Published:Updated:

மரியா - சிறுகதை

மரியா - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மரியா - சிறுகதை

சிவபாலன்

மரியா - சிறுகதை

சிவபாலன்

Published:Updated:
மரியா - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மரியா - சிறுகதை

“மரியாவா அது?”

நீண்டுகொண்டேயிருக்கும் வரிசையில் நான் முன்பகுதியில் நின்றிருந்தேன். அதே வரிசையில் அப்போதுதான் வந்து, வரிசையின் கடைசியில் தன்னை இணைத்துக்கொண்ட அந்தப் பெண், தலையைச் சுற்றி வெண்ணிறத்துணியில் முக்காடிட்டிருந்தாள். பார்ப்பதற்கு மரியாபோலவே இருந்தாள். என்னால் நம்ப முடியவில்லை. `மரியா எப்படி இங்கு வந்திருப்பாள்... இல்லை, இல்லை மரியாவாக இருக்காது.’

``எங்க போகணும்?” தானியங்கியின் முன் நின்றிருந்த சீருடை அணிந்த அந்த டோக்கன் கொடுக்கும் பெண் ஊழியர், என்னைத்தான் கேட்கிறாள் என அறியாமல், நான் மரியாவைப்போல் இருந்த பெண்ணை இன்னும் ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தேன். மரியாவின் முக ஜாடை அப்படியே இருந்தது.

``சார், சீக்கிரம் சொல்லுங்க, நிறையபேர் உங்க பின்னாடி நிக்கிறாங்க பாருங்க” கொஞ்சம் அதட்டல் தொனியில் இருந்த அந்தப் பெண்ணின் குரல் எனது கவனத்தைக் கலைத்தது.

``நந்தனம்.”

சில்லறையை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, வட்டவடிவில் இருந்த அந்த ரயில் டோக்கனை வாங்கி எனது கைகளுக்குள் இறுக்கிக்கொண்டு, திரும்பவும் முக்காடிட்ட அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இப்போது அவளும் என்னைப் பார்த்தாள். நான் வேகவேகமாக அவளிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டு முன்நோக்கி நகர்ந்தேன். படபடப்பாக இருந்தது.

மரியா - சிறுகதை

சுத்தமாகத் துடைத்துவைக்கப்பட்டிருந்த அந்த வெள்ளை நிற மார்பிள்களால் வேயப்பட்ட தரையைப் பார்த்துக்கொண்டே, அந்த ரயில்நிலையத்தில் கொஞ்சம் ஓரமாய் மறைந்துகொண்டு அந்த வரிசையைப் பார்த்தேன். அவள் அந்த வரிசையிலிருந்து விலகி, என்னை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அச்சு அசல் அவள் மரியாவைப்போலவே இருந்தாள். மரியாவேதான். சந்தேகமில்லை. என்னைக் கடந்து செல்பவர்கள், நான் மறைந்துகொண்டு எட்டிப்பார்ப்பதை விநோதமாகப் பார்த்தபடியே சென்றார்கள்.

`AGDMS-க்குச் செல்லும் அடுத்த ரயில் இன்னும் இரண்டு நிமிடத்தில் பிளாட்பாரம் ஒன்றுக்கு வந்து சேரும்’ பதிவுசெய்யப்பட்ட நேர்த்தியான ஒரு பெண்ணின் குரல், அந்த மெட்ரோ ரயில்நிலையம் முழுக்க எதிரொலித்தது.

நான் வேகவேகமாக அங்கிருந்து நகர்ந்து எனது கைப்பையைப் பரிசோதனைக்கு வைத்துவிட்டு, அதிலிருந்து சற்று ஓரமாக இருந்த சோதனைவாயிலில் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு, காவலாளி முன்னால் நின்றேன். கொசுமட்டை போன்ற ஒன்றை வைத்து அந்தக் காவலாளி என்னைப் பேருக்குச் சோதித்துவிட்டு அனுப்பினார். சீக்கிரம் நான் அங்கிருந்து அகன்றாக வேண்டும், மரியாவிடமிருந்து தப்பிக்க வேண்டும். இரண்டு நிமிடத்தில் வரும் அந்த ரயிலைப் பிடித்துவிட்டால் மரியாவிடமிருந்து தப்பிவிடலாம்.

``இது யாரு பேக்?” ஒரு பெண் ஊழியர் சத்தமாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். அது என்னுடைய கைப்பைதான். அதை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு, எனது வட்டவடிவ டோக்கனை உள்நுழையும் வாயிலில் இருந்த சென்சாரில் காட்டிவிட்டு வேகவேகமாக நடைமேடை நோக்கி நடந்தேன். எனக்கு முன்னாலும் பின்னாலும் நிறையபேர் என்னைப்போலவே யாருக்கோ பயந்து வேகவேகமாக நடப்பதுபோலிருந்தது.

