மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 21

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 21
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 21

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 21

ஹாசனிலிருந்து வினோத்தும் ராமநாதனும் சென்னை வந்து சேர்வதற்குள் டெல்லியிலிருந்த கவின் வந்துவிட்டார். எதிர்பாராத ஆச்சர்யமாக தீபாவும் வந்திருந்தாள். சோழா ஹோட்டலில் தங்கியிருப்பதாக தீபா வாட்ஸ்அப்பில் தகவல் சொல்லியிருந்தாள். வீட்டுக்குக்கூட போகாமல் காரை விரட்டி, சோழாவில் வந்து நிறுத்தினான் ராமநாதன். ரிசப்ஷன் நோக்கி நடந்தபோது, ‘‘அங்க பார் சோழ நிலா’’ என்றான். கிழக்கில் முழு நிலா பிரகாசமாகத் தெரிந்தது. ‘‘சோழ... ஓ! சோழா ஹோட்டல் நிலான்னு சொல்லு. நான் மு.மேத்தா நாவல்னு நினைச்சுட்டேன்.’’ வினோத்துக்கு அப்படியே பொன்னியின் செல்வனும் மனதில் வந்துபோனது. ‘கிராஃபிக்ஸ் கேம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ’ என கண்ணாடிக் கதவை அணுகுகிறவரை வருந்தினான். ஏர்லைன்ஸ் மகாராஜா பாணியில் ஒருவர் சல்யூட் வைத்த வேகத்தில் கவனம் மாறிவிட்டது.

ரிசப்ஷனில் காத்திருந்தனர். தீபா வந்த சிறிது நேரத்தில் கவினும் வந்தான். ‘‘ஒரே ஹோட்டல்... ஆனா தனித்தனி ரூம்’’ எனக் கூச்சமில்லாமல் சொன்னபடி சிரித்தாள் தீபா. அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது எனக் கொஞ்சம் திக்குமுக்காடிப் போனான் வினோத். ‘‘ஓ!’’ என்றான்.

‘‘ரம்யாவோட சிஸ்டர் லக்ஷ்மிபிரியாவைப் பிடிச்சுட்டதா சொன்னாங்க. உடனே புறப்பட்டு வந்துட்டேன். எப்படியாவது அவளைப் பார்க்கணும்... என்னென்ன வேலையெல்லாம் பண்ணிட்டா.’’

‘‘அவ பண்ணலை. அதை நாமப் புரிஞ்சுக்கணும்.’’ கவின் அவ்வளவாக சிரிக்கிற ஆளாகத் தெரியவில்லை.

‘‘ஸாரி. அவ மூலமா நடந்திருக்கு. சட்டென புரிஞ்சுக்கிறதுக் காகத்தான் சொன்னேன்.’’

‘‘இதெல்லாம் எப்படி நடந்திருக்க சாத்தியம்னு விளக்க முடியுமா?’’ என்றான் ராமநாதன். ‘‘கோர்ட்ல நான் இதைப் புரியற மாதிரி சொல்லியாகணும்.’’

வினோத், ராமநாதனை இருவருக்கும் அறிமுகப்படுத்தினான்.

‘‘இங்க நியூட்ரினோ ஆய்வுக்கான வேலை நடக்குது இல்லையா? அதுபோல யூரோப்ல செர்ன் அமைப்பு மூலமா ஓர் ஆராய்ச்சி நடந்துக்கிட்டிருக்கு. ‘அணுதான் உலகிலேயே சின்ன பார்ட்டிக்கிள்’னு நினைச்சுக்கிட்டிருந்தது போய், அதுக்குள்ள நியூட்ரான், புரோட்டான், எலெக்ட்ரான்னு மின் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடிச்சாங்க. அப்புறம் இன்னும்கூட சின்னச் சின்னத் துகள்கள் இருக்கிறதைக் கண்டுபிடிச்சாங்க. மியூயான், பாஸிட்ரான், நியூட்ரினோ, ஃபோட்டான் இப்படி பல சின்னஞ்சிறு பார்ட்டிக்கிள்ஸ் இருக்கறதைச் சொன்னாங்க. மொத்த பிரபஞ்சமும் 12 அடிப்படைத் துகள்களால் ஆனதுன்னு போன நூற்றாண்டிலேயே முடிவாயிடுச்சு. 12-வது துகள்தான் கொஞ்சம் இழுத்துக்கிட்டு இருந்தது. அதுதான் செர்ன்ல கண்டுபிடிக்கப்பட்ட கடவுள் துகள்...’’

