மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 26

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 26
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 26

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 26

ர்வதேசப் பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர். ஆங்கிலத்திலும் இந்தியிலுமாகக் கேள்விகள் சலசலத்தன. லைவ் டெலிகாஸ்ட், பிரேக்கிங் நியூஸ் என ஒரே அலப்பறையாக இருந்தது. இந்திய அறிவியல் கழகம், ஐஐடி பேராசிரியர்கள், நடுநாயகமாகப் பேராசிரியர் ராகுல், அவருக்கு அருகே டெல்லி  போலீஸ் கமிஷனர் என மேசை தடுப்புக்கு மறுபக்கம் அதிகம் பேர் இருந்தனர். எதிர்ப்புறத்தில் அதைவிட அதிகம் பேர், ஊடகத்தினர். எல்லா சானல் மைக்குகளும் ஒன்றோடு ஒன்று இடித்தபடி இடமின்றி தவித்தன. அத்தனை தலைகள், அத்தனை கேமராக்கள், போட்டோகிராபர்கள் என முட்டி மோதின. கேள்விகளின் மோதலும் அதிகமாக இருந்தது.

சிஎன்என் சானல் நிருபர், ‘‘இது பேரலல் யூனிவர்ஸ் சம்பந்தமான பிரஸ்மீட் என்றார்களே, உண்மை தானா?’’ எனத் துள்ளத்துடிக்க ஒரு கேள்வியைக் கேட்டான்.

எப்படித்தான் மோப்பம் பிடிக்கி றார்களோ... ஆனால், ராகுலுக்கு இப்படிக் கேள்வியை ஆரம்பித்ததால், பிரச்னை இலகுவாகிவிட்டதாக நினைத்தார். அவர் ஏதோ சொல்ல வாய் எடுப்பதற்குள், ‘‘நடந்த ஏழு கொலைகளுக்கும் இந்த பிரஸ் மீட்டுக்கும் தொடர்பு இருக்கிறதா?’’ என்றார் ஒரு உ.பி நியூஸ் நிருபர்.

இந்த முறை கமிஷனர் ‘‘இருக்கிறது’’ என்றார்.

‘‘கொலை கேஸுக்கு எதற்கு இத்தனை சயின்டிஸ்ட்டுகள் வந்திருக்கிறார்கள்?’’ இது மராட்டி மினிட்ஸ் நிருபர்.

‘‘இதில் கொஞ்சம் க்ரைம், கொஞ்சம் சயின்ஸ் எல்லாம் கலந்திருக்கிறது. என்ன நடந்தது என முதலில் ஒரு ரவுண்டு நாங்கள் சொன்னபிறகு நீங்கள் கேள்வி கேட்கலாம். அதுதான் நன்றாக இருக்கும்’’ என்றார் கமிஷனர். சலசலப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது. நிருபர்களே, ‘‘சைலன்ஸ்... சைலன்ஸ்’’ எனக் கொஞ்ச நேரம் கத்திக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக நிதானத்துக்கு வந்தமாதிரி இருந்த நேரத்தில், கமிஷனர் ஆரம்பித்தார்.

‘‘சென்னையை அடிப்படையாக வைத்து இந்தக் கொலைகள் நடந்திருந்தாலும், இது பிரபஞ்சத்துக்கே அச்சுறுத்தலான விஷயம். சென்னையில் ஒரு பாரில் முதன்முதலாக ஒரு கொலை நடந்தது. ஒரு பணக்கார வீட்டுப் பையன்... நிமோஷ் எனப் பெயர். கொல்லப்பட்டான். அடுத்து டாக்டர் குமரேசன். அப்புறம், கர்நாடகாவில் ஒரு ஆசிரமத்தின் குரு கொல்லப்பட்டார். அந்த ஆசிரமத்தில் சில பாலியல் முறைகேடுகள் நடந்திருக் கின்றன. அதில் பாதிக்கப் பட்ட பெண் ஹாசினி. அந்த ஆசிரமத்தில் பாலியல் வன்முறை செய்யப்பட்டுக் கொல்லப் பட்டவள். அவளின் தோழி ரம்யாதான் பழி தீர்ப்பதற்காக இந்தக் கொலைகளைச் செய்தாள் என முதலில் சந்தேகப் பட்டோம். நிமோஷ், டாக்டர் குமரேசன், ஆசிரம குரு, அமைச்சர் சுப்பிரமணி ஆகியோர் கொலைகள் வரை இது சரியாகத்தான் இருந்தது. அவர்கள், இந்தப் பாலியல் வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள். நடுவில் சயின்டிஸ்ட் சுசீந்திரன், மெரினா பீச்சில் கொல்லப்பட்ட ஜஸ்டின் ஆகியோரின் கொலைகளுக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. ஆனாலும், ரம்யாவைக் கைதுசெய்து விசாரித்து வந்தோம். இந்த நேரத்தில், ரம்யாவை விசாரித்துவந்த டி.எஸ்.பி ராஜேஸ்வரி கொல்லப்பட்டார். ரம்யா ஜெயிலில் இருந்தபோது ராஜேஸ்வரி கொல்லப்பட்டது ஒரு திருப்புமுனை. ‘ரம்யா இல்லாமல் வேறு யாரோ கொல்கிறார்கள்’... அல்லது ‘ரம்யாவும் வேறு சிலரும் கொல்கிறார்கள்’ என்றெல்லாம் யோசித்தோம். நடந்த கொலைகள் எல்லாமே ஒரே மாதிரியானவை. வாய் வழியாக ரத்தத்தை உறிஞ்சிக் கொல்வது. இது அசாதாரணமானது. ஒரு பெண்ணால் அப்படி உறிஞ்சி ஒருவரைக் கொன்றுவிட முடியாது. அதீதமான சக்தி என்பது புரிந்தது. சமயத்தில் மோகினி பிசாசு என்றெல்லாம் நினைத்தோம்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 26

