Published:Updated:

சிறுகல் - சிறுகதை

சிறுகல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகல் - சிறுகதை

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: அரஸ்

சிறுகல் - சிறுகதை

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: அரஸ்

Published:Updated:
சிறுகல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகல் - சிறுகதை

“எங்கப்பாவும் செத்துருவாரு போலண்ணே”

உமையவன் குரலில் இருந்த நடுக்கமும் விரக்தியும் என் மனதின் சமநிலையை அசைக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

சிறுகல் - சிறுகதை

அவனை அப்படியே இழுத்து அணைத்துக்கொண்டேன். கோழிக் குஞ்சுபோல் என் உடல் அரவணைப்பிற்குள் வந்தான் உமையவன். அவன் உடல் நடுங்கியது. அவன் உடல், சிறுவனிலிருந்து அவிழத்தொடங்கியிருக்கும் பருவத்தில் இருந்தது.

எதுவும் பேசாமல் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அவன் தோளில் கை போட்டு வெளியே அழைத்து வந்தேன்.

பக்கத்து வீட்டு மரகதம் அக்காவின் வாசலில் இருந்த செம்பருத்திச்செடியின் இலைகள் மொத்தமும் புழுதி படிந்து நறநறவெனப் பற்களைக் கூசச் செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுகல் - சிறுகதை

என் கை உதறியதை உணர்ந்து அவனைப் பார்த்தேன். விம்மலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தான்.

“டேய்... ஒண்ணும் ஆகாதுடா... டக்குனு நம்ம கம்போண்டர்ட்ட காட்டி ஒரு ஊசியப் போட்டுட்டு, பெரியாஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய்ருவோம்.”

அவன் தலை சரி என்பது போல் ஆடினாலும் அவன் வாயிலிருந்து திக்கித் திக்கி வார்த்தைகள் வந்து விழுந்தன.

“அம்மாவுக்கும் இப்பிடித்தான ஆச்சுண்ணே... செத்...துதான போச்சு.”

என்னையும் அறியாமல் அவன் தோளை மேலும் இறுக அணைத்தேன். அவன் தலையை என் மார்பு நோக்கி இழுத்து அரவணைத்தேன்.

“அது வேறடா... பேசாம இரு. நான் பார்த்துக்குறேன். ஒங்கப்பாக்கு ஒண்ணும் ஆகாது.”

தெருவைக் கடந்து  பக்கவாட்டில் இருந்த பட்டியக்கல் பதித்த சந்திற்குள் நுழைந்து சேது அண்ணனின் வீட்டை அடையும்போதே மனம் பதைபதைக்கத் தொடங்கியது.

வீட்டைப் பார்த்ததும் என் பிடியிலிருந்து விலகி சந்திற்குள் ஓடினான் உமையவன்.

சந்தில் இருந்த குழாயடியில் சிறிய ஸ்டூலைப் போட்டு அமர்ந்து பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்த செல்லத்தாயம்மாள் என்னைப் பார்த்ததும்,

“நேத்து ரவையத் தங்காதுண்டு நெனச்சோம். இழுத்துக்கிட்டு கெடக்கு, வெரசா போய்ப்பாரு.”

மதிய வெயிலில் பாத்திரங்கள் மினுங்கின. சுவரை உரசிக்கொண்டு அந்தம்மாளைக் கடந்து சேது அண்ணனின் வீட்டிற்குள் நுழைந்தேன்.

சிறுகல் - சிறுகதை

ஒரே ஒரு சிறிய பத்துக்குப் பத்து அறை. அதிலேயே எல்லாமும் அடக்கம். மூலையில் ஒரு மரபெஞ்சில், ஸ்டவ் மற்றும் சில பாத்திரங்கள். அறையின் குறுக்காகக் கயிறு. அதில் துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. சேது அண்ணனும் உமையவனும் மட்டும்தான் என்றாலும் இருவருக்கே அந்த இடம் போதாது.

நைந்துபோயிருந்த காட்டன் புடவையைத் தரையில் விரித்து அதில் படுத்திருந்தார் சேது அண்ணன். புடவையைவிடவும் அதிகம்  நைந்து போயிருந்ததுபோல் இருந்தது அவர் உடல்.  தலைமாட்டில் பழைய துணிகளை எல்லாம் கட்டிய தலையணை மூட்டை.

அவருக்கு அருகில் குனிந்து கன்னத்தைத் தட்டினேன். கண்களைத் திறந்தார். என்னைப் பார்த்ததும் அவர் கண்கள் லேசாகச் சிரித்தன. பிறகு மகனைத் தேடின. நான் உமையவனை அருகே இழுத்தேன். அவர் கண்கள் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கம்போண்டரும் மெடிக்கல்ஸ் செந்தியண்ணனும் வந்து சேர்ந்தார்கள். எனக்குக் கொஞ்சம் நிம்மதியும் பயம் விலகியதுபோலவும் இருந்தது.

“ஒரு ஊசியப் போட்டு பெரியாஸ்பத்திரிக்குக் கூட்டிப் போய்ருவம்... ரெண்டு சிலைன் ஏறுச்சுன்னா சரியாப்போயிரும். உடம்புல சுத்தமா சத்து இல்ல கழுத.”