‘‘சார், நான் இதையெல்லாம் அப்படியே கோர்ட்ல சொல்லணுமா?’’ பரிதாபமாகக் கேட்டான் ராமநாதன்.

‘‘இல்லை, என்னை விசாரிக்கணும்னு சொல்லுங்க. நான் சொல்றேன்’’ என்றார் கவின்.

‘‘கவின்... யோசிச்சுப்பாரு. இப்படிச் சொன்னா போதுமா?’’ என்றாள் தீபா.

‘‘அந்த ‘செர்ன்’ கொல்லாய்டர்ல ஹை ஸ்பீட்ல புரோட்டானை மோதவிட்டு சிதறவெச்சாங்க... பிரபஞ்சம் தோன்றினபோது நடந்த பெருவெடிப்பை உருவாக்கினாங்க. அந்த லெவல்ல இன்னொரு பிரபஞ்சம் உருவாக சான்ஸ் இல்ல. ஆனா, இந்தப் பிரபஞ்ச செட் அப்ல அது ஏதோ மாற்றத்தை ஏற்படுத்திடுச்சு.’’

‘‘அது ஏன் ரம்யாவுக்கு நடக்கணும்?’’

‘‘கேயாஸ் தியரி மாதிரிதான். எங்கயோ ஒரு பட்டாம்பூச்சி சிறகடிச்சா, இன்னொரு இடத்தில சுனாமி வரும்னு சொல்ற மாதிரி... செர்ன்ல நடந்த ஆராய்ச்சி ரம்யாகிட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு.’’

‘‘என்ன கவின்... ரம்யாகிட்டயா... லக்ஷ்மிபிரியா கிட்டயா?’’

‘‘அவங்க ரெட்டைப் பிறவி. அதைக் கவனிச்சியா? இவளோட உடம்புல நடக்கிற மாற்றம், இன்னோர் இடத்தில் அவளுடைய சகோதரிகிட்ட பாதிப்பை ஏற்படுத்துது.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 21

‘‘குவாண்டம் டெலிபதி மாதிரியா?’’ என்றாள் தீபா.

வினோத்தும் ராமநாதனும் அவர்கள் இருவரும் பேசுவதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து தோற்றனர். பிறகு ‘அவர்களே விவாதம் செய்து ஒரு முடிவுக்கு வரட்டும்’ என்பதுபோலக் காத்திருந்தனர்.

கவின் கண்களை மூடி ஆழ்ந்து யோசித்துவிட்டு, ‘‘நோ...’’ என்றான் உறுதிபட. ‘‘குவாண்டம் என்டாங்கல் மென்ட்னு சொல்லலாம்.’’

‘‘ம்...’’
‘‘குவாண்டம் இணைத் துகள்கள் எவ்வளவு தூரத்தில விலகியிருந்தாலும், ஒரு துகள்ல ஏற்படுற மாற்றம் இன்னொரு துகளைப் பாதிக்கும்.’’

‘‘சரி.’’

‘‘இங்க ரம்யா ஒருத்தரை வெறுத்தா, இன்னொரு இடத்தில் அந்த இணை பாதிக்கப்பட்டு, உயிர் வெறுக்கப்பட்ட ஆளைத் தீர்த்துக்கட்டுது.’’

‘‘இதை மட்டும் கோர்ட்ல புரிஞ்சுக்கிட்டு சரியா தீர்ப்பு சொல்லிட்டாங்கன்னா மறுபடி மாதம் மும்மாரி பொழிய ஆரம்பிச்சுடும் சார்’’ என்றான் வினோத்.

தீபா சிரித்தாள். வினோத்தும் எதற்கும் இருக்கட்டும் எனச் சிரித்தான். கவின் சிரிக்கவில்லை.

