Published:Updated:

சிவப்பு மச்சம் - சிறுகதை

சிவப்பு மச்சம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிவப்பு மச்சம் - சிறுகதை

எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம்

சிவப்பு மச்சம் - சிறுகதை

எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சிவப்பு மச்சம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிவப்பு மச்சம் - சிறுகதை

“என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே... உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே... வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக்கொண்டிருந்தாள். 

சிவப்பு மச்சம் - சிறுகதை

வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

``சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார்.

ராக்கி, படிகளில் உரத்து சத்தமிட்டபடியேதான் இறங்கிப் போனாள்.

விவசாயம் பொய்த்துப்போய் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட ஆறு விவசாயிகளில் அவளின் புருஷன் சுப்பையாவும் ஒருவன். வயலில் பூச்சிமருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டான். வாயில் நுரை பொங்க அவன் செத்துக் கிடந்ததைக்கூட எவரும் கவனிக்க வேயில்லை. சூரியன் அவன் முதுகில் ஊர்ந்துகொண்டிருந்தது.

ஆடு மேய்த்துவிட்டுத் திரும்பும் பாண்டியம்மாள், அதைப் பார்த்து சத்தமிட்டாள். வீட்டிலிருந்து ராக்கி கூப்பாடு போட்டபடியே வயற்காட்டை நோக்கி ஓடினாள்.

சிவப்பு மச்சம் - சிறுகதைஎன்னதான் கஷ்டம் வந்தாலும் விவசாயி தற்கொலை செய்துகொள்வானா என்ன... எத்தனையோ முறை மழை பெய்யாமல் அவனை வானம் ஏமாற்றியிருக்கிறது. விளைந்த காலத்தில் நெல்லுக்கு விலையில்லாமல் போயிருக்கிறது. கடனுக்காக, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மாடு, வண்டி, வீட்டுப்பொருள்களை ஜப்தி செய்து கொண்டு போயிருக்கிறார்கள். ஒருமுறை விவசாயிகள் போராட்டத்தில் போலீஸிடம் லத்தி அடிகூட வாங்கியிருக்கிறான். அப்போதெல்லாம் சாக வேண்டும் என்ற நினைப்புகூட வந்ததில்லை. ஆனால், கடந்த ஐந்து வருடத்தில் நிலம் முற்றிலும் பொய்த்து விட்டது. விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்கவில்லை. வாங்கிய கடனும் கழுத்தை நெரிக்கச்செய்தது. `இனி மண்ணை நம்பிப் பயனில்லை’ என்று சுப்பையா புலம்பிக்கொண்டே யிருந்தான். சில நேரம் இருட்டில் உட்கார்ந்தபடியே மண்ணோடு பேசிக்கொண்டிருப்பான்.

அவனைப்போன்ற பல விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு டவுனில் கூலி வேலைக்குப் போய்விட்டார்கள். அதில் ஒருவன் ஹோட்டலில் பாத்திரம் கழுவுவதாகக் கேள்விப்பட்டபோது சுப்பையாவுக்கு மனம் கனத்தது. அந்தச் சம்சாரி வயலில் விளைந்த நெல், எத்தனை பேர் பசியாற்றியிருக்கும்! ஆனால் இன்றைக்கு, அவன் பசிக்கு ஹோட்டலில் எச்சில் பாத்திரம் கழுவும் நிலை வந்திருக்கிறது.

தான் ஒருபோதும் அப்படிப் போய் விடக் கூடாது என்பதில் சுப்பையா உறுதியாக இருந்தான்.

ஊரில் இருந்த விளைநிலம் யாவும் கண்முன்னே பறிபோய்க் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு நாளும் சம்சாரிகள் நிலத்தை விட்டு வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள். விவசாயம் இல்லாமல்போனதால் பறவைகளும் நிலம் தேடி வருவதில்லை. பூச்சிகளின் சத்தமும் மறைந்துவிட்டது. மண்புழுவைப் பார்த்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது.