கம்போண்டரின் கைக்குக் கட்டுப்பட்டதுதான் சேது அண்ணனின் உடல். ஆனாலும் இன்று மனதிற்குள் ஏதோ சங்கடம் செய்துகொண்டே இருந்தது.

மேரி அதாலத் ஆட்டோ நிலையத்தைத் தகவல் எட்டியதும் சரவணன் சர்ரென ஆட்டோவை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். ஆளும்பேருமாகச் சேர்ந்து அவரைத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் உள்ளீடற்ற குழாய்போல் வெகு இலகுவாகத் தூக்க முடிந்த அவர் உடலைத் தூக்கிக்கொண்டு சந்தைக் கடந்து ஆட்டோவில் ஏற்ற, உமையவன் மிரட்சியாகப் பார்த்தான்.

“ஒக்கார்றா” என நான் சொன்னதும் அப்பாவிற்கு அருகில் ஆட்டோவில் அமர்ந்தான். சேது முனகினார்.

நான் சரவணன் பக்கத்தில் அரையாளாக அமர்ந்துகொள்ள, ஆட்டோ கிளம்பியது.

கண்ணாடியில் பார்த்தேன். கண்களை மூடிப் பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தார். உமையவன்  தன் அப்பாவின் முகத்தையும் மார்பு ஏறி இறங்குகிறதா எனவும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

மதுரை இராஜாஜி மருத்துவமனை மதுரைக்கு மட்டுமே மருத்துவமனை அல்ல, சுத்துப்பட்டில் இருக்கும் அத்தனை சிற்றூர்களுக்கும் அதுதான் ‘பெரியாஸ்பத்திரி.’ அதனால் எங்கு திரும்பினாலும் கூட்டம். தூக்குவாளியில் சோறு, சொந்தக்காரர்கள் என எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒரே தோற்றம். பேருந்தில் இந்த மருத்துவமனையைக் கடக்கும்போதெல்லாம் தென்படும் முகபாவங்களைப் பார்ப்பது என் வழக்கம். இன்று நானும் சரவணனும் நின்று டீ குடித்துக் கொண்டிருப்பதை பஸ்ஸிலிருந்து எல்லோரும் பார்ப்பதுபோல் தோன்றியது எனக்கு. நன்றாக ஆத்திக்கொடுத்த டீ என்பதால் உமையவன் சீக்கிரம் குடித்துவிட்டான். ஒரு பன்னை அவனிடம் கொடுத்து,

“இனி ஒண்ணும் பயம் இல்லடா... டாக்டர்ட்ட பேசிட்டேன். குளுக்கோஸ் ஏறுது. நீ போய் பக்கத்துல ஒக்காந்திரு. வர்றேன்.”

“தேங்க்ஸ்ண்ணே” என்று சொல்லிவிட்டு, பன்னை ஜவ்வுக்காகித்தோடு அழுத்தி அழுத்தி விளையாடிக்கொண்டே வார்டை நோக்கி நடந்தான் உமையவன். எனக்கு ஏனோ கண்கள் கலங்கிவிட்டன.

“ஒண்ணும் ஆகாது இல்ல சரவணா?”

சிறுகல் - சிறுகதை

“இப்ப ஆனாத்தான் என்ன பண்ண முடியும்? இந்தாளுக்கு இப்பிடி ஆகும்னு நெனச்சாவது பார்த்தமா? அட இவர திரும்பி இந்த ஊர்ல பார்ப்பம்னாவது நெனச்சமா? விதி யாரப்பா விட்டுச்சு.”

டீக்கிளாஸை வைத்துவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டான் சரவணன். எதார்த்தவாதி. இன்னும் பத்து நிமிடத்தில் சவாரி வந்துவிட்டது எனப் போய்விடுவான். என் மனம்தான் கிடந்து அல்லாடத் தொடங்கிவிட்டது. ஏனெனில் என் மனம் ஒரு சாவை எதிர்நோக்கும் முஸ்தீபுகளில் இறங்கத் தொடங்கியிருந்தது.

சரவணன் சொன்னதுபோல், இவரை இந்த ஊரில் திரும்பிப் பார்ப்போம் எனத் தெருவில் எவருமே நினைத்திருக்க வாய்ப்பில்லைதான்.

மிக நன்றாக நினைவிருக்கின்றன அந்த நாளும் தெருவில் பற்றிய பரபரப்பும். அந்த ஆண்டில் நான் +2 பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்த சமயம். அந்தச் செய்தி எங்களை மரகதம் அக்காவின் மூலம் வந்தடைந்தது.

“நம்ம சேது பஸ் ஸ்டாண்டுல நிக்கிறான்...யாராவது போய்க் கூப்ட்டாத்தான் வருவானாம்.”

அவள் குரலில் அழுகையும் மகிழ்ச்சியும் இன்னும் பிற உணர்ச்சிகளும் கலந்து, தொண்டையை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் வந்தன.

தெருவே மொத்தமாகக் கூடி பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஓடியது என்றே சொல்லலாம். காரணம், வெகு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர், தன் பத்து வயதில் ஊரை விட்டு ஓடிப்போய்விட்ட சிறுவன்தான் சேது. அவரைத் தேடித் தேடி, புத்திர சோகத்திலேயே இறந்துவிட்டார்கள் பெற்றோர். ஒரே பையன் என்பதால் அளவுக்கு அதிக செல்லம். ஏதோ காரணமில்லாக் காரணம், கோபம் என ஓடியவன் ஓடியவன்தான். என்னுடைய அந்தப் பதினேழாவது வயது வரை, எங்கும் எவரும் சேது இருப்பு குறித்துப் பேசியதாக நினைவில்லை. எப்போதேனும், வயிறுமுட்டச் சாப்பிட்டுவிட்ட மதிய நேரத் திண்ணைப் பேச்சில், அவர் தாய்வழிச் சொந்தமான என் அப்பாவோ, பக்கத்து வீட்டு மரகதம் அக்காவோ,  “எங்க இருக்கானோ என்ன சாப்ட்டானோ, இருக்கானோ இல்ல காத்தோட போய்ட்டானோ” எனப் பேசிக்கொண்டி ருப்பார்கள். சேது கறுப்பா சிவப்பா, உயரமா குட்டையா என எதுவும் தெரியாத எங்களுக்குள் ஆர்வம் தொற்றிக்கொள்ள பஸ் ஸ்டாண்டு நோக்கி ஓடினோம்.

ஊருக்குள் விசயம், சீத்தாராமன் அய்யா அடிக்கடி சொல்லிக்கொடுக்கும் இரட்டுற மொழிதல் செய்யுளான, “ஓடி மண்டைப் பற்றிப் பரபரவெனும் பாரில் பிண்ணாக்கும் உண்டாம்” போல ஊரின் மண்டையான மந்தையம்மன் கோயில் பஸ் ஸ்டாண்டில் மொத்தப் பரபரப்பும் கூடியிருந்தது.

ஊரில் பாதி தன் முன் நின்றாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், காலடியில் உருளைகள் வைத்த பேக்கை வைத்துக்கொண்டு, ஸ்டைலாக கூலிங் கிளாஸ் சகிதம், ஊதா நிற டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், அதே ஜீன்ஸ் துணியால் ஆன தொப்பி, லேசான தொப்பை, ஆனாலும் அவர் உயரத்திற்கு அது பெரிதாய்த் தெரியாமல் தளதளவென நின்றிருந்தார் சேது அண்ணன். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகர்போல இருந்தார்.
ஓடிப்போன ஒருவன் வெற்றிவாகை சூடி மீண்டும் ஊருக்கு, அதுவும் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு இப்படிப் பளபளவென வருவது என்பது வரலாற்றின் பக்கங்களில் எழுதப் படவேண்டிய அளவிற்கு நிகரான நிகழ்வு என்பதை மற்றவர்களின் வியந்தோதுதல் மூலம் புரிந்துகொள்ள  முடிந்தது.

அவர் சேதுதானா என்ற எந்த சந்தேகமும் கிஞ்சித்தும் எழாதவாறு, அப்படியே அச்சு அசல் அவர் தந்தைபோலவே இருப்பதாக மரகதம் அக்கா மகிழ்ச்சியில் பேசிப் பேசி மாய்ந்தாள்.

ஒருவழியாக ஆளை ஊர்வலம்போல நடத்தித் தெருவிற்குக் கூட்டி வந்து யார் வீட்டில் அவருடைய லக்கேஜை வைப்பது எனும் பிரியத்தை ஈகோவில் கலந்து, எங்கள் வீட்டில்தான் தங்க வேண்டும் என அனைவருமே அன்பைப் பொழிந்ததில் அவர் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனார்.

பெட்டி நிறையத் துணிமணிகள், விதவிதமான டீ-ஷர்ட்டுகள். ஸ்வீட் பாக்கெட்டுகள் ஆவக்காய் ஊறுகாய் பாட்டில்கள், எல்லாவற்றையும்விட முக்கியமாய் கத்தையாய்ப் பணம்.

சிறுகல் - சிறுகதை

ஊரின் திடீர்க் கதாநாயகன் சேது என்றானது. மிகச் சரியாக இரண்டாவது நாளிலேயே என்னோடு மிக நெருக்கமானார்.  பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிந்து ரிசல்ட்டிற்குக் காத்திருக்கும் கொடும் நேரம் என்பதால், அதிலிருந்து தற்காலிகமாக விடுபட, சேது அண்ணனோடு தினமும் எங்காவது சுற்றத் தொடங்கியிருந்தேன். அப்போது அவருக்கு நான் தான் ‘கைவாகனம்.’

டவுனுக்குள் போகும்போது விழிகள் விரிய நான் எந்த இடங்களை எல்லாம் ஆச்சர்யமாகப் பார்த்தேனோ அங்கெல்லாம் அனாயாசமாக நுழைந்து அமரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் சேது அண்ணன். கன்னிமாராவில் தொடங்கி, திண்டுக்கல் ரோட்டில் இருக்கும் அத்தனை ஓட்டல்கள், சுந்தரம் தியேட்டர், அமிர்தம் பிரியா காம்ப்ளெக்ஸ், பிரேமா விலாஸ் அல்வா வில்லை, கொசுறு மிக்சர் என எல்லா இடங்களிலும் தடம் பதித்தோம். அவரிடம் ஓர் இனம்புரியாத நளினம் இருந்தது. நகக்கண்களிலும் சுத்தம் பேணும் நுட்பம். சாப்பாடு பரிமாறும் சர்வர்களுக்கு ‘தேங்க்ஸ்’ என எல்லாமே வித்தியாசமாகச் செய்தார். வாசனையாக இருந்தார்.

 “என்ன ஆனாலும் வீட்ட விட்டு மட்டும் போகக் கூடாதுடா யப்பா சாமி” அது ஒரு பெளர்ணமி இரவு. மது அருந்தியிருந்தார் என்றே நினைக்கிறேன். நான் உட்பட தெருவில் இருக்கும் அனைவருக்கும் அவர் எங்கு ஓடிப்போனார் எப்படி இப்படிச் செழிப்பாகத் திரும்பி வந்தார் என்பதை அறிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் இருந்தது. அவர் வந்த இந்த ஒரு வாரத்தில் என்னிடம் மட்டுமே நெருங்கி இருப்பதைப் பார்த்த அப்பாவே, என்னிடம் அதிகம் பேசும் பழக்கம் இல்லை என்றாலும் கொஞ்சம் இறங்கி வந்து, “ஆமா, எங்கதான் இருந்தானாம்டா” என்று கேட்டதில் எனக்குள் லேசான மிதப்பு. ஆனால் நானாக அவரிடம் எதையும் கேட்கவில்லை என்பதை இவர்களிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்ற நிலையில் தான் அவர் தன் கதைய ஆரம்பித்திருந்தார். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வழக்கதைவிடவும் அதிக தூரம் நடந்து, வயற்காட்டைக் கடந்து ஒற்றைப் பனைமரத்தை அடைந்திருந்தோம். மூன்று பனைமரங்கள் தள்ளித் தள்ளி இருக்கும் இடத்திற்கு எப்படி எதனால் ஒற்றைப் பனைமரப் பாலம் என்று பெயர் வந்தது எனத் தெரியாது. வசதியாக அமர்ந்துகொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஆனா ஒண்ணுடா இவனே... இந்தா இம்புட்டுதான் இருப்பேன்” எனக் காற்றில் தன் உயரத்தைச் சுட்டியவர்,

“அப்பிடியே தெற்குவாசல் வரைக்கும் ஓடிட்டேன். நைட்டு, குப்புனு இருக்கு இருட்டு. பசிவேற வவுத்தக் கிள்ளுது. சரி வீட்டுக்கே திரும்பிப் போயிருவோம்னு நினைக்கும்போது, ஒரு அரபாடி லாரி தேங்கா லோடு ஏத்திக்கிட்டுக் கிளம்புது... என்னயப் பார்த்து வா வான்னு கூப்புடுற மாதிரியே இருந்துச்சு. ஒரு நிமிசம்கூட யோசிக்காம ஏறிட்டேன். அந்த வண்டி அங்க இங்கன்னு சுத்தி, ஆந்திராவுல ஒரு காலேஜ் கேன்டீன்ல போய் ஓடி அடஞ்சுச்சு. அந்த டிரைவர் ரொம்ப நல்ல மனுசன்னு நான் கொஞ்ச நாள்தான் நினைக்க வேண்டியதாப்போச்சு. ஏன்னா அந்த காலேஜ் கேன்டீன நடத்திட்டிருந்தவரு எங்க ஓனர், உமாகாந்த் சார் அதவிட ரொம்ப ரொம்ப நல்லவரு... தங்கமான மனுசன்.”

தன் வெற்றிக்கதையின் பூரிப்பில் அவர் மீண்டும் தன் பாத்திரத்திற்குள் புகுந்துகொண்டார் போல் இருந்தது அவர் முகப் பூரிப்பு.

“அப்பிடியே ரெங்குவேன், ஒரு வேல விடாம செய்வேன். நைட்டு ஒரு மணிக்கு டேபிள்களைக் கவுத்திப் போட்டுக் கழுவி விட்டுத் திரும்புனா காலைல நாலு மணிக்கு நிமித்திருவோம். பெண்டு நிமிந்திரும் பார்த்துக்க...”

எனக்கு ஆர்வம் தாளவில்லை. “டேபிள் தொடச்சு எடுபிடி வேல பார்த்தா இவ்ளோ பெரிய ஆளா...”

நான் முடிக்கும் முன்பே உச் கொட்டினார்.

“இர்றா...” என நிமிர்ந்து பார்த்தார். நானும் பார்த்தேன். ஒற்றைப் பனைமரம் ஓங்கி வளர்ந்து இருக்க, அதற்கு மேல் நிலா...

கையைச் சொடுக்கினார். “அப்பிடியே தீயா வேல பார்ப்பேன். அங்கல்லாம் இந்தி, உருதுதான். காலேஜ் பொண்ணுங்க பசங்கன்னு எனக்குன்னு ஒரு குரூப்பு எப்பவும் சுத்திட்டு இருக்கும் கேன்டீன்ல.”

 “ம்ம்”

சிறுகல் - சிறுகதை

“பார்க்க கொஞ்சம் நல்லா இருக்கேனா... காலேஜ் பிள்ளைக நம்மளப் பார்க்குற விதமே ஒரு சந்தோஷத்தக் குடுக்கும்... ஆனா எனக்கு நிம்மதியக் குடுத்தது ரமாதான்... ஓனர் பொண்ணு.”

சேது அண்ணன் முகத்தில் வெட்கமும் மகிழ்ச்சியும் பொங்கப் பொங்கச் சொன்னார்.

“ஒரு நாள் மார்கெட்ல இருந்து லோடு ஏத்திட்டு வந்து வழக்கம் போல கேன்டீனத் தொறந்து வேலய ஆரம்பிக்கிறேன். நிழல் ஆடுது. அந்த நேரத்துல யார்றா அதுன்னு பார்த்தா, ரமா நிக்குது.  என்னாச்சுன்னு பார்க்குறேன். அப்பாவுக்குக் காய்ச்சல், அதான் பணத்தக் குடுத்துட்டு வரச் சொன்னாருன்னு சொல்லுது வாயி, ஆனா அவ கண்ணு சிரிச்சுட்டே இருக்கு என்னயப் பார்த்து. இது என்னடா மதுரைக்கி வந்த சோதனைன்னு,  ‘ஏன்ட்டி காவால நீக்கு இப்புடு’ன்னே தைரியமா கேட்டுட்டேன். `என்ன வேணும் ஒனக்கு’ன்னு அர்த்தம் என எனக்காக பெரியமனது பண்ணி அந்த வார்த்தைகளை மொழிபெயர்த்தது அவர் உதடு. ஆனால் அவர் ரமாவின் முன்னர் நின்றிருந்தார்.

“நுவ்வேங்குறா அசால்ட்டா. நுவ்வுன்னா நீன்னு அர்த்தம். நமக்குக் கையும் ஓடல காலும் ஓடல. ஏன்னா அவளுக்காகவே அந்த காலேஜ்ல சேர்ந்து படிக்கிற பயலுக இருக்குற ஊரு அது. அப்பிடியே காலைல ப்ரெஷ்ஷா போட்ட பூரி மாதிரி இருப்பா.”

“செமண்ணே...”

“ம்ம்... ஆனா நான் நேராப் போய் உமாகாந்த் சார்கிட்ட இன்ன மாதிரி இப்பிடி உங்க பொண்ணு சொல்லுது சார்... எனக்கும் ஆசைதான்... ஆனா எனக்குத் தகுதி இல்லைன்னு தெரியும்... இதவிட்டா எனக்கு வேற போக்கிடமும் இல்ல, ஓடிவந்த இத்தன வருசத்துல உங்க மூஞ்சி தான் அம்மா அப்பா எல்லாம்னு என்ன என்னமோ பேசிட்டேன்... ஏன் தெரியுமா... வெள்ளிக்கிழமையானா செகண்ட் ஷோ போயிருவேன், மல்காஜ்கிரி தியேட்டர்ல.அப்பிடியே சிரஞ்சீவி ரவிதேஜா மாடுலேசன்ல பேசுறதா நெனச்சுப் பேசினேன் பாரு ஒரு பேச்சு... ஆள் ஆப் ஆகிட்டாரு... போன வாரம்தான் கல்யாணம் முடிஞ்சது. எந்தக் கேன்டீன்ல எச்சித்தட்டு கழுவினேனோ அதுலயே ஓனர். உழைப்பும் உண்மையும்தான்டா இவனே இதுக்குக் காரணம்” எனத் தன் உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தார். அந்நொடியில் நானே வாழ்வை வென்றுவிட்ட ஒரு மகிழ்ச்சி என்னில் நிறைந்தது.

 “தோத்துட்டாக்கூட ஒண்ணும் பெருசா தெரியாதுடா இவனே... நாம ஜெயிக்கும்போது நம்ம ஜனம் கூட இருக்கணும்டா. இந்தா இப்பிடி வாழ்றேன் பாருன்னு காட்டவாவது நாலு பேரு நமக்கு இருக்கணும்ல. அதான் ஒரு வாரம் வந்து எல்லாத்தையும் பார்த்துட்டுப் போலாம்னு...அப்பிடியே வந்தேன். நீ எப்பவேணாலும் ஆந்திராவுக்கு வா. இந்த ஊர்ல ஒரு மண்ணும் இல்ல. சும்மா, மதுரய சுத்துன கழுதகூட வெளில போகாதுன்னு வசனம் பேசிக்கிட்டு திண்ணையத் தேய்க்காத, கழுத மாதிரி.”

மறுநாள், தன் வீட்டில் இருக்கும் மரகதம் அக்காவிற்கே அதைப் பதிந்து கொடுத்துவிட்டு, இம்முறை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு ஆந்திராவிற்குக் கிளம்பிப் போனார் சேது அண்ணன். நானும் சரவணனும்தான் ஸ்டேஷனுக்குச் சென்று ரயிலேற்றி விட்டோம். இரயில் கிளம்பும் முன்னர் தன் கையில் கட்டியிருந்த வாட்சைக் கழற்றி என் கையில் கட்டிவிட்டார். மிகுந்த சந்தோஷமாய்க் கையசைத்தார். அவரைவிட சந்தோஷமாய் வாட்ச் கையோடு வழி அனுப்பிவைத்தேன்.

ஒரு சிலைன் பாட்டில் முடிய இன்னும் சில துளிகள் மிச்சம் இருந்தன. உமையவன் சோர்ந்து, கட்டிலுக்கு அருகில் தரையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். சேது அண்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அரசு மருத்துவமனையின் பிரத்யேக வாடை காற்றில் கமழ்ந்துகொண்டிருந்தது. உமையவனின் முகத்தைப் பார்க்கப் பார்க்க இரக்கம் சுரந்தது. நெஞ்சை எதுவோ அறுத்தது. எவ்வளவு போஷாக்காக, ஆந்திராவில் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டிய பிள்ளை இவன்... இப்படி நோஞ்சானாக, இருக்க இடம் இல்லாமல் உண்ண சரியான உணவில்லாமல் தந்தையின் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிடக்கூடாதென இந்தச் சிறிய வயதில் யாரிடமும் எதுவும் கை நீட்டாமல், யார் வீட்டிலும் தஞ்சம் புகாமல் வாடிக்கொண்டிருக்கிறானே... அவன் மூச்சை இழுத்து விடும்பொழுது வயிறும் நெஞ்சும் விம்மித் தணிந்ததைப் பார்க்கப் பார்க்க அழுகை வந்துவிட்டது. கைக்குழந்தையாக இவனைத் தூக்கிக்கொண்டு சேது அண்ணன் வந்திறங்கிய நாள் நன்றாக நினைவிருக்கிறது.

“நீ ஏன்டா ஸ்டேஷனுக்கு வந்த, நான்தான் போன்ல பேசும்போது, நேரா வீட்டுக்கே வந்துர்றேன்னு சொன்னேன்ல...”

அவர் பேசிக்கொண்டே பெட்டிகளைக் கீழே இறக்கிக்கொண்டிருந்தார். என் கண்கள் அவர் இருண்ட முகத்தையும், அவர் மனைவி ரமா அக்காவின் ஒல்லியான தேகத்தையும் பார்க்கப் பார்க்க ஏதோபோல் தோன்றியது. குழந்தையை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டிருக்கும் போதே சரவணனும் ஓடி வந்திருந்தான். பெட்டிகளை ஆட்டோவில் அடுக்கி, ஊரை நோக்கிப் போகச் சொல்லிவிட்டு, பின்னால் வண்டியில் தொடர்ந்தேன். நான் வேலைக்குச் சேர்ந்திருந்த மூன்றாவது மாதம் அது. ஆட்டோவிற்கு அருகிலேயே வண்டியை உருட்டினேன். குழந்தை என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான். எனக்கு ஆசையாய் இருந்தது. ஆனால் சேது அண்ணனின் தோற்றம் இந்த ஐந்தே ஆண்டுகளில் இப்படி மாறிப்போனதே என மனம் குறுகுறுத்தது. அதுவும் போனில் அவர் பேசிய தொனி. “ஊரோட வந்துருலாம்னு இருக்கேன் இவனே” வார்த்தைகள் ஆட்டோ சத்தத்தையும் தாண்டிக் கேட்டுக்கொண்டிருந்தன.

தெருவில் பெட்டிகளை யார் வீட்டில் இறக்குவது என்ற தயக்கம். யாரும் முன்வந்து சொல்வதாகவும் தெரியவில்லை. அப்பா கொஞ்சமாய் பெரியமனது பண்ணி, “வீடு கீடு கெடைக்கிற வரைக்கும் இங்கயே இரு சேது” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மரகதம் அக்காவின் வீடு உள்பக்கமாகப் பூட்டியே இருந்தது.

பக்கத்துச் சந்தில் சரவணனின் அறை இருந்தது நினைவிற்கு வர, சக இருதயன் ஆன அவன் என் எண்ணம் புரிந்துகொண்டு அறையை மறுநாளே காலிசெய்து அந்தப் பத்துக்குப் பத்து இடத்தை விட்டுக்கொடுத்தான்.
 ஓரளவு இப்படி அப்படி என சாமான்களை அடுக்கி, வேண்டிய சாமான்களை வாங்கிக்கொடுத்து, அடுப்பைப் பற்ற வைக்க ஏற்பாடு செய்துகொடுத்துவிட்டு, என் வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒற்றைப் பனைமரப் பாலத்தில் போய் நிறுத்தினேன்.

நானாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என்ற என்னுடைய அவ்வளவு கட்டுப்பாட்டையும் உடைத்துக்கொண்டு கேட்டேன்.

“என்னாச்சுண்ணே?”

வயல் வேலை முடித்து வீட்டுக்குப் போகும் அந்தி நேரம் என்பதால் ஜன நடமாட்டம் அதிகம் இருந்தது. ஆனாலும் உடைந்து அழுதார். அவர் அழுவதை யாரும் பார்த்திடா வண்ணம் மறைத்துக்கொண்டு நின்றேன். இரண்டே நொடிகளில் முகத்தைத் துடைத்துக்கொண்டு சகஜமானார்.

என் வண்டி மணலில் புதைந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க, ஒரு சிறிய கல்லின் மீது மிகச் சரியாக சைடு ஸ்டேண்டைப் பதியவைத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தவர்,

“இந்த சின்னக் கல்லு இருக்கு பார்த்தியா... இதான். என்னாச்சுன்னு கேட்டியே... இந்தக் கல்லுதான்.”

அவர் குரல் மீண்டும் கம்மத் தொடங்கியது. நான் காத்திருந்தேன்.

“நல்லா போச்சுடா... இங்க இருந்து போனதுல இருந்தே ஒரு நிறைவு மனசுல. நம்ம மனுஷங்களப் பார்த்த சந்தோஷம்... புதுப் பொண்டாட்டி... கல்லா நிறையக் காசுன்னு நல்லா போயிட்டி ருந்துச்சு. மாமனாரு ஆயிட்டாலும் ஓனர்னுதான் கூப்புடுவேன். அந்த மனுஷன் ஒடம்பு முடியாம இறந்தாரு. அதுக்கு அப்புறமும் ரெண்டு வருசம் சும்மா ஜெட் மாதிரி சூப்பரா போச்சு. திடீர்னு ஒரு நாள்...”
குரல் உடைந்தது. தொடர்ந்தார்.

“ஏதோ தெலுங்கானா, அது இதுன்னு போராட்டம் புரட்சின்னு பசங்களும் கூட்டமா எறங்கினாங்க. காலேஜ் கேன்டீனே கதின்னு கெடக்குற பயலுகதான். இங்க ஒவ்வொரு மனுசனும் அவ்வளவு நல்லவன் தான்... ஆனா மனுசங்களா, கூட்டமா சேர்ந்துட்டா அரக்கனுங்க ஆகிருவானுங்க. அப்பிடித்தான் அன்னிக்கு கூட்டமா சேர்ந்ததுல என்ன பண்ணுறோம் ஏது பண்றோம்னு தெரியாம ஒருத்தன் விட்ட கல்லு, கேன்டீன் முகப்புல இருந்த கண்ணாடிச் சுவத்த பொளபொளன்னு ஒடச்சுருச்சு.”

சிறுகல் - சிறுகதை

குனிந்து ஒரு கல்லை எடுத்து, கையில் வைத்து உருட்டினார்.

“இத்தனைக்கும் எறிஞ்ச பையன் அவ்வளவு நல்லா படிக்கிற பய. எந்நேரமும் கேன்டீன்ல ஒக்காந்து படிச்சுட்டே இருப்பான்... கேட்டா கலெக்ட்டர் ஆகுற வரைக்கும் படிப்பேன்னு சிரிப்பான்.”

 “போராட்டம் எல்லாம் முடிஞ்சு, சரி, இப்பிடி உடைஞ்ச கண்ணாடியோட இருந்தா யார் வருவா, நல்லா இருக்காதேன்னு மொத தடவையா வாழ்க்கைல வட்டிக்குப் பணத்த வாங்கி கண்ணாடிய மாத்தி, கொஞ்சம் பெயின்ட் அடிச்சு, சரி பண்ணேண்டா இவனே...”

கையில் இருந்த கல்லைக் கெட்டியாகப் பிடித்தார்.

“டெய்லி தவணைக்கு வந்தவன் கேன்டீன்ல ஓடுன ஓட்டம், காலேஜ் பொண்ணுங்க கூட்டம்னு பார்த்துட்டு, மண்ட சுத்தி, எங்கயோ ஊர்ல இருந்து ஓடி வந்த நாயி இங்க எங்க ஊர்ல வந்து முதலாளி ஆகப் பார்க்குறியான்னு உள்ளூர் குரூப் சேர்த்து, நான் எழுதிக்கொடுத்த பேப்பர்ல ரெண்டு மூணு சைபர சேர்த்து, ஆள அடிச்சு, கடைய எழுதி வாங்கிட்டு விட்டானுங்கடா இவனே... இவளுக்கு வேற டி.பி. என்ன பண்றதுன்னே தெரியாம இப்பிடி வந்து நிக்கிறேன்.”

மீண்டும் குலுங்கி அழுதார். தன் கையில் இருந்த கல்லைப் பனைமரத்தின் மீது குறி பார்த்து எறிந்தார். அது மரத்தில் படாமல் விலகி வயலில் விழுந்தது.

 “எவனோ எங்கயோ இருந்து எறிஞ்ச கல்லு, எம் பொழப்ப நாறடிச்சிருச்சுடா இவனே... அதுசரி... இப்பிடி சம்பந்தமே இல்லாம எவன் எவனோ எங்கயோ ஏதோ பண்றதுதான அடுத்தவன் பொழப்ப கெடுக்குது.  அனிதான்னு ஒரு பொண்ணு செத்துச்சே, எவன் எங்க ஒக்காந்து கையெழுத்து போட்ட கல்லு அது...அந்தப் புள்ள தலைல விழுந்துச்சுல்ல...அதுமாதிரிதான்... கூட்டத்துல எறியுற கல்லு எவானது ஒருத்தன் மண்டைய ஒடைக்கும்ல.”

என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றிருந்தேன்.  “இந்த வருசம் எட்டாப்பு பப்ளிக் எக்ஸாமாம்டா, அய்யய்யோ” என முருகேசனின் மகன் சொல்லிக்கொண்டு போனது காதில் விழுந்தது. யாரோ அவன் மனதில் எறியும் கல் அது எனும் படிமம் என் கண் முன் வந்துபோனது, சேது அண்ணன் சொற்களின் புண்ணியத்தில்.

சிம்மக்கல்லில் ஒரு புரோட்டாக்கடையில் மாஸ்டராகச் சேர்ந்தார் சேது அண்ணன். கொஞ்ச நாளில் ரமா அக்கா இறந்துபோனாள். “ஒரு வகைல நல்லதுன்னு நெனச்சுக்க இவனே... அவளுக்கு ஒரு விடுதல. வாழ்ந்து கெட்ட வீட்ல இருக்குற பொம்பளைங்க ரொம்பப் பாவம்டா இவனே... அதுவும் காசு பணம்னு பொழங்கிட்டு, பட்டுன்னு கீழ போனத ஏத்துக்கவும் முடியாம யார்கிட்டயும் சொல்லவும் முடியாம வைராக்கியமா இருப்பாளுகடா இவனே...” என கையில் உமையவனை வைத்துக்கொண்டு அவர் சொன்னது இன்றுபோல் உள்ளது.

இதோ கண் விழிக்கிறார் சேது அண்ணன். சட்டென அருகில் போய் அவரைத் தாங்கி அவர் எழுந்து அமர உதவினேன்.

“இன்னுமாடா இந்த வாட்ச கட்டிட்டு இருக்க” என சன்னமாகக் கேட்டுச் சிரித்தார்.

கீழே உமையவன் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு, என்னைப் பார்த்தார். என்னால் அவர் கண்களைப் பார்க்க முடியவில்லை.

உமையவனைத் தட்டி எழுப்ப, எழுந்தவன் அப்பா கட்டிலில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் நிம்மதியாக உணர்ந்தவன்போல் அப்படியே சுவர் ஓரமாகச் சாய்ந்துகொண்டான்.

“வீட்டுக்குப் போலாமா” என்றார்.

 “போலாம்ணே... டாக்டர் வந்துரட்டும்.”

“ம்ம். இவன் படிச்சுக் கரை ஏறிட்டான்னா போதும்டா இவனே, எங்க அதப் பார்க்காம செத்துருவேணோன்னு பயந்துட்டேன்.”

கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வெளியே வந்து ஆட்டோவில் ஏற்றி, உமையவனை அருகில் அமரவைத்து விட்டு, சேது அண்ணன் பையில் ரூபாய் நோட்டுகளைத் திணித்தேன்.

“அட வேணாம்டா.”

“இருக்கட்டும்ணே... போங்க, பின்னாடி வண்டில வர்றேன்.”

என்ன நினைத்தானோ, என்னைச் சட்டெனக் கட்டிக்கொண்ட உமையவன், “தேங்க்ஸ்ண்ணே” என்றான் முகம் மலர்ந்து.

எப்படிச் சொல்வேன் இவனிடம், இன்னும் ஒரு வாரம்கூடத் தாங்காது என டாக்டர் சொன்னதை.

அவனை இறுக அணைத்து அவன் நெற்றியில் அழுத்தமாய் நான் முத்தம் வைத்ததை அர்த்தமாய்ப் பார்த்தார் சேது அண்ணன்.

மெதுவாக நகர்ந்த ஆட்டோவை நிறுத்தியவர் இறங்கி, அங்கு ஒட்டப் பட்டிருந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டு, என்னை நோக்கிக் கையைக் காட்டினார். சிரித்துவிட்டு மீண்டும் ஆட்டோவில் அமர்ந்தார். ஆட்டோ குலுங்கிக்கொண்டு கிளம்பியது.

அவர் சுட்டிய சுவரொட்டியில் ஏதோ அரசுவிழா சம்பந்தப்பட்ட அறிவிப்பு கஜகஜவென பொடி எழுத்துகளால் நிறைந்திருந்தன. ஒன்றும் புரியாமல் வண்டியைக் கிளப்பினேன். சட்டெனப் பொறிதட்டி வண்டியைத் திருப்பிக் கொண்டுபோய் சுவரொட்டியின் கடைசியில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தேன். புதிய மாவட்ட ஆட்சியரின் பெயர், ஹனுமந்த் ராவ்.

உமையவன் ஆட்டோவிலிருந்து எட்டிப்பார்த்து, கையாட்டினான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism