மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28

கொலை செய்ய வருகிறாள் என்று அஞ்சி நடுங்கியவனின் கையில் அவள் சுடச்சுட ஒரு கடிதம் கொடுப்பாள் என வினோத் கனவிலும் நினைக்கவில்லை. அந்தத் தாளைக் கொடுத்துவிட்டு அவள் பார்த்த பார்வையில் ஏதோ ஏக்கம் இருந்ததை அவன் கவனித்தான்; அல்லது கோபம் போலவும் தெரிந்தது. அதன்பிறகு சர்வசாதாரணமாக வழக்கம் போலச் சுவரில் புகுந்து மறைந்துவிட்டாள். மிரண்டு போன டாக்டர், எல்லோரையும் அவிழ்த்துவிடச் சொல்லிவிட்டு வெளியே ஓடினார். ராமநாதன் சொல்லித்தான் அவர் போலீஸில் போய் சரண்டர் ஆனது தெரியும்.

அவள் கொடுத்துவிட்டுப்போன காகிதத்தில் இருப்பது உடனுக்குடன் காவல் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டு வாட்ஸ்அப் ரூபத்தில் சில நொடிகளில் உலகம் முழுக்க எட்டியது.

எல்லாம் தமிழ் எழுத்துக்கள்தான். ஆனால், வார்த்தையாக எதுவும் புரியவில்லை.

எந்குன்
ங்துவஅ
கிஇந்ங்
ருங்தேகு
எசேவவி
ன்ர்ர்ரை
னைப்யாவி
ச்பர்ல்?

தமிழாராய்ச்சித் துறையினர் பலருக்கும் வேகமாக இந்த எழுத்துகளை அனுப்பி, இது என்னவென்று படிக்கச் சொல்லிக் கேட்டனர். ஒரு சீர் ஆசிரியப்பா வகையைச் சேர்ந்த பாடலா... ஒவ்வொரு எழுத்துமே ஒவ்வொரு வார்த்தையா... சும்மா கிறுக்கிக் கொடுத்துவிட்டுப் போனாளா... சங்கேத மொழியா? எதுவுமே புரியவில்லை.

டெல்லி பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்கள் மத்தியில் தோன்றியவள், அடுத்த நொடியே நுங்கம்பாக்கத்தில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தது மனோவேகச் செயலாக இருந்தது. வினோத்துக்கு இன்னும் பிரமிப்பு அகலவில்லை. லக்ஷ்மியையும் குழந்தையையும் பத்திரமாக ரம்யாவின் வீட்டில் ஒப்படைத்துவிட்டு, அடுத்து என்ன செய்வதென்று திகைப்பில் இருந்தவனுக்கு, தான் ஓரிடத்தில் வேலை பார்ப்பது நினைவுக்கு வந்தது. அனிடூனுக்குச் சென்றான். ரம்யா அங்குதான் இருந்தாள். நடந்த கதையைச் சொல்ல வெகு நேரம் ஆகும் என்பதால் அவளும் கேட்கவில்லை; அவனும் சொல்லவில்லை.

துண்டுத்துண்டாக சில கேள்விகள் மட்டும் கேட்டாள். ‘‘பூங்குழலி மாடல் முடிஞ்சுடுச்சா... விக்னேஷ்கிட்ட நாகப்பட்டினம் புதை மணல் கிரியேட் பண்ணச் சொன்னமே, என்னாச்சு?’’ போன்ற கேள்விகள். எல்லாமே பொன்னியின் செல்வன் சம்பந்தப்பட்டவை. எப்படித்தான் உடனடியாக வேலையில் மூழ்க முடிகிறதோ? இன்னும் பத்து நொடிகளில் உலகமே அழியப் போகிறது என்ற நெருக்கடியிலும் ஏதோ ஒரு பட்டனை அழுத்தி, டிஸ்ப்ளே ஸ்கிரினில் பாஸ்வேர்டைச் சொல்லி... அழிவு நெருங்குவதற்கு ஒரு நொடிக்குமுன்பு உலகைக் காப்பாற்றும் ஜேம்ஸ்பாண்டு பாணியில் ரம்யா வேலையில் மும்முரமாக இருந்தாள்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28

அவளுடைய ஒவ்வொரு கேள்விக்கும் சம்பந்தமே இல்லாமல், வினோத் அவன் பங்குக்கு ஒவ்வொரு தகவலாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘‘டாக்டர் குமரேசனின் ஹாஸ்பிடல்லதான் எல்லோரையும் கடத்தி வெச்சிருந்தாங்க. லக்ஷ்மிதான் டாக்டரைக் கொன்னுருப்பாள்னு சந்தேகம் அவங்களுக்கு.’’

‘‘ம்... ம்... கிளம்பறதுக்கு முன்னாடி ரிக்கிங் கொஞ்சம் சரி பார்த்துடுங்க.’’

‘‘பார்த்துடுறேன். அங்க ஏலியன் பொண்ணு வந்ததால நாங்க தப்பிச்சோம்.’’

‘‘அப்படியா? ரெண்டு மாச ஒர்க் டிலே ஆகிடுச்சு. எல்லாரும் தினமும் ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா வேலை பார்த்தாத்தான் முடியும்.’’

அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை. ‘‘ரம்யா... நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பேசுறே? உன் கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லையா?’’

ரம்யா அமைதியாக அவனைப் பார்த்தாள். ‘‘எனக்கு அதைப் பத்தி யோசிக்கவே பயமா இருக்கு வினோத். நான் எதையாவது நினைச்சு, அது அந்த ஏலியனுக்குத் தெரிஞ்சு, இன்னொரு கொலை பண்ணிடப் போகுதோன்னு பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கேன். ‘மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே’ன்னு சொன்ன மாதிரிதான். அது ஞாபகமாவே இருக்கு. நீயும் வந்ததிலிருந்து அதையே பேசிக்கிட்டு இருக்கே. எனக்கு அதைப்பற்றிப் பேசவே நடுக்கமா இருக்கு.’’

‘‘ஆனா... அது ஒரு பேப்பர்ல என்னவோ எழுதிக் கொடுத்தது. அது என்னன்னு தெரிஞ்சுட்டா, இந்தப் பிரச்னைக்கெல்லாம் விடிவு கிடைச்சுடும்.’’

‘‘நீ வர்றதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டி.வி-யில அதைக் காட்டினாங்க. அது என்னன்னே புரியலை.’’

‘‘ரம்யா... அந்த ஏலியன் என்கிட்ட அதை ரொம்ப நம்பிக்கையோட குடுத்த மாதிரி இருக்கு.’’

‘‘வேண்டாம் வினோத். அதை போலீஸ்கிட்ட குடுத்துட்ட இல்ல. அவங்க பாத்துக்குவாங்க... நமக்கு அந்தத் தொல்லையே வேண்டாம். அது யாரை வேணா கொன்னுக்கட்டும். போலீஸ் அதை எப்படியாவது பிடிச்சுக்கட்டும். சயின்டிஸ்டுங்க பாடு. போலீஸ் பாடு.’’

அவள் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாமல் எழுந்து, வேகமாக அவளுடைய கேபினுக்குச் சென்றுவிட்டாள். ரம்யாவின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. காரணம், அவளைப் போலவே இருந்த ஆபத்து.

ந்த ஏலியன் பெண் கொடுத்த எழுத்துக்களை வைத்து எத்தனை வார்த்தைகளை உருவாக்க முடியும் என யோசித்தான் வினோத். மூன்று எழுத்துக்களை வைத்து ஆறு மூன்றெழுத்து வார்த்தைகளை உருவாக்க முடியும். ஐந்து எழுத்துக்கள் என்றால் 120 வார்த்தைகளை உருவாக்க முடியும். ஒவ்வொரு அடியிலும் நான்கு நான்கு எழுத்து 1*2*3*4= 24 வார்த்தைகள். மொத்தம் எட்டு வரிகள்... 8*4=32 எழுத்துகள்... 1*2*3*... 31*32 நிதானமாக ஒவ்வொரு வரியாக 24 விதமாக எழுதிப்பார்க்க நினைத்து அமர்ந்தான். கொஞ்ச நேரத்திலேயே மண்டை வலி எடுத்து அப்படியே கட்டிலில் நெட்டுக்குத்தாக விழுந்து உறங்கிப் போனான்.

காலையில் ரம்யாவுக்குப் போன் செய்து இந்த எழுத்துக்களை வரிசையாகச் சொல்லி, ‘‘இதில் எத்தனை வகையான காம்பினேஷன் உருவாக்க முடியும்’’ எனக் கேட்டான்.

‘‘n ஃபேக்டோரியல் கண்டுபிடிக்க சாஃப்ட்வேர் இருக்கிறது. நெட்டில் போய்ப் பார்.’’ உதவும் எண்ணமே இல்லாமல் சொன்னாள். குரலில் லேசாக வெறுப்பு இருந்ததை அவனால் உணர முடிந்தது. நிகழ்தகவு கண்டுபிடிக்கிற சாஃப்ட்வேர் ஒன்றை எடுத்து, மொத்த எழுத்துக்களையும் கொடுத்தான். அது அதில் மொத்தம் 32 எழுத்துக்கள் இருப்பதாக உறுதிப்படுத்திக்கொண்டு, நீண்ட கணக்குப் போட்டு, 36 டிஜிட் கொண்ட ஓர் எண்ணைச் சொன்னது. பில்லியன், ட்ரில்லியன் தாண்டி ஏதோ அதற்கு ஒரு பெயர் இருக்கலாம். பல ட்ரில்லியன் வார்த்தைகள் இருக்கின்றன என்ற நினைப்பே கண்களைச் சொருக வைத்தது. அத்தனை ட்ரில்லியன் வார்த்தைகளிலிருந்து எடுத்துக் கோத்து ஒரு வாக்கியம் செய்வது இந்த ஜென்மத்தில் சாத்தியம் இல்லை. ஆராய்ச்சியை அப்படியே விட்டுவிட்டு காலையில் மறுபடி தூங்கினான். அது தூக்கமில்லை... மயக்கம்.

எண் மயக்கம் தெளிந்து மீண்டும் எழுந்தான். மனம் தளர விருப்பமில்லை. பைக்கை எடுத்துக்கொண்டு அனிடூன் மீடியா நோக்கிப் போனான். பைக் ஓட... சிந்தனையும் ஓட... ஆபீஸில் இருக்கிற அத்தனை பேரையும் பயன்படுத்தினால் பத்து நாள்களுக்குள் ஓரளவுக்கு அவள் சொன்ன சங்கேத வார்த்தையைக் கண்டுபிடித்துவிட முடியும் என யோசித்தான். வழியில் சாஃப்ட்வேர் சொல்யூஷன் என போர்டைப் பார்த்து பைக்கை நிறுத்தினான். அந்த கம்ப்யூட்டர் சென்டருக்குள் நுழைந்ததும் நாலா பக்கத்திலுமிருந்து பெண்கள் வணக்கம் தெரிவித்தபடி நெருங்கிவந்தனர்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28

‘‘ஒரு ஹெல்ப் வேணும்... என்கிட்ட இருக்கிற எழுத்துக்களை வெச்சு என்னென்ன வார்த்தைகள் உருவாக்க முடியும்னு தெரியணும்.’’

‘‘என்ன சொல்றீங்க?’’ லிப்ஸ்டிக் உதடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஒருத்தி பேசினாள்.

வாட்ஸ் அப் மெசேஜைக் காட்டினான்... ‘‘இது என்னன்னு கண்டுபிடிக்கணும்.’’

‘‘தட் ஏலியன் கோட்? ‘னங் ஜம் ஜின்’னு... ஒண்ணுமே புரியலை! ஏதோ ஜப்பான்காரியா இருப்பாளோ?’’ என்றாள். ‘‘நேத்தே நாங்கல்லாம் ட்ரை பண்ணிப் பார்த்துட்டோம்...’’ என சில பேப்பர்களைக் காட்டினாள். அவர்கள் ஆளாளுக்கு முயற்சி செய்த வார்த்தைகள் அதில் இருந்தன. உலகம் முழுக்கத் தமிழர்களுக்கு இது ஒரு புதிர் போல இருந்திருக்கலாம்.

இன்னொரு பெண் வந்து, ‘‘மீனிங்ஃபுல்லா ஒண்ணும் வரலை. இங்கிலீஷ் லெட்டர்ஸா இருந்தா, இந்த லெட்டர்ஸை வெச்சு எத்தனை வார்த்தை உருவாக்கலாம்னு சொல்ல முடியும். அதுவும்கூட ஓரளவுக்குத்தான். தமிழ்ல நோ சான்ஸ்’’ என்றாள். ஒவ்வொரு பெண்ணாக ‘இது வருமானத்துக்கு வழியில்லாத கேஸ்’ என விலகிப் போய் முன்னர் இருந்த இடங்களில் நின்றுகொண்டனர்.

விரக்தியோடு ஆபீஸ் வந்தான். வேலைக்கு நடுவே ஒவ்வொரு வார்த்தையாக உருவாக்கிப் பார்த்தபடியே இருந்தான். எங்கேயோ இதற்கு விடை இருக்க வேண்டும். பல வார்த்தைகள் பொருளற்றவையாக இருந்தன. பொருளற்ற வார்த்தைகளை மார்க்கர் கொண்டு அடித்துக்கொண்டே வந்தான்.

அந்த ஏலியன் பெண் கொடுத்த வார்த்தைகளை வாட்ஸ் அப்பில் பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான். பார்த்... ஜப்பான்காரியா இருப்பாளோ? ஒரு கணம் அவனை உலுக்கியது. ஜப்பான்காரியேதான்!

‘‘ஓ மை காட்’’ என்றான். அவன் கத்திய கத்தலில் முத்துராஜா முதற்கொண்டு அனைவரும் ‘என்ன’ என நெருங்கி வந்து பார்த்தனர்.

‘‘கண்டுபிடிச்சுட்டேன்.’’

வினோத் உற்சாகமாகச் சொன்னான்.

(அடுத்த இதழில் முடியும்!)