வயலில் நெல் முற்றிய காலத்தில் எங்கிருந்தோ கொக்குகள் கூட்டமாக வந்திறங்கும். அவற்றை நிலத்துக்கு வரும் விருந்தாளிகளைப்போலத்தான் சுப்பையா நடத்துவான். ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி கொக்குகள் வயல்வெளியில் பறந்து அலைவதைக் காணும்போது சந்தோஷமாக இருக்கும். இப்போது ஒரு கொக்கைக்கூடக் காண முடியவில்லை.

வயல் நடுவே நிறுத்திவைத்திருந்த வைக்கோல் பொம்மைகூட வெளிறிப்போய், பானை உடைந்து தலை இல்லாமல் நிற்கிறது. அந்த வைக்கோல் பொம்மை நிலைமைதான் தற்போது அவனுக்கும். உலகம், விவசாயியை வைக்கோல் பொம்மை போலத்தான் நினைக்கிறது.

ஒருகாலத்தில் நான்கு ஜோடி மாடுகள் வைத்திருந்தான். இன்றைக்கு தொழுவத்தில் ஒரு மாடுகூடக் கிடையாது. வீட்டுத் தேவைக்கே கடையில்தான் பசும்பால் வாங்கினார்கள். முந்தைய காலங்களில் உப்பும் மண்ணெண்ணெயும் தவிர, வேறு ஒரு பொருளும் அவன் கடையில் வாங்கியதில்லை. எல்லாம் அவன் நிலத்தில் விளைந்து வந்தவைதான். அவர்களோடு ஆடு, மாடு, கோழி, வான்கோழி, நாய், முயல், பூனை என எத்தனை ஜீவராசிகள் உடன் வாழ்ந்தன. செங்கொண்டையைச் சிலுப்பிக்கொண்டு அலையும் சேவலும்கூட இப்போது காணவில்லை. ஏன் காலம் இப்படி இரக்கமற்றுப்போய்விட்டது?  

சிவப்பு மச்சம் - சிறுகதை

சுப்பையா வீட்டில் வேளாண் கருவிகள் நிறைய இருந்தன. சில வேளை நான்கு கலப்பைகளைப் பூட்டுவார்கள். சாலும் துருத்திப்பையும், மண்வெட்டியும் கடப்பாரையும், மண் அள்ளும் கூடைகளும், சாணம் மெழுகிய கடகப்பெட்டிகளும், வாளி கயிறுகளும், தானியக்குலுக்கைகளும் இருந்தன.

மாடுகளுக்கு ஆட்டு உரலில் பருத்திக்கொட்டை ஆட்டிவைப்பார்கள். அதற்காக பெரிய கல் உரல் இருந்தது. அந்தக் குழவியைப் பிடித்து ஆட்டுவது எளிதல்ல. இன்றைக்குக் கல் உரலில் உதிர்ந்த வேப்பிலைகளும் காகிதக் குப்பைகளுமாகக் கை தொட முடியாதபடி இருக்கிறது. உழுகருவிகள் துருவேறிக் கிடக்கின்றன.

சுப்பையாவுக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. இத்தனை வருடத்தில் ஒருமுறைகூட அவன் தனக்கெனப் பத்து ரூபாய் செலவழித்துக்கொண்டது கிடையாது. பசித்த பொழுதுகளில் கையில் காசு இருந்தால்கூட பிரியாணி வாங்கிச் சாப்பிடத் தோணியதேயில்லை. அவனுக்கு நண்பர்களும் இல்லை. வெளி ஆள்களுடன் பேசிப் பழகியது மில்லை. தன் கஷ்டங்களைக்கூட வீட்டில் சொல்லிக்கொள்ள மாட்டான். அதனால்தான் சாக வேண்டும் என முடிவு எடுத்தபோது, அதைப் பற்றி அவன் யோசிக்கவேயில்லை.

சுப்பையா செத்துப்போன மறுநாளில், அரசு அதிகாரிகள் பலரும் வீடு தேடி வந்திருந்தார்கள். டிவி-யில்கூட அவனது தற்கொலை பற்றிச் சொன்னதாக ராக்கி கேள்விப்பட்டாள். அரசு அதிகாரிகள் அவளுக்கு நிவாரணப் பணம் கிடைக்க இருப்பதாகச் சொல்லி, ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிப் போனார்கள். அதன் பிறகு பஞ்சாயத்து அதிகாரி அவளை அழைத்து நிறைய காகிதங்களில் கையெழுத்து வாங்கினார். பத்திரிகையாளர்கள், அவளையும் அவளது வீட்டையும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

இரண்டு வாரத்துக்குப் பிறகு அவள் முதன் முறையாக கலெக்டர் ஆபீஸுக்குப் போனாள். அவர்கள் கேட்ட சான்றிதழ்கள், விவரங்கள் எதுவும் அவளிடம் இல்லை. அவளை அலுவலகம் அலுவலகமாக அலைய விட்டார்கள். ராக்கி, சில நேரம் அலுவலகப் படிகளில் ஏறி இறங்க முடியாமல் மூச்சு வாங்க உட்கார்ந்துகொள்வாள். அடிவயிறு கவ்விப் பிடிக்கும். மூத்திரம் பெய்ய வேண்டும் என்றால்கூட எங்கே போவது எனத் தெரியாமல் தடுமாறிப்போவாள்.

எந்த அலுவலகத்திலும் ஓர் அலுவலர்கூட அவளுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்கவில்லை. பசியோடும் ஏமாற்றத்தோடும் அவள் கையில் காகிதங்களை வைத்தபடி அலைந்துகொண்டே இருந்தாள். அவளைப்போலவே அரசு உதவிக்காகக் காத்திருக்கும் பெண்களின் முகத்தைக் காணும்போது அவளுக்கு வருத்தமாக இருக்கும். 

சிவப்பு மச்சம் - சிறுகதை

எதற்காக இப்படி அலைய விடுகிறார்கள்? கைக்குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு பெண் ஏன் இப்படி வெயிலில் நிற்கிறாள்? உட்கார ஒரு பெஞ்சு போட்டால் குறைந்தாபோய் விடுவார்கள்!

`நாளைக்கு பணம் கைக்கு வந்துவிடும். கைநாட்டு வைத்து வாங்கிக்கொள்ளலாம்!’ என அவளை நம்பவைத்து, ஆறு மாதங்களுக்கும் மேலாக அலைய விட்டுக்கொண்டிருந்தார்கள். அலுவலர் யாருக்கும் அவள் லஞ்சம் தரவில்லை என்பதே காரணம்.

ஊரிலிருந்து கலெக்டர் ஆபீஸுக்கு அவள் வர வேண்டும் என்றால், முக்கு ரோடு வரை நடந்து வந்து பஸ் ஏற வேண்டும். டவுன்பஸ்ஸில் தாங்க முடியாத கூட்டம். பெண் என்றாலும் ஒருவரும் எழுந்து இடம் தர மாட்டார்கள்.

பேருந்துநிலையத்தை வேறு மாற்றி, ஊருக்கு வெளியே புது பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டு போய்விட்டார்கள். அங்கிருந்து கலெக்டர் ஆபீஸுக்கு ஆட்டோவில் போக வேண்டும் என்றால், நூறு ரூபாய் கேட்டார்கள். அதற்கு நடந்தே போய்விடலாம் என அவள் வெயிலோடு நடந்துதான் போய் வருவாள்.

கலெக்டர் ஆபீஸையொட்டிய ஹோட்டல்களில் அவர்கள் வைத்ததுதான் விலை. மதியச் சாப்பாடு 50 ரூபாய். ஆகவே, அவள் சோறு சாப்பிடாமல் டீயைக் குடித்துவிட்டு காத்துக் கிடப்பாள். ஜீப்பில் அதிகாரி களுக்குப் பெரிய பெரிய கேரியரில் சாப்பாடு கொண்டுவருவதை வெறித்துப் பார்த்துக்கொண்டே யிருப்பாள்.

`நாம எல்லாம் எதற்கு உயிர் வாழ்கிறோம்?!’ என ஆதங்கமாக இருக்கும்.

கலெக்டர் ஆபீஸ் இருந்த இடம்கூட ஒருகாலத்தில் வயல் வெளிதான். அதைக் கையகப் படுத்தித்தான் அலுவலகம் கட்டியிருந்தார்கள். இன்றைக்கு அதற்குள் செடி கொடிகள் ஒன்றும் கிடையாது. பேருக்கு நான்கு வேப்பமரங்கள் நின்றன. அவையும் புழுதியேறி இருந்தன.

கலெக்டர் ஆபீஸுக்குள்ளேயும் நல்ல தண்ணீர் கிடையாது. குடிதண்ணீர் விலைக்குத்தான் வாங்கியாக வேண்டும். இப்படி காலம் கெட்டுச் சீரழிந்து போனதால்தான் அவள் புருஷன் தற்கொலை செய்துகொண்டான். சம்சாரிகள் சாவதைப் பற்றி யார் கவலைப்படப்போகிறார்கள்?

அரசாங்கம் கொடுக்கிற பணமே வேண்டாம் என, ஒருகட்டத்தில் ராக்கி அலைவதை நிறுத்திக்கொண்டுவிட்டாள். ஆனால், கடிதம்மேல் கடிதம் போட்டு அவளைத் திரும்ப வர வழைத்தார்கள். ஆறு மாதத்துக்குப் பிறகு, அவள் பொறுமை இழந்துபோய் இன்றைக்குத்தான் சண்டையிட்டாள். அவளது கோபத்தை எத்தனை நாள் அடக்கிவைத்திருக்க முடியும்!

`கிறுக்கச்சிபோலக் கத்திக்கொண்டிருக்கிறாள்’ எனப் பலரும் நினைத்திருக்கக்கூடும்.

மனம் சாந்தியடையும் வரை அவள் கலெக்டர் ஆபீஸின் வாசலில் நின்று சத்தமிட்டாள். காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரர், அவளை சைகையால் துரத்திவிட்டார். ஆத்திரம் தணிந்த பிறகு, அவள் மெள்ள நடக்கத் தொடங்கினாள்.

`இனி செத்தாலும் இந்த ஆபீஸ் பக்கம் வரக் கூடாது. இவர்கள் தரவிருக்கும் காசைக் கையால் தொடக் கூடாது’ என்ற பிடிவாதத்தோடு அவள் வெயிலில் நடந்து போய்க்கொண்டிருந்தாள்.

அந்த வருவாய்த்துறை அலுவலகத்தில் 22 பேர் வேலை செய்தார்கள். அவர்களுக்கு இரு உயர் அதிகாரிகள்.

வருவாய்த்துறை உயர் அதிகாரியான சுப்ரமணியம், பெரிய வாழை இலையில் கோழிக் கறியைச் சாப்பிட்டபடியே தனது பியூனிடம் கேட்டார், ``அந்தப் பொம்பள போயிட்டாளா... என்ன பேச்சுப் பேச்சுறா… இவளையெல்லாம் ஆபீஸ் உள்ளே ஏன் விடுறீங்க?’’
 
``கிராமத்துப் பொம்பள சார். அப்படித்தான் பேசுவாங்க’’ என்றார் பியூன் ரெங்கசாமி.

``கவர்ன்மென்ட் காசை கேட்டவுடனே தூக்கிக் குடுத்துர முடியுமா? நாளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா, நம்ம தாலியில்ல அறுப்பாங்க’’ என்றபடியே அவர் கோழிக்காலை ருசித்துச் சாப்பிடத் தொடங்கினார்.

இதுபோலவே அலுவலகத்தின் பிற ஊழியர்களும் ராக்கியைப் பற்றிக் குறை சொல்லிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர், அவளைக் கேலிசெய்து சிரித்தார்கள். அன்றிரவுக்குள் அவளை எல்லோரும் மறந்திருந்தார்கள்.

தன் வீட்டில் காலையில் குளித்துவிட்டு வந்து திருநீறு பூசும்போது சுப்ரமணியம் கண்ணாடியில் பார்த்தார்.

நெற்றியில் சிறியதாக ஒரு புள்ளி இருந்தது. `என்ன புள்ளி இது?’ எனக் கையால் அழுத்தித் துடைத்தார். அந்தப் புள்ளி சற்றே பெரியதானது போல இருந்தது.

