கோவை-மயிலாடுதுறை சதாப்தி விரைவு வண்டியின் குளிரூட்டப்பட்ட பெட்டியின் கதவைத் திறந்ததுமே பூக்களின் வாசனை நாசியைத் தொட்டது. இன்னதென்றில்லை, கதம்பமான நறுமணம். பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்த களைப்பை நீக்கின சில்லென்ற காற்றும் இதமான மணமும். “என்னமா வாசனை? பூ மார்க்கெட்டுக்குள்ள வந்த மாதிரி இருக்கு…” சாரதா தோள்பையை இறக்கிப் பிடித்தாள். எங்கள் இருவருக்குமான இருக்கை எண்ணைத் தேடியபடியே நடந்தேன். ஒதுக்கப்பட்ட இருக்கைகளைக் கண்டதும் உற்சாகம். எப்போதாவதுதான் இப்படி அமையும். உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் செல்போனிலிருந்த தகவலைச் சரிபார்த்தேன். பெட்டியின் மத்தியில் நடுவில் நீண்ட மேசையுடன் எதிரெதிராய் அமைந்திருக்கும் இருக்கைகளில் இரண்டு.

ஜன்னலோரத்தில் சாரதா அமர அடுத்ததில் அமர்ந்தேன். முன்னாலிருந்த மேசை முழுக்க பூக்கள் நிறைந்த பிரம்புக் கூடை. பிச்சியும் சம்பங்கியும் அரளியும் ரோஜாவுமாய் மணந்தன. ஓரமாக வாழை இலை மூடிய பூ மாலைகள். பெட்டியை மேலே வைத்துவிட்டு உட்கார்ந்ததும் எதிர் இருக்கையில் இருந்தவள் சொன்னாள் “தப்பா நெனச்சுக்காதீங்கோ. ஒங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லேன்னா இதெல்லாம் இப்பிடியே வெச்சுக்கவா?”

“அதெல்லாம் பரவால்லே. பூதானே?” சிரித்தபடியே சொன்னேன். அவளும் புன்னகைத்துத் தலையாட்டினாள். சாரதாவின் பார்வை என்னைத் தொடுவதை உணர்ந்தேன்.

“மாலையெல்லாம் அம்பாளுக்குத்தான். தோள்மாலை முடிஞ்சது. ரெண்டு தொண மாலை. அப்பறமா சரந்தான். நீங்க திருப்பூர்தானா?”

என்னைப் பார்த்தே அவள் பேசிக்கொண்டிருக்க சாரதா அவளையே உற்றுப் பார்த்திருந்தாள். பட்டையான சிவப்பு பார்டர் வைத்த அடர்ந்த சம்பங்கி நிறச் சேலை. கட்டான உடல். கச்சிதமான முகவெட்டு. ஒற்றைச் சங்கிலி கழுத்தில் மின்ன, ஜன்னல் வழியே விழுந்த எதிர் வெயிலில் மூக்குத்தி சுடர்ந்தது. நீண்ட விரல்கள் பூக்களை எடுப்பதும் சரத்தில் நூலைச் சுற்றித் தொடுப்பதுமாய் அசைந்திருக்க முகத்தில் சிரிப்பு மறையவேயில்லை.

“கேக்கப்படாது. ஆனாலும் எதிலயாச்சும் ஆரம்பிக்கணுமே. எது வரைக்கும் போறேள்?”

என்னை இனி அவளுடன் பேச அனுமதிக்கக் கூடாது என்று நினைத்தவள்போல சாரதா சன்னமான குரலில் ஆர்வமில்லாமல் சொன்னாள் “கும்போணம். எங்க பையன் அங்க பேங்க்ல வேல பாக்கறான்.”

“நல்லதாச்சு. கும்போணம் வரைக்கும் பேச்சுத் தொணையிருக்கு. நான் மாயவரம் வரைக்கும் போயி அங்கேர்ந்து திருக்கடையூர் போணும். பத்து நாளைக்கு ஒரு தடவையாச்சும் என்னைப் பாக்காட்டா அவளுக்கும் முடியாது. எனக்கும் முடியாது பாத்துக்கோங்க. அப்பிடியொரு கொடுப்பினை ரெண்டு பேர்க்கும்.”

சாரதாவின் முகத்தைப் பார்த்தேன். என்னை ஏறிட்டவள் அவசரமாய்க் கேட்டாள் “திருக்கடையூர்ல யார் இருக்கா?”

“என்ன இப்பிடிக் கேட்டுட்டேள். அம்பாள் இருக்காளே. அபிராமி. அவ ஒருத்தி போறுமே. வேற யார் வேணும்?” சிரித்தபடியே சொன்னபோது அவள் முகம் இன்னும் பிரகாசித்தது.

நான் ஓரக்கண்ணால் சாரதாவைப் பார்த்தேன். அவள் ஜன்னல் பக்கமாய் முகம் திருப்பியிருந்தாள்.

“நீங்க போனதில்லையா?”

“போயிருக்கோம். இவா மாமாவோட சஷ்டியப்திக்கு. ரெண்டு வருஷம் இருக்கும். இதே வண்டிலதான்.” பூத்தொடுக்கும் அவளது விரல்களைப் பார்த்தபடியே சொன்னேன்.

“இங்கிருந்து ஏன் மாலை கட்டிட்டுப் போறீங்க?” காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி அவளருகில் அமர்ந்திருந்த இளம்பெண் மெல்லக் கேட்டாள்.

“பரவால்லே. நீயும் பேசிட்டே. என்னடா இந்தப் பொண்ணு திருச்சி வரைக்குமே காதுல இதை மாட்டிட்டு எதையும் பேசாம வந்துருமோன்னு யோசனையாவே இருந்தேன். காலேஜ்ல வாசிக்கிறியா?”

“ஆமா ஆன்ட்டி. ஆர்.இ.சி.”

“என்னவோ கேட்டியே? எதுக்கு இதக் கட்டிட்டு இருக்கேன்னுதானே?” தலை திருப்பிப் பார்த்தபோது அவளது காதோரத்தில் பூனை முடிகள் மினுத்தன.

“அதென்னவோ தெரிலம்மா. அவளுக்கு எங் கையால மாலை வாங்கிப் போட்டுக்கணும்னு அவ்ளோ ஆசைபோல. நா பேசாம இருந்தாலும் யார் வழியாவாச்சும் கேட்டு வாங்கிப் போட்டுக்கறா…” சொன்னபடியே நிமிர்ந்து என்னைப் பார்த்தவள் உதடுகள் மினுக்கப் புன்னகைத்தாள். “இப்பக்கூடப் பாருங்கோ. கனெக்டிக்கட்ல இருக்கற ஏகாம்பர மாமாவுக்காகத்தான் இதெல்லாம். ரெண்டு நா முன்னாடிதான் ஸ்கைப்ல கூப்ட்டார். வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு மாலை சாத்தணும்னு கேட்டார். இதோ, பொறப்ட்டு வந்துட்டேன். மாயவரத்துல எறங்கும்போது கட்டி முடிச்சுடுவேன்.”

அவள் சொல்வதை நம்பமுடியாததுபோல் ஆர்.இ.சி மாணவி விழியுயர்த்திப் பார்க்க, நான் சாரதாவைப் பார்த்தேன். அவளது உதடுகள் ஒருநொடி சுழித்து மீண்டன.

“அவங்க திருக்கடையூர்ல யார்கிட்டயாச்சும் சொன்னா இன்னும் சுலபந்தானே?” ஆர்.இ.சி தலைமுடியை ஒதுக்கி இறுக்கினாள்.

“சமத்துடி நீ. நன்னா கேக்கறே. எனக்கும் அது ஏன்னு தெரியலை. ஆனா, இந்த ரெண்டு வருஷமா இப்பிடி வந்து போயிட்டுத்தான் இருக்கேன். மாலை கட்டிப் போடறேன். அபிஷேகம் ஏற்பாடு செய்யறேன். பொடவை சாத்தறேன். யார் எப்பிடிக் கேக்கறாளோ அப்பிடி. கட்டளை அவளோடது. யார் வழியாவோ என்னைச் செய்ய வைக்கறா. திருக்கடையூர்னு இல்லை. காஞ்சிவரம், கொல்லூர், மதுரைன்னு எங்கயாச்சும் என்னை அலைய வெச்சுண்டேதான் இருப்பா. ஒருநா ஒருபொழுது அக்கடான்னு இருக்க விடமாட்டா.”

தொடுப்பதை நிறுத்திவிட்டுக் கூடையை ஏறிட்டாள். பூக்களை மெல்ல அளைந்து உதிர்த்தாள். மரிக்கொழுந்தை எடுத்து மடித்துத் தொடுத்தபடியே ஜன்னல் வழியாகப் பார்த்தாள் “ஈரோடு வந்துருக்கணுமே…” திருத்தமான வகிட்டுக் குங்குமம்.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவர்களை அவள் பக்கமாய்த் திரும்பச் செய்தது பூ மணம். உள்ளே வரும் ஒவ்வொருவரையும் சிரித்த முகத்துடன் கவனித்தபடியே தொடர்ந்தாள் “அதென்னவோ என் கையால கட்டின மாலையைப் போட்டுண்டாதான் அவளுக்குத் திருப்திபோல. இதோ கட்டி வெச்சிருக்கற இந்த மாலையைக் கொண்டுபோய் அப்பிடியே சாத்திர்லாம். உயரம் தெடம் எல்லாமே கச்சிதமா இருக்கும்.”

“நீங்க கோயமுத்தூரா?” சாரதா கேட்டபோது ரயில் நகர்ந்தது.

“சொந்த ஊரான்னு கேட்டா, இல்லை. பொறந்தது பவானி அக்ரஹாரத்துல. அம்மா மொகம் தெரியாது. அப்பாதான் எல்லாம். எட்டு வரைக்கும் படிச்சேன். கோயமுத்தூர்ல அப்பாவோட சிநேகிதர் ஒத்தாசைக்கு வரச் சொன்னார். பாவாடை சட்டையோட வாசல்ல நின்ன என்னை அந்தாத்து மாமி கூப்பிட்டு மடியில வச்சுட்டா. அவாளோட சேர்ந்துதான் பூக்கட்ட ஆரம்பிச்சேன். கோலம் போடவும் சமைக்கவும் கத்துட்டேன். அப்பறமா அப்பாவுக்கு ஒத்தாசையா பூசை ஹோமத்துக்கு ஏற்பாடு பண்றதுன்னு நாள் ஓடிப் போயிடுத்து. பத்தொம்பது வயசுல கல்யாணம். அதான் சொன்னேனே. வட நாட்டுக்கு டூரெல்லாம் அழைச்சிட்டுப் போறாளே, அதுல சமையல் வேலை அவருக்கு. வருஷத்துல பாதி நாள் ரயில்லயே ஓடிடும். என்னோட கூடப் பொறந்தவன் ஒருத்தன். திருநெவேலிப் பக்கமா எங்கியோ இருக்கான். எப்பவாச்சும் பாக்கும்போது மொகம் பாத்துப் பேசறதோட சரி.” சொல்லி முடித்தபோது அவளது உதடுகளில் இழையோடியது புன்னகை.
யாரோ சிற்றுண்டிப் பொட்டலத்தைப் பிரித்திருக்க வேண்டும். சாம்பாரின் மணம் சுழன்றது.

“டிபன் ஆயிடுத்தா?” சாரதாவைப் பார்த்துக் கேட்டாள்.

“இனிமேதான். நீங்க?” பையிலிருந்து வாழையிலையில் மடித்த இட்லிப் பொட்டலங்களை எடுத்தாள்.

கூடாது என்பதுபோலச் சிரித்தபடியே தலையாட்டினாள்.

“விரதமா?”

“விரதந்தான். பச்சத் தண்ணிகூடப் பல்லுல படாத விரதம்” கணீரென்ற குரல் அவள் பின்னாலிருந்து கேட்டது. அவள் திரும்புவதற்குள் நடைவழியில் வந்து நின்றாள் அவள். தாட்டியமான உடல். கழுத்தை மறைத்த ஆரங்கள். ஜரிகைகள் மினுக்கும் அரக்கு பார்டருடனான பச்சைப் புடவை.

“நாராயணா நாராயணா. யாரிதுன்னு திரும்பறதுக்கு முன்னாடியே தெரிஞ்சுடுத்து ஒங்க குரல். நன்னா இருக்கேளா லலிதா மாமி?” விரல்கள் ஒருகணம் ஓய்ந்து மீண்டும் தொடுக்கலாயின.

“நீ எப்பிடி இருக்கே? இன்னிக்கு உன்னைப் பாக்கணும்னு நெனச்சுண்டே வந்தேன். கண்ணுல காட்டிட்டா அவ.” நிறைந்த சிரிப்பில் அவள் முகம் இன்னும் சிவந்தது.

“மாயவரத்துல எறங்கி கோயில்ல போயி இதயெல்லாம் கொடுக்கற வரைக்கும் எதையும் சாப்பிடமாட்டா. குடிக்கமாட்டா. அவ்ளோ சுத்தம். அதனாலதான் அம்பாளுக்கு இவமேல இத்தனை இஷ்டம். உலகத்துல எங்க எங்கியோ இருக்கறவா எல்லாம் பிரார்த்தனையை நிறைவேத்த இவகிட்ட சொல்றா. யாருக்குக் கிடைக்கும் இப்பிடி ஒரு கொடுப்பினை?” லலிதா பெட்டியிலிருந்த எல்லோருக்கும் அறிவிப்பதுபோல உரத்த குரலில் சொன்னாள்.

“செத்த சும்மா இருக்கறேளா? நீங்க சாப்ட்டேளா? ஈரோட்டுக்காரங்க சூடா ஆத்துல சாப்ட்டுட்டுத்தான் வந்துருப்பேள். பேத்தியைப் பாக்கத்தானே? சீரங்கம் போவேளா?”

“திருச்சி வரைக்கும் போயிட்டு சீரங்கம் போகாம எப்பிடி? ரங்கனுக்கும் என்னவாச்சும் வெச்சுருக்கியா?”

“ரங்கனுக்கு இல்லாமயா? வர்றச்சே திருச்சில எறங்கிப் போணும். ஒருநாதான். ஞாயித்துக் கெழமை காலம்பற வண்டில டிக்கெட் போட்ருக்கேன்.”

‘சாய்… சாய்… ஏலக்கா சாய்…’ உரத்த குரலுடன் வேகமாய் வந்த நீலச் சீருடையாளன் லலிதாவைக் கடந்துசெல்ல முடியாமல் தயங்கினான்.

“நல்லதாப்போச்சு. நானும் அதுலதான் வரேன். சித்த உக்கார்ரேன். கால வலிக்குது” லலிதா நகர்ந்து போனவுடன் சாரதா இலையைப் பிரித்தாள். எதிரில் இருந்தவளை நிமிர்ந்து பார்த்தாள். சிரிப்பிலிருந்து மீண்டிருக்கவில்லை. கட்டி முடித்த சரத்தை பந்துபோல நிதானமாகச் சுற்றிக் கூடைக்குள் வைத்தவள் கொக்கியில் தொங்கிய பையை எடுத்தாள். சிறிய எவர்சில்வர் பாத்திரத்தை வெளியே எடுத்து மூடியைத் திறந்ததும் அவசரமாகப் பரவிற்று மல்லிகையின் மணம். இதழ் விரியத் துவங்கிய மொக்குகள். இட்லியின் ருசியில் மல்லிகையின் வாசனை.

“ஆம்படையான் ஊர்லயா? டூர் போயிருக்காரா?” அவளுக்குப் பின்னாலிருந்து லலிதாவின் குரல் கேட்டது.

சிவந்த உதடுகள் நெளிய புன்னகைத்தவள் திரும்பாமலே சொன்னாள் “ஊர்லதான் இருக்கார். அடுத்த வாரந்தான் காசிக்குப் போறார்.” அதைச் சொல்லி முடித்தபோது முகத்தில் சன்னமாய் நிழல் படர்ந்து விலகிற்று.

கையைக் கழுவிவிட்டு வந்ததும் சாரதா என்னை ஜன்னலருகில் அமரச் செய்தாள். கண்களைமட்டும் உயர்த்திப் பார்த்தவள் உதடுகளில் மீண்டும் புன்னகை.

ஆர்.இ.சி பின்னால் திரும்பி லலிதாவிடம் சொன்னாள் “நீங்க வேணா இங்க வந்துருங்களேன்.”

“நானே கேக்கலாம்னு பாத்தேன். தேங்க்ஸ்டி பொண்ணு” பச்சைப் புடவையை இழுத்துச் சரிசெய்தபடி முன்னால் வந்து மலர்ச்சியுடன் அமர்ந்தாள். பெருமூச்சுடன் கண் நிறைய அவளைப் பார்த்தவள் அங்கலாய்ப்புடன் சொன்னாள் “அப்பிடியே கன்னத்தைப் புடிச்சுக் கிள்ளணும்னு வருது. ஆனா, இப்ப உன்னைத் தொடப்படாதேன்னு பேசாம இருக்கேன்.”

நிமிர்ந்து சிரித்தவளைப் பார்த்து மெதுவாகக் கேட்டாள் “நோக்கென்னடி வயது இப்ப?”

“எதுக்கு?”

“சும்மாதான் சொல்லு.”

“ஆடி வந்தா முப்பத்தி எட்டு முடியறது.”

“ஆனா உன்னப் பாத்தா அப்பிடியா இருக்கு?”

அவள் மடியில் சுருண்டிருந்த மல்லிகைச் சரத்தை விலக்கி அளவு பார்த்தாள். மீண்டும் மொக்குகளைப் பொறுக்கி அடுக்கலானாள்.

“உன் ஆத்துக்காரர் இன்னும் அப்பிடியேதான் இருக்காரா?” குரலை அடக்கியபடி அவள் கேட்டதும் சாரதா நிமிர்ந்தாள். காதுகளைத் தீட்டியபடி அவளது பதிலைக் கேட்கத் தயாரானாள்.

எதுவும் சொல்லாமல் அவள் வெறுமனே தலையாட்டினாள். மூக்குத்திச் சுடர் ஒருகணம் மின்னலிட்டு விலகியது.

“உங்கிட்ட என்னடி கொறை? நீயும் ஏன்தான் இப்பிடிப் பேசாம இருக்கியோ?” லலிதா கண்களை மூடிக்கொண்டாள்.

“நேக்கென்ன. நன்னாதானே இருக்கேன். இதப் பாருங்கோ, நெத்தி நெறைய பொட்டு வெச்சிருக்கேன். கழுத்துல தாலி. பொம்மனாட்டிக்கு வேற என்ன வேணும்?” அவள் விரல்கள் இன்னும் மொக்குகளை நிதானமாகப் பொறுக்கித் தொடுத்தபடியேதான் இருந்தன.

“ரொம்ப நன்னா இருக்கேடி. தாலியும் மெட்டியும் இருந்தா ஆச்சா? ஆம்படையான புடிச்சு வெச்சுக்க வேணாமா. ஆத்துக்கு வராரா இல்லியா?”

அவள் திரும்பி லலிதாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். சிரித்தாள். “அம்பாளோட நான் இருக்கேன். அவர் அவளோட இருக்கார்.” மல்லிகைச் சரத்தை நிதானமாகச் சுருட்டிக் கூடைக்குள் வைத்தாள்.

“என்னவோ அவருக்குப் புடிக்கலை. அவகூட இருக்கார். அதுக்காக மொத்தமா விட்டுட்டும் போயிடலை. ஊர்ல இருக்கறச்சே அவர்தான் எல்லாத்தையும் பாத்துப் பாத்துச் செய்யறார். பூ மார்க்கெட் போறது, கோயில்களுக்குக் கூப்ட்டு ஏற்பாடு பண்றது, டிக்கெட் போடறதுன்னு எல்லாத்தையும் செஞ்சு தர்றார். அவர் வெளியூர் போறபோதுங்கூட எல்லாத்துக்கும் சொல்லிட்டுத்தான் போறார். போன்ல கூப்பிட்டுச் சரியா நடக்கறதான்னு அக்கறையா பாத்துக்கறார். பாத்துப் பாத்துதான் செய்யறார். ஒரு கொறையும் வக்கிறதில்லை. என்ன, ராத்தங்கறது மட்டும் அங்க அவளோட. ஆரம்பத்துல என்னவோ கஷ்டமாத்தான் இருந்தது. இப்பல்லாம் இருந்துட்டுப் போட்டுமேன்னுதான் தோன்றது.”

மீதியிருந்த பூக்களையும் மரிக்கொழுந்தையும் ஒதுக்கி வைத்தாள்.

“என்னடிம்மா நீ? பொழைக்கத் தெரியாம இருக்கியே…. தாயே மீனாட்சி” முகவாட்டத்துடன் லலிதா தலைதூக்கி முணுமுணுத்தாள்.

கறுப்புக் கோட்டுடன் அருகில் வந்த டிக்கெட் பரிசோதகரைக் கண்டதும் அவள் முகம் மீண்டும் மலர்ந்தது “தேங்க்ஸ்ண்ணா. இந்த சீட்டை மாத்திக் குடுக்காட்டிச் சிரமந்தான்.”

தலையாட்டியபடியே அவர் நகரவும் லலிதா மறுபடியும் கேட்டாள் “டூர் போம்போது அவளையும் கூட்டிண்டுதான் போறாரா?”

செவ்வரளி, மரிக்கொழுந்து, சாமந்தி எனக் கதம்பச் சரம் விறுவிறுவென அவள் விரல்களில் நீண்டது. “இதென்ன கேள்வி. இப்பவும் கூடவேதான் போறா. டூர் போறவாளுக்குச் சமைச்சுப் போடப் போம்போதுதானே அவளப் பாத்தது. அலகாபாத், காசி, கயான்னு நாப்பது நாள் டூர் அது. அப்பதான் அந்த மகராசி என்னோட பூவைப் பங்குபோட்டு எடுத்துண்டா. பரவால்லே. அவர் சந்தோஷமா இருக்கார். இருக்கட்டும். அதுதானே முக்கியம்.”

செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. கூடையருகில் வைத்திருந்த கைப்பையிலிருந்து செல்போனை எடுத்தாள். “சொல்லுங்க மாமா. வண்டி இதா குளித்தலை தாண்டிடுத்து… அரை அவர்ல வந்துரும்… ஸ்டேஷனுக்கு வரேளா? ஏ.சி கோச்…” இணைப்பைத் துண்டித்தவள் லலிதாவைப் பார்த்துச் சிரித்தாள் “உறையூர்ல இருக்காளே சுந்தரம் மாமா அவர்தான். அவா பேரனோட ஆயுஷ்ய ஹோமத்துக்குச் சொல்லிருந்தார்…”

“நோக்கொரு புள்ளைய குடுத்துருக்கப்படாதா அந்த மகமாயி…” லலிதா ஜன்னல் வழியாகப் பார்த்தாள். “காவிரிய கண்ணுல பாக்க முடியல. கரையத் தொட்டுண்டு ஓடும். அம்மா மண்டபத்துல ஸ்நானம் பண்ணியே வருஷம் பத்தாயிடுத்து.”

அவளும் திரும்பிப் பார்த்தாள். வெகு தூரம் வரைக்கும் அனலோடிக் கிடந்தது மணல் படுகை. நீல வானில் வெண்மேகங்கள். ‘வாட்டர்… வாட்டர்…’ தோளில் தண்ணீர் பாட்டில்களைச் சுமந்தபடி வந்தவன் அவளைக் கண்டு நின்றான் “மாமி நல்லா இருக்கா?”

“படவா. உனக்கு எத்தன தரம் சொல்லித் தரது? ‘நல்லா இருக்கா’ன்னு கேக்கப்படாது. ‘நல்லா இருக்கீங்களா’ன்னு கேக்கணும். இன்னிக்கு என்ன தண்ணி பாட்டலைத் தூக்கிட்டே?”

பதில் சொல்லாமல் சிரித்தவனின் பற்களில் வெற்றிலைக் கரை பளிச்சிட்டது. “சீமா பேட்டிக்கு நீங்க குடுத்த டிரஸ் நல்லா இருக்குன்னு போன்ல மம்தா சொன்னா.”

“இருக்கட்டும். சீக்கிரமா ஊருக்குப் போயி பொண்ணு மொகத்தப் பாரு. அஞ்சு மாசம் முடிஞ்சிருச்சில்ல. பாவம்.”

அவன் தலையாட்டியபடியே சுமையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தான்.

காவிரியின் மறுகரையில் ராஜகோபுரம் தென்பட்டது. அவள் குனிந்து பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

லலிதா பெருமூச்சுவிட்டபடியே எழுந்தாள். “என்னவோ போ. நீயும் இப்பிடிப் பாத்துப் பாத்துதான் செய்யறே. அதுக்கெல்லாம் பலனில்லாமியா போயிரும். சரி. ஞாயித்துக் கெழமை பாக்கலாம்.”

“இந்தாங்க மாமி” ஒரு முழ மல்லிகைச் சரத்தை நீட்டினாள்.

வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டவள் தலையில் செருகினாள். வண்டி குலுங்கலுடன் நின்றது. இ.ஆர்.சி-யும் தலையாட்டிவிட்டு நகர்ந்தாள். எழுந்து வெளியே வந்தேன். அனல்காற்று முகத்தில் மோதியது. கையிடுக்கில் கறுப்புத் தோல்பை, ஏந்திப் பிடித்த மயில்கண் வேட்டியுடன் வந்தவர் அவசரமாய் உள்ளே ஏறினார்.

சூடான காபி கோப்பையுடன் திரும்பி வந்தபோது மயில்கண் வேட்டி அவளருகில் அமர்ந்திருந்தார்.

“நான் சொன்னேனே, இவர்தான். உறையூர் மாமா. இவா ரெண்டுபேரும் கும்மோணம் போறா.”

வழுக்கைத் தலையில் இன்னும் வேர்வையின் மிச்சம். நீண்ட நாசியின் நுனியில் தொற்றி நின்ற கண்ணாடியை மேலேற்றியவர் கைப்பையைத் திறந்து பழுப்பு உறையை எடுத்தார். “இதுல ஆறாயிரம் இருக்கு. மிச்சத்தை ஞாயித்துக் கிழமை வாங்கிக்க. எந்தக் குறையும் இருக்கப்படாது. பிரசாதத்தை ஃபிளைட்ல அனுப்பிச்சிட்டா போறும்.”

“கவலப்படாதீங்கோ. அதுபாட்டுக்குக் கச்சிதமா நடக்கும். நீங்க வாயக் கட்டணும். கேக்கறக்கு ஆள் இல்லேன்னு பாதாம் அல்வாவையும் ரவா தோசையையும் தின்னா என்னத்துக்கு ஆகும்? ஒடம்பப் பாத்துக்கோங்க” சிரித்தபடியே பழுப்பு உறையைப் பையில் பத்திரப்படுத்தினாள்.

மயில்கண் மாமா எழுந்துகொண்டார். மறுபடியும் பையைத் திறந்து எதையோ தேடினார். “சரி. நீ ஜாக்ரதையா போயிட்டு வா. போன் பண்ணு.” வேட்டி நுனியை ஏந்தியபடி விறுவிறுவென நடந்தார்.

கதவைத் திறந்துகொண்டு அவர் வெளியே மறைந்ததும் செல்போனை எடுத்தாள். நிதானமாக நகர்த்தி குறிப்பிட்ட எண்ணை அழைத்தாள்.

“டேய் கடங்காரா, நாந்தாண்டா. கேக்கறதா? அரைமணி நேரத்துல வந்துடும். என்னால எறங்க முடியாது பாத்துக்கோ. டயத்துல வந்து வாங்கிக்க. இத சேக்கலேன்னா அந்தச் சமயபுரத்துக்காரி என்னை உண்டு இல்லேன்னு பண்ணிடுவா. படவா ஒழுங்கா வந்து சேரு… ஆமாண்டா. ஏசி கோச்சுதான். எத்தன தரம் சொல்றது? வந்து சேரு.”

ஒரு முழ அளவிலான மல்லிகைச் சரத்தைக் கூடையிலிருந்து எடுத்து சாரதாவிடம் நீட்டினாள் “நீங்க வெச்சுக்கோங்க.”

சாரதா எதுவும் சொல்லாமல் வாங்கித் தலையில் செருகினாள். “சமயபுரத்துக்கும் போகணுமா நீங்க?”

“போணும்தான். ஆனா நாழியாயிடும். சிங்கப்பூர்லேர்ந்து ஒர்த்தர் பச்சைப்பட்டு சாத்தச் சொல்லிருக்கார். அதைச் சேத்தர்லாம்னு தெரிஞ்சவாளை வரச் சொல்லிருக்கேன். குடுத்துட்டா நிம்மதியா இருக்கும். அவகிட்ட கடன் வெச்சுக்கப்படாதில்லை.”

வண்டி நகர்ந்தவுடன் கூடையிலிருந்த பூப் பந்துகளை ஒழுங்குபடுத்தினாள். இலையில் சுற்றிய மாலைகளைச் சரிபார்த்து ஒதுக்கினாள். வலதுகாலை மடித்துப்போட்டு நிமிர்ந்தவள் சாரதாவிடம் சொன்னாள் “லலிதாமாமி அப்பிடித்தான். எல்லாத்தையும் திரும்பத் திரும்பக் கேப்பாங்க. நெறைய தரம் சொல்லியாச்சு. ஆனாலும் புதுசா கேப்பாங்க. அம்பாள் தலையில என்ன எழுதிருக்காளோ அதானே நடக்கும். அவகிட்டபோய் நாம போட்டி போட முடியுமா?”
சாரதா என்ன பதில் சொல்லப்போகிறாள் என்று காத்திருந்தேன். எதுவும் சொல்லவில்லை. புடவையில் ஒட்டியிருந்த அரளி இதழைக் கையில் எடுத்துப் பார்த்தவள் காற்றில் அதைச் சுண்டியபடியே சொன்னாள் “அவளுக்கு என்னை அழ வெச்சுப் பாக்கறதுல என்னவோ ஒரு சந்தோஷம். இப்பிடித்தான் நான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டா. என்ன பண்ண முடியும். இருந்துர்லாம். இதுல என்ன இருக்கு?”

சாரதா தலையைக் குனிந்தபடி கண்களைத் துடைப்பது தெரிந்தது.

“இருங்கோ. நான் எதுக்கும் வாசல்லபோய் நிக்கறேன். வண்டி இங்க ரொம்ப நாழி நிக்காது.” மேலிருந்து துணிப்பையை எடுத்துக்கொண்டு எழுந்து நடந்தாள்.

பெரியகோயில் கோபுரம் மரங்களுக்கு நடுவே தெரிந்தது. அபாரமான வெயில். வளை முகடுகளுடனான நிறம் மங்கிய கட்டடத்தை ஒட்டி அமைந்த மரப்படிகளுக்குக் கீழே கை நிறைய வளையல்களுடன் ஒருத்தி காலை நீட்டி உட்கார்ந்திருந்தாள். வகிட்டுக் குங்குமம் வேர்வையில் கரைந்து வழியும் களையான முகம். சூல்கொண்ட பேரழகு. அவளருகில் நின்றிருந்த சிறுமிக்கு மூன்று வயதிருக்கலாம். மேடிட்ட வயிற்றை மெல்லத் தொட்டு என்னவோ கேட்டாள். அம்மா அவள் கன்னத்தைத் தொட்டு ஏதோ சொல்லவும் சிறுமி இன்னும் நெருங்கி வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மணியொலித்து வண்டி நகர்ந்தது. சாரதா கதவுப் பக்கமாகவே பார்த்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு மூச்சிரைக்க அவள் வந்தாள். கழுத்து வேர்வையைத் துடைத்தபடி அமர்ந்தவள் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தித்தாள். என்னவென்று கேட்பதற்குள் செல்போன் ஒலித்தது.

“கடங்காரா. ஏன்டா இப்பிடிப் படுத்தறே? வர முடியலேன்னா சொல்லப்படாதா? ஆமா, இப்ப வண்டி மாயவரத்துக்குப் போனப்பறம் வா. என்ன பண்ணினேனா? உனக்கு மட்டும் ரயில் தனியா வருமாடா? உன் தலை. படியேறி மேல வரும்போது டீக்கடை இருக்கில்லை. ஆமா… அதான். ரெண்டாவது பிளாட்பாரத்துலதான்டா. அங்க பையைக் குடுத்துருக்கேன்டா. ஆமா. ஒரு பச்சைப் புடவை. ஒரு மாலை. நூத்தியொரு ரூபா காணிக்கை. வந்து வாங்கிட்டுப் போயி கையோட சித்த குடுத்துடு. மறந்துடாதே. அப்பறம் அவ என்னையப் போட்டு நொக்குவாடா.”

போனை வைத்துவிட்டு நிமிர்ந்தாள். சாரதா அவளைக் கவலையுடன் பார்த்திருந்தாள். “நீங்க சொல்ற அவர் வர்லேன்னா?”

அவள் முதுகை நிமிர்த்தி அமர்ந்தாள் “இதப் பாருங்கோ. அவளுக்கு வேணும்னுதான் இது வரைக்கும் சொமந்துட்டு வந்தேன். எறக்கியும் வெச்சுட்டேன். இனி அவ பாடு. அவளுக்கு வேணும்னா வாங்கிப்பா. இல்லேன்னா என்னால என்ன பண்ண முடியும்?” விட்டேத்தியா அவள் பேசியதை நம்ப முடியாதவளாய் பார்த்திருந்தாள் சாரதா.

ஒருநொடிப் பொழுது யோசித்தவள் திரும்பவும் சொன்னாள் “அப்பிடியெல்லாம் விட்றமாட்டா. அவனை அனுப்பி வாங்கிப்பா.”

வெடித்துக் கிடந்த வயல்வெளிகளின் நடுவே பழுத்த மூங்கில் புதர்கள். அங்கங்கே முளைத்தெழுந்த குடியிருப்புகள். துளசிமாலை கட்டியபடியே அவள் சொன்னாள் “கண்ணுல பாக்க முடியலை. எங்க பாத்தாலும் பச்சைப் பசேல்னு இருக்கும். கண்ணாடி மாதிரி தண்ணி நிக்கும். ம்…” பெருமூச்சுடன் தலைதிருப்பினாள்.

கண்களை மூடிச் சாய்ந்தாள். காலையில் கண்டதுபோல அதே சிரிப்பும் வனப்புமான முகம். சிறிதும் களைப்பில்லை. சோர்வில்லை. ஆழ்ந்த யோசனைபோல் கண்கள் அசைந்தன. உதடுகள் சுலோகத்தை முணுமுணுத்திருந்தன. ஏதோ நினைவு வந்ததுபோல் சட்டென்று கண்களைத் திறந்து வெளியே பார்த்தாள். செல்போனை எடுத்தாள்.

“மாமா… நான்தான். வண்டி கும்மோணம் வந்துடுத்து. தப்பா நெனக்காதீங்கோ. நா இங்கியே எறங்கறேன். ஒரு காரியம் இருக்கு. நீங்க ஆள் யாரையாச்சும் அனுப்பி மாலையை எடுத்துக்க முடியுமா? நான் சாயங்காலம் வந்தர்றேன். சரி மாமா. ரொம்ப தேங்க்ஸ் மாமா…”

மாலைகளையும் கூடையையும் ஒதுக்கி வைத்தாள். துணிப்பையை மட்டும் எடுத்துக் கொண்டாள். “நானும் இங்கதான் எறங்கறேன். வாங்கோ” என்று முன்னால் நடந்தாள்.

இருவரும் இறங்குவதற்காகக் காத்திருந்தாள். சாரதா பையை எடுத்துக்கொண்டதும் கேட்டாள் “மாயவரத்துலதான எறங்கணும். இங்கியே எறங்கிட்டீங்க.”

“திடீர்னு என்னவோ ஒரு நெனப்பு. கருகாவூர்ல போயி கர்ப்பரட்சாம்பிகையைப் பாக்கணும்னு தோணிடுத்து. அவ புள்ளையாண்டிருக்கா. நல்லபடியா பெத்துப் போடணும்னு அம்பாள் காதுல சொல்லிட்டா தேவலைன்னு பட்டுது. நெய் விளக்குப் போட்டுட்டு பிரசவத்துக்கு எண்ணெயை வாங்கிட்டுப் போலாம்னு பாக்கறேன். அதான் எறங்கிட்டேன். நேக்குதான் வயிறு தெறக்கலை. அவளுக்கு வாய்ச்சிருக்கு. சுகப்பிரசவமா அமையணும். யார் பெத்தா என்ன?”

பதிலை எதிர்பார்க்காமல் பையைத் தோளில் போட்டபடி விறுவிறுவென நடக்கலானாள். பொங்கி வந்த கண்ணீருடன் நின்றிருந்த சாரதா தலையிலிருந்த மல்லிகைச் சரத்தைத் தொட்டுப் பார்த்தாள் “என்ன மனுஷி இவ.”

வாசலுக்கு வந்து நின்றபோது வட்டமிட்டுத் திரும்பிய ஆட்டோவிலிருந்து அவள் கையசைத்தாள்.

பதிலுக்குக் கையசைத்தபடியே சாரதா சொன்னாள் “என்ன பேர்னுகூட கேட்டுக்கலை.”

“அதான் சொன்னாளே?” என்றபடியே நடந்தேன் நான்.

அவள் எப்போது என்ன பெயர் சொன்னாள் என்று சாரதா கேட்கவுமில்லை, நான் சொல்லவுமில்லை.