‘‘இப்போது கேள்வி கேட்கலாமா?’’

‘‘முழுவதையும் சொன்னபிறகு கேட்டால்தான் சரியாக இருக்கும்...’’ கமிஷனர் கேள்விக்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்தார். ‘‘மெரினா பீச்சில் ஜஸ்டின் கொல்லப்பட்டது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியது. அவன் செல்போன் திருடன். அவன் வைத்திருந்த செல்போன்களுக்கு இடையே ஒரே பெண்ணின் இரண்டு தலைமுடிகள் இருந்தன. ஒன்று, அந்தப் பெண் போதையில் இருந்தபோது எடுத்த முடி. இன்னொன்று, போதை இல்லாமல் இருந்தபோது எடுத்தது. தலைமுடியில் ஆல்கஹால் கன்டென்ட் இருந்தால் ஒரு வாரம் வரைக்கும் அதன் சாம்பிள் இருக்கும். ரம்யாதான் கொலைகாரி என்றால், அவளுடைய செல்போனைத் திருடியபோது ஒரு முடி சிக்கியிருக்க வேண்டும். அப்போது அவள் போதையில் இருந்திருக்க வேண்டும். ஒரு வாரத்துக்குப் பின்னால் அன்று பீச்சில் இருந்தபோது ஜஸ்டின் இன்னொரு செல்போனைத் திருடியிருக்கிறான். அப்போது இன்னொரு தலைமுடி சிக்கியிருக்க வேண்டும்...’’

ஒரு நிருபர் அடக்க மாட்டாமல் எழுந்து, ‘‘அது எப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முடி. அதுவும் ஒரு வாரமாக அவன் பாக்கெட்டிலேயே இருக்க முடியும்?’’ என்றார்.

கமிஷனர், ‘‘அதனால்தான் இடையில் கேள்விகள் வேண்டாம் என்றேன். இப்படி நிறையக் கேள்விகள் எங்களுக்கும் இருந்தன. பிறகுதான், ரம்யாவுக்குக் குடிக்கிற பழக்கமே இல்லை என்பதை உறுதிப் படுத்தினோம். ஒரே பெண்ணின் இரண்டு தலைமுடிகளில் ஒன்றில் ஆல்கஹாலும், இன்னொன்றில் ஆல்கஹால் இல்லாமலும் இருப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ரம்யா இரட்டைப் பிறவியாக இருந்தால் ஒரே ஜீன் அமைப்புகள் இருக்கும் என்பது ஒரே ஒரு வாய்ப்பு. அப்படி இரட்டைப் பிறவியாகப் பிறந்தவள் என்பது ரம்யாவுக்கே தெரியாமல் இருந்தது. ரம்யாவுடன் பிறந்த இன்னொருத்தி கர்நாடகாவின் ஹாசனில் இருப்பதைக் கண்டுபிடித்தோம். அப்போது, எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்தோம். இந்த எல்லாக் கொலைகளுக்கும் அவள்தான் காரணம் என நினைத்தோம். ஆனால்...’’ என எதிரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தொண்டையை நனைத்துக் கொண்டார். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லிவிட்ட திருப்தி இருந்தது.

‘‘ஆனால்... ரம்யாவுடன் பிறந்த அந்த இன்னொரு பெண்ணான லக்ஷ்மி சாதாரணப் பெண். கிராமத்து விவசாயி. படிப்பறிவோ, உலக ஞானமோ இல்லாதவள். ஒரு குழந்தைக்குத் தாய். அவள் 15 நாள்களுக்குள் இத்தனை நகரங்களில் சுழன்று ஏழு கொலைகளைச் செய்திருக்க வாய்ப்பே இல்லை. மேலும், அவளுக்குக் கொல்வதற்கான காரணம் எதுவும் இல்லை. டெல்லியை அவள் மேப்பில்கூட பார்த்ததில்லை. சொந்த கிராமத்தைவிட்டு எங்கும் செல்லாதவள். இந்த நேரத்தில்தான், இடையில் சம்பந்தமில்லாமல் விஞ்ஞானி சுசீந்திரன்  கொலையானது, விநோதமாக இருந்தது.  அவரது முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்று காணாமல் போயிருந்தது. அது, அவர் எழுதிய ஒரு கட்டுரை.’’

கமிஷனர் பேச்சை நிறுத்தி, ‘‘இனிமே சயின்டிஸ்ட் யாராவது சொன்னாத்தான் சரியா இருக்கும்’’ என்றபடி ராகுலைப் பார்த்தார். பேராசிரியர், தான் தயாராக இருப்பதை உணர்த்தி, சற்றே முன் நகர்ந்து அமர்ந்தார்.

‘‘என்னால் கமிஷனர் அளவுக்குக் கோவையாகப் பேச முடியுமான்னு தெரியவில்லை. ட்ரை பண்றேன். சுசீந்திரன் எழுதியிருந்தது பேரலல் யூனிவர்ஸ் பத்தித் தான்னு எங்களுக்கே கடைசியாத்தான் தெரிஞ்சது. பேரலல் யூனிவர்ஸ்ங்கிறது இப்ப நம்ம பிரபஞ்சம் இருக்கில்லையா... அதே போல இன்னொரு பிரபஞ்சம் இருக்குன்னு சொல்ற தியரி. பிக் பாங் மூலமாக நம் பிரபஞ்சம் உண்டானபோதே அந்தப் பிரபஞ்சமும் உருவானது. அது... அது...’’ ராகுல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி உளறினார்.

‘‘அதோ அந்தப் பொண்ணுதான்... அதுதான் பேரலல் யூனிவர்ஸ் பொண்ணு’’ என ஊடகத்துறை யினர் கூட்டத்தில் ஒரு பெண்ணைக் காட்டினார். ‘‘யார்... யார்...’’ என எல்லோரும் பதறி அவர் காட்டிய திசையைப் பார்க்க, அந்தப் பெண் கேமராக்களுக்கு நடுவே மறைந்து, சட்டென காணாமல் போனாள்.

கமிஷனர், ‘‘கொஞ்சம் கோ ஆப்பரேட் பண்ணுங்க. இந்தக் கூட்டத்தில் உங்களுக்குத் தெரியாம யாராவது இருக்காங்களான்னு ஒவ்வொருத்தரும் ‘செக்’ பண்ணுங்க’’ என்றார். ஆனால், ரம்யா போல இருந்த அந்தப் பெண் அங்கே இருந்து சுத்தமாகக் காணாமல் போயிருந்தாள். கூச்சலும் குழப்பமும் மட்டுமே அங்கே மிச்சமிருந்தது.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 26

வினோத்தைக் காணவில்லை என அறிந்ததும்,   உடனே சுதாரித்தான் ராமநாதன். குமரேசன் மருத்துவமனைக்குப் போவதாக ஒரே ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் வினோத். அதன் பிறகு, வினோத்தின் போன் சுவிட்ச்ஆஃப் நிலையில் இருந்தது. இப்படி ஒரு நாள் முழுக்க ஆஃப் ஆகிக்கிடக்க வாய்ப்பே இல்லை.

வினோத்தின் ஆபீஸுக்குப் போன் செய்து பார்த்தான்.

‘‘வரவில்லை.’’

ரம்யாவுக்குப் போன் செய்தான்.

‘‘தெரியவில்லை.’’

என்னவோ நிகழ்ந்திருக்கிறது. அந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தான். நீண்ட பார்க்கிங். நிதானமாக ஆராய்ந்தபோது, அங்கே வினோத்தின் பைக் நின்றிருந்தது. சீட்டைத் தொட்டுப் பார்த்தான். ஒரு நாள் இருந்ததற்கான தூசு படிந்து கிடந்தது. இங்கே வந்து வண்டியை நிறுத்திவிட்டு எங்காவது போனானா? அல்லது இங்கேதான் இருக்கிறானா? அவனது போனுக்கு என்ன ஆனது? அவனுக்கு என்ன ஆனது?

யோசனையுடன் உள்ளே ரிசப்ஷனிஸ்டிடம் சென்று, ‘‘இங்கே வினோத்னு ஒருத்தர் வந்தாரா?’’ எனக் கேட்டான்.

‘‘எந்த வினோத்?’’ என்றவள், உடனே ‘‘இல்லை’’ என்றாள். ‘எந்த வினோத்’துக்கும் ‘இல்லை’க்கும் தொடர்பு தெரிந்தது. ‘‘அப்படீன்னா உங்களுக்கு எந்த வினோத்னு தெரிஞ்சிருக்கு’’ என்றான்.

‘‘எந்த வினோத்தும் இங்க இல்ல. அதான் அப்படிச் சொன்னேன்.’’

‘‘லக்ஷ்மினு யாராவது இங்கே வந்தாங்களா?’’ என்றான்.

அவள் இன்டர்காமை எடுத்தாள்.

(தொடரும்...)