`ஏதாவது அலர்ஜியாகிவிட்டதோ!’ என்றபடியே மனைவியை அழைத்தார். அவள் நெற்றியில் இருந்த புள்ளியைப் பார்த்தபடி ``ஏதோ பூச்சி கடிச்ச மாதிரி இருக்கு. சந்தனம் வைங்க’’ என்றாள். சுப்ரமணியம் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை. அன்றைக்கு கலெக்டர் மீட் இருப்பதால் அவசரமாக ஜீப்பில் கிளம்பிச் சென்றார்.

கலெக்டரின் உதவியாளர் அவரிடம் கேட்டார் ``சார், நெற்றியில் என்ன சிவப்பா இருக்கு. இடிச்சுக்கிட்டீங்களா?’’

``அப்படியா... தெரியலையே’’ என வேகமாகக் கழிவறைக்குப் போய் கண்ணாடியில் பார்த்தார். அந்தப் புள்ளி சிவப்பு மச்சம்போல நன்றாகத் தெரிந்தது. கையால் அழுத்தித் தேய்த்தார். வலிக்கவில்லை. அழியவும் இல்லை. ஆனால், அவருக்கு அந்த மச்சம் மனதை உறுத்தியது.

`என்ன ஆயிற்று... என்ன புள்ளி இது?’

கூட்டம் ஆரம்பித்து கலெக்டர் பேசிக் கொண்டிருந்தபோது அவரது கவனம் முழுவதும் சிவப்பு மச்சத்திலேயே இருந்தது. `ஒருவேளை ஏதாவது விஷப்பூச்சி கடித்திருக்குமோ. டாக்டரிடம் காட்டிவிடலாமா’ என யோசிக்க யோசிக்க, மனதில் பயம் பீறிடத் தொடங்கியது. பாதிக் கூட்டத்திலேயே வெளியேறி, தனது அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கே அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அலுவலகத்தில் பணியாற்றிய 23 பேரின் நெற்றியிலும் அதே சிவப்பு மச்சம் தோன்றியிருந்தது.

ஒருவருக்கும் அது எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

செக்‌ஷன் க்ளார்க்காக உள்ள வசுமதி சொன்னாள், ``நெற்றியை உறுத்திக்கிட்டே இருக்கு சார். எப்படி வந்துச்சுன்னு தெரியலை. கொசுக்கடியா இருக்குமா?’’

இன்னோர் ஊழியர் சொன்னார், ``வேப்பிலையை அரைச்சுப் போட்டா, போயிடும். இப்படி என் வொய்ஃபுக்கு வந்திருக்கு.’’

அலுவலக ஊழியர்கள் ஒன்றுகூடி வேப்பிலையைப் பறித்து வந்து அரைத்து அதைப் பூசிப்பார்த்தார்கள். மாலை அலுவலகம் முடியும் வரை வேப்பிலை பூசியும் சிவப்பு மச்சம் மறையவில்லை.

மாலை அலுவலகம் விட்டதும், ராஜகோபாலன் டாக்டரைக் காண்பதற்காகச் சென்றார் சுப்ரமணியம். டாக்டர் அந்த மச்சத்தைப் பரிசோதனை செய்துவிட்டு, ``வெறும் அலர்ஜி. ரெண்டு நாள்ல சரியாகிடும்’’ என்று மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்

டாக்டர் சொன்னதுபோல இரண்டு நாளில் சரியாகவில்லை. மாறாக, அந்த மச்சம் நாளுக்குநாள் பெரியதாகியது. ஊசி குத்துவது போல வலிப்பதாகவும் தோன்றியது. சுப்ரமணியம் பயந்துபோனார். வீட்டில் அவரின் மனைவியும் மகளும் வேண்டுதல் போட்டு, முருகன் கோயிலுக்குப் போய் வந்தார்கள்.

அலுவலகத்தில் இருந்த 24 பேருக்கும் சிவப்பு மச்சம் நாலணா அளவில் தெளிவாகக் காட்சி யளித்தது. ஆளுக்கு ஒரு பரிகாரம் செய்தார்கள். சிலர் விடுப்பு எடுத்துக்கொண்டு பரிகார பூஜை செய்தார்கள். பத்து நாளில் அவர்கள் நெற்றியில் மச்சம் எட்டணா அளவுக்குப் பெரியதாகியது.

இப்படி வளர்ந்துகொண்டே போனால் என்னவாகும்... ஏன் இப்படியானது... எப்படி இதை அகற்றுவது... எதுவும் புரியவில்லை.

அப்போது தயங்கித் தயங்கி சுப்ரமணியத்திடம் பியூன் ரங்கசாமி சொன்னான், ``சார்... இது அந்தக் கிராமத்துப் பொம்பள குடுத்த சாபம்னு தோணுது. சம்சாரி சாபம் பலிச்சிடும்னு சொல்வாங்க.’’
 
``என்னய்யா சொல்றே...’’ எனப் பதைப்பதைப்பாகக் கேட்டார் சுப்ரமணியம்.

``நாம அந்தப் பொம்பளைய அலைக்கழிச்சோம்ல, அதான் இப்படி அனுபவிக்கிறோம். என் மனசுல அப்படித்தான் தோணுது.’’

``இப்போ என்ன பண்றது?’’

``அந்தப் பொம்பளைக்குச் சேரவேண்டியதைச் செஞ்சிகுடுத்துட்டா, சரியாப்போயிடும் சார்.’’

``நிஜமாவா சொல்றே!’’

``ஆமா சார். ஆபீஸ்ல இருக்கிற அத்தனை பேருக்கும் சிவப்பு மச்சம் வருதுன்னா... வேற காரணமேயில்லை!’’

சுப்ரமணியம் உடனடியாக அவளுக்குச் சேரவேண்டிய பணத்துக்கான வேலையை முடிக்க உத்தரவிட்டார். பியூன் சொன்னது நிச்சயம் நிஜமாக இருக்கும் என அலுவலகமே நம்பியது. அன்று மாலைக்குள் டிராஃப்ட் ரெடி பண்ணிக்கொண்டு, `நேரா போய் அவளிடம் கொடுத்துவிடலாம்’ என ஜீப்பில் சுப்ரமணியம் இரண்டு அலுவலர்களுடன் புறப்பட்டார்.

ராக்கியின் வீடு தேடிப் போனபோது அது பூட்டியிருந்தது. ``அன்றைக்கு கலெக்டர் ஆபீஸுக்குப் போனவள் திரும்பி வரவேயில்லை’’ என்றார்கள்.

எங்கே போய் அவளைத் தேடுவது. எப்படி டிராஃப்ட்டை ஒப்படைப்பது எனப் புரியாமல், அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். ஒருவருக்கும், ராக்கி எங்கே போனாள் என்ற விவரம் தெரியவில்லை.

`ஒரு கிராமத்துப் பெண்ணின் சாபம் இப்படி உடலில் மச்சத்தை உருவாக்கிவிடுமா... அவளைக் கண்டுபிடிக்க முடியாமல்போய்விட்டால் என்ன ஆவது...’ சுப்ரமணியம் மிகவும் பயந்துபோனார்.

இரவு, சுப்ரமணியம் தன் மனைவியிடம், நடந்த விஷயத்தைச் சொன்னார். அவள் அந்தச் சாபத்தை நூறு சதவிகிதம் நம்பினாள். அத்துடன் அவரைக் கோபித்துக்கொண்டபடி ``பத்துப் பேருக்கு அன்னதானம் பண்ணுவோம். கிராமத்துக் கோயிலுக்கு மணி வாங்கிக் கொடுப்போம்’’ என ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்தாள். கூடவே ``நல்லவேளை, உங்க பாவம் எங்களைப் பிடிக்கலை!’’ என மன சமாதானமும் சொல்லிக்கொண்டாள்.

சுப்ரமணியம்போலவே அலுவலகத்தின் மற்ற ஊழியர்களும் ஆளுக்கு ஒருவிதமாகப் பரிகாரம் செய்ய முற்பட்டார்கள். இன்னொரு பக்கம் ராக்கியைத் தேடியபடியும் இருந்தார்கள்.

சாபம் பற்றிக் கேள்விப்பட்ட பிற அலுவலக ஊழியர்கள், தங்களை அறியாமல் பயம்கொள்ள ஆரம்பித்தார்கள். எவரையும் தேவையின்றிக் காக்கவைக்கக் கூடாது என முடிவுசெய்து கொண்டார்கள். எவரிடமும் காசு வாங்க பயந்தார்கள்.

ராக்கியின் சாபம் பற்றி, ஊரெல்லாம் பேசிக் கொண்டார்கள்.

``இது நிஜமா... இந்தக் காலத்துல சாபமெல்லாம் பலிக்குமா?’’ என ஆளுக்கு ஆள் விவாதங்களும் நடந்தன. கலெக்டரும் ``இதெல்லாம் மூடநம்பிக்கை’’ என மறுத்துப் பேசினார். ஆனால், வீட்டில் கலெக்டரின் மனைவி ``அந்தப் பெண்ணின் சாபம் உண்மையானது. நிச்சயம் இப்படி நடக்கக்கூடும். நீங்கள் கவனமாக இருங்கள்’’ என ஆலோசனை சொன்னாள்.

சுப்ரமணியம் பகலிரவாகத் தன் நெற்றியில் இருந்த சிவப்பு மச்சத்தைப் பார்த்துப் புலம்பியபடியே இருந்தார். இரவில் அந்த மச்சம் நெற்றியின் வலதுபக்கம் நோக்கி ஊர்வதுபோல அவருக்குத் தோன்றியது. திடீரென அந்த மச்சம் ஒரு வண்டுபோல அவர் நடுநெற்றியைத் துளைத்து உள்ளே புகுந்து ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது. தூக்கத்தில் அலறி எழுந்து கத்தினார் சுப்ரமணியம்.

அந்த மச்சம், அவர்கள் செய்த தவற்றின் அடையாளம்போல மெள்ள உருமாறியது.

அதன் பிந்தைய நாளில் அந்த 24 பேர்களும் ஒன்றுகூடி தங்கள் தவற்றை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தார்கள். ராக்கியின் கிராமத்துக்கே சென்று அன்னதானம் கொடுத்தார்கள். எதுவும் சிவப்பு மச்சத்தை மறையச் செய்யவில்லை.

சுப்ரமணியம் தீவிர மனக்கவலை, பயம் காரணமாக விடுப்பில் போனார். அவர் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்துவருவதாகச் சொன்னார்கள். பிற ஊழியர்களும் கோயில் கோயிலாகப் பரிகாரம் தேடி அலைந்தார்கள்.

ராக்கி என்ன ஆனாள் என அவர்களால் கண்டறியவே முடியவில்லை.

பியூன் ரங்கசாமி மட்டும் நெற்றியில் உள்ள பெரிய சிவப்பு மச்சத்தைத் தடவியபடியே `ராக்கியின் எச்சில் பட்டால் அந்த மச்சம் மறைந்துபோய்விடும்’ என நம்பிக்கொண்டிருந்தான்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, கலெக்டர் ஆபீஸின் வெளியே சிறிய கொட்டகை போடப்பட்டுப் பார்வையாளர்கள் அமர இருக்கைகள் அமைக்கப் பட்டன. குடிநீர்ப் பானையும் வைக்கப்பட்டது.

ராக்கியின் சாபம்தான் சிவப்பு மச்சத்தை உருவாக்கியதா என எவராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அடிமனதிலிருந்து பீறிடும் சொல் நிச்சயம் பலிக்கும் என்றே பலரும் நம்பினார்கள். அந்தச் சிவப்பு மச்சம் என்பது, சொல் சுட்ட வடுதான் என உறுதியாகச் சொன்னார்கள்.

அதன் பிறகான நாள்களில் ராக்கியைப் பற்றிப் பல நூறு விசித்திரக் கதைகள் பரவ ஆரம்பித்தன. கலெக்டர் ஆபீஸில் வேலைசெய்யும் ஒவ்வொருவரும், தங்கள் முகத்தில் இதுபோல சிவப்பு மச்சம் ஏதாவது வந்துவிட்டதா என பயத்தோடு பார்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.

பிறகு, சிவப்பு மச்சம் முடிவற்ற ஒரு கதையாகப் பலரது நாவிலும் உலவத் தொடங்கியது.