அலசல்
சமூகம்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23

‘சென்னையில் தங்கியிருந்து எழும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும்’ என்ற நிபந்தனையின் பேரில் ரம்யா, லக்ஷ்மிபிரியா இருவரையும் விடுவித்தனர். ‘சுதந்திரக் காற்றைச் சுவாசித்தல்’ என்பதன் அர்த்தம் ரம்யாவுக்கு எழுத்து எழுத்தாகப் புரிந்தது. வினோத் இரண்டு பேரின் குடும்பங்களையும் நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காரம், மணத்துடன் விருந்துவைத்தான்.

‘‘அப்பாடி... ஒருவழியா பிரச்னை தீர்ந்தது’’ என்றாள் ரம்யா.

‘‘இல்லை... தீரவில்லை. கொலை செய்த பெண்ணைப் பிடிக்கிறவரை உங்களைக் கண்காணிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மஜூம்தார் சொன்னதைக் கேட்டீங்கல்ல?’’ என நினைவுபடுத்தினான் ராமநாதன்.

‘‘ஏம்பா இப்ப புளியைக் கரைக்கிற? இரு... நிதானமா அதைப் பேசிக்கலாம்.’’ வினோத், சூழலைக் குளுமைப்படுத்த நினைத்தான். ‘‘ஒரே ஜீன் கொண்ட ரெண்டு பெண்களின் தலைமுடிகள்... ரெண்டுலயும் சில வித்தியாசங்கள். ‘அது, இரட்டையராக இருந்தால்தான் சாத்தியம்’ என்றாரே மஜூம்தார்? எல்லோரும் விட்டாலும் அவர் விட மாட்டார் போலிருக்குப்பா.’’

‘‘நீதிபதி சொல்வதுபோல ரோபோ பெண்ணோ, கிராஃபிக்ஸ் பெண்ணோ ஒருத்தி வந்தாளே! அவதான் கொலைகாரி. கவின் சொல்றது மாதிரி வேற்றுக்கிரகப் பெண் கதைதான் இப்ப டெம்பரவரியா நம்மைக் காப்பாத்தியிருக்கு.’’
வினோத் அவன் கையைப் பிடித்து, ‘‘அவங்களைக் கொஞ்சமாவது நிம்மதியா சாப்பிடவிடுப்பா’’ என்றான்.

‘‘மறுபடி அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?’’ என்றாள் லக்ஷ்மி, சுமாராக எதையோ புரிந்துகொண்டு.

வினோத் வேகமாகத் தலையசைத்து மறுத்தான். ‘‘பயப்படாதீங்க... அதைப்பத்தி ரெண்டு நாள் கழிச்சு பேசலாம்’’ என்றான்.

‘‘அதைப்பத்திப் பேசவே வேண்டாம்.’’

‘‘அப்புறம் எப்படி புரூவ் பண்றது?’’

‘‘அதை நான் பாத்துக்குறேன். நண்டு பொரியல் சாப்பிடுவீங்களா?’’ என்றான் ரம்யாவைப் பார்த்து.

‘‘நாக்கு செத்துப்போயிருக்கு. சொல்லுங்க. கேக்கும்போதே நாக்குல ஷாக் அடிக்குது’’ ரம்யா சந்தோஷமாகச் சிரித்தாள். ரம்யாவை வளர்த்தவர்களுக்குத் தங்களுக்குப் பிறந்து இறந்தது ஓர் ஆண் குழந்தை என்பது ஒரு தகவல் மட்டும்தான். அந்தக் குழந்தையை இழந்துவிட்ட சோகமோ, யாருக்கோ பிறந்த ரம்யாவைத்தான் நாம் இவ்வளவு நாள்களாக வளர்த்தோம் என்ற குழப்பமோ, அவர்கள் காட்டும் பாசத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதனால், ரம்யாவின் மனத்தில் இடைவெளி விழுந்து விடுமோ என்பதாக ஒரு தயக்க அச்சம் இருந்தது. ஆனால், எங்கே விலகி விடுவாளோ என யோசித்ததுகூட தேவையில்லாத அச்சமாக மாறியிருந்தது. அவர்களுக்கு அந்த அச்சம் தேவையில்லை என்பதை உணர்த்துவதற்காக ரம்யா இயல்புக்குமீறி இயல்பாக இருந்தாள்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23

லக்ஷ்மியின் பெற்றோருக்கு அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்துவிட்டதே என்ற சின்ன சலனம் இருந்தது. போலீஸ் விசாரணை தந்த அதிர்ச்சியில், எப்படியோ நெகிழ்ந்திருக்க வேண்டிய நிகழ்வுகள் உணர்வு தப்பிக்கொண்டிருந்தன.

வினோத் எடுத்த பிரயத்தனங்கள் ரம்யாவை நிறையவே காதல் கொள்ள வைத்தது. சேமித்துவைத்த காதலையெல்லாம் கொட்டுவதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டுக் கிளம்பும்போது, ‘‘நல்லா ரெஸ்ட் எடுங்க. ஸ்டாஃப்ஸ் எல்லாம் நாளைக்கு வந்து பார்ப்பாங்க’’ என்றான் வினோத்.

ரு வாரம் ஹோட்டலிலேயே ஓடிவிட்டது, கவினுக்கு. லக்ஷ்மியைப் பார்த்ததும் தீபாவுக்கு ‘விஞ்ஞானபூர்வமான ஈடுபாடு எதற்கும் வழியில்லை’ எனப் புரிந்துபோனது. ‘பிரிந்தவர் சேர்ந்தனர்’ என்ற சென்டிமென்ட் எல்லாம் அவளுக்கு இல்லை. அடுத்த ஃப்ளைட்டில் டெல்லி போய்விட்டாள். போகும்போது கைகுலுக்கலுக்குப் பிறகு லேசாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டதுதான் கவின் பெற்ற ஒரே பாக்கியம். அதைவிட முக்கியமாக இருந்தது, அவள் விவரித்த குவாண்டம் டெலிபதி சுவாரஸ்யங்கள். அது கொஞ்சம் சயின்ஸ், கொஞ்சம் உடான்ஸ். இருந்தாலும் அவனுக்கு வேறு கிளைச் சந்தேகங்களைக் கிளப்பிவிட்டபடி இருந்தது. ஒரு பக்கம் ஏலியன், இன்னொரு பக்கம் சொந்தங்கள். நேரம் குறைவாக இருந்தது. அன்பு, அறிவியல் எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி விட்டது மாதிரி இருந்தது.

இரண்டு நாள்களில் ஜெனீவா கிளம்புவதற்கான ஆயத்தங்களில் இருந்தான் கவின். ரம்யாவுடன் இன்னொரு சகோதரியையும் பார்த்ததில் கூடுதல் மகிழ்ச்சிதான். எல்லாமே அடுத்தடுத்து வேகமாக நடந்தன. ஒவ்வொரு திருப்புமுனைக்கும் தனியாக ரூம்போட்டு உணர்வுக்குளியல் போடும் அளவுக்குச் சம்பவங்கள் இருந்தன. பரவசமோ, பிரமிப்போ, அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ அடைவதற்கும் அவகாசமில்லை. உணர்வுகளைக் கொண்டாட முடியாத வாழ்க்கையை நினைத்து எரிச்சலாக இருந்தது. அழ வேண்டிய நேரத்தில் அழாமலும், சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரிக்காமலும் இருப்பது வாழ்வின் துயரம். லக்ஷ்மி சம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கை எதுவும் இருக்கிறதா என ராமநாதனிடம் கேட்டு, அதற்கு வழிசெய்யச் சொன்னான். இருக்கும் இரண்டு நாள்களில் செய்ய வேண்டிய வேலைகளை ஹோட்டலில் கொடுத்த நோட் பேடில் பென்சிலால் வரிசைப்படுத்தினான்.

1. லக்ஷ்மிக்கு டிரஸ்.
2. குழந்தைக்கு கிஃப்ட்.
3. குடும்பத்தினருடன் வண்டலூர் ஜூ.
4. தீபா, ராகுல்.
5. ஏலியனை ஒழிப்பது.
6. லாண்டரி.
7. ரஹ்மான் சாங்.

இப்படிக் கதம்பமாக எழுதிவைத்திருந்தான்.

குளித்துக்கொண்டிருந்தபோது, ரிசப்ஷனி லிருந்து அழைப்பு. தலையைத் துவட்டியபடியே போனை எடுத்தான். மஜூம்தார் என்பவர் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். ‘மஜூம்தார்’ என்ற பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை. இந்த ஒரு வாரத்தில் காதில் விழுந்த பெயர் போல இருந்தது. ‘எதைக்குறித்து’ எனக் கேட்கச் சொன்னான். ரிசப்ஷன் பெண் எந்தவித அதிர்ச்சியும் இல்லாமல் அவர் சொன்னதைச் சொன்னாள்:

‘‘ஏலியன்.’’

‘‘வெயிட் பண்ணச் சொல்லுங்க, வர்றேன்.’’

கவின் தன் ஷார்ட்ஸ், டி-ஷர்ட் அடையாளங் களைச் சொல்லிவிட்டுக் கீழே வந்தான். நீள நீளமான வெள்ளை வெளேர் சோபாக்களில் ஒரு சிலர் அமர்ந்திருந்தனர். கவின் வந்து நின்றதும் மஜூம்தார் எழுந்து கையசைத்தார். பார்வையால் அலசினான். 50 ப்ளஸ். சஃபாரி போட்ட கவர்ன்மென்ட் உடம்பு.

‘‘மஜூம்தார். ஃபோரன்சிக் டிபார்ட்மென்ட்.’’

‘‘இப்ப நினைவு வந்துடுச்சு. கோர்ட்ல பார்த்தேன்.’’

‘‘இந்த கேஸ் இப்போதைக்கு முடிஞ்ச மாதிரியும் இருக்கு. முடியாத மாதிரியும் இருக்கு.’’

‘‘உங்க சைட்ல என்ன ஃபீல் பண்றீங்க?’’

மஜூம்தார் தன் தரப்பை யாராவது காதுகொடுத்துக் கேட்பார்களா எனத் தவித்துப்போயிருந்தார். இவ்வளவு நிதானமாகக் கவின் கேட்டது நம்பிக்கையளித்தது. சோபாவில் சற்றே முன்னோக்கி நகர்ந்து உட்கார்ந்து, மெல்லிய குரலில் விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘என்னன்னா... ஒரு செல்போன் திருடன் இந்த கேஸ்ல முக்கியமான ரோல் பண்றான். ஆனா, அவனை எல்லாருமே ஜஸ்ட் லைக் தட் விட்டுட்டாங்க. என் கிட்ட ரெண்டு தலைமுடிகளைக் கொடுத்தாங்க. ரெண்டும் அவன் கையில் சிக்கியிருந்த தலைமுடிகள். செல்போனைப் பிடுங்கிட்டு ஓடுறப்ப அவன் கையில அந்த முடி சிக்கியிருக்கலாம்... ஆனா, ரெண்டு முடிகளும் வேற வேற நேரத்தில எடுத்ததுனு நினைக்கிறேன்.’’

‘‘ஏன்?’’

‘‘ஒரு தலைமுடியில ஆல்கஹால் கன்டென்ட் இருந்ததைப் பார்த்தேன். இன்னொரு தலைமுடியில இல்ல.’’

‘‘ரம்யாவுக்கு அந்த ஹாபிட் இருக்கா?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23

‘‘சொல்றேன் சார். விசாரணையில இருந்தப்ப அவங்க தலைமுடி சாம்பிள் வாங்கி டெஸ்ட் பண்ணினேன். உங்களுக்கே தெரியும், தலைமுடியில ஆல்கஹால் கன்டென்ட் சில நாள்கள்வரைக்கும் இருக்கும்னு. ரம்யாவோட தலைமுடியில இல்ல. அப்ப இவங்ககூட பிறந்தவங்க... ட்வின்ஸ் இருக்காங்களான்னு டவுட் இருந்தது. முதல்ல இல்லைனு சொல்லிட்டாங்க. அப்புறம் இந்த கேஸ்ல ஒரு திருப்புமுனை. லக்ஷ்மிபிரியா வந்தாங்க.’’

‘‘லக்ஷ்மி தலைமுடியில ஆல்கஹால் இருந்ததான்னு பார்த்தீங்களா?’’

‘‘பார்த்துட்டேன். அதிலயும் இல்லை சார். ஒரு வாரத்துக்கு மேல ஆகிட்டா காட்டாது.’’

கவின், ‘‘என்ன சொல்ல வர்றீங்க. லக்ஷ்மிதான் கொலைகாரின்னா?’’

‘‘என்னோட எல்லை இங்க முடிஞ்சுடுச்சு. ஒரே ஜீன் கொண்ட தலைமுடி ட்வின்ஸ்களுக்கு சாத்தியம். பிறந்தது மூணு பேர் இல்லைன்னும் போலீஸ் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க.’’ மஜூம்தார் இனி என் கையில் எதுவும் இல்லை என்பதைச் சொன்னார்.

‘‘நான் என்ன சொல்லணும் எதிர்பார்க்கிறீங்க?’’

‘‘நீங்க சொல்லணும்னு எதிர்பார்க்கல. நீதிபதி சொன்னதை வெச்சுப் பார்க்கும்போது அது ரோபோ மாதிரி ஏதோவான்னும் யோசிச்சேன். ஆனா ரோபோ குடிக்குமா? ரோபோவுக்கு எப்படி ரம்யாவோட தலைமுடி?’’

‘‘சான்ஸ் இல்லை.’’

‘‘அதான் சார்... ஒரே சாய்ஸ் லக்ஷ்மி. அவ நடிக்கிறா. அவளைக் கொஞ்சம் கண்காணிக்கணும்.’’

‘‘ஒரு குழந்தைக்கு அம்மா... கிராமத்துப் பொண்ணு... அவ எப்படி?’’

வினோத்திடமிருந்து போன் வந்தது. ‘‘சார், இன்னைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கையெழுத்துப் போட லக்ஷ்மி வரலை. ஏதாவது தகவல் தெரியுமா?’’

‘‘இல்லையே... எங்க போயிட்டா?’’

‘‘போலீஸ்ல ரொம்ப டென்ஷன் பண்றாங்க. அஞ்சு மணிக்குள்ள ஸ்டேஷனுக்கு வரணும்னு. அவ வரலைன்னா அவதான் அக்யூஸ்ட்டுன்னு ஆகிடும். மறுபடி சிக்கலாகிடும். சந்தேகம் வரும்.’’

மஜூம்தார் போன் உரையாடலைக் கவனித்தார். ‘‘லக்ஷ்மியைக் காணோமா?’’ என்றார், கவின் போனில் பேசிக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல்.

கவின் போனைக் காதிலிருந்து எடுக்காமல் தலையசைத்தான்.

‘‘நான் சொன்னேன்ல?’’ என்றார் மஜூம்தார்.

(தொடரும்...)