Published:Updated:

முழுமதி

முழுமதி
பிரீமியம் ஸ்டோரி
முழுமதி

குட்டி ரேவதி, ஓவியங்கள் : செந்தில்

முழுமதி

குட்டி ரேவதி, ஓவியங்கள் : செந்தில்

Published:Updated:
முழுமதி
பிரீமியம் ஸ்டோரி
முழுமதி

முழுமதி,தனக்கு இரண்டு தலைகள் இருப்பதை அன்றுதான் உணர்ந்தாள். எல்லோருக்கும் அதுபோலத்தான் இருக்கும் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். பகலில் ஒரு தலையுடனும் இரவில் வேறு தலையுடனும்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று அவள் நம்பிக்கொண்டிருந்தாள். இரவிற்குள், இருளில் கலந்துபோகையில் அவள் தலையும் அது சிந்திக்கும் விதமும் மாறிப்போயிருப்பதை உணர்ந்தபோது, விசித்திரமான கிளர்ச்சி தோன்றியது. ஓடிச்சென்று கண்ணாடியின் முன்னின்று பார்த்தாள். கண்ணாடியில் உருவம் தெரியவில்லை, விளக்கைப் போட்டாள். விளக்கின் வெளிச்சம் பரவியதும் பகலின் உணர்வு ஏற்பட்டு, பகலுக்கான தலை அவள் உடல்மீது ஏறியிருந்தது. பதினைந்து ஆண்டுகளாய் இரண்டு தலைகளுடன் வாழ்ந்த அதிசயத்தை மனதில் ஓட்டிப்பார்த்தாள்.

இரவில் தலை அப்பொழுதுதான் மலர்ந்திருந்த மலரைப்போல லகுவாகவும் கற்பனைகளுக்கு இடமாயும் இருந்தது. மதிக்கு எதுவுமே உண்மையாக நிகழ வேண்டாம். நிகழ்ந்ததுபோன்ற கற்பனையை மனதில் நிகழ்த்திப் பார்த்து உணர்ந்து இன்புற அல்லது துக்கிக்க முடியும். ஒருவகையில் எல்லா மனிதர்களும் அப்படித்தான் என்று நினைத்திருந்தாள். இரவின் தலைக்குக் கற்பனை செய்யும் சக்தியும் திறனும் இயல்பாகவே இருக்கிறது என்று எண்ணியிருந்தாள். மதியின் தலைக்கு மட்டும்தான் அப்படி. ஏன் இப்படித் தனக்கு மட்டும் இரண்டு தலைகள்? பிரசவப் பிழையா? உடலுறுப்புக் குறையா? குறை இல்லை, மிகை.

அம்மாவும் அப்பாவும் அவள் கருவுற்றிருக்கும்போதே சண்டை ஏற்பட்டுப் பிரிந்துவிட்டார்கள். கணவரைப் பிரிந்து வந்து ஒரு பெரிய பங்களாவில் தனியாக வாழ்ந்து வந்த முதிய பெண்ணான எஸ்தர் வில்லியம்சுக்குச் செயலாளராகப் பணியாற்றினாள் அம்மா அருண்மொழி. பங்களாவை ஒட்டியிருந்த குடியிருப்பிலேயே அருண்மொழி குழந்தையுடன் தங்கியிருந்தாள். குடியிருப்பு என்றாலும் பங்களாவின் அத்தனை வசதிகளுடன் இருந்தது. நாற்காலிகள், கண்ணாடிகள், படுக்கைகள், மெத்தைகள், பாத்திரங்கள் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதால், அருண்மொழி தங்கியிருந்த குடியிருப்புகளிலும் போடப்பட்டிருந்தன. சூழல் வசதியான சூழல், பங்களாவை ஒட்டிய ஒரு பெரிய மலையும் அதன் அடிவாரப் புனைவுகளும் அருண்மொழிக்கும் முழுமதிக்கும் வந்து சேர்ந்துகொண்டே இருந்தன.

