பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இலங்கை என் தாய் நாடு... இந்தியா என் தந்தை நாடு!

இலங்கை என் தாய் நாடு... இந்தியா என் தந்தை நாடு!
பிரீமியம் ஸ்டோரி
News
இலங்கை என் தாய் நாடு... இந்தியா என் தந்தை நாடு!

பாடலாசிரியர் அஸ்மின் பேட்டி

மிழ் சினிமாவையும் இலங்கைத் தமிழர்களையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்குத் தமிழக சினிமாமீது காதல் கொண்டவர்கள்.  

இலங்கை என் தாய் நாடு... இந்தியா என் தந்தை நாடு!

`தப்பெல்லாம் தப்பே இல்லை...சரியெல்லாம் சரியே இல்லை...’ என்ற வித்தியாசமான பாடல் மூலம், விஜய் ஆண்டனியின் ‘நான்’ படத்தில் அறிமுகமான அஸ்மினுடன் ஒரு மினி பேட்டி...

“இலங்கையில் இருந்துகொண்டு இந்தியத் தமிழர்களின் ரசனையை உள்வாங்கி தங்களால் எப்படி பாடல்களை எழுத முடிகிறது?”


``எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்கிறான் பாரதி.  இலங்கை எம் தாய்நாடு, இந்தியா எம் தந்தைநாடு. இலங்கையில், படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தினர். இங்கிருந்து வெளிவருகின்ற நூல்களையும் சஞ்சிகைகளையும் வாசிக்கின்றோம். தமிழ்த் திரைப்படங்களை ரசிக்கின்றோம். தமிழ்ப்  பாடல்களைக் கேட்கின்றோம். உணர்வுபூர்வமாகத் தமிழகத்தோடு நாம்  எப்போதும் ஒன்றித்தே இருக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து தமிழ்ப்பாடல்களையும் கவிதைகளையும் இறக்குமதி செய்துவந்தார்கள். நான் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்ய முனைந்திருக்கிறேன்.’’

“இலங்கையில் இருந்துகொண்டு பாடல் வாய்ப்புகளை எப்படிப் பெறுகின்றீர்கள். காட்சிகளின் சூழலுக்கு ஏற்ப மெட்டுகளை எப்படித் தெரிந்துகொள்கிறீர்கள்?

`` `தப்பெல்லாம் தப்பே இல்லை’ என்ற பாடலுக்குப் பின்னர் சுமார் 15 திரைப்படங்களில்  பணிபுரிந்துள்ளேன். `அமரகாவியம்’, `சும்மாவே ஆடுவோம்’, `எந்த நேரத்திலும்’ ஆகிய படங்கள் இதுவரை  வெளியாகியுள்ளன. இயக்குநர் ஜீவாசங்கரின் ‘அமரகாவியம்’ படத்தில் ஜிப்ரானின் இசையில் பத்மலதா பாடிய ‘தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே’ பாடலுக்கு சிறந்த வெளிநாட்டுப் பாடலாசிரியருக்கான ‘எடிசன்’ விருது எனக்குக் கிடைத்தது. எந்த நேரத்திலும் படத்தின் இயக்குநரையோ, இசையமைப்பாளரையோ நேரடியாகச் சந்திக்காமலே இப்படத்தின் பாடல்கள் என்னால் எழுதப்பட்டன. கடல் கடந்து இருந்தாலும் தேவையேற்பட்டால் அவ்வப்போது  சென்னைக்கு வந்து போகிறேன். 2019 ஆண்டில் நான் பணிபுரிந்த பல படங்கள் வெளிவர இருக்கின்றன. புதிய படங்களுக்கும்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். தூரத்தில் இருப்பதால் பல நல்ல வாய்ப்புகளும் கடைசி நேரத்தில் கைநழுவிப்போயிருக்கின்றன. தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறேன். வாட்ஸ் அப் தொழில்நுட்பம் என் பாடல் பணியை இலகுவாக்குகிறது.’’

 “ஜெயலலிதா மறைவுக்கு நீங்கள் எழுதிய ‘வானே இடிந்ததம்மா’ இரங்கற்பாடல் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தீர்களா?”

``சென்னை வெள்ளத்தின்போது ‘கொல்லெனக் கொல்லும் மழை’ என்ற கவிதை எழுதினேன். அந்த வகையில் ‘முகநூலில் நான் எழுதிய கவிதைதான் ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து ஜெயலலிதா குறித்த பாடலாக  உருவானது. அந்தப் பாடலை இசையமைத்துப் பாடியவர் சதீஸ் வர்சன். அம்மாவின் சமாதியில் இரண்டு மாதங்கள் அந்தப் பாடல் ஒலித்தது. போயஸ்கார்டனுக்கு  வரவழைத்து சசிகலா  பாராட்டினார்.’’ 

“தற்போதுள்ள சூழலில் இலங்கையில் இலக்கியவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?”

``இலங்கையில் கலை இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இங்கு நூல் வெளியீட்டின்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு நூலாசிரியரை ஊக்கப்படுத்துகின்றனர். நூல் அச்சிடுவதற்கு உண்டான செலவின் இரு மடங்கு பணத்தினை நூல் வெளியீட்டு நிகழ்விலே  நூலாசிரியர் பெற்று விடுகிறார். ஒரு மலையகக் கவிஞர், தேர்தலில் போட்டியிட்டு  நாடாளுமன்ற உறுப்பினராகவே ஆகியுள்ளார்.’’

“உங்கள் திரைப்படப் பாடலுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது?”


 ``இருபது ஆண்டுகள் இலக்கிய உலகில் வராத புகழை தமிழ் சினிமாவில் பாடல் எழுத ஆரம்பித்து ஆறு ஆண்டுகளுக்குள்  அடைந்துள்ளேன். தமிழ் சினமாவில் பாடல் எழுதிய பிறகுதான் என் கவிதைகளுக்கும் சரியான கௌரவம் கிடைத்துள்ளது. ரசிகர்களும் அதிகரித்துள்ளனர்.’’

செ.சல்மான்