
குறும்பு
நம்ப முருகேசு இருக்கானே அவன் கப்ஸா அடிகிறதுல மன்னன்... இந்தவாட்டி என்ன அடிச்சுவிடறான்னு கேக்கலாம் வாங்க.

‘‘டே முருகேசா வாடா வெளியே” என்று குடிசையின் முன் நின்று கத்தினான் தமிழரசு.
“யாரு? இந்தக் கத்து கத்தறது” என்று கேட்டபடியே வெளியே வந்தான் முருகேசன்.
“ஓ தமிழா, எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து, எப்படா ஊருலிருந்து வந்த” என்று கேட்டான் முருகேசன்.
“காலையிலதான் வந்தேன், உடனே உன்னோட விளையாட வந்துவிட்டேன். சீக்கிரம் வாடா, வயலிலே போய்ப் பச்சைக்குதிரை விளையாடலாம்.”
“முருகேசா எங்க போனாலும் சாப்பிட்டுட்டுப் போடா” என்றபடியே வெளியே வந்தார் முருகேசனின் அம்மா.

“அடத் தமிழு நல்லா இருக்கியா. அம்மா எப்படி இருக்கிறாங்க?”
“நல்லா இருக்காங்க ஆன்டி. நான் முருகேசோடு விளையாடணும்” என்று கூறிக்கொண்டே இருவரும் களத்து மேட்டிற்கு ஓடினர்.
“அப்புறம் முருகேசா லீவுல என்ன பண்ணுன?” கேட்டான் தமிழரசு.
“டேய் நான் நிறைய கதை எழுதினேன். எனக்கு ஒரு சினிமா டைரக்டராகணும்னு ஆசைடா.”
“சூப்பர்டா, என்ன கதை சொல்லுடா, சொல்லுடா.”
அந்த வழியே வந்த இரண்டு நண்பர்கள், தமிழரசுவைப் பார்த்து விட்டு, “என்ன தமிழு நல்லா மாட்டினியா” என்றபடியே அவர்களைக் கடந்து போனார்கள்.
தமிழரசுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அவர்களுக்கு என் கதையைக் கேட்க ஆசை. ஆனால் நான் சொல்லவில்லை. அதான் அப்படிப் பேசுறாங்க” என்றான் முருகேசு. கதை சொல்ல ஆரம்பித்தான். வயல் வரப்பில் நடந்துகொண்டே கதையைக் கேட்க ஆரம்பித்தான் தமிழரசு.

“ஓர் ஊர்ல, அதாவது அது ஒரு சின்ன கிராமம், அந்தக் கிராமம் மலையடிவாரத்தில் இருந்துச்சி, ஒரு பெரிய அருவி அந்த மலையிலிருந்து கிளம்பி ஆறாகி அந்த ஊர் வழியே ஓடிச்சி.”
“ம்! அப்புறம்.”
“இந்தக் கிராமத்திலிருந்தவங்க மலைவாழ் இனத்தச் சார்ந்தவங்க.
ஒரு நாள் ஊர்த்தலைவரோட மனைவி குளிச்சிக்கிட்டு இருந்தபோது ஆத்துல ஒரு பெட்டி மிதந்து வந்தது. இந்தப் பெட்டியை இழுத்திட்டு வந்து பார்த்தாங்க உள்ள பாத்தா...”
“உள்ள என்னடா? தங்கக்காசு இருந்திச்சா?” கேட்டான் தமிழரசு.
“உள்ள பாத்தா ஒரு அழகான குட்டிப் பாப்பாக் கண்ணை உருட்டிக்கிட்டு அவங்களை பார்த்து சிரிச்சது. ஆகா குழந்தையில்லா எனக்குக் கடவுளே குழந்தையைக் கொடுத்திருக்காரேனு நினைச்சி அந்த அம்மா குழந்தையை எடுத்துட்டு வீட்டுக்கு வந்தாங்க” “என்னடா மகாபாரத கர்ணனா, இல்ல தளபதி ரஜினியா? நல்லா அடிச்சி விடுறடா”
“போடா நீ கதையைச் சரியாகவே கேட்க மாட்டேங்கிற. அம்மா தேடுவாங்க. நான் சாப்பிடப் போறேன்.” என உர் என்று சொன்னான் முருகேசன்.
“சரிடா சரிடா, சீக்கிரமா சொல்லி முடி, விளையாடலாம்.”
முருகேசன் கதையைத் தொடங்கினான்.

