நிமிடங்கள் சுரேந்தர் சிங்கிடம் தனியாகப் பேச முடிந்தது. ‘‘எப்படி யாவது காப்பாற்றிவிடு. அரசாங்கத்துக்கு அவளைக் காப்பாற்றுவதற்கான அவசியம் கொஞ்சமும் இல்லை. அவளுக்கு ஆதரவாக ஒருவரும் கையெழுத்து போடமாட்டார்கள். எதிர்த்தும் செயல்படமாட்டார்கள். ஆனால், வெளியே கொண்டுவருவதற்கு உன் சொந்த முயற்சி வேண்டும்’’ என்றார்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 19

வினோத் ராமநாதனைப் பார்த்தான். இந்த கேஸ் எங்கெங்கோ போய்க்கொண்டிருப்பது தலைசுற்றியது. ‘‘நாமும் அரசாங்கத்தின் பக்கம் போய்விடுவதுதான் நல்லது’’ என்றான் ராமநாதன்.

ஆழ்ந்த வருத்தமும் மௌனமும் வினோத்தை ஒரு சேர அழுத்தின. ரம்யாவும், போலீஸ் தேடும் பெண்ணும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் பல விஷயங்கள் தீர்ந்துவிடும். கோர்ட்டில் மஜூம்தார் சொன்ன தலைமுடி விவகாரம். ஒரே பெண்ணின் இரண்டு தலைமுடிகளில் ஒன்றில் மட்டும் ஆல்கஹால் இருந்தது எதனால் என்பதற்கு அப்போது விடை கிடைத்துவிடும்; தொடர் கொலைகளுக்கும் விடை கிடைத்துவிடும். ரம்யாவை வெளியே கொண்டுவர முடியும்.

வினோத்துக்கு இன்னும் ஒரு வாய்ப்புதான் இருந்தது. அந்த இன்னொருவளைக் கண்டு பிடிப்பது. 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவள்.

‘‘ராமநாதன்... அந்த பெங்களூரு ரிப்போர்ட்டரைப் பிடி.’’

‘‘வினோத்... அந்தப் பையன் தொழிலுக்குப் புதுசு. ஏதாவது கம்யூனிட்டி சர்ட்டிபிகேட், டிரைவிங் லைலென்ஸ் இதெல்லாம் வாங்கித்தர முடியும்... அவ்ளோதான்.’’

‘‘அவ்ளோதான் எனக்கு வேணும். நாளைக்கே நாம பெங்களூரு கிளம்புறோம். அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை ரம்யாவைப் பார்க்க அனுமதி வாங்கு.’’

‘‘காலையில் போய்ப் பார்க்கலாம். சுரேந்தர் சிங் நமக்காக அவருடைய இன்ஃபுளூயன்ஸ்ல டைம் வாங்கித் தந்திருக்கிறார்’’ ராமநாதன் நம்பிக்கையுடன் சொன்னான்.

ரம்யா மேலும் வெளிறிப்போயிருந்தாள். அவளை அடைத்து வைத்திருந்த இடத்தில் சந்தித்துப் பேச சிறிய ஏற்பாடு போல இருந்தது. அங்குமிங்கும் போலீஸ் நடமாட்டமும் இருந்தது. ரம்யா முழு நம்பிக்கையையும் தொலைத்துவிட்டு, முதலையின் வாயில் சிக்கிய முயல்போல அலட்டிக்கொள்ளாமல் இருந்தாள். மரணத்துக்குத் தயாராகிவிட்ட ஓர் உயிரினம்போல எந்தப் போராட்டத்துக்கும் இடம் கொடுக்காமல் இருந்தாள்.

‘‘என்னோட நிஜமான பேரன்ட்ஸ் யாரு? என் கூட பொறந்தவ யாரு? அவ ஏன் இப்படியெல்லாம் பண்றா? அவளுக்கு என்னைத் தெரியுமா?’’ ரம்யா வரிசையாகக் கேள்விகள் கேட்டாள்.

‘‘நீ உன் மனசுல யாரையெல்லாம் விரோதியா நினைச்சியோ, அவங்களைத்தான் அவ கொன்னிருக்கா. உன்னைத் தெரியறது மட்டுமல்ல... உன் மனசையும் தெரிஞ்சு வெச்சிருக்கா.’’ வினோத் விளக்கமாகச் சொன்னான்.

‘‘என்னை ஜெயில்ல தள்ளிக் கொல்றதுதான் அவ நோக்கமா? இவ்ளோ நாள் எங்க இருந்தா? ஏன் இப்படிப் பண்றா? எனக்குப் புரியலை வினோத்...’’ அழ ஆரம்பித்தாள்.

‘‘ஒரே வாரத்தில நான் அவளைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன். நீ நம்பிக்கையா இரு.’’

வினோத்தின் கைகளை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள். ‘கண்டுபிடிச்சுடுவியா’ என்ற கேள்வியை அவள் விழிகளாலும் கேட்கவில்லை. ஆனால், அது வினோத்துக்குக் கேட்டது.

ராமநாதனின் கார் பெங்களூரு சாலைக்கு நன்றாகவே பழகியிருந்தது. ஏற்கெனவே தங்கியிருந்த அதே வீட்டில் தங்கி, காலையில் ராஜ்மோகனை அழைத்துக்கொண்டு சுற்றினர். காலை 10 மணிக்கு அரசு அலுவலகங்கள் தூக்கம் முறிக்கிற நேரத்தில் அங்கே தயாராக நின்றனர். ராஜ்மோகன் மனம்தளராத பையனாக இருந்தான். எதைக் கேட்டாலும், ‘‘முடிச்சுடலாம் சார்’’ என்றான். பெங்களூரில் ரம்யா பிறந்த தேதியில் பிறப்புச் சான்றிதழுக்காக சாருலதா மருத்துவமனையிலிருந்து போன விண்ணப்பங்கள் மூன்று. அதில் ஒன்று, இறந்து பிறந்த குழந்தையின் இறப்புச் சான்றிதழாகப் பதிவாகியிருந்தது. மற்ற இரண்டும் பெண் குழந்தைகள். ஒன்றுக்கு ரம்யாவின் பெற்றோர் பெயர் பதிவாகியிருந்தது. இன்னொரு குழந்தையின் பெற்றோர்... சிவராஜ் - பானுமதி. முகவரி... ஹாசன் மாவட்டத்தில் ஏதோவொரு ஹல்லி. வினோத்துக்கு ஒவ்வொரு அடியும் சிலிர்ப்பாக இருந்தது. இன்னொரு ரம்யாவை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

ராமநாதன், ‘‘ஹாசன் போயிடலாமா?’’ என்றான், வினோத்தின் மனநிலையை உணர்ந்து.

பெங்களூரிலிருந்து ஹாசனுக்கு நிறைய பஸ்கள் இருந்தன. காரை அந்த வீட்டில் போட்டுவிட்டு இரவே பஸ் பிடித்தனர். ஐந்து மணி நேரப் பயணத்தில் காலையில் அங்கே போய்ச்சேர முடிந்தது. முகவரி தேடி அலைந்து... வெயிலில் திரிந்து... அந்த ஹல்லியில் அந்த எண்ணுள்ள விலாசத்தில் நின்றபோது, அங்கே வீட்டுக்குப் பதில் ஒரு துணிக்கடை இருந்தது. அங்கிருந்த வீடு... அதில் இருந்தவர்கள் பற்றிய விவரம் எதுவும் துணிக்கடையில் இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. சற்றுத் தள்ளி, சில வீடுகள் இருந்தன. பழைய வீடாகத் தோற்றமளிக்கிற வீடுகளைக் கவனித்து சிவராஜ், பானுமதி பற்றி விசாரித்தான். இவ்வளவு தூரம் வந்துவிட்டு விடை தெரியாமல் போய்விடக் கூடாது என்ற பதற்றம் வினோத்திடம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