முழுமதி

முழுமதிக்குக் கொண்டாட்டமான உணர்வாக இருந்தது. தன் அம்மாவிடம் சொன்னால், உடல்குறைபாடு என்று மருத்துவத் துறைக்குள் இழுத்துச்சென்றோ அல்லது மருத்துவ ஆலோசகரிடம் இது ஓர் உளவியல் சிக்கல் என்றோ ஆரம்பித்துவிடுவாள். தன் தாயுடன் அந்தப் பங்களாவில் குடியிருக்க வந்திருந்த தொடக்கக் காலத்தில், குளிக்கவோ ஓய்வாக இருக்கையில் சுற்றிப் பார்க்கவென்றோ அருகில் இருக்கும் மலையடிவார ஓடைக்கு முழுமதியை அழைத்துச் செல்வாள் அவளின் அம்மா. முழுமதியை நீரில் குளிப்பாட்ட, அவள் மூக்கைப் பிடித்துத் தலையை நீருக்குள் அழுத்தும்போது, தலைக்குள் தோன்றும் உணர்வும் சத்தமும் இப்பொழுது அவள் நினைவிற்கு வந்து சென்றன, தலையை உலுக்கிக்கொண்டாள். விளக்கை அணைத்ததும், தூய இருளில் எவரும் ஒருவரையொருவர் உணராத இருப்பில், அந்நியப்பட்டு இருக்கும் வேளையில், அந்தரங்கமான உணர்வுடன் இன்னொரு தலையும் அதன் சிந்தனை வெளிகளும் இன்னொரு தலை சுழன்றுவந்து தன் தலைக்குமேல் நின்றதுபோல் இருந்தது. முந்தைய தலையுடன் உணர்ந்த அதே மகிழ்ச்சியும் கொண்டாட்ட உணர்வும் பொங்கத் தன் படுக்கையில் போய்ப்படுத்தாள்.

காலையில் எழுந்ததும், பரபரப்பாகச் சமைத்துக்கொண்டிருக்கும் அருண்மொழியைப் பார்த்ததும் முழுமதி புன்னகைத்தாள். ‘காலையிலேயே சிடுசிடுன்னு வந்து கிச்சன்ல காபி கேக்குற என் மதியா இது!’ அருண்மொழியைப் பின்னால் சென்று இடுப்பின் வழியாக அணைத்துக்கொண்டாள், முழுமதி.

“இன்னைக்கு மேடத்த பேங்குக்குக் கூட்டிட்டுப் போகணும். ஈவினிங்தான் வருவேன். ஸ்கூல் போயிட்டுவந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டுப் பசியாத்திக்கோ, எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்குனா மியூஸிக் காலேஜ்ல ரெக்கமண்ட் பண்ணி சீட் வாங்கித் தரேன்னு சொன்னாங்க...” முழுமதி அலட்சியக் குரலில்,  “செஞ்சிடப்போறாங்க!” என்று சொன்னதும், அருண்மொழியின் முகத்தில் பொய்யான கோபம் தோன்றி மறைந்தது. “எனக்காகன்னாலும் செய்வாங்க. சொந்தப் பிள்ளைங்க எல்லாம் தன்னை ஏமாத்திருச்சேங்குற வெறுப்புலதான் அந்த அம்மா யார்க்கிட்டயும் ஒட்டமாட்டேங்குறாங்க, நம்பு. படிச்சி நல்ல மார்க் வாங்கு மதி!”

“சரி, சரி” என்று அவசரமாக இந்த உரையாடலை முடித்துக்கொள்ளும் தொனியை உருவாக்கினாள்.

பள்ளிக்குக் கிளம்பினாலும் செல்ல மனமில்லாமல் அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்தாள். எஸ்தர் பேச்சுவாக்கில் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘எனக்கு நிறைய தலை இருந்துச்சி. அவ்வளவு தலைக்கனம். வாழ்க்கை போற போக்குல ஒவ்வொன்னா கழண்டுபோய், இன்னைக்கு ஒண்ணுதான் தங்குச்சு’. பல நேரங்களில் எஸ்தர் முன்னுக்குப் பின் முரணாய்த்தான் பேசுவாள். தோட்டத்தில் தடியை ஊன்றி நடைபோகையில் துணைக்கு முழுமதியை அழைப்பார். முழுமதி, விருப்பமில்லாமல் அருண்மொழி சைகையால் காட்டும் கட்டாயத்திற்காக உடன்செல்வாள். இன்றுகூட அவரிடம் இந்தப் பல தலை விடயத்தைக் கேட்கலாம். இணையத்தைக் கிளறினாள். இரட்டைத்தலை உயிரினங்கள் எல்லாம் அற்புதம், அதிசயம் என்று வியக்கப்பட்டிருந்தன. முழுமதியின் விடயத்தில் அப்படி இல்லை. கண்களுக்கு அவளின் இரட்டைத்தலை தெரிவதில்லை. அவசரமாக, பீரோவுக்கு மேலிருந்த பழைய புகைப்படத் தொகுப்பைத் தூசிதட்டி, அதிலிருந்த புகைப்படங்களில் எல்லாம் தன் தலையை உற்றுப் பார்த்தாள். ஒன்றுபோல்தான் தென்பட்டன. தலை சுழன்று இன்னொரு தலையாவது தன் மனப்பிரமையோ என்று எண்ணினாள். இருள் சூழ்கையில், அந்தரம் கவிகையில், தன் தலைக்குள் ஒருவிதப் புலனின்ப உணர்வும் காட்சியழகும் கூடிய எண்ணங்கள் ஓடத்துவங்கி, மென்னடை வேகத்தில் ஒருவித சுகத்தையும் தருகின்றன என்பதை உணர்ந்தாள். இது வேறுஏதோ... மயக்கும் ஆச்சரியம். பேசாமல் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிடலாமா என்றுகூட எண்ணினாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முழுமதி

மாலையில் வந்ததும் அருண்மொழி கோபித்துக் கொண்டாள். ‘முன்பே சொன்னால் என்னவாம் என்று கடிந்துகொண்டாள்’ என்று முழுமதி பள்ளிக்குச் செல்லாததற்குக் கண்டித்தாள். முழுமதிக்கு அருண்மொழியின் கோபம் உரைக்கவில்லை. மாலை ஒளி மெல்லியதாக மலையின் பின்னாலிருந்து வந்து, அவர்கள் குடியிருப்பெங்கும் விழுந்தது. மெள்ள இருள் ஒரு திரையைப்போல வீழ்ந்தது. விளக்கையெல்லாம் ஏற்றிப் படிக்கத் தொடங்கினாள். படிப்பு ஓடவில்லை, கவிதை நூல்களைக் கிளறி சில கவிதைகளின் சில வரிகளை மனக்கண்களில் ஓட்டிவிட்டு நேரத்தைக் கழித்தாள். இரவு உணவு முடிந்ததும், தன் படுக்கையில் அமர்ந்து விளக்கை அணைத்து, மெள்ளத் தன் தலையின்மீது கவனம் செலுத்தினாள். தலை சுழன்று மறைய, தானே இன்னொரு தலை சுழன்று வந்து அந்த இடத்தில் நின்றது. முழுமதி தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். இளமை, மகிழ்ச்சி, அழுகை, துக்கம், இழப்பு எல்லாம் துல்லியமான உணர்வுகளாக, காட்சிகளாக அவளுக்கு நினைவில் வந்துகொண்டே இருந்தன. அப்படியே தயா என்கிற தன் வகுப்பு மாணவனின் புன்னகை நிறைந்த முகமும் நினைவுக்கு வந்தது. காட்சி அப்படியே அவன் முகத்தின்மீது நீண்ட நேரத்திற்கு நின்றிருந்தது. மாலை, வீட்டிற்கு போன் செய்தான், “ஏன் பள்ளிக்கு வரவில்லை?” என்று கேட்டான். “வகுப்பு சுற்றுலா அடுத்த வாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் உறுதியாகிவிட்டது” என்று சொன்னான். “நீ வர்றதான?” என்று கேட்டான். முழுமதி போனில் பூரிக்கும் புன்னகையுடன் தலையசைத்தாள்.  “என்ன சொல்ற, வர்றியா, இல்லையா?”, “ஆமா, வர்றேன்...” என்று சொல்லிவிட்டு வைத்தாள்.

