மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன்! - 29

நான் ரம்யாவாக இருக்கிறேன்! - 29
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன்! - 29

தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்

நான் ரம்யாவாக இருக்கிறேன்! - 29

போர்க்கால நடவடிக்கைகள் போல எல்லாம் நடந்திருந்தன. அரசு இயந்திரத்தின் அதிவேக சுழற்சியை அந்த இரவில்தான் வினோத் முழுமையாக அறிந்தான். ரம்யா வழக்கு தொடர்புடைய அனைவருக்கும் அவசரமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவோடு இரவாக பலரையும் ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து டெல்லி. பிறகு ஜெனீவா என அரசு அதிகாரிகளின் கண்காணிப்பில் ஒரு நேர்த்தியோடு எல்லாம் நடந்தன.

சம்பந்தப்பட்ட எல்லோரையும் ஜெனீவாவுக்கு வரவழைக்க வேண்டிய வேலையைக் கவினிடம்தான் கொடுத்திருந்தனர். ஒரு தனி விமானத்தில் அவர்களை அழைத்து வருவதற்கான திட்டத்தை அவன்தான் வகுத்தான். சென்னையின் பதற்றம் செர்ன் அமைப்புக்குத் தொற்றுவதற்குச் சற்றே தாமதமாகிவிட்டாலும், ஆபத்தை எல்லோரைவிடவும் அதிகமாக அவர்கள் உணர்ந்திருந்தனர். பேரலல் யூனிவர்ஸ் தியரி ஒரு கிலியையும் தெளிவையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியிருந்தது. இதோ இப்போது வினோத், ரம்யா, தீபா, ராகுல், அவரின் ஐ.ஐ.டி சக அறிவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், உதவியாளர்கள்... எனப் பெரும் பட்டாளம் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தது.

வினோத்துக்குப் பக்கத்து இருக்கையில் ரம்யா அமர்ந்திருந்தாள். பயம், குளிர் எல்லாம் கலந்த நடுக்கத்தில், அவள் வினோத்தின் ஜெர்கி னோடு சேர்த்து அவனுடைய கையை அணைத்துப் பிடித்திருந்தாள். அந்த மெத்தென்ற பாதுகாப்பில், விழித்தபடி உறங்க முடிவதை உணர்ந்தாள். அவளுடைய தலைமுடியைக் கோதி புன்னகைத்தான் வினோத்.

‘‘சாரி வினோத்... நீ எவ்வளவோ கேட்டப்பவும் உனக்கு ஹெல்ப் பண்ணாம இருந்துட்டேன். எப்படி கண்டுபிடிச்ச?’’ என்றாள். தலைக்கு மேலே இருந்த சிறிய விளக்கை ஒளிரச் செய்து, வாட்ஸ்அப் சேமிப்பில் இருந்த வேற்றுகிரக பெண்ணின் கடித எழுத்துக்களைக் காட்டினான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன்! - 29

‘‘சிம்பிள்... டென்ஷன்ல இதைக் கண்டுபிடிக்க முடியாமப் போச்சு. என்னைப் போல கண்டுபிடிச்ச சிலரும் அதை எப்படி, யாரிடம் சொல்வதென்று யோசித்துத் தயங்கியிருக்கலாம். இதைப் படி.’’

படித்தாள்.

‘எந்குன்
ங்துவஅ
கிஇந்ங்
ருங்தேகு
எசேவவி
ன்ர்ர்ரை
னைப்யாவி
ச்பர்ல்?’

‘‘புரியலை.’’

‘‘இதை முதல்ல பெர்முடேஷன் காம்பினேஷன் மெத்தட்ல ட்ரை பண்ணினேன். ஆனா, அதில பல ட்ரில்லியன் வார்த்தைகள் வரும்னு தோணுச்சு. எப்படியும் கண்டுபிடிக்கணும்னு நினைச்சேன். ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல கேட்டேன். ‘என்ன சார்? ஒண்ணுமே புரியலை... ஜப்பான்காரியா அவள்’னு ஒரு பொண்ணு சொல்லுச்சு. பல்ப் எரிஞ்சது. ஜப்பான் மொழி எழுத்துகளை மேல இருந்து கீழே எழுதற மெத்தேட் உண்டு. மேல இருந்து கீழே படிச்சுப் பார்த்தேன். கொஞ்சம் அர்த்தம் வர்றாப்ல சில வார்த்தைகள் தோணுச்சு. எங்கு, என்னை, சேர்ப்பர், அங்கு, விரைவில்...’’

‘‘ஆமாம்பா...’’

‘‘இன்னொரு விஷயம் புரிஞ்சுது. நான்கு நான்கு எழுத்து, நான்கு நான்கு வரிகளாதான் அந்த யூனிவர்ஸ்ல எழுதுவாங்கன்னு கண்டுபிடிச்சேன். முதல் நான்கு வரிகளை முதல்ல படிக்கணும். அப்புறம் அடுத்த நான்கு வரிகளைப் படிக்கணும்.’’ வினோத் அந்த சொற்களை நான்கு நான்கு வரிகளாகப் பிரித்துக் காட்டினான்.

‘‘இப்ப படி.’’ முதல் நான்கு வரி இப்படி இருந்தது.

‘எந்குன்.
ங்துவஅ
கிஇந்ங்
ருங்தேகு’

ரம்யா வேகமாகப் படித்தாள்... ‘‘எங்கிருந்து இங்கு வந்தேன். அங்கு... சூப்பர்.’’

‘‘இப்ப அடுத்துபடி...’’

‘எசேவவி
ன்ர்ர்ரை
னைப்யாவி
ச்பர்ல்?’

‘‘என்னைச் சேர்ப்பவர் யார், விரைவில்... அவ அவளோட யூனிவர்ஸுக்குப் போக விரும்புறா.’’

‘‘ஆமா. நம்முடைய யூனிவர்ஸுக்கும் அவங்களுக்கும் இப்படிச் சின்ன வித்தியாசம் இருக்கும்னு தோணுது. தமிழ் இருக்கும்... ஆனா அதைப் பேசுவதிலும் எழுதுவதிலும் சில மாற்றங்கள் இருக்கும்.’’

‘‘ஆச்சர்யமா இருக்கு. என்னன்னா, இதில நானே சம்பந்தப்பட்டதனால இவ்வளவு நாளா ஆச்சர்யப்படவே இல்லை.’’

‘‘நம்ம யூனிவர்ஸ் தோன்றி சில நொடிகள்ல அந்த யூனிவர்ஸ் தோன்றியிருக்கலாம். இதில தோன்றிய எல்லாமும் அதிலும் இருக்கலாம்னு சொல்றாங்க.’’

‘‘அப்ப நீயும் அங்க இருப்பியா?’’

‘‘நீ இருந்தா நானும் இருப்பேன்தானே?’’ வினோத் குரலில் மகிழ்ச்சி.

‘‘நம்மைப் போலவேதான் அவங்களும் இருப்பாங்களா?’’

‘‘அப்படீன்னா?’’

‘‘அதாவது நாம இப்ப இருக்கிற மாதிரி...’’ ரம்யாவுக்கு முகம் சிவந்துவிட்டது. அவன் தோளில் புதைந்துகொண்டாள்.

‘‘செர்ன்ல எல்லாம் நல்லபடியா முடிஞ்சுட்டா நல்லாருக்கும்.’’

‘‘வந்து பொன்னியின் செல்வன் முதல் பாகம் முடிச்சுடுவேன்.’’ ரம்யா அனிடூன் மூடிலேயே இருந்தாள்.

‘‘கடைசி அத்தியாயம்தான் பாக்கி இல்லையா?’’

‘‘மாயமோகினி.’’

‘‘ஏன் அவளை ஞாபகப்படுத்துறே?’’

‘‘நான் கல்கி எழுதின கடைசி அத்தியாயம் தலைப்பைச் சொன்னேன்.’’

‘‘உஃப்’’ என்றபடி இல்லாத நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டான் வினோத்.

செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தில் அவர்கள் எந்த உலோகக் கருவிகளின் பரிசோதனைகளுக்கும் ஆட்படாமல் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். மிகப் பெரிய... மிக நீண்ட டர்புலன்ஸ் அமைப்பை சில நிமிடங்களில் பவர் பாயின்ட் பிரசன்டேஷன் போல காட்டினர். இன்றைய தினம் அந்த ரியாக்டரில் அணுத்துகள்களை மோதச் செய்து கடவுள் துகளை உருவாக்க இருப்பதைச் சொன்னார் ஆரஞ்சு நிறத்தில் இருந்த ஓர் ஐரோப்பியர். எல்லோரும் தயாராக நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஒரு லண்டன் விஞ்ஞானி அவசரமாக வந்து அவர் காதைக் கடித்தார். அந்த ஆரஞ்சு ஐரோப்பியர் கொஞ்சம் வெளிறியது தெரிந்தது.

‘‘இங்கே இருப்பது மொத்தம் 34 பேர். ஆனால், ஹியூமன் சென்சர் 35 பேர் காட்டுகிறது. இதைத்தான் மிஸ்டர் ஜான் சொன்னார்.’’ அந்த ஆரஞ்சு விஞ்ஞானி நிறுத்தி எல்லோர் முகத்தையும் பார்த்தார். ‘‘அதற்காக யாரும் அஞ்ச வேண்டாம். இந்தியாவிலிருந்து நீங்கள் வந்த விமானத்திலேயே ஆட்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகத்தான் இருந்தது. நடுவானில் அச்சம் தர வேண்டாம் என்பதனால்தான் தெரிவிக்கவில்லை.’’

வினோத் வியப்புடன் ரம்யாவைப் பார்த்தான்.

விஞ்ஞானி தொடர்ந்தார். ‘‘இப்போது அணுத்துகள் சிதறலின்போது இங்கு வந்திருக்கும் அந்தப் பிரபஞ்சப் பெண், மீண்டும் அவருடைய பிரபஞ்சத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பு 99.99 சதவிகிதம் உள்ளது. அவள் விரும்புவதும் அதைத்தான் என்பது அவள் தந்த கடிதம் மூலம் தெரிந்தது.’’

பேராசிரியர் ராகுல் எழுந்தார். ‘‘நாம் சொல்வது அந்தப் பெண்ணுக்குப் புரியும் என்றால் தமிழிலேயே சில விஷயங்களைச் சொல்வது நல்லது’’ என கவினைப் பார்த்தார்.

ஆமோதித்து எழுந்தான் கவின்.

நான் ரம்யாவாக இருக்கிறேன்! - 29

‘‘அந்தப் பிரபஞ்சப் பெண் மீண்டும் சென்றுவிடுவாள் என்று பேராசிரியர் புரூனோ சொன்னார். ஸ்டீபன் ஹாக்கிங் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்த வார்ம் ஹோல் நமக்குத் தெரிய வந்திருக்கிறது. வருங்காலங்களில் நாம் அவர்களோடு தொடர்பில் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நமக்கும் அவர்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கும். உதாரணத்துக்கு இங்கே மதவாதம் பேசுகிற ஒருவர், அங்கே இங்கர்சால் கொள்கைகளில் மிகுந்த பற்று உள்ளவராக இருப்பார். அதாவது, கடவுள் நம்பிக்கை இல்லாதவராக...’’

அந்தச் சூழ்நிலையிலும் சிலர் சிரித்தனர்.

ராகுல் குரலைச் செருமி, ‘‘தமிழில்’’ என்றார்.

கவின் சிரித்தான். ‘‘இப்ப நான் முழுக்க அந்த இன்னொரு ரம்யாவுக்காகப் பேசறேன். உனக்காகத்தான் இந்த ரியாக்டரை இயக்குறோம். ஒன்றும் ஆபத்தில்லை. நீ மறுபடி அங்க போயிடலாம். எங்களைப் பத்தி நல்லவிதமா எடுத்துச் சொல்லலாம். இங்கும் அங்கும் இருக்கிற வித்தியாசங்களைச் சுமந்துக்கிட்டுப் போ. தெரிவி. நீ ஏதாவது பேசணும்னாலும் பேசலாம்.’’

எல்லோரும் திசைக் கொருவராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். எந்த சத்தமும் எங்கிருந்தும் எழவில்லை. அரங்கு நிறைந்த அமைதி.

ராகுல் அப்போது ஜானுக்கு சைகை செய்தார், டர்புலன்ஸ் ரியாக்டரை இயக்கலாம் என. அவர் பொறியாளர் குழுவுக்கு பட்டனை அழுத்தி அனுமதி அளிக்க... சில நிமிடங்களில் அந்த அறைக்குள் இருந்து ஏதோ ஒன்று குறைந்ததை மானசீகமாக உணர்ந்தனர். அதே நேரத்தில் மெல்லிய குரல் ஒன்று அங்கே ஒலித்துத் தேய்ந்தது... ‘‘நான் ரம்யாவாக இருக்கிறேன்!’’

ஹியூமன் சென்ஸர் கவுன்டரில் இப்போது ஒரு நபர் குறைந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்தோடு அந்த ஒளிர் பலகையைப் பார்த்தனர்.

‘‘ஓ மை காட்’’ ஜான் அதிர்ந்தார்.

இரண்டு எண்ணிக்கை குறைந்திருந்தது. ஒருவர், அந்த இன்னொரு ரம்யா. இன்னொருவர்? ஒவ்வொருவரும் அவரவர் அன்பர்களைத் தேடினர். தீபா சுதாரித்து, ‘‘கவின்’’ என அலறினாள். கவினைக் காணவில்லை.

அவனை எப்படியும் மீட்டு விடுவோம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்த அதே நேரத்தில்... கவின், ஓர் உயர்ந்த கட்டடத்தின் உச்சியில் இருந்த படி மக்களின் நடமாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். நகரம் சுத்தமாக இருந்தது. சாலை களுக்கு நிகராக ஆறுகள் இருந்தன. எந்த வாகனத்துக்கும் சக்கரங்கள் இல்லை. இன்னொரு கவின் அங்கே மீன் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

(நிறைவு)