Published:Updated:

காகிதப்பை இளவரசி!

காகிதப்பை இளவரசி!
பிரீமியம் ஸ்டோரி
காகிதப்பை இளவரசி!

எதிர்க்குரல்மருதன்

காகிதப்பை இளவரசி!

எதிர்க்குரல்மருதன்

Published:Updated:
காகிதப்பை இளவரசி!
பிரீமியம் ஸ்டோரி
காகிதப்பை இளவரசி!

முன்பொரு காலத்தில் எலிசபெத் என்னும் அழகிய இளவரசி ஒரு பெரிய கோட்டையில் வாழ்ந்துவந்தாள். விலை மதிப்புமிக்க அழகிய ஆடையொன்றை அவள் அணிந்திருந்தாள். அதே கோட்டையில்தான் ரொனால்டும் இருந்தான். எலிசபெத்தைத் திருமணம் செய்துகொள்ள இருந்த இளவரசன். நிறைய கனவுகளுடன் மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்துவந்தனர். எதிர்பாராதவிதமாக ஒரு நாள் பெரிய டிராகன் ஒன்று கோட்டையின் கனமான கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டது. அதன் முகத்தை மட்டும் பார்த்தால் முதலை என்று நீங்கள் தவறாக நினைத்துவிடக்கூடும். அத்தனை பெரிய மூக்கு. ஆனால், வாயிலிருந்து கிளம்பும் நெருப்பைப் பார்த்தால் சந்தேகம் மறைந்து, பயம் வந்து ஒட்டிக்கொண்டுவிடும்.

அந்த டிராகனுக்குப் பசியா அல்லது கோபப்படுவதுதான் அதன் இயல்பா என்று தெரியவில்லை.  ஒரே அடியில் அந்த வானுயர்ந்த கோட்டையை உடைத்துத் தரைமட்டமாக்கி விட்டது. அதோடு நில்லாமல் எலிசபெத்தின் விலையுயர்ந்த ஆடையையும் சுட்டுப் பொசுக்கிவிட்டது. அதுவும் போதவில்லை என்பதால் ரொனால்டைக் கவ்விப்பிடித்துத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து பறந்துவிட்டது.

காகிதப்பை இளவரசி!

இதென்ன குழந்தைத்தனமான கதை என்று வியப்பதற்கு முன்பு ஒரு விளக்கம். ‘தி பேப்பர் பேக் பிரின்சஸ்’ என்னும் இந்தக் கதை குழந்தைகளுக்காக எழுதப்பட்டது தான். எழுதியவர், ராபர்ட் முன்ஷ். கனடாவைச் சேர்ந்தவர். பாதிரியாராக மாறியிருக்க வேண்டியவர். குழந்தைக் காப்பகங்களிலும் ஆதரவற்றோர் இல்லங்களிலும் பணியாற்றியதைத் தொடர்ந்து முழுநேரக் கதை சொல்லியாக மாறிப்போனார். `நான் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்' என்று வெளிப்படையாகவே அறிவித்தவர் ராபர்ட் முன்ஷ். மது, போதை ஆகியவற்றின் பிடியிலும் சிக்கித் தவித்திருக்கிறார். பிறகு பக்கவாதமும் தாக்கியதோடு நினைவாற்றலும் குறைந்தது.

‘தி பேப்பர் பேக் பிரின்சஸ்’ 1980-ம் ஆண்டு வெளிவந்தது. நான்கு முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகளுக்கான இந்தக் கதையை, குழந்தைகளோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தவர்களும் தொடர்ச்சியாகப் படித்துவருவதால்தான் இந்தப் புத்தகம் தொடர்ந்து உலகம் முழுக்க அச்சில் இருந்துவருகிறது.

பெண்ணியச் சிந்தனையாளர்கள் பலர் இந்தப் புத்தகத்தைப் பாராட்டுவதோடு இன்றுவரை சிபாரிசும் செய்துவருகிறார்கள். அதற்கான காரணங்களை, இந்தப் புத்தகத்தைப் புரட்டும்போதே கண்டுபிடித்துவிட முடிகிறது. உண்மையில், புரட்டும்போதே வாசித்து முடித்துவிடக்கூடிய அளவுக்கு மிகச் சிறிய புத்தகம் இது. மொத்தம் 32 பக்கங்கள். பக்கம் முழுக்க அழகாக விரிந்திருக்கும் பெரிய அளவு படங்களை எடுத்துவிட்டு, எழுத்துகளை மட்டும் தொகுத்தால் முக்கால் பக்கத்துக்குக்கூட வராது. பத்துப் பத்திகள்தான் மொத்தக் கதையுமே. ஆனால், ஒவ்வொரு பத்தியும் ஓர் எதிர்க்குரல்.

எப்படி? எலிசபெத் ஓர் இளவரசி. அழகிய இளம்பெண். கோட்டையில் வசிக்கிறாள். இளவரசிக்கே உரித்தான வகையில் அழகிய, விலை மதிப்புமிக்க ஆடை அணிந்திருக்கிறாள். உடன் இளவரசன் ரொனால்டு. இருவரும் திருமணம் செய்துகொள்ள உத்தேசித்திருக்கும் நிலையில் திடீரென்று ஒரு பெரும் ஆபத்து குறுக்கிடுகிறது. இளம் காதலர்கள் பிரிகிறார்கள். இறுதியில் என்ன ஆனது? சூழ்ச்சி வென்றதா அல்லது காதலா? கிரேக்க இதிகாச காலம் தொட்டு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வரும் கதை வடிவம் இது. எலிசபெத்தின் கதையில் குறுக்கிடும் டிராகனும்கூடப் புதிதல்ல. பல கதைகளில், பல காதலர்களைப் பிரித்து அவர்களைத் துயரத்தில் தள்ளிய அனுபவம் டிராகனுக்கு இருக்கிறது. டிராகன் இல்லாத கதைகளில் பூதமோ, பிசாசோ, கடல் அரக்கனோ, சாத்தானோ, மந்திரவாதியோ தோன்றுவதுண்டு.

காகிதப்பை இளவரசி!

இந்த நீண்ட நெடிய மரபைப் பின்பற்றித்தான் இந்தக் கதையும் தொடங்குகிறது. பாவம், எலிசபெத். அவள் ஆசை ஆசையாக அணிந்திருந்த வண்ண ஆடையை டிராகன் எரித்துப் பொசுக்கிவிட்டது. இதுவரை சரி. ஆனால், டிராகன் அவளையல்லவா கடத்திக்கொண்டு சென்றிருக்க வேண்டும்? பாதாள அறையில், ஒரு பாழடைந்த சிறையில் கொண்டுசென்று எலிசபெத்தை அது கட்டிப்போட்டிருக்க வேண்டாமா? `என் மன்னவனே! காதல் மணாளனே! எப்போது மீண்டும் கேட்பேன் உன் குரலை?' என்று எலிசபெத் கண்ணீர் சொரிந்து பரிதவித்திருக்க வேண்டாமா?

சரி, போகட்டும். ‘கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ என்று பசலை நோய் கண்ட தலைவி போலாவது எலிசபெத் பிரிவுத் துயர் தாங்காமல் கலங்கி நின்றாளா என்றால், அதுவும் இல்லை. ஒரு துளிக் கண்ணீரும் சிந்தாமல் அங்கும் இங்கும் பார்வையைச் சுழலவிட்டாள். அனைத்தும் எரிந்துகிடந்தன, ஒரே ஒரு காகிதப் பையைத் தவிர. டிராகனைத் துரத்திச்சென்று ரொனால்டைத் திரும்பப்பெற முடிவு செய்தாள். காகிதப் பையை ஆடையாக அணிந்துகொண்டு வெளியில் வந்தாள் எலிசபெத். பறந்துசென்றுவிட்டது என்றாலும் டிராகனின் வழித்தடத்தைக் கண்டுபிடிப்பது அவளுக்குக் கடினமாக இல்லை. எங்கெல்லாம் அழிவு தென்படுகிறதோ அங்கெல்லாம் டிராகன் கடந்துசென்றிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பின்தொடர்ந்தாள். ஒரு குகை தென்பட்டது. அந்தக் குகைக்கு ஒரு பெரிய கதவும் இருந்தது.

எலிசபெத் படபடவென்று கதவைத் தட்டினாள். தன் மூக்கை நீட்டியபடி வெளியில் எட்டிப் பார்த்தது டிராகன். ‘அட, இளவரசியா! எனக்கு இளவரசியைச் சாப்பிடுவதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், இன்று ஒரு கோட்டையை ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டேன். எனக்கு இப்போது நிறைய வேலை இருக்கிறது. நீ போய் நாளை வா!’

எலிசபெத் அசரவில்லை. ‘உன் பெருமூச்சு பட்டால் ஐம்பது காடுகள் ஒரே நேரத்தில் சாம்பலாகிவிடும் என்று சொல்கிறார்களே, உண்மையா?’ என்று கேட்டாள். `ஓ, உனக்குத் தெரியாதா' என்று டிராகன் தன் ஆற்றலைக் காட்டியது. ‘பிரமாதம்’ என்றாள் எலிசபெத். டிராகன் மீண்டும் அதேபோல் பெருமூச்சு விட்டது. இந்த முறை அழுத்தமாக மூச்சு விட்டதால் நூறு காடுகள் அழிந்துபோயின. ‘அற்புதம்’ என்று எலிசபெத் சொன்னதும் மீண்டும் டிராகன் தன் பெருமையைக் காட்ட முயன்றது. ஆனால், இந்த முறை நெருப்பே வரவில்லை.

‘டிராகன், பத்தே விநாடிகளுக்குள் உன்னால் உலகை வலம் வந்துவிட முடியும் என்பதும் உண்மைதானா?’ `பின்னே, கதையா' என்று விருட்டென்று பறந்தது டிராகன். ‘பிரமாதம், இன்னொரு முறை’ என்றதும் மீண்டும் பறந்தது. பிறகு களைத்துவிட்டது. ‘ஹே டிராகன்’ என்று காதருகில் வந்து கிசுகிசுத்தாள் எலிசபெத். பதிலில்லை. டிராகனின் காதைத் திறந்து தலையை உள்ளே விட்டுக் கத்திப் பார்த்தாள். டிராகனால் நகரக்கூட முடியவில்லை. நிம்மதியடைந்த எலிசபெத், டிராகனைக் கடந்து குகைக்குள் சென்றாள். அடைந்துகிடந்த இளவசரனையும் கண்டுபிடித்தாள். ரொனால்டு நிமிர்ந்து பார்த்தான். ‘என்ன இப்படி இருக்கிறாய்! உன்மீது சாம்பலின் வாசம் அடிக்கிறது. உன் கூந்தல் சிக்கிக்கிடக்கிறது. பழைய, அழுக்குக் காகிதப்பையைவேறு அணிந்து கொண்டிருக்கிறாய். நிஜ இளவரசிபோல் மாறிய பிறகு என்னைச் சந்திக்கத் திரும்பி வா!’

ரொனால்டைப் புரிந்துகொள்வதற்கு நாம் கதையை விட்டு வெளியில் வரவேண்டியிருக்கிறது. `வா ரொனால்டு, வீட்டுக்குப் போகலாம்' என்று எலிசபெத் கையை நீட்டி அழைப்பதைக் காட்டிலும் மேலான அவ மானத்தை ஓர் இளவரசன் சந்திக்க முடியுமா!

அவள் இருப்பது என் இடத்தில் அல்லவா! நானல்லவா டிராகனைத் துரத்தியிருக்க வேண்டும்! நானல்லவா சண்டையிட்டு அதை வீழ்த்தியிருக்க வேண்டும்! ஒரு கதா நாயகனாக, ஒரு வெற்றியாளனாக நான் வெளிப்பட்டிருக்கவேண்டிய தருணம் அல்லவா இது! இப்படித்தானே கடந்த கால இளவரசர்கள் அனைவரும் எழுச்சி அடைந் திருக்கிறார்கள். ஓர் ஆண் மகனின் இலக்கணம் அநீதியை வென்றெடுப்பது அல்லவா!

`வா எலிசபெத். என் கையைப் பிடித்துக் கொள். உன் மெல்லிய விரல்கள் ஏன் இப்படி நடுங்குகின்றன? பயப்படாதே அன்பே, உன்னைக் கடத்திச்சென்ற டிராகனை வீழ்த்திவிட்டேன். இனி நம்மை இந்த உலகிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.' படபடக்கும் இமைகளில் பரவசமும் நிம்மதியும் பெருமிதமும் பொங்க எலிசபெத் எழுந்து நின்று ரொனால்டைக் கட்டியணைத்திருக்க வேண்டும். தன் காதலனின் கலைந்த முடியும் ஆங்காங்கே கிழிந்த ஆடையும் அவனுடலில் படர்ந்திருக்கும் புழுதியும் அவனுடைய வீரத்தையும் தியாகத்தையும் எலிசபெத்துக்கு உணர்த்தியிருக்கும். தன்னை மீட்டெடுத்த தலைவனுக்குத் தன் உயிரையும் உள்ளத்தையும் அப்போதே அவர் அர்ப்பணித்து முடித்திருப்பார். இடையில் தொங்கும் வாளை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டு ரொனால்டு தன் காதலியோடு அந்தக் குகையிலிருந்து வெளியேறியிருப்பான்.

காகிதப்பை இளவரசி!

`என்ன யோசிக்கிறாய்? வா ரொனால்டு போகலாம்' என்று கலைந்த முடியோடும் காகிதப்பை ஆடையோடும் மாறாத புன்முறுவ லோடும் (அதிலொரு கேலி இருக்கிறதா இல்லையா?) கையை நீட்டும் இந்த இளம்பெண் என் இயலாமையையும் கோழைத்தனத்தையும் அல்லவா எனக்குச் சுட்டிக்காட்டுகிறாள்.  மயக்கும் விழிகளோடும் அலைபாயும் கூந்தலோடும் என் தோளைப் பற்றியபடி, நான் விரும்பும் சொற்களை என் காதில் உச்சரித்தபடி கோட்டைக்குள் வளைய வந்த ஓர் இளவரசியைத்தான் நான் காதலித்தேன். இவளை அல்ல. இவள் உடலில் படர்ந்திருக்கும் புழுதி என்னை நிம்மதி இழக்கச் செய்கிறது. இவளது வேடிக்கையான ஆடை என்னைக் கோபம் கொள்ளச் செய்கிறது. குறுகுறுப்போடு என்னைப் பார்க்கும் இவள் விழிகளில் ஆணவத்தின் சாயல் படிந்துகிடக்கிறது. எதுவுமே நடக்காதது போல் எழுந்து நின்று, விறைப்பாக என் முன்னால் நீண்டிருக்கும் இந்தக் கரத்தைப் பற்றிக்கொண்டு, என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி எலிசபெத் என்று நான் குசுகுசுக்க வேண்டும் என்று இவள் எதிர்பார்க்கிறாளா? எனில், இவள் நான் அடக்க வேண்டிய டிராகன் அல்லவா?

இனி மிச்சக் கதையும் இந்தக் கதை கொண்டாடப்படுவதற்கான காரணமும். `போ, போய் இளவரசியாகத் திரும்பிவா!' என்றதும் எலிசபெத் தன் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டார். `ரொனால்டு, உன் ஆடை நேர்த்தியாக இருக்கிறது. உன் தலைமுடி கலையாமல் அழகாக இருக்கிறது. நீ அசல் இளவரசன் போலவே காட்சியளிக்கிறாய். ஆனால், நீ நேர்த்தியானவன் அல்ல.' அதன்பின் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று அந்தக் கதை முடிந்திருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.