சுற்றுலாவின்போது, தயாவின்மீது இருந்த வழக்கமான ஈர்ப்பு சுத்தமாய் இல்லாமல் போயிருந்தது. ஏதேதோ தன்னைப் பற்றிச் சொல்லவந்தபோதெல்லாம் அவன் நிறைய பேசிக்கொண்டேயிருந்தான். இன்னொருவர் பேச்சைக் கேட்கும், இன்னொருவர் இருப்பைக் கேட்கும் மனோநிலையே இல்லாமல் தற்பெருமையிலேயே ஆழ்ந்திருந்தான். தான் அவனிடம் பேச நினைத்திருந்ததெல்லாம் மேலே பொங்கிவந்தும் பகிர வழியில்லாமல் அவனுடைய பேச்சைக் குறுக்கிடவும் முடியாமல் அவனிடமிருந்து விலகி விலகி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியிருந்தாள்.

தன் இரண்டு தலை ரகசியத்தின் அற்புதங்களுக்கிடையே திளைத்திருந்த முழுமதி, ஒரு நாள் தன் அம்மாவிடம் சொல்லிப் பார்த்தாள். “சத்தியமா, அம்மா! ஆனா, அத உனக்கு விளக்க முடியாது!”, என்று சொல்லியபோது, அருண்மொழி, “உளறாத... போய்ப் படு!” என்று அவளுடைய இரண்டாவது தலையின் அனுபவத்தைத் தொடர்வதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். இதனாலெல்லாம், முழுமதியின் உற்சாகம் தேங்கிப்போகவில்லை.

எஸ்தர் வில்லியம்ஸ், தனக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த அனுபவத்தை இன்றும் பெருமையாகப் பேசிக்கொள்வாள். அதில் ஒருத்தி எப்பொழுதும் அழுதபடி இருப்பாள் என்றும் இரவு என்றால் வீட்டில் உறக்கமே அற்ற நிலைதான் இரண்டு ஆண்டுகளுக்குமேல் நீடித்தது என்றும் அது ஒரு கற்பனையான வாழ்க்கைபோல இருந்தது என்றும் சொல்வாள். முழுமதி அடிக்கடி கண்ணாடி முன்னால் நிற்பதைப் பார்த்து, அருண்மொழிக்கு இனம்புரியாத கோபம் எழுந்தது. “வயசு வந்த பொண்ணு என்னத்துக்கு இப்படிக் கண்ணாடி முன்னால எப்பப் பாத்தாலும் நின்னுக்கிட்டுருக்க. உன் உடம்பவிட்டு ஒண்ணும் எதுவும் ஓடிப்போயிடாது. நகரு” என்ற குழப்பமான கோபத்தால் முழுமதியை விரட்டினாள்.

மதி, இரவில் சுழன்று நிற்கும் தலைமீது கவனத்தைக் கூட்டினாள். அப்பொழுது என்னென்ன உணர்வுநிலைகள் எல்லாம் எழுகின்றன என்று ஒன்றுவிடாமல் டைரியில் எழுதினாள். அவை கவிதைகளைப்போலச் சொற்களை மேலெழுப்பிக்கொண்டே இருந்தன. பல நேரங்களில் அழகழகான உருவங்கள் தோன்றின. மரங்களும் பறவைகளும்கூடிய சோலைபோன்ற இனிய அனுபவ உணர்வு பெருகியது. காட்டுக்குள் நிற்பதுபோல் இருந்தது. ஆற்றின் குளிர்ந்த நீரில் மூழ்குவதுபோல் இருந்தது. இனிய குரல்கள் நிறைந்த சோலையின் வழியே மேலேழுந்து பறப்பதுபோல் இருந்தது. மலையின் உச்சியில் எல்லாத் திசைகளிலும் பொன்னொளியும் வண்ணங்களும் படர்ந்த வானம் தெரிய, தான் தனியே நிற்பதுபோல் இருந்தது. உடலெங்கும் இனிய உணர்வுகள் அலைகளைப்போல் எழும்பி அடங்கின. இதைத்தான் எல்லோரும் காமம் என்று சொல்கிறார்களா என்ற சந்தேகமும் முழுமதிக்கு வராமல் இல்லை.

பள்ளிப் படிப்பிற்குப் பின், கல்லூரிப் படிப்பிற்காக வேறு ஊருக்கு நகர்ந்திருந்தாள். அது ஓர் ஆற்றை ஒட்டிய இசைக்கல்லூரி. அம்மா என்ன சொல்லியும் கேட்காமல், இசைதான் படிப்பேன் என்று முழுமதி அடம்பிடித்துச் சேர்ந்தாள். இதற்குக் காரணம், தன்னிடம் இசைத் திறமையும் அதன்மீதான ஆர்வமும் இருந்ததை முழுமதி கண்டறிந்தது மட்டுமில்லை, மற்ற துறைகள்போல இதன் தேர்வுகள் தண்டனைகளாக இருக்காது என்று நம்பினாள். அதே கல்லூரியில் மனோ படிக்கவந்து சேர்ந்திருந்தான். உயரமும் ஒல்லியுமாக, அடர்ந்த தாடியுடன் மலர்ந்த கண்களும், கண்ணோரங்களில் மின்னும் குறும்புடனும் சத்தமாய்ப் பேசிச் சிரித்திருக்கும் ஆண்களுக்கு இடையில், மிகவும் அமைதியாக எல்லோரையும் கவனமாய் ஆராய்ந்தபடி இருந்தான். முழுமதி அவனை நெருங்கினாள். இருவரும் அந்த ஆற்றின் கரையில் நீண்ட நேரம் அமர்ந்து உரையாடலைத் தொடங்கினர். விடுதிக்குச் செல்லும் வரை அந்த ஆற்றைப் பார்த்திருப்பதும் அன்றாடங்களை அசைபோடுவதும் வழக்கமாக இருந்தது.

இரட்டைத்தலையின் குதியாட்டங்கள் இந்தப் பருவத்தில் மாறியிருந்தன. அடர்ந்த கானகத்தில் இருளில் நடமாடுவதைப்போலவே இருந்தது. விநோதமான அசைவுகளையும் குரலொலிகளையும்  நடமாட்டங்களையும் உணர்ந்தாள். கழுத்தை இறுக்குவதைப்போன்ற கனவுகள் தோன்றின. தலையும் தானும் தனித்தனியாகக் கிடப்பதை உணர்ந்து தூக்கத்திலிருந்து எழுந்து அலறினாள். அருண்மொழி இன்னொரு அறையில் இந்தச் சத்தத்தால் விழிக்காமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். பதறி ஓடிச்சென்று விளக்கைப்போட்டால், முகம் கண்ணாடியில் பகலுக்கான பாவனைகளுடனும் மேட்டிமைக் குறிகளுடனும் தனக்குச் சம்பந்தமில்லாத ஒருவருடையதைப்போலவும் ஒரு மாடலின் வரையறுக்கப்பட்ட முகபாவனைகளுடனும் தெரிந்தது. தன் உடல்மீது இருந்த தலையும், கனவில் தனியாகக் கிடந்த தலையில்லை என்பதை உணர்ந்ததும் ஏதோ ஒருவிதமான ஆறுதல் உணர்வுக்குத் தள்ளப்பட்டு, விளக்கை அணைக்காமலேயே படுக்கையில் படுத்து உறங்கினாள்.

அன்று வகுப்பிற்கு மனோ வரவில்லை. முழுமதிக்கு இருப்புகொள்ளவில்லை; வகுப்பில் பாடங்கள் ஓடவில்லை. எழுந்து வெளியே சென்றுவிடலாம் என்றால், தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியையின் வகுப்பு. தான் இவ்வளவு காலம் ஈட்டியிருந்த நன்மதிப்பைக் குறைப்பதுபோல் நடந்துகொள்ளக் கூடாது என்று தன்னைத் தானே கட்டாயப்படுத்திக்கொண்டாள். அவ்வப்பொழுது வகுப்பு சன்னலின் வழியே மனோ வருகின்றானா என்று தேடினாள். வகுப்பு முடிந்து அவனுடைய நண்பன் முரளி, முழுமதியை நெருங்கி மனோவின் அம்மாவிற்கு உடல்நலமில்லை என்றும் அதனால் சொந்த ஊருக்குச் சென்றிருப்பதாகவும் சொன்னான். போனில் அழைத்தபோது, மனோ பதில் அளிக்கவில்லை. உண்மையில், மனோவைத் தேடவில்லை. அவனிடம் எதையோ சொல்லாமல்விட்டதுபோன்ற உணர்வு துன்புறுத்திக்கொண்டே இருந்தது. அன்றைய இரவு, தன் தலை என்னென்னவாக எல்லாம் மாறும் என்ற பதற்றம் அச்சுறுத்தியது. வழக்கத்திற்கு மாறான சங்கடங்களைக் கொடுத்தது. சீக்கிரமே உறங்கிவிட முடிவெடுத்துப் படுத்துக்கொண்டாள்.

முழுமதி

சில நாள்கள் கழித்து மனோ வந்தான். அவன் வந்ததும், வகுப்பு தொடங்கக் காத்திருக்கும் மாணவர்களுக்கு இடையே, முழுமதியை வெளியே அழைத்தான். இப்படி அழைப்பது வழக்கம் இல்லை என்பதால், எல்லோரின் முகத்திலும் ரகசியமான புன்னகை படர்ந்து வகுப்பறையைக் கூசச் செய்வதாக்கியது. முழுமதி, அவனுடைய காந்த அலைகளால் மனோ என்ற கடலுக்குள் இழுக்கப்பட்டதுபோல் அவன் பின் சென்றாள்.

வழக்கமாக அமரும் மரத்தின் அடியில் வந்தமர்ந்து, கொஞ்ச நேரம் இருவருமே அமைதியாக இருந்தனர். அந்த அமைதிதான் இருவருக்குமே தேவைப்பட்டது என்பதுபோல மனோவைக் காணாதபோது இருந்த பதற்றங்கள் எல்லாம் தணிந்து, ஆற்றில் இழுக்கப்படும் நீரைக் கவனித்தபடி மனதில் எந்த எண்ண ஓட்டமும் கொந்தளிப்பும் இல்லாததுபோல இருந்தாள். மனோவிடம் தன் இரட்டைத்தலை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் ஏனோ தயக்கமாக இருந்தது. அந்த அளவிற்கான நெருக்கத்தை இன்னும் நெருங்கவில்லை என்று தனக்குத் தானே கூறிக்கொண்டாள். மனோ ஏதோ திடீரென்று நினைத்தவன் போல, “வரும் சனிக்கிழமை இருவருமாகச் சதுரகிரிக்குப் போகலாமா?” என்று கேட்டான். முழுமதியும் உற்சாகமாகத் தலையை அசைத்தாள்.

அன்று பௌர்ணமி என்பதால், மலையேறும் பகுதியில் ஆங்காங்கே கூட்டங்கள் மேல்நோக்கி நகர்ந்த படியிருந்தன. காலைப் பனியின் இறுக்கமும் எங்கெங்கும் பொழிந்த பனியும் முழுமதியையும் மனோவையும் ஒருவருடன் ஒருவரைப் பிணைக்கச் செய்திருந்தன. மலை ஏற்றத்தில் மூச்சிறைக்க நடக்க வேண்டியிருந்தது. அடர்ந்த மரங்களின் ஊடே கீழே வந்து வீழ்ந்த சூரியஒளி மர்மமான மேல்தேசத்திலிருந்து இனம் பிரித்து அறிய முடியாத கிளர்ச்சிகளை இருவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தது. கண்களும் தசைகளும் பற்றியெரிந்தன. கடவுளை வழிபடும் எண்ணமோ அதற்கான மனவோட்டங்களோ தேவைகளோ அவர்களுக்கு இருக்கவில்லை. எங்கெங்கும் பரவிய தமிழிசையின் ஒலிக்கு இடையே இருவரும் மெளனித்துக் கிடந்தனர். மாலை வந்தது. எல்லோரும் மலையைவிட்டு இறங்கத் தொடங்கினர். வந்த கடமை முடிந்த வேகத்திலும் இருட்டிற்குள் தரை உலகத்தை எட்டிவிட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது.

முழுமதியும் மனோவும் அங்கே தங்கிவிட்டுக் காலையில் இறங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். ஒரு பாழடைந்த மண்டபமும் அதை ஒட்டி ஏறிய சில பாறைகளும் அதைப் பின்னொட்டி இருந்த மலையும் பாதுகாப்பு உணர்வைத் தந்தன. மலையேறிய களைப்பில் சிலர் மண்டபத்திலேயே உறங்கிப் போயிருந்தனர். சட்டென்று, முழுமதி எதிர்பாராத ஒரு கணத்தில், மனோ அவளின் கையைப் பிடித்துக்கொண்டு பாறைகளின் மறைவிற்கு அழைத்துச் சென்றான். முழுமதியும் அவன் பின்னால் ஒரு குழந்தையைப்போல் ஓடிச்சென்றாள். இரவின் குளிரும் களைப்பும் தீவிர இதயத்துடிப்பும் இருவரையும் அலைக்கழித்த மனவேகமும் இந்தத் தருணம் வரை வேறாக இருந்தன. மனோ, அவளைத் தன் உடலுடன் இணைத்துக்கொண்டான். மூர்க்கமாக அணைத்தான், அவள் உடைகளை அவிழ்த்தான். சில்லிட்ட பாறைத் தரையில் கிடத்தினான். மனக்கிறக்கத்தில் அவன் செயல்களுக்கெல்லாம் இணங்கிக்கொண்டிருந்தாள். என்ன நிகழ்கிறது என்ற உணரும், அறியும் மனவோட்டம் முழுமதியிடம் சுத்தமாக இல்லை. அன்றைய இரவின் உறவில் முழுமதி மனோவைத் தனக்குள் அனுமதித்திருந்தாள். தலையின்  அனுமதியின்றி இது நடந்ததைப்போல் தன் உடலில் ஒட்டியிருந்த தலை சுழன்று விலகியது.

அதிகாலையே முழுமதி விழித்துவிட்டாள். இன்னும் சூரியன் எழவில்லை. மனோவும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். சுற்றிலும் சூழ்ந்த பனியும் குளிரும் இன்னொருவரின் அணைப்பை இப்பொழுது கேட்கவில்லை. தனியாக உலவிவந்தால் மனதிற்குத் தெம்பாய் இருக்கும் என்று உணர்ந்து, மலையிறக்கத்தில் நடக்கத் தொடங்கினாள். உடலிருந்து பெரிய எடை குறைந்ததுபோல இருந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரத்தில் மனோ தன்னைத் தொடர்ந்து வருவதை மலைப் பாதையின் திருப்பத்தில் பார்த்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிப் புன்னகைத்துக்கொண்டனர். மனோ,  மதியின் தோளில் கைகளை இணக்கமாய் வைத்துத் தன்னுடன் இழுத்து அணைத்துக் கொண்டான். தங்கள் இருப்பிடங்களை நோக்கிப் பயணித்தனர்.

வீட்டிற்கு வந்த முழுமதி, தன்னுடைய இரண்டாவது தலை கழன்று காணாமல், இல்லாமல் போயிருந்ததை உணர்ந்தாள். விடிய விடிய அழுதாள். தலை காணாமல் போனதற்குத் தான் அழுதது மகிழ்ச்சியின் விளைவா, துயரின் விளைவா என்று அவளால் எப்பொழுதுமே உணர முடியவில்லை. அவளுக்கு இன்னொரு தலை இருந்ததால் வழக்கம்போல் எல்லோருக்கும் இருக்கும் ஒரு தலை அவளுக்கும் இருந்ததால் இந்தப் பிரச்னை உலகத்தில் எவருக்குமே தெரியாமல்
போயிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism