
கதைகள் பேசும் கதாநாயகி!
‘‘ஒரு ஊர்ல ஒரு நரியாம்...’’
இப்படி ஆரம்பித்து கதை சொன்னால், கேட்டுக்கொண்டே இருக்கலாம் இல்லையா? நம் வீடுகளில் யார் கதை சொல்வார்கள்? தாத்தா அல்லது பாட்டி. இப்போது யூடியூப் கதைகளும் ஃபேமஸ். அதில், சுட்டிப் பெண் ரியா சொல்லும் கதைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பெங்களூரு, நாராயணா இ-டெக் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் ரியா, கதை சொல்லும் ஸ்டைல் எப்படித் தெரியுமா?

வீட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொள்வார். ஸ்மார்ட்போனில், செல்ஃபி வீடியோவை இயக்கி, தனக்குப் பிடித்த கதையைச் சொல்லி பதிவுசெய்வார். அதை அம்மாவிடம் கொடுக்க, அவர் வீடியோவை யூடியூபில் பதிவேற்றுவார்.
கதைகளை ரியா சொல்லும் விதம்தான் ஹைலைட். பாட்டி வடை சுட்டு வெச்சிருக்க, காக்கா தூக்கிட்டுப் போகுமே... அந்தக் கதையை 8 நிமிடங்களுக்கு க்யூட்டாக நீட்டி, முழக்கி, சுவாரஸ்யமான புதிய விஷயங்களுடன் சொல்லியிருக்கிறார் ரியா. அந்தக் கதைக்கு ரியா வைத்த தலைப்பு, ‘வடைக்கு ஆசைப்பட்ட காகம்’.

‘கதை சொல்லி ரியா’ (Story Teller Rea) என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி, முப்பதுக்கும் மேற்பட்ட கதைகளைச் சொல்லியிருக்கிறார்.
‘‘என் அப்பா, வேல்முருகன். அம்மா, ராதா. என் குட்டித் தம்பி பெயர், கிருஷ். எனக்குக் கதை கேட்கறது அவ்ளோ பிடிக்கும். சாப்பிடும்போதும், டிராவல் பண்ணும்போதும், தூங்கறதுக்கு முன்னாடியும் அம்மாகிட்ட கதைகள் கேட்பேன். என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ், கதைகள்தான்’’ எனக் கதையைச் சொல்வதுபோலவே ரியாக்ஷனுடன் பேசுகிறார் ரியா.

‘‘எனக்குத் தெரிந்த கதைகளை எல்லாம் சொல்லிட்டேன். அதனால், குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். புதுப் புதுக் கதைகளைக் கேட்டதும், ரியாவுக்குக் கதைகள் மேலே ஆசை அதிகமாச்சு. ஒருநாள் அறைக்குள் தனியா விளையாடிட்டு இருக்கிறதா நினைச்சேன். ஆனால், படிச்ச ஒரு கதையைச் சொல்லி, மொபைலில் வீடியோ பதிவு பண்ணிட்டிருந்தா. அதை யூடியூப்ல ஷேர் பண்ணினேன்.
அதைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டினாங்க. அப்போ நாங்க சென்னையில குடியிருந்தோம். அந்த அப்பார்ட்மென்ட்ல ஒரே நாளில், ரியா ஃபேமஸ் ஆகிட்டா. தொடர்ந்து, நிறைய கதைகளைச் சொல்லி வீடியோ பண்ணினா. இப்போ, பெங்களூருக்கு வந்துட்டோம். இங்கும் ரியாவின் கதைகள்தான் நிறைய ஃப்ரெண்ட்ஸைக் கொடுத்திருக்கு.

ஒருநாள் ஸ்கூல்விட்டு வரும்போது, ‘ரெட்டப் பல்லுக் காடு’ கதை சூப்பர்னு ஒருத்தர் சொன்னார். ரியா இன்னும் உற்சாகமாகிட்டா. குழந்தைகளுக்கான விழாக்களில் கதைகள் சொல்லி அசத்துறா. மூத்த கதை சொல்லி, ஜீவா ரகுநாதன் கையால் சர்ட்டிஃபிகேட் வாங்கியிருக்கா. ‘ரியா அம்மா நீங்கதானே?’னு சிலர் கேட்கிறப்போ, அதைவிட சந்தோஷமான விஷயம் என்ன இருக்கு?” எனப் புன்னகைக்கிறார் அம்மா ராதா.

‘‘எனக்கு ரொம்ப பிடிச்ச கதை, ‘ரெட்டப் பல்லுக் காடு’தான். இன்னும் நிறைய கதைகளை வீடியோ பண்ணப்போறேன். பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நீங்களும் நிறைய கதைகளைக் கேளுங்க. கதைகளைச் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ். அது நம்ம கற்பனையை வளர்க்கும்’’ எனச் சிரிக்கிறார், ‘கதை நாயகி’ ரியா.
இந்தச் சிரிப்புடன்தான் யூடியூபில் அசத்துகிறார்.
- வி.எஸ்.சரவணன், படங்கள்: தி.குமரகுருபரன்