அரசியல்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 22

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 22
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 22

தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 22

‘கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்...’ எனச் சின்ன வயதில் கிராமத்தில் பொன்னுசாமி தாத்தா சொன்னதை நினைத்துப் பார்த்தார் நீதிபதி. இத்தனை சட்ட நூல்கள் படித்து, இத்தனை தீர்ப்புகள் வழங்கியபின் இப்படி ஒரு பால பாடத்தை அவர் தன் வாழ்நாளில் எதிர்பார்க்கவே இல்லை. தான் கண்ட காட்சியைத் தன் மனைவி, மகளிடம் உடனே சொன்னார். ‘அந்தப் பெண் பார்த்த பார்வை, சாதாரண மானிடப்பிறவிகளிடம் பார்க்கமுடியாதது’ என்பது அவருடைய தீர்மானம். அச்சம் என்பதை வாழ்நாளில் அறிந்திராத விழிகள் அவை.

அந்த இரவிலேயே போலீஸ் கமிஷனரிடமும், தலைமைச் செயலாளரிடமும் அதை போனில் சொன்னார். ‘‘பாதுகாப்பு வேண்டுமா?’’ என்றார்கள். ‘‘வேண்டாம். காலையில் வீட்டுக்கு வாருங்கள், போதும்’’ என்றார்.

கமிஷனரும் தலைமைச் செயலாளரும் காலையில் வந்ததும், இரவு நடந்த விஷயங்களைப் பதற்றத்தோடு மீண்டும் சொன்னார் நீதிபதி. தாம் கண்ட காட்சியின் அமானுஷ்யத்தை அவர்களுக்கு எப்படியாவது விளக்கிவிடத் துடித்தார். மொட்டை மாடிக்கு வருமாறு அவர்களை அழைத்துச் சென்றார். ‘‘இதோ, இந்த வாட்டர் டேங்க் மேலதான் உட்கார்ந்திருந்தா. இதோ, இந்த பைப் வழியாதான் இறங்கிப் போனா...’’ என்று ஒரு குழந்தை போல ஓடி ஓடிக் காட்டினார். அவருடைய இயல்புக்கு மாறானதாக இருந்தது அது. இரவு கண்ட காட்சி அவரை இன்னமும் உலுக்கிக்கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது.

சந்தேக வளையத்தில் இருந்த இரண்டு பெண்களும் அங்கே போலீஸ் கண்காணிப்பில் இருந்த நேரத்தில், அதே போல இன்னொரு பெண் வந்திருப்பது எல்லோரையும் குழப்பியடித்தது. எல்லோருக்குள்ளும் விதவிதமாகக் கேள்விகள் எழுந்தன.
‘‘பொறந்தது ஒருவேளை மூணு பொண்ணுங்களா... நல்லா விசாரிச்சீங்களா?’’ என நீதிபதி கேட்டார்.

‘‘அந்தப் பொண்ணு ஏன் உங்களைப் பார்க்க வரணும்? வாட்டர் டேங்க் மேல ஏன் உட்காரணும்? இதற்கு ஒரு முடிவே இல்லையா?’’ என அலுத்துக்கொண்டார் தலைமைச் செயலாளர். ‘‘மூன்றாவது ரம்யாவா?’’ என்றபடி தலை சிலுப்பினார் கமிஷனர் ராம்சிங்.

நீதிபதி ஏதோ முடிவுக்கு வந்தவராக, ‘‘ஒரு பெண்ணால இந்த டேங்க் மேல ஏறி உட்கார முடியுமா? என் மகளை ஏறி உட்காரச் சொல்லி டெஸ்ட் பண்ணலாமா?’’ என்றார்.

‘‘ரிஸ்க் சார்... இந்த டேங்க் ஏதோ அந்தரத்தில நிக்கிறா மாதிரி இருக்கு. போலீஸ் ட்ரெய்னிங்ல இருந்த லேடீஸுக்கே கஷ்டம்.’’

‘‘குட் ஐடியா... லேடி கான்ஸ்டபிள் யாராவது வந்திருக்காங்களா?’’ என்றார் நீதிபதி.

‘‘ஜீப்ல இருக்காங்க சார்!’’

‘‘ஒரு சின்ன டெஸ்ட். பார்த்துடுவோம்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 22

ராம்சிங் செல்போனில் தகவல் சொல்ல, ஜீப்பில் இருந்த அந்தப் புதிதாகச் சேர்ந்த லேடி கான்ஸ்டபிள் ‘ஏதோ தப்பு செய்துவிட்டோமா’ என மிரட்சியாக வந்தார்.

நீதிபதி, ‘‘உன்னால இந்த ஏணியில ஏறி வாட்டர் டேங்க் மேல உட்கார முடியுமா?’’ என்றார். அந்தப் பெண் கான்ஸ்டபிள் தயக்கத்தோடு கமிஷனரைப் பார்த்தார். ‘‘முடியுதான்னு பார்’’ என்றார் கமிஷனர்.

