Published:Updated:

ஒளி வளர் விளக்கு - சிறுகதை

ஒளி வளர் விளக்கு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஒளி வளர் விளக்கு - சிறுகதை

காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம்

ஒளி வளர் விளக்கு - சிறுகதை

காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
ஒளி வளர் விளக்கு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஒளி வளர் விளக்கு - சிறுகதை

னு பேசினாள். கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எப்படியோ என் நம்பரைப் பிடித்திருக்கிறாள். நம்பவே முடியவில்லை. நாங்கள் இளங்கலை முடித்து 21 ஆண்டு ஆகிறது. இடையில் இரண்டு முறைதான் பேசினோம். நான்தான் அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பரைத் தொலைத்துவிட்டேன். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்கள் போன் நம்பரும் மாறிக் கொண்டிருந்தது. என்னுடைய மொபைல் நம்பரையும் நான் ஆறு முறை மாற்றிவிட்டேன். கடைசியாக மாற்றியது ஏர்செல் பிரச்னையில். 

ஒளி வளர் விளக்கு - சிறுகதை

நான் வாட்ஸ் அப் குரூப்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜுகள். குட்மார்னிங், குட்நைட், ஹீலர்கள், போலி இயற்கை ஆர்வலர்களின் பரப்புரைகள், உடனே ஏழு பேருக்கு அனுப்பவேண்டிய ஆஞ்சநேயர் பெருமாள் படங்கள், `முன்னோர்கள், முட்டாள்கள் அல்ல’ வகையறா கண்டுபிடிப்புகள் மாறி மாறி எல்லா குரூப்களிலும் வருவதால் எல்லாவற்றையும் ம்யூட் செய்துவிடுவேன்.

இவள் எப்போது கல்லூரிக் குழுவில் இணைந்தாள் என்றே தெரியவில்லை. ``ஹாய் சுமீஈஈஈ... எப்டி இருக்க?” என்ற அவளின் கீச்சுக்குரல், பழைய நினைவுகளைக் கிளறியது. ஆனால், நான் பேசும் நிலையில் இல்லை. நான் வங்கியிலிருந்து முக்கியமான ஓர் அழைப்புக்காகக் காத்திருந்தேன். அவசரமாக கட் பண்ணினால் கோபித்துக்கொள்வாளோ என்ற தயக்கம் எட்டிப்பார்த்தது. ஆனாலும் வேறு வழியில்லை. ``அனு... ஒரு அர்ஜென்ட் காலுக்காக வெயிட்பண்றேன். நானே உன்னைக் கூப்பிடுறேன். ப்ளீஸ்... கோச்சிக்காத” என்றதும் சட்டென போனை வைத்துவிட்டாள். லேசாய் புன்னகைத்தேன். அவள் மாறவேயில்லை என்பது ஆச்சர்யமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

அனுவை, கல்லூரிவிடுதியில் வைத்துதான் முதன்முதலில் பார்த்தேன். தலையில் எண்ணெய் தடவுவதற்குப் பதிலாய் கொட்டியிருந்தாள். நெற்றியின் விளிம்பில் எண்ணெய் வழிந்து மினுங்கியது. பெரிய சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு வைத்து அதன்மேல் சந்தனத்தை விபூதிபோல நீளமாய்த் தீற்றியிருந்தாள். இரண்டு கண்களின் ஓரத்திலும் நாட்டியக்காரர்கள் வரைவதுபோல நீளமாய் மைத்தீற்றல். அது, வியர்வையாலோ அவள் கண்களைக் கசக்கியதாலோ கலைந்து கன்னத்திலும் அப்பியிருந்தது. காதில் பெரிய்ய்ய தொங்கட்டான்கள். தலையில் கொத்தாய் கனகாம்பரப் பூ.

