அலசல்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 20

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 20
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 20

தமிழ்மகன்

ந்தக் கட்டுரையைக் கவனமாகப் படித்தான் கவின். ‘காலத்தில் விழுந்த ஓட்டை’ என்ற வாக்கியம் அவனை அதிகம் கலவரப்படுத்தியது. ‘காலத்தில் ஓட்டை விழுந்தால் என்ன ஆகும்? எப்படி விழும்?’ என ஹேஷ்யமான பல கட்டுரைகளை அவன் படித்திருக்கிறான். அவை எல்லாமே இப்போது நினைவுக்கு வந்தன. பேராசிரியர் சுசீந்திரன் பல இடங்களில் ‘வார்ம் ஹோல்’ பற்றியும் எழுதியிருந்தார். சுருக்கமாகச் சொல்வதானால், இவை எல்லாமே கொஞ்சம் டைம் மெஷினுக்கான சமாச்சாரங்கள். கால இயந்திரம் பற்றி யோசித்த பலரும் ‘கால ஓட்டை’ பற்றிச் சொல்லிவிட்டார்கள். டைம் மெஷின் என்றதும், அது உயிரினங்கள் வாழும் இன்னொரு கிரகத்துக்கான பயணத்துக்கான ஆசையில்தான் உருவாக்கப்படுகிறது என்பதும் எல்லோருக்குமே குத்துமதிப்பாகத் தெரியும். சுசீந்திரன் இவ்வளவு எச்சரிக்கை செய்திருப்பதன் குறிக்கோள் என்னவாக இருக்கும் என்பது சுரீரென கவினுக்கு உறைத்தது.

செர்ன் அமைப்பில் அவனால் தட்ட முடிந்த கதவுகளை எல்லாம் தட்டினான். சுசீந்திரனின் எச்சரிக்கையைச் சொன்னான். பலர் ஏற்றுக் கொண்டார்கள்... நம்பினார்கள். ஆனால், பேராசிரியர் சொன்னதைச் செயல்படுத்த யாரும் தயாராக இல்லை. வேற்றுக் கிரகங்கள் சம்பந்தமான எதுவுமே நூறு சதவிகிதம் நிரூபிக்க இயலாதவை. சென்னையில் இரட்டைப் பிறவி ரம்யா செய்த கொலைகளைப் பற்றிச் சொன்னால் அவர்களுக்குப் பெரிய ஈர்ப்பாக இல்லை. தற்செயலாக நடந்த சம்பவங்களை இணைத்து எழுதப்பட்ட கதையோ என்று சந்தேகித்தனர். அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, ‘‘இதைப்பத்தி அப்புறம் பேசலாம் கவின். டச்ல இரு’’ என்கிற ரீதியில் விலகிச் சென்றனர்.

ரம்யா விவகாரம் அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ நடந்திருந்தால் உலகத்தின் கவனத்தை எட்டியிருக்கும். இந்தியாவில் நிகழ்ந்ததால் உலக விஞ்ஞானிகள் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது கவினை எரிச்சலில் ஆழ்த்தியது.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 20

சென்னையிலிருந்து விவரிக்கப்பட்ட இரண்டு ரம்யா விவகாரம், ஒட்டுமொத்த உலகத்துக்கான அச்சுறுத்தல். கவின் உடனே இந்தியாவுக்கு விரைந்தது இதற்காகத்தான். முதலில் தீபாவைப் பார்க்க வேண்டும். அவள்தான் இந்த  விஷயத்தை ஓரளவுக்குப் புரிந்துகொண்டவள். ஐ.ஐ.டி-யுடன் அவளுக்கு இருக்கும் தொடர்பு கொஞ்சம் பயனளிக்கும் என நினைத்தான். அதன்பிறகு ரம்யாவைச் சந்திக்க வேண்டும். முடிந்தால் அந்த இன்னொரு ரம்யாவை!

காட்டின் நடுவே ரம்யமாக இருந்தது டெல்லி ஐ.ஐ.டி.பசுமையும் பிரமாண்டமும் போட்டி போட்டன. இந்தியாவின் பெரும்பகுதி ஜனத்தொகை இதையெல்லாம் கனவிலும் பார்த்திருக்காது. இதன் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிராத மக்கள், அந்த காம்பவுண்டுக்கு வெளியே சற்றுதூரத்திலேயே இருந்தனர். இரு பக்கங்களிலும் புல்வயல்கள் சூழ்ந்த அழகான கிரவுண்டுகள். அவற்றின் நடுவே சாலை யில் காரைச் செலுத்தி, பார்ட்டிகல் பிசிக்ஸ் டிபார்ட்மென்ட் வாசலில் நிறுத்தினாள் தீபா. பார்டிகல் பிசிக்ஸ், பார்டிகல் ஆக்ஸிலரேஷன் இன் அஸ்ட்ரோ பிசிக்ஸ் என டிபார்ட்மென்ட் வாரியாகச் சில பேராசிரியர்களை அறிமுகப்படுத்தினாள்.

செர்னைவிடப் பரவாயில்லை. இவர் களுக்குச் சுசீந்திரனின் பிடிவாதம் தெரியும். அவரது ஆராய்ச்சியைத் தெரியும். ‘‘சுசீந்திரன் செர்ன் சீஃப்பாக இருந்திருக்க வேண்டியவர்’’ என்றார் ராகுல். பார்டிகல் பிசிக்ஸ் பேராசிரியர். சுசீந்திரனின் வயதுதான் இருக்கும். வெள்ளையாக இருந்தார். மெல்லி சாகவும், முன்பக்கமாக வளைந்தும் இருந்தார்.

நேரடியாக, ‘‘நான் உங்களுக்கு என்ன பண்ணணும்?’’ என்றார்.

நடந்தவற்றைச் சுருக்கமாகவும் விரைவாகவும் நேர்த்தியாகவும் கவின் சொன்னான். ஒரே ஓர் இடத்தில் மட்டும் தீபா குறுக்கிட்டு விளக்கினாள்.

‘‘எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்தான்’’ என்றார்.

‘‘அப்படியானால் நீங்கள் நம்புகிறீர்கள்தானே?’’

எதிரே இருந்த தேக்குமர டேபிளைக் காட்டி, ‘‘இதோ இந்த டேபிள் எவ்வளவு பளபளப்பா மழமழன்னு இருக்கு... ஆனா, இதில சில நானோ மடிப்புகள் இருக்கு. எலெக்ட்ரானிக் மைக்ராஸ் கோப்ல பார்த்தா பிரமாண்டமா தெரியும்’’ என்றார் ராகுல்.

‘‘யெஸ்’’ என்றாள் தீபா.

‘‘காலத்தின் சமதளத்திலும் இப்படிச் சில நுண்துளைகள் இருக்கின்றன. நம்மைப் போன்ற பெரிய உருவங்கள் அவற்றில் நுழைவதற்கான சாத்தியங்கள் இல்லை. சில பார்ட்டிக்கல்கள் நுழைய முடியும். கடவுள் துகள் போன்ற மிக நுண்ணிய துகள்கள். அதைத்தான் சுசீந்திரன் எச்சரித்தார்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 20

‘‘ஆனா, கடவுள் துகளின் வாழ்நாள் சில மைக்ரோ செகண்டுகள்தான்.’’ கவின் தகவல்போல தன் சந்தேகத்தைச் சொன்னான்.

‘‘பூமியில் அதன் வாழ்நாள் அவ்வளவுதான். ஆனால், வார்ம் ஹோலுக்குள் நுழைந்துவிட்டால் அந்தத் துகளின் வயது ஏறிவிடும். டைம் மெஷினின் சௌகர்யமே காலத்துடன் விளையாடுவதுதானே?’’

‘‘காலம் தனித்துவமானது அல்லவா? அதாவது, தனிமுதலானதுதானே?’’

‘‘தனித்துவமானதுதான்... ஆனால், காலம் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு வேகத்தில் ஓடக்கூடியது. அதன் உச்சபட்ச வேகத்துக்கு எல்லை உண்டு. அது, ஒளியின் வேகத்துடன் சம்பந்தப்பட்டது. நொடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகம்... ஆனால், இடையிடையே அந்த வேகத்தில் மாறுபாடு உண்டு. காலத்தின் குறுக்கே ஹிக்ஸ் போசானும் ஓடுகிறது.’’

‘‘ஓடி?’’

‘‘யூகிப்பது கடினம்... நீங்கள் சொல்கிற ரம்யா ஓர் உதாரணம். பிரபஞ்சத்தில் அந்தத் துகள் ஏற்படுத்தும் சலனம் என்னவாகவும் இருக்கலாம். பூமியில் உருவான பிரதிபலிப்பு இது... ரம்யா.’’

‘‘இதை முடிந்த அளவு அறிவியல் தரப்பில் சொல்ல வேண்டுமே?’’

‘‘நான் சொன்னால் கேட்பார்களா... சுசீந்திரன் மாதிரி நினைப்பார்கள்.’’

‘‘என்ன செய்யலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள்.’’ கவின் பந்தை அவர் பக்கம் போட்டான்.

அதை அவர் ரசித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘‘அறிவியல் கழகம் மூலம் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறேன்... என் பெயரைப் பார்த்துவிட்டு அவரது அலுவலகத்தில் அலட்சியம் செய்யாமல் இருக்க வேண்டும்.’’ புரிகிறதா எனக் கண்ணாடியை உயர்த்திப் பார்த்துவிட்டுச் சிரித்தார்.

காலையில் முதல் வேலையாக அந்தப் பெரியவரை வரவழைத்து, அவருடன் சிவராஜ் - பானுமதி வீட்டை அடைந்தபோது, வீடு பூட்டியிருந்தது. அழைத்துவந்த பெரியவர், ‘‘ராத்திரிகூட நீங்க தேடி வந்திருக்கிறதைச் சொன்னேனே?’’ என்றார்.

‘‘யாரோ, எதுக்கு வந்தாங்களோன்னு பயந்துபோய் எங்காவது மறைஞ்சுட்டாங்களா?’’ என்றான் ராமநாதன்.