அந்தப் பெண் ஏணிமீது ஏறினாள். உயரத்தைப் பார்த்து பயந்தாள். கடைசி படிக்குப் போய்விட்டு, ‘போதுமா’ என்பதாகக் கீழே பார்த்தாள். ‘‘பயமா இருந்தா இறங்கிடு’’ என்றார் நீதிபதி.

‘‘வாட்டர் டேங்க் மேல ஏறணும்’’ என்றார் கமிஷனர். அந்தப் பெண், உயிரைப் பணயம் வைத்து ஒரு ஜம்ப் செய்து அதன் மேல் அமர்ந்தாள். காற்று பலமாக வீசியதால் விழுந்துவிடுவோமோ என்ற அச்சம் கண்களில் தெரிந்தது.

‘‘பைப் வழியா கீழே இறங்கு’’ எனக் கட்டளையிட்டார் கமிஷனர். அவள் பைப்பைப் பிடித்து இறங்கத் தொடங்கி, லேசாகத் தடுமாறி கீழே பார்த்தாள். கார்கள் எல்லாம் தீப்பெட்டி சைஸில் தெரிந்தன. ‘‘பயமா இருக்கு சார்’’ என்றாள்.

‘‘மேலே ஏறி வந்துடு’’ என அவசரமாகச் சொன்னார் நீதிபதி.

கைகள் நடுங்க அவள் தடுமாற்றத்தோடு மொட்டை மாடியில் குதித்ததை நீதிபதி அமைதியாகப் பார்த்தபடி இருந்தார். இரவு வந்த பெண் ஏதோ லேடி ஜேம்ஸ்பாண்டு போல சர்ரெனக் கீழே இறங்கியது நினைவில் வந்தது. ஒரு ரோபோ போல அதைச் செய்தாள். அடிபடும், எலும்பு முறியும் என்ற தயக்கங்கள் இல்லாத தாவல் அது.

‘‘என்னோட கணிப்பு சரின்னா அவ ஒரு ரோபோ... கிராஃபிக்ஸ் படத்தில் வர்றமாதிரியான கேரக்டர்’’ என்றார் நீதிபதி.

‘‘கஸ்டடியில இருக்கற ரெண்டு பொண்ணுங்களுமே இந்தக் கொலையில சம்பந்தப்படலைனு தெரிஞ்சுடுச்சு.’’ தலைமைச் செயலாளர் நிதானமாகச் சொன்னார்.

‘‘அதில நான் தெளிவா இருக்கேன். யாரோ ஜெனிவாவுல இருந்து ஒரு சயின்டிஸ்ட் வந்திருக்கிறதா சொன்னீங்களே... அவர் சென்னைல இருக்காரா?’’ என்றார் நீதிபதி.

‘‘இருக்கார்னு நினைக்கிறேன்.’’

‘‘அவரை விசாரிங்க. ஐ மீன்... அவர்கிட்ட ஹெல்ப் கேளுங்க.’’ நீதிபதி எல்லோரையும் காபி சாப்பிட கீழே அழைத்தார். ‘‘அந்த ரெண்டு பொண்ணுங்களையும் இனி விசாரிக்கிறதுல அர்த்தமில்ல’’ என்றார்.

ம்யாவையும் லக்ஷ்மிபிரியாவையும் சந்தித்துப் பேசிக்கொள்ள அனுமதித்தனர். விசாரணைக் கைதிகளுக்கான இடத்திலேயே அவர்கள் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு தந்தனர். அது ஒரு பாசக் காட்சியாக இருந்தது. லக்ஷ்மிபிரியாவின் கைகளைப் பற்றியபடியே அவளை வெகுநேரம் பார்த்தபடி இருந்தாள் ரம்யா. தமிழோ, ஆங்கிலமோ தெரியாதவள். பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு கல்யாணம் முடிந்து, குழந்தை பெற்ற ஒரு விவசாயி. ‘பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை’ என்பதற்கு வாழும் உதாரணமாக இருந்தாள் லக்ஷ்மி. சந்தர்ப்பங்களும், வாழும் சூழ்நிலையும், ஒரே நாளில் ஒன்றாய்ப் பிறந்த இருவரை இரு வேறு துருவங்களாக மாற்றிவைத்திருக்கும் கோலம் பற்றிய கேள்வி, அவர்கள் இருவரின் மனங்களிலும் ஓடிக்கொண்டிருந்தது

‘‘நான் அக்கா. பத்து நிமிஷம் முன்னாடி பொறந்தேன்.’’ ரம்யா கன்னடத்தில் சொன்னாள்.