“இந்தக் குழந்தைக்கு சிவான்னு பேர் வெச்சாங்க, ஒரு வருஷத்துல அந்தக் குழந்தை சும்மா பயங்கரமாக வளந்துச்சி, ஒரு பனை மரத்தோட உயரத்துக்கு வளந்துச்சின்னா பார்த்துக்கோயேன். கிராமத்துலே மத்த எல்லாரும் அவனுடைய முழங்கால் வரைக்கும் தான் இருந்தாங்க.”
தமிழரசு “டேய் இது கலீவர்ஸ் டிராவல் (Gulliver’s Travel) கதைதானே” என்றான். முருகேசு அவனைத் கண்டுக்காமல் கதையைக் தொடர்ந்தான், ‘`சிவாவோட அம்மாவுக்குக் கடவுள் பக்தி ரொம்ப அதிகம். கிராமத்து நடுவில சூரியபகவானுக்கு ஒரு கோயிலும், சிலையும் இருந்திச்சு, இநக்ச் சிலை ரொம்பப் பெருசு.”
“அப்புறம்”
“சிவா ஒரு விளையாட்டான ஆளு. ஒரு பொறுப்பும் இல்லாமச் சுத்திக்கிட்டு இருந்தான். அம்மா சிவாவைப் பார்த்து வருத்தப்பட்டாங்க எப்படியாவது அவனைப் பொறுப்பானவனா மாத்துனுமின்னு சூரிய பகவான்கிட்ட வேண்டிக்கிட்டாங்க. ஆயிரம் குடம் தண்ணி ஊத்தி உன்னக் குளிர வைக்கிறேன் என் புள்ளையக் காப்பாத்துன்னு வேண்டிக் கிட்டாங்க”
“இதைக்கூட ஏதோ சினிமாவுல பார்த்திருக்கேன். சொன்னா கோவிச்சுக்கிடுவான்” என்று முணுமுணுத்தான் தமிழரசு.
“சிவா அருவியில குளிச்சுட்டுத் தலையைக் காய வெச்சிக்கிட்டு இருக்கான். அவன் தலைமுடி மலை உச்சியில இருந்து மலையடிவாரம் வரைக்கும் நீளமாக இருந்துச்சி.”
“ரப்போன்ஷல் கதை மாதிரில்ல இருக்கு” என்றான் தமிழ்.

முருகேசன் அவன் சொல்வதைக் காதில் வாங்காமல் கதையைச் சொல்லிக்கொண்டே இருந்தான்.
“மலையிலிருந்து அம்மா தண்ணி சுமக்கிறத பார்த்த சிவாவுக்கு ஒரு ஐடியா வந்தது. ஒரு பெரிய கம்பிய வச்சி சிலையைப் பெயர்த்து தோளிலே வச்சி எடுத்துட்டு போயி அருவியில் வச்சிட்டான்.”
“அடப்பாவி இது பாகுபலிடா” என்று கத்தியே விட்டான் தமிழ். “ஏண்டா டேய் பாகுபலி கதையை ரீமிக்ஸ் பண்ணுரியாடா. இப்பத்தான் தெரியுது அந்த இரண்டு பேர் உன்னப் பார்த்ததும் ஏன் என்கிட்ட வந்து அப்படிச் சொன்னாங்கன்னு”
“என்னது பாகுபலியா அப்படின்னா?” எனக் கேட்டான் முருகேசு.
“தெலுங்கு படம், தமிழ்ல கூட வந்துச்சில. அதைப் பார்த்து காப்பி அடிச்சு எங்கிட்டேயே கதை சொல்றியா?”
`` ஓஹோ... இப்பதான்டா எனக்குப் புரியுது. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால இந்தச் கதையை ஒரு தெலுங்கு பையங்கிட்ட சொன்னேன் அதை அவன் காப்பி அடிச்சிட்டான்னு நினைக்கிறேன். அவனோட பெயருக்கூட ஏதோ சந்திர மௌலியோ... ராஜமௌலி-னோ வரும்...” “என்னது பத்து வருஷத்துக்கு முன்னாடியா . அப்போ உனக்கு இரண்டு வயசுதான் இருக்கும்” என்று கூறியபடியே முருகேசனை அடிக்க பாய்ந்தான் தமிழ்.
ஓவியங்கள்: ரமணன்