‘‘நைட்ல வந்து அவங்களைப் பயமுறுத்திட்டீங்களா?’’ என வினோத்தும் கேட்டான்.

‘‘சந்தோஷமாத்தான் பேசினான். எதுக்குன்னு கேட்டான். மெட்ராஸ்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னேன். இப்பவே போய் ஹோட்டல்ல பார்க்க லாமான்னு ஆசையாத்தான் கேட்டான்.’’

‘‘எங்க போயிட்டாங்கன்னு கொஞ்சம் பக்கத்துல விசாரிச்சு சொல்லுப்பா.’’

பெரியவர் பக்கத்து வீடுகளில் விசாரித்துவிட்டு வந்தார். வீடு மிகவும் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருந்தது. வினோத், பெரியவரிடம், ‘‘சிவராஜுக்கு மொத்தம் எத்தனை குழந்தைகள்’’ எனக் கேட்டான்.

‘‘ஒரே ஒரு பொண்ணு.’’

அப்பாடா... அதில் மாற்றம் இல்லை.

‘‘என்ன வயசு இருக்கும்?’’

பெரியவர் கொஞ்சம் யோசித்து, தூரத்தில் போன ஒரு பெண்ணைக் காட்டி, ‘‘இந்த பொண்ணு போல இருக்கும்’’ என்றார்.

பெண்ணைத்தான் விசாரிக்க வந்தோம் எனத் தெரிந்தால் ஏதாவது விபரீதமாக எடுத்துக் கொள்ளப்போகிறார்கள் எனத் தயக்கமாக இருந்தது.

‘‘அந்தப் பொண்ணு பேரு?’’

பெரியவர் சாந்தமாகவும் கூர்மையாகவும் பார்த்தார். ‘‘லக்ஷ்மிபிரியா.’’ என்றார் சற்றே விரோதமாக.

வினோத் உடனடியாகத் தன் செல்போனில் ரம்யாவின் படத்தைக் காட்டி, ‘‘இந்தப் பெண்ணைத் தெரிகிறதா?’’ என்றார். அவர் செல்போனைக் கண்ணுக்கு அருகிலும் விலக்கியும் வெவ்வேறுவிதமாக வைத்து, ‘‘யாரு இது?’’ என்றார்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 20

‘‘நல்லா பாருங்க’’ படத்தை என்லார்ஜ் செய்து முகத்தைக் காண்பித்தான். அவர் முகத்தில் மெல்ல ஓர் ஆச்சர்யம் மலர்ந்தது... ‘‘லக்ஷ்மியா?’’ என்றார்.

வினோத்துக்கு யுரேகா நிலைமைதான். அம்மணமாக ஓடுவதற்கும் சித்தமாக இருந்தான். இன்னொரு ரம்யா இருக்கிறாள்.

‘‘இது லக்ஷ்மி இல்லை. அவளுடன் பிறந்தவள்... இரட்டைப் பிறவி... அதனால்தான் தேடி வந்தோம். லக்ஷ்மிபிரியா இப்ப எங்கே இருக்காங்க தெரியுமா?’’ என்றான்.

பெரியவர் அதிர்ச்சியிலிருந்து விலகாமல், வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மேலும் விளக்கும்பொருட்டு, ‘‘இரண்டு பேரும் ஒன்றாகப் பிறந்தவர்கள்... சின்ன வயசுலயே காணாமப் போயிட்டா... அதான் தேடி வந்தோம்.’’ அவர்களுக்குப் போதுமான ஒரு கதையைச் சொன்னான். அவருக்கும் அந்தத் தேடலில் நிஜமாகவே ஓர் ஆர்வம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பெரியவர் மேலும் சிலரிடம் விசாரித்தார்.

காலையில் பொழுது விடியும்போதே வீடு பூட்டித்தான் இருந்தது என்றனர். இரவு பத்து மணிக்கு பெரியவர் வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். காலையில் வீடு பூட்டியிருக்கிறது. இரவோடு இரவாக யார் வந்து அழைத்துச் சென்றார்கள்... அல்லது இவர்களாக எங்கே போய்விட்டார்கள்?

பெரியவர், ‘‘நீங்கள் அறையில் இருங்கள்... நான் விசாரித்துவிட்டு வந்து சொல்கிறேன்’’ என்றார்.

மறுபடி ஹோட்டல் அறைக்கே வந்து, அடுத்து என்ன செய்வது என முடிவெடுக்க முடியாமல் அமர்ந்திருந்தார்கள். கைக்கு அருகில் ரகசியங்கள் நழுவிக்கொண்டிருந்தன. இரவுக்குள் என்ன நடந்திருக்கும். டி.வி-யில் இரவு கொடுத்த அறிவிப்பு காரணமாக இருக்குமா என யோசித்தான். பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி விட்டார்களா?

வினோத்தின் போன் அடித்தது. தீபா. ‘‘ப்ராப்ளம் சால்வ்ட். இன்னொரு ரம்யாவைக் கண்டு பிடிச்சுட்டாங்களாம்... இப்பத்தான் சுரேந்தர் சிங் சொன்னார். பேரு லக்ஷ்மிபிரியாவாம்!’’ என்றாள்.

(தொடரும்...)