‘‘நீ என் தங்கச்சி மாதிரி இருக்கே.’’ பதில் சொல்லிச் சிரித்தாள் பிரியா. அவள் மடியிலிருந்த குழந்தையை வாங்கித் தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டாள் ரம்யா. இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதில் குழந்தை சற்றே குழம்பி, நொடியில் நிஜ அம்மாவை அடையாளம் கண்டுபிடித்தது. மறுபடி லக்ஷ்மியின் மடிக்குப் போய் உட்கார்ந்தது.

‘‘உங்க வீட்டுக்காரர் ஏன் வரலை?’’

‘‘தோட்டத்தில தக்காளி போட்டிருக்கோம். அதுதான் தினமும் பறிச்சு மார்க்கெட்டுக்கு அனுப்பும்... வேலை!’’

தன் தங்கையின் நிலைமை ரம்யாவுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ‘‘நாளைக்கு நம்மை இந்த கேஸ்ல இருந்து விடுவிச்சுடுவாங்க... நாம எல்லோரும் ஒண்ணா இருப்போம்.’’

லக்ஷ்மிபிரியா சிரித்தாள்.

வினுக்குப் போன் செய்து, ‘‘கமிஷனர் ஆபீஸுக்கு வர முடியுமா?’’ எனக் கேட்டார் ராம்சிங். ‘‘நான் சோழாவுக்கு வருவதானாலும் சரி’’ என்றும் சொன்னார்.

‘‘விஷால், பாரதிராஜான்னு பலரும் வந்து போராடிக்கிட்டிருக்காங்களே?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 22

கமிஷனர் சிரித்தார். ‘‘போலீஸ்னா எல்லாப் பிரச்னையும் வரும். நீங்க வாங்க’’ என்றார்.

காரைவிட்டு இறங்கி, ‘கவின்’ எனச் சொன்னதுமே ஒரு கான்ஸ்டபிள் சல்யூட் அடித்து, தடை எதுவும் இல்லாமல் கமிஷனர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

கவின் சொன்னதில் பாதிக்குமேல் கமிஷனருக்குப் புரியவில்லை. செர்னில் நடக்கும் பார்ட்டிகிள் பிசிக்ஸ் ஆராய்ச்சி ஒருவேளை ஆபத்தானதாக இருக்கலாம் என்பதுதான் அவர் புரிந்துகொண்டது. ‘அந்த ஆராய்ச்சியினால் இங்கே இருக்கும் பெண்ணைப் போலவே இன்னொரு பெண் உருவாகி, இங்கே இருக்கும் பெண்ணின் மனதில் இருக்கும் கோபங்களை எல்லாம் செயல்படுத்துகிறாள்’ என்பதை பேப்பரில் செய்தியாகப் படிக்கிற யாராவது ஏற்றுக்கொள்வார்களா என்பது புரியவில்லை.

‘‘சார், நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம். ஆனா, நம்பறா மாதிரி இன்னொரு விளக்கம் தர முடியுமா? இதையெல்லாம் சொல்லிக்கிட்டு பிரஸ்கிட்ட தலைகாட்ட முடியாது.’’

‘‘நீங்க சொன்னா நம்ப மாட்டாங்கன்னா நான் சொல்றேன்.’’

‘‘ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரியலை.’’

‘‘என்ன?’’

‘‘ரம்யா மனசுல இருந்த பழி உணர்ச்சியை அந்த சயின்ஸ் பொண்ணு தீர்த்துவெச்சாள்னு சொல்றீங்க. இதுல அந்த சயின்டிஸ்ட் எப்படி வந்தாரு? அவரை ஏன் பழி தீர்க்கணும்?’’

‘‘சயின்டிஸ்ட் அவளின் நேரடியான எதிரி. இந்த மாதிரி ஒரு ஆபத்து இருக்குன்னு உலகுக்குச் சொல்ல நினைச்சாரு. அதைத் தடுக்கணும்னு நினைச்சிருக்கா.’’

‘‘அது எப்படி அவளுக்குத் தெரியும்?’’

‘‘அது அந்த ஏலியனுக்கு இருக்கிற ஒரு எக்ஸ்ட்ரா பவர். அவளைப் பத்தி யோசிக்கிறவங்களை அவ ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சுடுவா. அப்படித்தான் நினைக்கிறேன். எல்லாமே யூகம்தான்.’’

‘‘நாமகூடத்தான் அந்தப் பொண்ணை நினைக்கிறோம்... நம்மையும் தேடி வருமா?’’

கமிஷனரை கவின் சற்று தீர்க்கமாகப் பார்த்தான். ‘‘வரலாம். நேத்து நீதிபதி வீட்டுக்கு வந்தது மாதிரி.’’

கவின் ஜோக் அடிப்பதாக நினைத்துக்கொண்டு கமிஷனர் சிரித்தார். கவின் சிரிக்கவில்லை.

(தொடரும்...)