‘‘நாளைக்கு அந்தப் பெண்ணை கோர்ட்ல புரொட்யூஸ் பண்றாங்க. காலையில ஹைகோர்ட்டுக்கு வந்துடுங்க. ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்.’’ ராமநாதன் நினைவுபடுத்தினான்.

‘‘இல்லப்பா! ரெண்டையும் பார்க்கணும்’’ என அவனைத் திருத்தினான் வினோத்.

கோர்ட்.

9.30 மணி சுமாருக்கு தீபா, வினோத், கவின், ராமநாதன் அனைவருமே வந்து அந்தப் பெண்ணைப் பார்க்கக் காத்திருந்தனர்.

போலீஸ் ஜீப்பிலிருந்து அந்தப் பெண்ணை இறக்கி அழைத்துவந்தனர். படு சாதாரணமான கிராமத்துப் பெண். ரம்யாவுக்கு டல் மேக்கப் போட்டு, சாதா புடவை ஒன்றைச் சுற்றிவிட்டால் எப்படியிருக்கும்... அப்படியிருந்தாள். வெயிலேறிய தோல். ரம்யாவின் சரும நிறத்தைச் சற்றே கருக்கி, வறட்சியாக்கியது போல இருந்தது. அவள் பேசிய மொழியும் கிராமத்துக் கன்னடம். ஆங்கிலம் பேசத்தெரியவில்லை. ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடத் தெரியுமா என்றதற்கு, ‘தெரியும்’ எனத் தலையசைத்தாள். கவினுக்கும் தீபாவுக்கும் நேற்று பேசிய அத்தனை குவாண்டம் தியரிகளும் தவிடுபொடியாகின.

‘நிமோஷ் கொலையில், டாக்டர் குமரேசன் கொலையில் பார்த்தது நிச்சயமாக இவள் இல்லை’ என எந்தக் கோயிலிலும் அல்லது கோர்ட்டிலும் வந்து சத்தியம் செய்வதற்குத் தயாராக இருந்தான் வினோத். ஆனால், அவனுடைய சத்தியத்தை அங்கே யாரும் சட்டை செய்வார்களா எனத் தெரியவில்லை. ரம்யாவும், ரம்யாவின் பெற்றோரும் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தனர். லக்ஷ்மிபிரியா ஒரே நாளில் தன் வாழ்க்கை இப்படிப் புரட்டிப் போடப்பட்டுவிட்ட பயத்தில் மிரண்டுகொண்டிருந்தாள். ரம்யாவைப் பார்த்தாள். ஒரே மாதிரி இருக்கிறோம் என்பதற்கு ஆச்சர்யப்பட அவளுக்குத் தெரியவில்லை. ரம்யாவைப் பார்த்து பயந்தாள். ‘இதெல்லாம் நல்லதில்லை’ என அவள் நினைத்திருக்கக் கூடும்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 21

‘நீதான் இந்தக் கொலைகளைச் செய்தாயா?’ எனக் கேட்பது பொருத்தமில்லாததாக இருந்தது. கொலை நடந்த நாள்களில் அவள் எங்கு இருந்தாள் என்பதை நேரடியாக பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் கேட்டார்.

முதல் கொலை நடந்த நாள் டிசம்பர் 2...

‘‘டிசம்பர் 2-ம் தேதி எங்க இருந்தீங்க?’’ கன்னடம் தெரிந்த ஒருவர் மொழிபெயர்த்துச் சொன்னார்.

‘‘ரத்னஹல்லியில் இருந்தேன்.’’ இதைச் சொல்லிவிட்டு கோர்ட்டில் இருந்த எல்லோரையும் ஒரு முறை ‘சரிதானே?’ எனப் பார்த்தாள்.

டாக்டர் குமரேசன் கொல்லப்பட்டது டிசம்பர் 5.

‘‘டிசம்பர் 5-ம் தேதி?’’

‘‘ரத்னஹல்லில.’’

மூன்றாவது கொலை பெங்களூரு சாமியார். டிசம்பர் 9.

‘‘டிசம்பர் 9-ம் தேதி?’’

‘‘ரத்னஹல்லி.’’ எதற்குக் கேட்கிறார்கள் என்பது போல அவள் பார்த்தாள்.

ஜஸ்டின் கொல்லப்பட்டது, டிசம்பர் 12.

‘‘டிசம்பர் 12’’ எனக் கேட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் கூர்மையாகப் பார்த்தார் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்.

அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை... ‘‘அங்கயேதான்.’’ என்றாள்.

‘‘அங்கயேன்னா?’’.

‘‘ரத்னஹல்லிலதான் இருந்தேன்.’’

டெல்லியில் பேராசிரியர் சுசீந்திரன் கொல்லப்பட்டது, டிசம்பர் 15.

‘‘டிசம்...’’

‘‘நான் எப்பவுமே ரத்னஹல்லிலதான் இருப்பேன். ஸ்கூல் படிக்கும்போது பெங்களூரு ஜூவுக்குப் போயிருக்கேன். வேற எங்கயுமே போனதில்ல’’ என குறுக்கே புகுந்து தன் ஒரே பதிலை அவளாகவே முந்திக்கொண்டு சொன்னாள்.
அமைச்சர் சுப்ரமணியைப் பற்றியும் ராஜேஸ்வரியைப் பற்றியும் கேட்கவேண்டிய அவசியமே இல்லை.

நீதிபதி கேட்டார். ‘‘என்னமோ ரம்யாகூட பொறந்த இன்னொரு பொண்ணுதான் எல்லா கொலைக்கும் காரணம்னு சொன்னீங்க. இவளையா?’’

ராமநாதனைப் பார்த்தார் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர். ‘‘போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.’’ எனக் கேட்டுக்கொண்டார் ப.ப்.

‘‘இந்தக் கேஸை ஆரம்பத்திலிருந்தே பார்த்துக்கிட்டு வர்றேன். நீங்க கொண்டு வந்து நிறுத்திற ஆளெல்லாம் ஆதாரம் போதாத ஆட்களாவே இருக்காங்க’’ என்றார் நீதிபதி.

‘‘ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தால் உண்மை வெளிவரும் யுவன் ஹானர்.’’

‘‘இந்த அப்புராணிதான் இந்தியா முழுக்கப் போய் கொலை பண்ணினதா ஜோடிக்கப் போறீங்களா?’’ கோபமாகக் கேட்டார்.

கோர்ட்டில் சிவராஜ்-பானுமதி தம்பதியரின் கையில் இருந்த நான்கு வயதுக் குழந்தை ஒன்று ‘‘அம்மா’’ என அழைத்தது லக்ஷ்மிபிரியாவைப் பார்த்து. நீதிபதிக்கு ஏகக் கடுப்பு... ‘‘இந்தக் குழந்தையோட அம்மா வேறயா? சரி... சரி... ரெண்டு நாள் தர்றேன். அதுக்குள்ள விசாரிச்சா போதும். இந்த ரெண்டு பெண்களுக்கும் இது பொருந்தும்.’’

நீதிபதி புறப்பட்டுவிட்டார். ‘விட்டா இதே போல மூணாவதா ஒரு பொண்ணு இருக்காள்னு சொல்லுவாங்க போலிருக்கு’ என்ற அலுப்பு அவருக்கு.

அன்றிரவு மொட்டை மாடியில் காலார நடந்துகொண்டிருந்தார். வாட்டர் டேங்க் மேல் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. மாடியில் ஒரு மூலையில் மட்டுமே விளக்கு இருந்ததால் சரியாகத் தெரியவில்லை. இருட்டு. நெருங்கிச் சென்று பார்த்தார். ‘‘நீ எப்படி வெளிய வந்தே?’’ என்றார். அவள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘‘ஏய் பொண்ணு... கேட்கிறேன் இல்ல! நீ ரம்யாவா, பிரியாவா?’’ என்றார்.

அவள் பதில் சொல்லாமல் அந்தப் பக்க பைப்பைப் பிடித்து கீழே இறங்கி, இருண்ட தெருவில் மறைந்தாள்.

(தொடரும்...)