Published:Updated:

17 ஜல்லிக்கட்டுக் காளைகள்...வருவாயில் பாதியைச் செலவுசெய்யும் மதுரை லாரி டிரைவர்!

"என் வருமானத்தில் பாதி இவைகளுக்குத்தான் போகின்றன. அதற்காக நான் கவலைப்பட்டதில்லை. இந்தக் காளைகளைத் தவிர, ஐந்து நாய்க்குட்டிகள், ஆட்டுக்கிடாய்கள், சேவல்கள் எனப் பல வாயில்லா உயிரினங்களை வளர்த்துவருகிறேன். இவைகளோடு இருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்."

17 ஜல்லிக்கட்டுக் காளைகள்...வருவாயில் பாதியைச் செலவுசெய்யும் மதுரை லாரி டிரைவர்!
17 ஜல்லிக்கட்டுக் காளைகள்...வருவாயில் பாதியைச் செலவுசெய்யும் மதுரை லாரி டிரைவர்!

``சீனிப்பெருமாளுக்கு இனிப்பு பிடிக்காது; கறுப்புக்குக் கறுப்பு நிறம் பிடிக்காது; சின்ன சோலைக்கு வாழைப்பழம் வாங்கித் தராத கோபத்துல கோபிச்சுக்கிட்டான்" எனத் தன் காளைகளின் பயோடேட்டாவைப் பற்றிச் சொன்னார், வீரபாண்டி. பிறகு, பயோடேட்டாவைப் பாதியிலேயே விட்டுவிட்டு காளைகளைக் கொஞ்ச ஆரம்பித்தார். மதுரை சிக்கந்தர் சாவடிப் பகுதியில் வசிக்கும் வீரபாண்டி, 12 லாரிகளைவைத்து தொழில் செய்வதுடன், 17 காளைகளையும் தனி ஆளாக வளர்த்து, பராமரித்து வருகிறார். 

அவற்றின் கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் மத்தியில் நம்மிடம் பேசினார், வீரபாண்டி. ``நான் குடும்பத்தோடு மதுரை செல்லூர் பகுதியில் வசித்துவருகிறேன். ஆனால் என் காளைகளையும், லாரிகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் சிக்கந்தர் சாவடியில் இருக்கிறேன். பள்ளி விடுமுறை நாள்களில் மட்டும் என் மகன்கள் அவற்றைக் கவனிக்க வந்துவிடுவார்கள். மற்றபடி முழுமையாகத் தொழிலையும், காளைகளையும் நான் கவனித்துவருகிறேன். பிள்ளைகள்போல் இருக்கும் என்னுடைய ஜல்லிக்கட்டுக் காளைகளை நான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெகுதூரத்துக்கு லாரி ஓட்டிச் செல்வதில்லை.

ஒருசமயம், உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தபோதுகூட நான் காளைகளைப் பார்ப்பதற்காக அங்கிருந்து வந்துவிட்டேன். அவைதான் என் மனதுக்கு மருந்தாக இருக்கின்றன. நாங்கள் பல தலைமுறைகளாக காளைகளை வளர்த்துவருகிறோம். அதனால், எனக்கு காளை வளர்ப்பு முறை சிறுவயதிலிருந்தே தெரியும். சீனிப்பெருமாளைத்தான் முதலில் வாங்கினேன். என் வளர்ப்பில் எனக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு, திண்டுக்கல் மாவட்டம் பிள்ளைநாயக்கம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் பரிசுகளை அள்ளிவந்தான். பார்ப்பதற்கு அப்பாவியாய்த் தெரியும். ஆனால், களத்தில் இறக்கிவிட்டால் கொம்புவைத்த சிங்கமாக மாறிவிடுவான். அவனை, எங்கு அழைத்துச் சென்றாலும் சிறப்புப் பரிசுகளை வாங்கித் தந்திடுவான். மற்றபடி சின்னசோலை, பெரிய சோலை, கறுப்பு, மான், பாண்டி, ராமு, செவலை, செவ்வாழை, குட்டி, கேடி என எல்லாக் காளைகளும் போட்டியில் வெற்றிபெற்றிருக்கின்றன. 

`குட்டி'க்கு பிரியாணி என்றால், அதிகம் பிடிக்கும்; `சின்னசோலை' படுசுட்டி, சொன்னதைக் கேட்பான். ஒருமுறை கோயம்புத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு அவனை அழைத்துக்கொண்டு போனோம். அங்கே வாடிவாசலைவிட்டு வெளியபோன அவனைக் காணோம். இரண்டு நாள் தேடிப் பார்த்தும் அவன் கிடைக்கவே இல்லை. பிறகு, தகவல் சொல்லிவைத்த இடத்திலிருந்து போன் செய்தார்கள். அங்கு சென்று நான் அழைத்ததும், சந்தோசத்தில் கத்த ஆரம்பித்துவிட்டான். அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது. அதேமாதிரி, `பெரியசோலை'யும் ஜல்லிக்கட்டுக் கூட்டத்தில் காணாமல் போய்விட்டான். பிறகு, அவனைத் தேடியபோது, தென்னந்தோப்பு ஒன்றுக்குள் நின்றுகொண்டிருந்தான். பிறகு, என்னைப் பார்த்ததும் ஓடி வந்துவிட்டான்.

அதேபோல் கேடி, பாண்டி, ராமு ஆகிய மூன்றும் சேட்டை செய்வதில் வல்லவர்கள்; பயம் காட்டுவதில் கில்லாடிகள். இவைதான் எல்லாமுமாக இருக்கின்றன. என் வருமானத்தில் பாதி இவைகளுக்குத்தான் போகின்றன. அதற்காக நான் கவலைப்பட்டதில்லை. இந்தக் காளைகளைத் தவிர, ஐந்து நாய்க்குட்டிகள், ஆட்டுக்கிடாய்கள், சேவல்கள் எனப் பல வாயில்லா உயிரினங்களை வளர்த்துவருகிறேன். இவைகளோடு இருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இதற்காக, என் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவிப்பதும் இல்லை.

லாரி தொழில் நஷ்டத்தில் இயங்கினால்கூட, கடன் வாங்கியாவது இவற்றைப் பராமரிப்பேன். கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களும் காளைகளை ஜல்லிக்கட்டுக்குத் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவேன். மேய்ச்சலுக்குப் பின் மக்காச்சோளம், பச்சரிசி மாவு, பருத்தி விதை என எதையாவது மாற்றிமாற்றி உணவாகக் கொடுப்பேன். தினமும் பசும்பாலில் இரண்டு முட்டையைக் கலக்கிக் கொடுப்பேன். இது தவிர, அவற்றுக்குத் தேவையான சின்னச் சின்ன பயிற்சிகள் வழங்குவேன். என் மகன்களும், மற்ற நண்பர்களும் சேர்ந்து 'மாதிரி வாடிவாசல்' அமைத்து எல்லாக் காளைகளுக்கும் பயிற்சி கொடுப்பாங்க. துணைக்கு நான்கூட இருந்து பார்த்துக்கொள்வேன். என் காளைகள் அனைத்தும் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்கும். அதை, அவற்றால் அவிழ்த்துக்கொண்டு ஓடமுடியும். ஆனால், அப்படிப் போகாமல் என் பேச்சுக் கட்டுப்பட்டு நிற்கும். இந்த வருடம், 10 காளைளை ஜல்லிக்கட்டுக்குக் கொண்டு போகலாம் என்று இருக்கிறேன். ஆனால், அனைத்தும் வாடிவாசலுக்குப் போகுமா என்று தெரியவில்லை. 1,000 முதல் 1,500 காளைகள் வருவதற்கு டோக்கன் கொடுக்கிறார்கள். ஆனால், 600 காளைகளுக்கும் குறைவாத்தான் அவிழ்த்துவிடுவார்கள். ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் வாங்குவது முதல் போட்டி முடியும்வரை என அனைத்திலும் பிரச்னை இருக்கிறது. ஆக, மாடு வளர்ப்பவர்களின் தேவைகளையும் மாவட்ட நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார், வீரபாண்டி.

காளையை வளர்த்து ஜல்லிக்கட்டுக்குக் கொண்டுபோய்த் திருப்பி அழைத்துவருவது என்பது எளிதான காரியம் அல்ல... ஓரிரு காளைகளை வளர்க்கவே சிரமப்படும் இந்த உலகில், 17 காளைகளை வளர்த்து பராமரித்து வரும் வீரபாண்டி பாராட்டுக்குரியவர்.