நானும்கூட கல்லூரி முதல் நாளில் கனகாம்பரமும் மல்லிகையும் கலந்து அம்மா கட்டிக் கொடுத்த பூச்சரத்தைத்தான் வைத்துக்கொண்டு போனேன். என் சீனியர்களில் ஒருத்தி, ``கனகாம்பரம் வைக்காதே. அதுக்குப் பேரே இங்க `கேண காம்பரம்`தான்” என்றாள். உண்மையில் எனக்கு வாசமில்லாத, முகத்தில் அறையும் செந்தூர நிறத்தில் இருக்கும் அந்தப் பூவை ஏற்கெனவே பிடிக்காது. அனு, தனக்கு அதுதான் பிடித்தமான பூ என்பாள். அதோடு தலையில் வைத்து வாடி சிறுத்துப்போன பூவை வெகுசீக்கிரத்தில் தூக்கி எறிய மாட்டாள். ``அது அழகா இருந்தப்ப எவ்ளோ ஆசையா தலையில வெச்சுக்கிறோம்! வாடிப்போச்சுன்னா உடனே எறிஞ்சுடணுமா?” என்பாள். உடன் இருந்தவர்கள் நமட்டுச் சிரிப்போடு அவளைக் கவனிப்பது தெரிந்தாலும், அவள் எதற்காகவும் கவலைப்பட்டதாகவோ தன்னை மாற்றிக்கொள்ள முயன்றதாகவோ தெரியவில்லை.

அவள் குரலே அவளை எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனித்துக் காட்டும். குரலா அல்லது அவள் பேசும்விதமா என்றுகூட குழப்பமாய் இருக்கும். புரியும்படி சொல்வதென்றால், `அன்பே வா’ படத்தில் `போங்கப்பா நீங்கே’ என்று சரோஜாதேவி பேசுவதுபோல என வைத்துக்கொள்ளுங்களேன். கொஞ்சிக் கொஞ்சி நளினமாய்ப் பேசுவதும், ஏறத்தாழ நாட்டியமாடுவதுபோலவே நடப்பதும், கண்கள் கூசும் நிறத்திலான உடைகளும், அந்தக் கண்ணோர மைத்தீற்றலும், ஜல்ஜல்லெனச் சலங்கை போன்ற பெரிய கொலுசும் அவளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டியது. ஆனால், மூன்றாம் ஆண்டு வருவதற்குள் அவள் நடை உடை பாவனைகள் எல்லாம் ஓரளவு மாறியிருந்தன. கண்களை உறுத்தாத வண்ணங்களில் காட்டன் புடவைகளை உடுத்த ஆரம்பித்தாள். நானும்கூட ஓரிருமுறை அவள் புடவையை வாங்கி உடுத்தியிருக்கிறேன். எனக்கு அப்போதெல்லாம் தாவணிதான் மிகவும் பிரியமான உடை. ஆகாய வண்ணத்தில் மேகத்தைப்போன்றே வெள்ளைத் தீற்றல்கள்கொண்ட அவள் புடவை, எனக்கு மிகவும் பாந்தமாய்ப் பொருந்தியது. அந்தப் புடவையை அவள்தான் தேர்ந்தெடுத்து வாங்கியிருக்கிறாள் என்பதே நம்ப முடியாததாயிருந்தது.

விடுதிக்கு வெளியே பெரிய மைதானம் இருக்கும். ஆங்காங்கே ஓரிரு வேப்பமரங்களும் ஒரே ஒரு புளியமரமும் இருக்கும். பாப்-கட் செய்துகொண்ட சிறுமிபோல குள்ளமாய் புஸுபுஸுவெனத் தலை அடர்ந்து நிற்கும் அந்தப் புளியமரத்தை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் படிக்கிறோம் என்று பேர் பண்ணிக்கொண்டு அந்த மரத்தடியில் அமர்ந்து அரட்டையடிப்போம். வார்டன், சீனியர்கள், லெக்சரர்கள் பற்றிய கிசுகிசுக்கள், பேய்க்கதைகள் எனச் சுற்றியடித்து, பேச்சு செக்ஸில் வந்து நிற்கும். சத்தியமாய் எங்கள் யாருக்குமே முதலிரவு அறைக்குள் விளக்கை அணைத்த பிறகு என்ன நடக்கும் என அப்போது தெரிந்திருக்கவில்லை. இப்போதுபோல இன்டர்நெட்டோ ஸ்மார்ட்போனோ குறைந்தபட்சம் ஆண்களுக்கு வாய்த்ததுபோல `சரோஜாதேவி’ புத்தகங்களோகூட கிடைக்கப்பெறாத அப்பிராணிகள் நாங்கள். யூகங்களே கிளுகிளுப்பாயிருக்கும்.

+2 படிக்கும்போது, உடன் படித்த பத்மாவுக்குத் திருமணம் நிச்சயமானது. திருமணம் முடிந்து அவள் மீண்டும் வகுப்புக்கு வரும்போது முதலிரவில் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லவேண்டும் என எல்லோரும் அவளிடம் சத்தியம் வாங்கியிருந்தோம். கல்யாணத்தில் மாலையும் கழுத்துமாய் அவள் நின்றுகொண்டிருக்கும்போது, சுவர்க்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்துவிட்டு அவள் காதில் ரகசியமாய் சத்தியத்தை ஞாபகப்படுத்திவிட்டு வந்தோம். மீண்டும் அவள் பள்ளிக்கு வந்ததும் பிரேயருக்கு முன்பாக அவளைக் கடத்திக்கொண்டு போய் ``சொல்லுடி... சொல்லுடி...” என்று மொய்த்தோம். அவள் ஏகமாய் வெட்கப்பட்டுக்கொண்டு, `` `எல்லாத்தையும் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சப்புறம் வெச்சுக்கலாம். நீ ஒழுங்கா படி’ன்னு மாமா சொல்லிட்டார்” என்றதும் எங்களுக்கு சப்பென்றாகிவிட்டது. அவள் பொய்தான் சொன்னாள் என்று தெரிந்தாலும், அதற்குமேல் அவளிடம் என்ன கேட்பது எனத் தெரியாமல் விட்டுவிட்டோம்.

இதைப்பற்றியெல்லாம் நாங்கள் மும்முரமாய்ப் பேசிக்கொண்டிருக்கையில், அனு என் முதுகைச் சுரண்டுவாள். ``சுமீ... அங்க பாரேன் வானத்தை. சீக்கிரம் பாரு. மேகம் மறைச்சுடும். சீக்கிரம்... அங்கதான். அந்த ஆரஞ்சுக்கும் மஞ்சளுக்கும் இடையில ஒரு புளூ தெரியுதுல்ல? அதான்... அதுவே இன்னும் கொஞ்சம் லைட்டா இருந்தா எப்டி இருக்கும்? அந்த நிறத்துலதான் பர்த்டேக்குப் புடவை எடுத்திருக்கேன். அம்மா இந்த வாரம் கொண்டுவருவாங்க” என்பாள். அந்தி கவிந்து சூரியன் முழுவதுமாக மறைவதற்குள் தாடையைப் பிடித்திழுத்து வானத்தைப் பார்க்கவைத்து, பத்துத் தடவையாவது இதையே திரும்பத் திரும்பச் சொல்லிவிடுவாள்.

சொன்னதுபோலவே அவள் அம்மா அந்தப் புடவையை விடுதிக்குக் கொண்டுவந்து கொடுத்தார். அவரைப் பார்க்கும் எவருக்கும் முதல் பார்வையிலேயே `இவங்கதான் அனுவோட அம்மா’ என்று தெரிந்துவிடும். அவளைப்போலவே கண்ணோரத்தில் மைத்தீற்றலும் கீச்சுக்குரலும் நளின நடையுமாய்த்தான் வருவார். எங்கள் அனைவரின் மீதும் ரொம்பப் பிரியமாயிருப்பார். பெரிய பெரிய சம்புடங்களில் எல்லோருக்கும் சேர்த்து முறுக்கு, அதிரசம், சுய்யம், பொரி உருண்டை செய்து எடுத்து வருவார்கள்.

அவர் வீட்டுக்கு ஒருமுறை நாங்கள் ஆறு பேர் சேர்ந்து போயிருந்தோம். அனுவுக்கு ஓர் அண்ணன் இருந்தான். `சினிமா ஹீரோபோல இருப்பான்’ என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாள். நாங்கள் அவனை சைட்டடிப்பதா, `அண்ணா’வென்று அழைப்பதா என்ற குழப்பத்துடன்தான் போனோம். அவன் `கிழக்கே போகும் ரயில்’ சுதாகர்போல இருந்தான். அதில் வரும் ராதிகாவைப்போலவே, எங்களைப் பார்த்ததும் அநியாயத்துக்கு வெட்கப்பட்டு தலைகுனிந்து ஒதுங்கிப் போனான். எங்களுக்கு `ஙே` என்றிருந்தது. உடன் வந்த பானுமதி மட்டும் வெட்கத்துடன் ``ஏன்டி இவனுக்கென்ன? ஹீரோ மாதிரிதான இருக்கான்?” என்றாள். நாங்கள் எல்லோரும் கொல்லெனச் சிரித்து, அங்கிருந்து வரும்வரை அவளை ஓட்டித்தள்ளினோம்.அனுவின் அப்பா, வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் கழுத்தில் துண்டோடு தடதடவென புல்லட்டில் வருவார். பெரிய மீசை வைத்திருப்பார். அவருக்கு ஊருக்குள் வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்றும், அதைப் பற்றிக் கேட்டால் அம்மாவை முடியைப் பிடித்திழுத்து கன்னங்களில் அறைவார் என்றும், அவர் அடித்ததில் அம்மாவின் கடைவாய்ப்பற்கள் இரண்டு விழுந்துவிட்டதாகவும் அனு ஒருமுறை என்னிடம் மட்டும் அழுதுகொண்டே சொன்னாள். அவரை நேரில் பார்த்தால், அவ்வளவு கொடுமைக்காரராய்த் தெரியவில்லை. அவர் அடிப்பதையும் அவள் அம்மா கீச்சுக்குரலில் அழுவதையும் கற்பனை செய்ய முயன்று தோற்றிருக்கிறேன்.

இளங்கலை முடித்த பிறகு, நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். எங்கள் வீட்டின் நிலைமை, என்னை மேற்கொண்டு படிக்க விடவில்லை. அனு அங்கேயே பட்டமேற்படிப்பு சேர்ந்துவிட்டதாகத் தெரிந்தது. நான் ஊருக்கு வெளியில் இருந்த தோல் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் சொற்பமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். இளங்கலையோடு சேர்த்து கணினியில் Tally படித்திருந்ததால், உடனே வேலை கிடைத்தது. காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிப் போனால், இரவு 8 மணிக்குத்தான் வந்து சேருவேன்.

என்னால் வேலைகூடச் செய்துவிட முடிந்தது. அந்த ஏசி ரூமில் நாள் முழுக்க இருப்பதுதான் பெரிய தொல்லையாக இருந்தது. என்னால் குளிர் தாங்க முடியாது. மார்கழிக் குளிருக்கே இரண்டு கால்களிலும் சாக்ஸ்போல துணி கட்டிக்கொண்டு நடப்பேன். அந்த ரூமில் ஏசியை 18-ல் வைத்திருந்தார்கள். டைப் அடிக்க முடியாதபடி என் விரல்நுனிகள் விறைத்துச் சில்லிட்டுப்போகும். சேர்ந்த ஒரு வாரத்தில், வீட்டில் கதவோரம் ஒட்டி நின்று ``என்னால இந்த வேலைக்குப் போக முடியல. நின்னுடுறேன்” என்று கண்ணீர்விட்டு அழுதேன். அம்மாவுக்கு கார்மென்ட்ஸில் வேலை. இரண்டு கிலோமீட்டர்கள் வெயிலில் நடந்து போய் நாள் முழுக்க ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழ் வேலை செய்ய வேண்டும். ஏசி குளிரையெல்லாம் அனுபவித்ததே இல்லை. ஆனால், அம்மா அதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. ``மொத தடவை வேலைக்குச் சேந்திருக்க. ஒரு வாரத்துல நின்னா அசிங்கம். மொத மாச சம்பளம் வாங்கிட்டு நின்னுரு” என்றார். அவர் நினைத்ததுபோலவே, அடுத்த வாரத்திலிருந்து எனக்குக் குளிர் பழகிவிட்டது. அங்கே ஆறு வருடங்கள் வேலைசெய்தேன். 

ஒளி வளர் விளக்கு - சிறுகதை

இரண்டாவது வருடம் ஒருநாள் வேலை முடிந்து களைப்பாய் வீட்டுக்குத் திரும்பியபோது, அம்மா ``அனு போன் செஞ்சா. அவ நம்பரை வாங்க மறந்துட்டேன். நீ வந்தப்புறம் கூப்பிடுறேன்னா” என்றார். `எப்படி என் நம்பர் அவளுக்குக் கிடைத்தது?!’ என ஆச்சர்யமாய் இருந்தது. அன்றைக்கு அனு கூப்பிடவில்லை. அடுத்து ஒரு மாதம் கழித்துதான் கூப்பிட்டாள். நான்தான் எடுத்தேன். நான் என்ன செய்கிறேன் என விசாரித்தாள். `கல்லூரியில் முதல் மாணவியாகத் தேறிவிட்டு, மேற்கொண்டு படிக்காமல் வேலைக்குப் போகிறாயே!’ என வருந்தினாள். பிறகு, “பக்கத்துல அம்மா இல்லல்ல?” என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஆண்டனியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆண்டனி இரண்டு வருடங்களாய் அவளுடன் எம்.காம் படிக்கிறான். முதல் நாள் பார்த்ததிலிருந்தே இருவருக்கும் காதல். யார் முதலில் சொல்வது எனத் தயங்கிக்கொண்டேயிருந்து வருட முடிவில் அவன் பிறந்த நாளன்று இவளேதான் புரப்போஸ் செய்திருக்கிறாள். அடுத்த ஒரு வருடம், போன வேகமே தெரியவில்லை. இதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக்கொள்வ தற்காக இருவருமே எம்.பில் சேர விரும்புகிறார்கள். ஆண்டனி வீட்டில் ஓகே சொல்லிவிட்டார்கள். அனு வீட்டில் இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை.

ஆண்டனி மிகவும் நல்லவன். கைமேல் ஊரும் எறும்பைக்கூட கனிவாய்க் கீழே இறக்கிவிடக்கூடியவன். அனுவை உயிராய் நேசிக்கிறான். வீட்டுக்கு ஒரே பையன். அவன் அப்பாவும் அம்மாவும் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள். இப்போதெல்லாம் அனு நிறைய மாறிவிட்டாள். அவனுக்குப் பிடித்த நிறங்களில்தான் உடை அணிகிறாள். அவனுக்குப் பிடித்த ஜாதிமல்லிப் பூவைத்தான் சூடுகிறாள். தனக்குப் பிடிக்கவே பிடிக்காத வெனிலா ஐஸ்க்ரீமைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறாள். சந்தோஷமாய்ப் பேசிவிட்டு ஆண்டனியிடம் பேசும்படி போனைக் கொடுத்தாள். அவன் கண்ணியமாய்ப் பேசினான். நலம் விசாரித்தான். அனுவின் இன்னொசன்ஸ்தான் அவளைக் காதலிக்கவைத்ததாகச் சொன்னான். சொந்த ஊர் வேளாங்கண்ணி அருகில் ஏதோ ஒரு கிராமம் என்றான். ``ஓ! நாங்க ஒவ்வொரு வருஷமும் வேளாங்கண்ணி வருவோம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்ப, அம்மா வேண்டிக்கிட்டது” என்று நான் சொன்னதும் ``வேளாங்கண்ணி வந்தால் அவசியம் வீட்டுக்கு வரணும்” என்று கோரிக்கைவைத்து அவன் வீட்டு நம்பரைக் கொடுத்தான்.

அதற்கடுத்த வருடம் நான் என் சொந்த சம்பாத்தியத்தில் 3,000 ரூபாய்க்கு வெள்ளை நிற Nokia 1100 வாங்கினேன். பயங்கர பெருமையாய் இருந்தது. `போன் வாங்கிவிட்டேன்’ என்று யாருக்கெல்லாம் சொல்ல முடியுமோ எல்லோரையும் அழைத்து, ``இதான் என் மொபைல் நம்பர். எழுதிக்கோங்க” என்று சொன்னேன். அப்படி ஆண்டனி வீட்டுக்கும் கூப்பிட்டுச் சொன்னேன். ஆண்டனி வீட்டில்தான் இருந்தான். தான் மட்டும் எம்.பில் படிப்பதாகவும், அனு அதே ஊரில் வேலையில் இருப்பதாகவும், இருவரும் மாலையில் சந்தித்துக்கொள்வதாகவும் சொன்னான். தன்னிடமும் மொபைல் இருப்பதாகச் சொல்லி நம்பர் கொடுத்தான். என் மொபைலில் லேண்ட்லைன் நம்பர்களே அதிகம் இருந்தன.

மொபைல் வைத்திருந்த சொற்ப நபர்களும் பெரியவர்களாக அலுவலகத்தில் எனக்கு மேலிடத்தில் பணிபுரிபவர்களாக இருந்தனர். ஆண்டனி அனுப்பும் ஃபார்வேர்டு மெசேஜ்கள், பிக்சர் மெசேஜ்களை சேவ் செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது வேறு யாருக்காவது அனுப்புவேன். கான்டாக்ட் லிஸ்டில் மொபைல் நம்பர்கள் அதிகரித்த பிறகு, ஒரே நாளில் 300 மெசேஜ்கள் எல்லாம் அனுப்பியிருக்கிறேன். முதலில் செம ஜாலியாய் இருந்தது. திடீரென, போட்டிருந்த 300 ரூபாய் பேலன்ஸ் முழுவதும் காலியானதும், கஸ்டமர் கேருக்குக் கூப்பிட்டு சண்டைபோட்டு மெசேஜுக்கான காசு அது எனத் தெரிந்ததும் ஜெர்க் ஆகி, பிறகு குறைத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு நியூ இயர், தீபாவளி, பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பே அட்வான்ஸ் வாழ்த்து அனுப்பிக்கொள்வோம். விசேஷ நாளன்று அனுப்பினால், ஒரு மெசேஜுக்கு 1 ரூபாய் போய்விடும்.

ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு வேளாங்கண்ணி போயிருந்தபோது பீச்சில் வந்து என்னைச் சந்தித்துப் பேசினான். நேரில் பார்க்க செம அழகாய் இருந்தான். பார்த்ததும், இவனுக்கு எப்படி அனுவைப் பிடித்தது எனத் தோன்றிய எண்ணத்தை உடனே விலக்கிவிட்டு, அவனுடன் சகஜமாய்ப் பேசினேன். எனக்கும்கூட `யாரையாவது காதலித்துத் திருமணம் செய்துகொண்டால் என்ன?’ எனத் தோன்றியது. அப்பாவுக்கு பயந்து அந்த நினைப்பை உடனடியாக அழித்துவிட்டேன். எல்லாம் சுமுகமாவே போய்க்கொண்டிருந்தன.

திடீரென ஒருநாள், ஆண்டனி போன் செய்தான். குரல் தழுதழுத்தது. ``வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கிறார்கள் என்று இவர்களாகவே விஷயத்தை உடைத்ததில் பிரச்னையாகிவிட்டது’’ என்றான். இரண்டு ஹெச்.எம்-களும் பெண் மதம் மாறினால் மருமகளாய் ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார்களாம். ஆனால், அனுவுக்கே அதில் உடன்பாடு இல்லையாம். ``பெயரை மாற்றிக்கொண்டு, பொட்டு வைக்காமலெல்லாம் என்னால் வாழ முடியாது’’ என்கிறாளாம். அனுவின் வீட்டிலோ, சாதிக் கலவரத்துக்கு இணையான ரகளை. `கிழக்கே போகும் ரயில்’ சுதாகருக்குக்கூட வீரம் வந்து உதட்டில் ரத்தம் வரும் அளவுக்கு அனுவை அடித்திருக்கிறானாம். ``வீட்டில் பூட்டிவைத்திருக்கிறார்கள்’’ என்றான். ``என்னால் போய்ப் பார்க்க முடியுமா?’’ என்று கேட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்போதுதான் தாவணி அணிவதை நிறுத்திவிட்டு புடவைக்கு மாறியிருந்தேன். அதனாலெல்லாம் இதுபோன்ற விவகாரங்களில் தலையிடும் அளவுக்குப் பக்குவம் வந்துவிட்டதாக நானே நம்பியிருக்கவில்லை. என் பெற்றோர் என்னை எப்படி அனுமதிப்பார்கள்? தயங்கித் தயங்கி மழுப்பலாய் என்னவோ பதில் சொன்னேன். சரியென்று வைத்துவிட்டான். 

ஒளி வளர் விளக்கு - சிறுகதை

இன்னும் சில மாதங்கள் கழித்து மீண்டும் அழைத்தான். உடைந்த குரலில், ``அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்’’ என்றான். திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் பெண்ணின் போட்டோவைக்கூடப் பார்க்க விருப்பமில்லை என்றான். சினிமாக்களில் வருவதுபோல அவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வெறுப்பானோ என்று நானே நினைத்துக்கொண்டு பெரிய மனுஷித்தனமாய், ``உங்கள நம்பி வர்ற அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கை வீணாய்டாதா? அனுவ கொஞ்சம் கொஞ்சமா மறக்கப்பாருங்க” என்று அறிவுரையெல்லாம் சொன்னேன். அதற்குப் பிறகு எனக்குத் திருமணமாகி நான் சம்சார சாகரத்தில் மூழ்கியதில் ஆண்டனியையும் அனுவையும் சுத்தமாய் மறந்துபோயிருந்தேன்.

சர்வேஸுக்கு மொட்டைபோட நாங்கள் பழநி போயிருந்தபோது, ஆண்டனி மறுபடி அழைத்தான். அன்று என் பிறந்த நாள். வாழ்த்தியவனின் குரல் முற்றிலும் வேறு மாதிரியிருந்தது. குதூகலமாய்ப் பேசினான். மகள் பிறந்திருக்கிறாளாம். ``பெயர் ஜெனிஃபர்’’ என்றான். வேறென்ன `அனுராதா’ என்றா வைக்க முடியும்? பேசியதில் முக்கால்வாசி மகள் புராணமாகவே இருந்தது. பேச்சின் முடிவில், தழைந்த குரலில் ``அனுவைப் பற்றி ஏதாவது தெரியுமா?’’ என்று கேட்டான். அவள் பெற்றோரின் சம்மதம் வாங்கிய பிறகு அவர்களின் ஆசியோடுதான் அவனைத் திருமணம் செய்வேன் என்றும், ஆனால் மதம் மாற மாட்டேன் என்றும், கடைசி வரை பிடிவாதமாய் இருந்ததாய்ச் சொன்னான். கடைசிவரை என்றால்... ஆண்டனியின் திருமணம் வரை. கையைக் கிழித்துக்கொண்டும் உண்ணாவிரதம் இருந்தும் போராடிப்பார்த்திருக்கிறாள். பாவம்!

அதற்குப் பிறகு மேலும் 10, 12 வருடம் ஓடிவிட்டது. இப்போதுதான் அனுவின் குரலை மீண்டும் கேட்கிறேன். அவளின் கொஞ்சும் குரலையும் நளின பாவனைகளையும் பார்த்தவர்களால் அவள் அப்படியெல்லாம் போராடுவாள் என்று நம்பவே முடியாது. நிறைய்ய்ய்ய பேசினாள். வகுப்பில் இருந்த நிறைய பேரை மறந்துபோய்விட்டதாகச் சொன்னாள். இன்னும் சிலர் எந்தெந்த ஊர்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். என்னுடையதுபோலவே அவளுடைய கல்லூரி ஆல்பமும் தொலைந்துவிட்டதாகச் சொன்னாள். அதிதீவிர ரமணிசந்திரன் வாசகியாக இருந்த எங்கள் நண்பி ஒருத்திக்கு, இன்னமும் திருமணம் ஆகவில்லை. அவள் யாருடனும் பேசுவதேயில்லை என்றாள். அவளுடைய இப்போதைய வேலை பற்றிப் பேசினாள். தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகச் சொன்னாள். சர்வேஸையும் தர்ஷினியையும் பார்க்க வேண்டும் என்றாள்.

அவள் பேசிவைத்த பிறகு, என்னவோ வெறுமையாய் உணர்ந்தேன். நாங்கள் பேசிய மொத்த நேரம் 58 நிமிடம் என்று என் அலைபேசி காண்பித்தது. 58 நிமிடமாய் நான் எதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேனோ அது நிகழவேயில்லை என்பதுதான் அந்த வெறுமைக்குக் காரணம் எனப் புரிந்தது. எங்கள் உரையாடலின் நடுவே திரி கொளுத்தப்பட்ட வெடிபோல் இருந்த `ஆண்டனி’ என்ற பெயர், தண்ணீர் பட்டதுபோல இருண்டு அணைந்திருந்தது.

மீண்டும் வாட்ஸ் அப்பைத் திறக்கையில் அவள் குடும்பப் புகைப்படம் அனுப்பியிருந்தாள். அவள் நடுவே அமர்ந்திருக்க, பின்னால் அவர் கணவர் ஒல்லியாய் உயரமாய் வழுக்கைத்தலையுடன் நின்றிருந்தார். அருகில் நின்றிருந்த இரு பெண் குழந்தைகளும் கண்களின் ஓரத்தில் நீண்ட மைத்தீற்றல்களோடும் எண்ணெய் தடவிப் பின்னிய இரட்டை ஜடையில் நீண்டு தொங்கும் ஜாதிமல்லிப் பூச்சரங்களோடும் இருந்தனர்.

காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம்