Published:Updated:

``கதை வழியா குழந்தைகள் பிரச்னைகளைச் சொல்றாங்க!" கதை சொல்லி அமுதா

நான் கதை சொல்லும் எல்லா ஸ்கூலிலும் குழந்தைகளிடம் வார்த்தைகளால் மட்டுமன்றி, உணர்வுகள் மூலமாகவும், நடிக்கிறது மூலமாகவும் நெருங்க நினைப்பேன். என் சோகத்தைப் பகிர்வது மாதிரி பேசி, அவங்க சோகத்தைத் தெரிஞ்சுட்டுத் தீர்த்துவைப்பேன்.

``கதை வழியா குழந்தைகள் பிரச்னைகளைச் சொல்றாங்க!" கதை சொல்லி அமுதா
``கதை வழியா குழந்தைகள் பிரச்னைகளைச் சொல்றாங்க!" கதை சொல்லி அமுதா

` `ரு குட்டிக் குருவி’ அக்கானுதான் குழந்தைகள் என்னைக் கூப்பிடுவாங்க. அடுத்தடுத்து குழந்தைகள் மீது வன்முறை நடக்கும்போதுதான் குட்டிக் குருவிக் கதையை நான் சொல்ல ஆரம்பிச்சேன். அதுவே இப்போ என் அடையாளம் ஆகிடுச்சு'' எனக் குதுகலமாகப் பேசத் தொடங்குகிறார், கதை சொல்லி அமுதா கார்த்திக்.

``என் சொந்த ஊர், கோயமுத்தூர். படிச்சு முடிச்சதும் கல்யாணம் ஆச்சு. ரெண்டு பெண் குழந்தைகள். மூத்த பொண்ணு ஶ்ரீநிதி ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சப்போ விதவிதமா கதை சொல்வேன். அப்போதான் எனக்குள்ளும் கதை சொல்லும் திறமை இருக்கிறதை உணர்ந்தேன். எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. சொப்னா புக் ஹவுஸின் தொடர்பில் இருந்தேன். அவங்க மூலமாதான் ஹேப்பி ஸ்ட்ரீட் ஈவென்ட்ஸில், `கோ க்ரீன்’  கான்செப்ட்ல ஒரு வொர்க் ஷாப் பண்ண வாய்ப்பு கிடைச்சுது. அந்த நிகழ்ச்சி தெருவில் நடக்குறதா இருந்துச்சு. நான் அதைப் பண்றதுக்கு ஆர்வமா இருந்தேன். ஆனால், அங்கே யார் வருவாங்க, எந்த மாதிரி கதையைச் சொன்னால் அவங்களுக்குப் பிடிக்கும்னு நிறைய கேள்விகள், தயக்கம் இருந்துச்சு.

அந்தத் தயக்கத்தை ஓரம் கட்டிவெச்சுட்டு மேடையேறி கதை சொன்னேன். சொல்லி முடிச்சதும் சில நொடிகள் எல்லாரும் அமைதியா இருந்தாங்க. அடுத்த நொடியே, பலத்த கைதட்டல் எழுந்துச்சு. எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. முதல் மேடை கொடுத்த அங்கீகாரம், அடுத்தடுத்த மேடைகளைக் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அப்புறம் யூத்ஃபுல் இண்டியா அமைப்புடன் சேர்ந்து கதை சொல்ல ஆரம்பிச்சேன். குழந்தைகள் மேலே அதிக கவனம் வைக்கவேண்டிய காலகட்டத்துல நாம் இருக்கோம். என் கதைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்காகவே இருக்கும். நான் சொன்ன கதைகளில் ரொம்ப முக்கியமானது, `குட்டிக் குருவி’ கதைதான். 

குழந்தைகள், பெற்றோரிடம் நெருக்கமா இருக்குறப்போ அவங்களுக்கு ஆபத்து குறையும் என்பதுதான் அந்தக் கதையின் கரு. இணையத்துக்குக் குழந்தைகள் அடிக்ட் ஆகறது, குட் டச் பேட் டச் போன்ற விஷயங்களை மறைமுகமாவெச்சு அந்தக் கதையை வடிவமைச்சேன். குழந்தைகளுக்கு அந்தக் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஒவ்வொரு முறை பள்ளிக்கூடங்களில் போய் கதை சொல்லிட்டு வரும்போது மனநிறைவா இருக்கும். குழந்தைகளுடன் இருக்கிறதே சந்தோஷமானது. அதில், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இதுபோன்ற விஷயங்கள் செய்யறது உற்சாகமானது'' எனக் குழந்தமையோடு சிரிக்கிறார் அமுதா.

``பெற்றவர்களே பிள்ளைகளுக்கு ரோல் மாடல். அதனால், அவங்கதான் குழந்தைகளிடம் வாசிப்புத்திறனை வளர்க்கணும். அதுவே உலகத்தைத் தெரிஞ்சுக்க குழந்தைகளுக்கு உதவும். பெற்றோர், பள்ளி மீட்டிங் போகிறப்போ தனியா போங்க. அவங்க குறைகளை ரகசியமா தெரிஞ்சுக்கோங்க. வீட்டுக்கு வந்து பக்குவமாகச் சொல்லிப் புரியவைங்க அப்போதான் குழந்தைகள் உங்ககிட்ட மனம்விட்டுப் பேசுவாங்க. அவங்க தப்பே பண்ணாலும் வந்து சொல்வாங்க. இதை நான் பள்ளிகளில் குழந்தைகளிடம் பேசும்போது புரிஞ்சுக்கிட்டது.

நான் கதை சொல்லும் எல்லா ஸ்கூலிலும் குழந்தைகளிடம் வார்த்தைகளால் மட்டுமன்றி, உணர்வுகள் மூலமாகவும், நடிக்கிறது மூலமாகவும் நெருங்க நினைப்பேன். என் சோகத்தைப் பகிர்வது மாதிரி பேசி, அவங்க சோகத்தைத் தெரிஞ்சுட்டுத் தீர்த்துவைப்பேன். வெறுமனே கதை சொல்வதை மட்டும் குறிக்கோளா வெச்சுக்கலை. சமூகப் பிரச்னைகளைக் குழந்தைகளிடம் கொண்டுபோவேன். ஒரு ஸ்கூலில் கதை சொல்லிட்டுக் கிளம்பும்பொது, ஒரு பையன் என்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்டான். அதுதான் ஒரு குழந்தை என்கிட்ட கேட்கும் முதல் ஆட்டோகிராஃப். அப்போ, அங்கிருந்த டீச்சர், `இந்தப் பையனின் அம்மா ஆஸ்பத்திரியிலிருந்து இன்னிக்குத்தான் டிஸ்சார்ஜ் ஆகறாங்க. இப்போ நீங்க கதை சொன்னதில் இன்னும் சந்தோஷமாகிட்டான். அதுதான் ஆட்டோகிராஃப் கேட்கிறான்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

``தமிழ்நாடு முழுக்க புதிய புதிய கதைகளுக்காக நிறைய பயணம் பண்ணிருக்கேன். ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சந்திச்சிருக்கேன். இப்போ நினைச்சுப் பார்த்தா கனவு மாதிரி இருக்கு. ஆனால், நாள்கள் ரொம்ப வேகமா ஓடியிருக்கு. இதுக்கு என் கணவரும் குழந்தைகளும் கொடுத்த சப்போர்ட்டும் முக்கியக் காரணம்'' என்கிற அமுதா, தற்போது கல்லூரிகளுக்கும் சென்று கதை சொல்ல ஆரம்பித்துள்ளார்.