மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 25

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 25
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 25

தமிழ்மகன், ஓவியம்: ஸ்யாம்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 25

தீபா இரண்டு பேரையும் பார்த்தாள். பேராசிரியர் ராகுலுக்கு உடம்புதான் பலவீனமே தவிர, முகத்தில் முறுக்குக் கம்பி உறுதி. கவின், அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டதுபோல நின்றிருந்தான். இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அவளால் தாங்கமுடியவில்லை. ‘பேரலல் யூனிவர்ஸ்’ என்பது பிக் பாங் தியரி உருவான காலத்திலிருந்து இருக்கும் ஒரு தியரி. ‘‘1,400 கோடி ஆண்டுகளுக்குமுன் இந்தப் பிரபஞ்சம் உருவான அடுத்த மைக்ரோ செகண்டில் இன்னொரு பிரபஞ்சம் உருவானது. அது இணைப் பிரபஞ்சம் மட்டுமல்ல, எதிர் பிரபஞ்சமும்கூட’’ என்றெல்லாம் சயின்டிஸ்ட்டுகள் சண்டை போட்டுக்கொள்ளும் விவகாரம். இன்னமும் பிக் பாங் சமாசாரத்தையே சில சயின்டிஸ்டுகள் ஏற்றுக்கொள்வது இல்லை என்பது சைடு ட்ராக்.

‘உலகம் உருண்டை என்பதையே ஏற்றுக்கொள்ளாத கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது’ என மறுப்பவர்களை ஒதுக்கிவிட்டு பிக் பாங்காரர்கள் வெகுதூரம் வந்துவிட்டார்கள். ஆக, பிக் பாங் தியரி போட்ட குட்டிதான், பேரலல் யூனிவர்ஸ். கொஞ்சம் பயமுறுத்தலான தியரியும்கூட.

‘‘எதைவெச்சு இந்த முடிவுக்கு வந்தீங்க டாக்டர்?’’ - தீபா கே?ட்டாள்.

‘‘சிம்பிள்மா. ஒரே மாதிரி இன்னொரு பெண். அசாதாரண நடவடிக்கைகள்.’’

‘‘இது போதுமா?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 25

‘‘போதுமாவா..? இரண்டு நாளைக்கு ஒரு கொலை என ஏழு கொலைகள் செய்திருக்கிறாள். ஒவ்வொரு தடவையும் அவள் இரவில்தான் வருகிறாள். அல்லது வெளிச்சம் குறைவான இடத்தில். இது போதாதா?’’

‘‘இரவிலே வருவது ஒரு முக்கியமான காரணமா?’’

‘‘இருக்கலாம். பேரலல் யூனிவர்ஸ் என்பது அப்படியே நம் பிரபஞ்சத்தின் உல்டா. இங்கே பகலிலே உலவுகிறோம். அவள் இரவிலே உலவுகிறாள்.’’

‘‘சார்... இந்த பேரலல் யூனிவர்ஸ் சமாசாரம் ரொம்ப பயமாக இருக்கிறது. அப்படியானால் என்னைப் போல இன்னொரு தீபா இருப்பாளா?’’

‘‘இருக்கிறாள். இதே மாதிரி ஒரு ராகுலும் கவினும் தீபாவும் முந்திரி சாப்பிட்டுக்கொண்டு இதே நேரத்தில் பேசிக்கொண்டிருப்பார்கள் என்பதுதான் இந்த தியரியின் அடிப்படை. இதே போல இன்னொரு இந்தியா, இன்னொரு மோடி, இன்னொரு சூரியன், இன்னொரு மில்கிவே, இன்னொரு கேலக்ஸி... எல்லாமே உண்டு.’’

‘‘சார்... எல்லாமே இன்னொன்றா?’’

‘‘இதேபோல இன்னொரு ரம்யாதான் எப்படியோ இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள். இதை நம்பினால்தான் எல்லாமே சரியாக வருகிறது. சுசீந்திரன் எப்படியோ இதை யூகித்திருக்கிறார். இதுதான் எல்லாவற்றுக்கும் காரணம்.’’
கவின், ‘போதுமா’ என தீபாவைப் பார்த்தான்.

‘‘போலீஸுக்குப் போதாதே?’’

‘‘இது செல்போன் மாதிரி விஷயம் அல்ல. எப்படி இயங்குகிறது என பாகம் பிரித்துக் காட்டுவதற்கு. லாஜிக்கலி ப்ரூவ்டு தியரீஸ். ரிலேட்டிவிட்டி தியரியைக் காட்டு எனச் சொல்கிறோமா... புரிந்துகொள்ளவில்லையா? அப்படித்தான்.’’

‘‘அதற்காக இல்லை சார். சயின்டிஸ்டுகள் விவாதிப்பது வேறு... அது, உலக மக்கள்தொகையில் ஒரு பர்சன்ட்டுக்கும் குறைவானவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். இது கொலை கேஸ். மந்திரி, போலீஸ், புரொபஸர், சாமியார், டாக்டர் எனச் செத்துப் போயிருக்கிறார்கள். பல மாநில போலீஸார் தலையைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் ‘பேரலல் தியரி’ எனச் சொன்னால் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?’’

‘‘புரிந்துகொள்ள முடியாதது அவர்களின் தவறு.’’

கவினும் தீபாவும், ‘உலகம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்தை எப்படி அறிவிப்பது’ என்பதில் யோசனையாக இருந்தனர்.

‘‘சார், நம் அறிவியல் சம்மேளனம், செர்ன்...’’

‘‘எல்லோருக்கும் நேற்றே மெயில் போட்டுவிட்டேன். யாரும் இந்த ஆபத்தை உணர்ந்தது மாதிரி தெரியவில்லை. நாம் பிரச்னையைச் சொன்னதால் மேற்கொண்டு விவாதிப்பார்கள். பிறகு, விடை தேடுவார்கள். அதுவரை அந்த இன்னொரு ரம்யாவால் என்ன ஆபத்து வரும் எனத் தெரியவில்லை.’’

‘‘போலீஸுக்கு முதலில் இந்த ஆபத்தைச் சொல்வோம்.’’ கவின் சொன்னான்.

‘‘சுரேந்தர் சிங்கைக் கூப்பிடுங்கள். நானே சொல்கிறேன்!’’

‘‘அவர் புரிந்துகொண்டால் மட்டும் போதுமா?’’

புரொபஸர் அமைதியாகச் சொன்னார். ‘‘ஒருத்தர் புரிந்துகொண்டால், நாம் சொல்வது புரிய ஆரம்பித்துவிட்டது என்றுதான் அர்த்தம்.’’

‘‘அவர் ஒப்புக்கொண்டபிறகு பிரஸ்மீட் வைப்போமா?’’

‘‘நாம் வைக்க வேண்டாம். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மூலமாக ஏற்பாடு செய்வோம். தீயாகப் பற்றிக்கொள்ளும்.’’

தீபா சங்கடமாக நெளிந்தாள். அந்தப் பெரியவருக்கு நிலைமையை எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. புரொபஸர் ராகுல், உலகில் உள்ள எல்லோரையும் அவர் லெவலிலேயே பார்ப்பதாகத் தோன்றியது.

‘‘கெஜ்ரிவாலுக்குப் புரிந்துகொள்ள நேரம் இருக்குமா? அரசியல் அழுத்தம் அதிகமாக இருக்குமே?’’

கவின், ‘‘கெஜ்ரிவால் புரிந்துகொள்வார்’’ என்றான்.

‘‘எப்படிச் சொல்றீங்க?’’

‘‘அவர் கமல் பேசுவதையே புரிந்துகொள்கிறார். பிரில்லியன்ட் மேன்’’ என்றான்.

‘‘இது ஜோக்கா? ஸ்டேட்மென்ட்டா?’’

‘‘தீபா... என்னைப் பத்தி தெரியும். நான் யாரையும் ஹர்ட் பண்ண மாட்டேன். எதையும் மிகைப்படுத்த மாட்டேன். அதாவது... இதற்கு அர்த்தம், ‘ஜோக் அடிக்க மாட்டேன்’ என்பதுதான்.’’

ஜோக் அடிக்க மாட்டேன் என்பதை இவ்வளவு சீரியஸாக யாராலும் சொல்ல முடியாது. ‘‘கெஜ்ரிவால் மூலமாகவே சொல்லலாம். அதைவிட பெஸ்ட், நாமே மீடியா மூலமாகச் சொல்வது.’’ என்றாள்.

ராகுல், ‘‘எப்படியோ பிரச்னையை வெளியே சொல்ல வேண்டும். அப்புறம் எல்லோரும் சேர்ந்துகொள்வார்கள்’’ என்றார்.

‘‘பிரஸ்மீட்டுக்கு அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேந்தர் சிங்கை அழைத்துக்கொள்வோம். அவருக்கு இந்தப் பிரச்னையின் போக்கு நன்றாகவே தெரியும்’’ சொல்லிவிட்டு கவின் இருவரையும் பார்த்தான். இருவரின் முகங்களிலும் ‘சரி’ என்பதற்கான அறிகுறி தெரிந்தது.

நுங்கம்பாக்கம் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் யோசனையுடன் பைக்கை நிறுத்தினான். நாம் நினைப்பது சரியாக இருக்குமா? சிக்கை அவிழ்க்க ஏதோ ஒரு நூல் முனையை இழுப்பதுபோல இழுத்துப் பார்த்தான். அந்த ரம்யாவால் டாக்டர் குமரேசன் கொல்லப்பட்ட மருத்துவமனை அது. பிரமாண்ட கண்ணாடி வாசலைக் கடந்து உள்ளே கவனித்தான். ரிசப்ஷனில் பார்த்தான். வட்ட முகத்துடன் அதே பெண். அவன் நினைத்தது சரிதான். ‘அப்பாடா’ என்றது மனம். ஹோட்டலில் பார்த்த அதே பெண். எதிரில் போய் நின்றபோது, ‘‘நேம் சொல்லுங்க சார்’’ என்றாள் ஏறிட்டுப் பார்க்காமலேயே.

வினோத் அமைதியாக இருந்தான்.

‘‘யாரைப் பார்க்கணும் சார்?’’ என்றபடி நிமிர்ந்தவளின் முகத்தில் சட்டெனத் தோன்றி மறைந்த அதிர்ச்சியைக் கவனித்தான். அவள் வேகமாக முகத்தை இறுக்கமாக்கி, அடுத்து சொன்னது நாடகத்தனமாக இருந்தது. ‘‘என்ன வேணும் உங்களுக்கு?’’

வினோத் அசரவில்லை. அவளை (உளவு) பார்த்தான்.

‘‘என்ன வேணும்?’’ இந்த முறை குரலில் இருந்த மிடுக்கு, முகத்தில் குறைந்துவிட்டது.

‘‘லக்ஷ்மி வேணும்.’’

அவள் திடுக்கிட்டது துல்லியமாகத் தெரிந்தது. ‘‘அப்பிடி யாரும் இங்க இல்ல’’ என்றாள்.

‘‘ரெண்டு நாள் முன்னாடி உங்களை ஹோட்டல்ல பார்த்தேன். நீங்க லக்ஷ்மியைக் கவனிச்சதை நான் பார்த்தேன்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 25

‘‘எந்த லக்ஷ்மி? எந்த ஹோட்டல்?’’

அவள் எதையோ அவசரமாக மறைக்க நினைத்தது வினோத்துக்குப் புரிந்தது. ஹோட்டலில் பார்த்ததையே மறுத்தாள். நூல் சிக்கு சற்றே இலகுவதுபோல இருந்தது.

‘‘உண்மையைச் சொல்லலைன்னா போலீஸ் வந்து கவனிக்க வேண்டியிருக்கும்.’’

‘‘சார்... நீங்க சொல்றது என்னன்னே புரியலை.’’

‘‘லக்ஷ்மியை எங்க வெச்சிருக்கீங்க?’’

ஒரு மாதிரி மையமாகவே மிரட்டிக் கொண்டி ருந்தான். அவள் இன்டர்காமில் யாரிடமோ அபயம் கோருவதைக் கவனித்தான்.

‘‘எல்லாம் தெரிஞ்சுடுச்சு... உண்மையைச் சொல்லிட்டீங்கன்னா நல்லது.’’ வினோத் தைரியமாக அடுத்தடுத்து அஸ்திரங்களைப் பிரயோகித்தான்.

அவள் வினோத்தையே பார்த்தபடி இருந்தாள். அதாவது, வினோத்துக்குப் பின்னால் இருந்த யாரையோ பார்க்கிறாள் என்பது பின்னர்தான் புரிந்தது. ஆனால், புரிந்துகொள்வதில் ஏற்பட்ட நொடி நேர தாமதமே, பின்னால் நின்றிருந்த ஜிம் பாய்க்குச் சாதகமாகிவிட்டது. தன் பாக்கெட்டில் வைத்திருந்த கர்சீப்பை எடுத்து வினோத்தின் முகத்தில் வைத்து அழுத்திப் பிரியமாகத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் அந்த ஜிம் பாய். கர்சீப்பில் இருந்த குளோரோஃபார்ம் மெல்ல வினோத்தின் கண்களைச் சொருக வைத்தது. எதிரில் இருந்த ரிசப்ஷன் பெண்ணின் முகம் தெரியவில்லை. எல்லாமே இருட்டாக மாறிவிட்டது.

வினோத் அப்படியே அந்த ஜிம் பாய்மீது சாய்ந்தான். அவன் அப்படியே வினோத்தைத் தூக்கிக்கொண்டுபோய் ஓர் அறையில் சோபாவில் போட்டான்.

அந்த அறை குளிரூட்டப்பட்டிருந்தது. மந்தமான வெளிச்சம். அந்த ஜிம் பாய் அவசரமாக ஏதோ எண்ணை அழுத்தி, ‘‘சார், அந்தப் பொண்ணைத் தேடி ஒருத்தன் வந்திருக்கான். இல்லை... மயக்கத்தில இருக்கான்’’ என்றான்.

மறுமுனையில் சொன்ன வார்த்தைக்கு இணக்கமாக, ‘‘சரி சார். வாங்க’’ என்றான். வினோத் கிடத்தப்பட்ட சோபாவுக்குச் சற்றுத்தள்ளி ஒரு நாற்காலியில் லக்ஷ்மி அமர்ந்திருந்தாள். வாயில் ஆஸ்பத்திரி டர்க்கி டவலை வைத்து அடைத்திருந்தார்கள். கட்டப்பட்டிருந்தாள். குழந்தை, அருகே ஒரு தொட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது.

(தொடரும்...)