நான்காவது வீட்டில் ஒரு ஐம்பது வயசு அம்மா, மறுபடி மறுபடி கேட்டபின்பு, திடீரென நினைவு வந்தவராக, ‘‘அவங்களா?’’ என்றார். வினோத்துக்கு அவர், கூகுள் மேப்பைவிட நம்பிக்கையானவராகத் தெரிந்தார். ‘‘அவங்க எங்க இருக்காங்க இப்ப?’’ காலில் விழாத குறையாகக் கேட்டான் வினோத்.

இந்த வீட்டை விற்றுவிட்டு, பக்கத்தில் இன்னொரு கிராமத்தில் குடியேறிவிட்டதைச் சொன்னார். முகவரியை அவரே சொல்ல அவகாசம் தந்து காத்திருந்தான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 19

‘‘ஊர்ப் பெயர்தான் தெரியும்.’’

அது இன்னொரு ஹல்லி. ‘‘கொஞ்சம் தண்ணி கொடுங்க’’ என ராமநாதன் சிலேடையாகக் கேட்டுத் தண்ணீர் வாங்கிக்குடித்துவிட்டு, ‘‘எப்படிப் போறது?’’ என்றான் வினோத்திடம்.

‘‘ஏதாவது பஸ் இருக்கும்... கேட்டுப் போயிடலாம்.’’

‘‘மனசாட்சியே இல்லையாடா?’’

‘‘இல்லை’’ என்றான் வினோத்.

அந்த ஹல்லி, அவர்கள் நினைத்ததுபோல கிராமம் அல்ல. சிறு நகரம். போய்ச் சேர்ந்தபோது மாலை 4 மணி ஆகிவிட்டது. பெயரை மட்டும் சொன்னால் யாருக்குமே தெரியவில்லை. ‘‘அட்ரஸ்?’’ என்றனர். நல்லவேளையாக தங்குவதற்கு ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கேயே இனிப்பாக சாம்பார் சாதம் சாப்பிட்டுவிட்டு, சிவராஜ் பானுமதி பற்றிக் கேட்டான். ‘சிவராஜ்?’ எனத் தலையைச் சொறிந்தபடி வானத்தைப் பார்த்தான் ரூம் பாய். ‘‘விசாரிச்சுச் சொல்றேன்’’ என்றான்.

எட்டு மணிக்கே நன்றாக இருட்டி விட்டது. சிகரெட் வாங்க, கீழே கடைக்கு வந்தபோது, அந்த ரூம் பாய் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. வினோத்தைக் கடைப்பக்கம் பார்த்து இருவரும் நெருங்கி வந்தனர். சற்றே வயசான ஆள். 65 வயசு இருக்கலாம். ‘‘சிவராஜ் வேணுமா?’’ என்றார்.

‘‘ஆமாம்’’ என்றான் வினோத்.

‘‘எனக்குத் தெரியும். காலையில் கூட்டி வருகிறேன்’’ என்பதைக் கன்னடத்திலும் சைகையிலும் சொன்னான். சொல்ல வந்தது நன்றாகவே புரிந்தது.

‘‘இப்போதே பார்க்கலாமா?’’ என்றான் வினோத்.

அவன் கடிகாரத்தைக் காட்டி உதட்டைப் பிதுக்கினான். ‘சரி, காலையில் கூட்டி வாருங்கள்’ என்று சைகையால் சொல்லிவிட்டு, அறைக்கு வந்தான். ராமநாதன் வழக்கம்போல டி.வி ரிமோட்டை மேலும் கீழும் அழுத்தி அவனுக்குப் பிடித்த ஒரு நிகழ்ச்சியைக் கண்டடைய முயன்றுகொண்டிருந்தான். ஒரு செய்தி சேனலில் ‘இந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசு’ என்ற அறிவிப்புடன் ரம்யாவின் படத்தைப் போட்டுச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

(தொடரும்...)