நடைமேடையை நான் அடைந்தபோது ரயில் வந்திருந்தது. உள்ளே நுழைந்து ஓர் இருக்கையைப் பிடித்து அமர்ந்தபோதுதான் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. மரியாவிடமிருந்து தப்பித்துவி ட்டேன். மரியாவை நான் பார்க்கக் கூடாது, மரியா என்னைப் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே ரயில் பெட்டிகளைப்போல் தொடர்ச்சியாக எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ரயிலின் கண்ணாடிக் கதவுகள் லாகவமாக, தன்னைத்தானே பூட்டிக்கொண்ட வுடன், அந்தப் புத்தம்புதிய மெட்ரோ நிலையத்திலிருந்து ரயில் வழுக்கிக்கொண்டு கிளம்பியது. மரியா கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் நிறையத் தொடங்கினாள்.

கர்நாடகாவில் உள்ள ஹூப்ளியிலிருந்து அப்பாவுக்குச் சென்னைக்கு மாற்றல் கிடைத்ததால், 90-களின் இறுதியில் நாங்கள் முதன்முறை சென்னை வந்திருந்தோம். பெசன்ட் நகர் மாதா கோயிலைக் கடந்து, மேற்கே செல்லும் விசாலமான ஒரு தெருவில் இருந்தது எங்களது குடியிருப்பு. மூன்றாவது வரை ஹூப்ளியில் மத்திய பாடத்திட்டத்தில் படித்ததால், பெசன்ட் நகரில் அப்போது இருந்த ஒரே சி.பி.எஸ்.சி பள்ளியான செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் என்னை நான்காவது வகுப்பில் அப்பா சேர்த்துவிட்டிருந்தார். மரியாவின் அண்ணன் ஸ்டீபன்தான் முதலில் எனக்கு அறிமுகம்.

ஸ்டீபன் எனக்கு அப்படியே நேரெதிராக நல்ல நெடுநெடுவென வளர்ந்தவன். எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவன். அந்தப் பள்ளியில் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அந்த ஊரிலும். ஊரும் பள்ளியும் அப்போது எனக்குப் புதியது என்பதால், ஸ்டீபன் எனக்கு மிக உதவியாக இருந்தான். யாரிடமும் பேசாமால் விலகி விலகி ஓடிக்கொண்டிருந்த என்னை, என் தயக்கங்களைக் கடந்து அந்தப் பள்ளியில் உள்ள எல்லோரோடும், அந்த ஊரில் உள்ள எல்லோரோடும் என்னைக் கொண்டுசேர்த்தான். ஹூப்ளியில் நான் எப்போதும் ஒரு வீட்டுப்பூனை, நிறைய நண்பர்கள் கிடையாது. பள்ளிக்குச் செல்லும் நேரத்தைத் தவிர, மீதி நேரம் முழுக்க வீட்டில்தான் இருப்பேன். ஆனால், சென்னைக்கு வந்த பிறகு நான் அப்படி இல்லை என்பதை, அம்மா, அப்பாவிடம் பலமுறை சொன்னாள். குறையாகச் சொன்னாள் எனச் சொல்ல முடியாது, அதில் அவளுக்கு சந்தோஷமும் இருக்கவே செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரியா - சிறுகதை

கடற்கரையையொட்டிய பகுதிகளில் கிரிக்கெட் விளையாடுவது, சிப்பிகளைப் பொறுக்குவது, மாதா கோயிலின் வராண்டாவில் மெழுகு சேமிப்பது என எப்போதும் ஸ்டீபன் என்னைத் தன்னருகே வைத்துக்கொண்டான். ஸ்டீபனின் இரண்டாவது தங்கை மரியா. பின்னாளில் எங்களுடன் வந்து ஒட்டிக்கொண்டாள். ஆரம்பக்கட்டங்களில் நான் அவளை சரியாகக் கவனித்ததுகூடக் கிடையாது. எப்போதும் ஸ்டீபனுடன் சேர்ந்து என்னைக் கூப்பிட எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள்.

``ஏன் உன் தங்கச்சி நம்ம கூடவே சுத்துது?” என்றுகூட ஒருமுறை ஸ்டீபனிடம் கேட்டேன். அவனுக்கு அது அசிங்கமாய்ப்போயிருக்க வேண்டும். அடுத்த நாள் அவளைக் கூட்டிவரவில்லை. அதற்கு அடுத்த நாள் அவனே வரவில்லை. நான் முதன்முறையாக அவனது வீட்டுக்குப் போனபோது மரியாதான் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே வீட்டினுள் சென்றாள். பிறகு, ஸ்டீபன் வந்தான்.

``என்னடா?”

``ஏன் விளையாட வரல?”

``நாளைக்கு வர்றேன், மரியாவுக்கு ஏதோ கணக்கு சொல்லித்தரணுமாம். அதனாலதான் வரல” என்றான். அவன் பேச்சிலும் முகத்திலும் மறைத்துக்கொண்டிருக்கும் கோபம் அவ்வளவு வெளிப்படையாகத் தெரிந்தது

``சரி அவளையும் கூட்டிட்டு வா” என்றேன். மலர்ந்த முகத்துடன் மரியா வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டாள்.

அதன்பிறகு மரியா எங்களை விட்டுப் பிரிவதேயில்லை. எங்களுடைய எல்லா விளையாட்டுகளிலும் அவள் எங்களுடன் இருந்தாள். எங்களைவிட அதிவேகமாய் ஓடுவாள், அற்புதமாய் கிரிக்கெட் விளையாடுவாள், ஓடிப்போய் கேட்ச் பிடிப்பாள். எனக்கு அவளைக் பார்க்க ஆச்சர்யமாய் இருக்கும்.

ஒருமுறை ஸ்டீபனின் நண்பன் ஒருவன், பெயர் வின்சென்ட் என நினைவு. ஏதோ ஒரு சண்டையில் கடினமான ரப்பர்பாலை வைத்து எனது முகத்தில் எறிந்தான். எதிர்பார்க்காத நேரத்தில் சடாரென என்மீது எறியப்பட்ட பந்து, எனது மூக்கை உடைத்தது. ரத்தம் வழிந்து தரையெங்கும் கொட்டியது. பெருகிவரும் ரத்தத்தைப் பார்த்து நான் பயந்துபோய் தரையில் உட்கார்ந்துகொண்டேன். ரத்தத்தைவிடக் கண்ணீர் அதிகமாக வழிய, தேம்பித் தேம்பி அழுதேன். எங்கோ மூலையிலிருந்து ஓடிவந்த மரியா, வந்த வேகத்தில் தனது கையைக் குவித்து பலமாக வின்சென்ட்டின் முகத்தில் குத்தினாள். அவனது மூக்கும் உடைந்துபோய் ரத்தம் கொட்டியது. ஸ்டீபன் என்ன செய்வது எனப் புரியாமல், எங்கள் மூவரையும் பார்த்துத் திகைத்தபடியே நின்றிருந்தான்.

அந்தச் சம்பவம், குடும்பத்தினருக்கிடையே ஒரு பெரிய பிரச்னையாக வெடித்தது. வின்சென்ட்டின் அப்பா, காவல்துறையில் இருந்தார். அவர் ஸ்டீபனின் வீட்டுக்கே போய் அவனின் அப்பா அம்மாவின் கண்முன்பே மரியாவை மிரட்டிச் சென்றதாய் ஸ்டீபன் பிறகு சொன்னான். அதன்பிறகு மரியா எங்களுடன் விளையாட வருவதில்லை. மரியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என நான் பலமுறை அவளின் வீட்டுக்குச் சென்றேன். மரியா வெளியே வரவேயில்லை. நான் வந்திருப்பது தெரிந்தவுடன் ஸ்டீபன் வாசலிலேயே வந்து என்னை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவான்.

ஒரு ஈஸ்டர் திருநாள் அன்று, இரவு தேவாலயத்துக்கு வருமாறு ஸ்டீபன் அழைத்திருந்தான். கடற்கரையையொட்டி, கூட்டம் நிரம்பி வழியும், தேவாலயத்தின் மாலை வேளை அவ்வளவு களிப்பூட்டுவதாக இருக்கும். ஏராளமான ரோட்டோரக் கடைகள் பரப்பிவைக்கப்பட்டிருக்கும். சாலை முழுவதும் மக்கள் திரள் திரளாக வந்துகொண்டிருப்பார்கள். அவை அத்தனையும்விட மரியா வருவாள் என்பது, அன்றைய நாளின் உச்சகட்ட சந்தோஷமாக இருந்தது. மாலையில் தேவாலயத்தின் உள்ளே நீண்ட வெள்ளை அங்கி அணிந்திருந்த பாதிரியார், ஏதோ பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். நான் ஸ்டீபன் அருகில் முன், தரையில் அமர்ந்திருந்தேன். நிறையபேர் அங்கு இருந்த சுவர்களில் எல்லாம் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

சபையில் இருந்த மக்கள், கண்ணீர் ததும்ப பாதிரியாருடன் சேர்ந்து ஜெபம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனது எண்ணம் முழுக்க மரியா எப்போது வருவாள் என்பதிலேயே இருந்தது. ஸ்டீபனிடம் எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை. அவனது முகத்தைப் பார்த்தேன். அவனும் அழுவதுபோன்று முகத்தை வைத்திருந்தான். உற்சாகம்கொண்ட தேவாலயத்தின் வெளிப்புறமும் துக்கம் கவிழும் உட்புறமும் என, எனக்கு அந்தச் சூழலே குழப்பமாய் இருந்தது. ஸ்டீபனிடம் `வெளியே இருக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு, இறுக்கமான கூட்டத்திலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு வெளியே வந்தேன்.

இருள் கவியத் தொடங்கியிருந்தது. கடற்கரைக் காற்று தேவாலயத்தின் சுவர்களில் மோதி விநோதமான ஓர் ஒலியை எழுப்பியது. நேரம் ஆக ஆக, கூட்டத்தின் அளவும் கூடிக்கொண்டே வந்தது. நான் மரியாவைக் காணாமல் சோர்ந்துபோய் தேவாலயத்தின் பின்புறம் நடந்து சென்றேன். வெளிச்சமற்ற அந்த இரவின் வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும் தனியே மின்னிக்கொண்டிருந்ததைப்போல, எதுவுமற்ற எனது மனதில் மரியா மட்டும் நட்சத்திரமாய் மின்னிக்கொண்டிருந்தாள்.
எங்கிருந்தோ திடீரென ``பிரபா...” எனச் கூப்பிடும் குரலைக் கேட்டுத் திரும்பினேன். பிரபாகர் என்கிற எனது பெயரை யாரும் இதுவரை இப்படிச் சுருக்கி அழைத்ததில்லை மரியாவைத் தவிர. இருளை விலக்கி, கண்களைச் சுருக்கிப் பார்த்தபோது தூரத்தில் தேவாலயத்தின் மதில்களுக்கு அப்பால் மரியா நின்றுகொண்டிருந்தாள். வாரப்படாமல்விட்ட அவளது கேசம் காற்றோடு ஆடிக்கொண்டிருக்க, அதன்மீது வைக்கப்பட்ட ஒற்றை வெண்ணிற ரோஜாப்பூ அவள் அணிந்திருந்த அடர் வெண்ணிற உடைக்கு அவ்வளவு பாந்தமாய் இருந்தது. ஒரே ஒரு வெண்ணிற முத்து பதிக்கப்பட்ட காது வளையம், இறுக்கிக்கோக்கப்பட்ட முத்துமணிகள் நிறைந்த பாசி என, மரியா ஒரு தேவதையைப்போல் இருந்தாள். மரியா இவ்வளவு அழகானவள் என்பதை, நான் அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்தேன்.

அவளை அழகானவள் என்ற கோணத்தில் நான் அதுவரை பார்த்ததே இல்லை என்பதை, அப்போதுதான் நான் உணர்ந்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடியே அருகில் இருந்த சுவரில் மெழுகுவத்தியை ஏற்றினாள். எனக்குள் கண்ணீர் சுரக்கத் தொடங்கியது. தேவாலயத்தின் உள்ளே இயேசு உயிர்த்தெழும் தினத்தை நினைவுகூர்ந்தபடி மக்கள் அழுவதைப்போல, நான் அவளைப் பார்த்து அழுதேன். எனக்குள்ளும் ஏதோ ஒன்று உயிர்த்தெழுந்துகொண்டிருந்தது. அவளிடம் நான் சொல்ல வந்தது எல்லாம் மறந்துபோய், ஏதோ ஒரு துக்கமும் இன்பமும் கலந்த ஓர் உணர்ச்சி என்னை முழுமையாக உள்வாங்கியிருந்தது. நான் அழுவதைப் பார்த்த மரியா, எனது கையை இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டாள்.
``எதற்கும் நீ காரணமல்ல” என்றாள், கருணை நிரம்பிய குரலில். அவள் நகங்கள் எனது முன்னங்கையில் பதிந்தன.

நான் அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் தனது பையில் இருந்து ஒரு போத்தலை எடுத்து என் முன் நீட்டினாள்.

``என்ன?” என்றேன்

``திராட்சை ரசம்” என்றாள்

நான் வேறு எதுவும் கேட்காமல் அதை வாங்கிப் பருகினேன்.

``இயேசுவின் ரத்தம்” எனச் சொல்லிச் சிரித்தாள். அவள் நிச்சயம் அப்போது ஒரு தேவதையைப்போலவே இருந்தாள். சற்று நேரத்தில் தேவதையைப்போல் மறைந்தும்விட்டாள். நான் எனது முன்னங்கையைப் பார்த்தேன். அவள் நகம் பதிந்த எனது முன்னங்கையில் ரத்தம் திட்டுத் திட்டாய் உறைந்து இருந்தது. இயேசுவின் ரத்தம்.

`அடுத்த நிறுத்தம் நந்தனம். வலதுபுறம் உள்ள கதவுகள் திறக்கும்’ என்ற இயந்திரக் குரல் கேட்டு, நினைவுகள் கலந்துபோனவனாய் எழுந்து, ரயிலின் கதவுகள் அருகே சென்று கம்பியைப் பிடித்து நின்றுகொண்டேன். அப்போதுதான் கவனித்தேன், எனக்கு அடுத்த பெட்டியில் என்னைப்போலவே கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்கும் அவள், ஆம்... மரியா. திரும்பி அவளும் என்னைப் பார்த்தாள். தானியங்கிக் கதவுகள் திறந்தன. நான் இறங்கி வேகவேகமாக நடந்தேன். அவளும் எனக்குப் பின்னே என்னைத் தொடர்ந்து நடந்துவருவதுபோல் இருந்தது.

`அவளுக்கு என்னை அடையாளம் தெரியுமா? தற்செயலாக என்னைத் தொடர்கிறாளா அல்லது நான் யார் எனத் தெரிந்து என்னைத் தொடர்கிறாளா?’ - நான் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அவள் என்னை முட்டும் அளவுக்கு நெருங்கிவிட்டாள். `இனி எதுவும் செய்ய முடியாது. அவள் என்ன செய்கிறாள் எனப் பார்ப்போம்’ என முடிவெடுத்துக்கொண்டு எனது வேகத்தைக் குறைத்தேன். அவள் என்னைத் தாண்டிச் சென்றாள். அவளது வெண்ணிறத் துப்பட்டா, எனது கையை வருடிச் சென்றது. முன்னிருந்த மின்தூக்கியின் அருகில் சென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் என்னை அழைப்பதுபோல் இருந்தது. நானும் அவளுடன் சேர்ந்து மின்தூக்கியில் நுழைந்துகொண்டு அவளிடமிருந்து விலகி, கொஞ்சம் ஓரமாக நின்றுகொண்டேன்.

நெஞ்சு உண்மையில் படபடவென அடித்தது. அவள் அறியாமல், அவளை நேரடியாகப் பார்க்காமல் அவளின் பிம்பம் தெரிந்த கண்ணாடியில் அவளது முகத்தைப் பார்த்தேன். மரியாவேதான். கற்றையாய்க் கேசம் வந்து விழும் முன்நெற்றி, காதருகே அடர்த்தியாய்ப் படிந்திருந்த ரோமங்கள், வாரி இழுக்கும் அந்தக் கண்கள், கூர்மையாய் வந்து நிற்கும் நாசி, மெல்லிய மேலுதடு, சற்றே தடித்த கீழுதடு அத்தனையும் மரியாதான். அவள் நான் பார்ப்பதைப் பார்த்துவிட்டாள். கண்ணாடியில் இருந்த அவளது பிம்பத்தின் வழியாக அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். வழியும் குற்றவுணர்ச்சியோடு நான் தலையைக் குனிந்துகொண்டேன். அவள் எதுவும் என்னிடம் பேசவில்லை. பேசவும் முற்படவில்லை. குறைந்தபட்சம் `பிரபா’ என்றாவது அழைத்திருக்கலாம். ``பிரபாதானே நீ?” என, குழையும் குரலில் கேட்டிருக்கலாம். அவள் எதுவும் சொல்லவில்லை. மின்தூக்கியிலிருந்து இறங்கி என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே முன் சென்றாள். அவளின் தலையைச் சுற்றியிருந்த முக்காட்டிலிருந்து மிச்சமாய் வந்து விழுந்த அவளின் துப்பட்டா, காற்றில் ஆடியபடியே அவளுடன் அசைந்து சென்றது. நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் ஒருமுறையாவது என்னைத் திரும்பிப் பார்ப்பாள் என நம்பிக்கொண்டே அவளின் பின்னே வேகவேகமாக நடந்தேன். அந்த மெட்ரோ ரயில்நிலையத்தின் பிரதான வாயிலிலிருந்து இறங்கி, சாலையில் நடந்தாள். நான் நினைத்ததுபோலவே கடைசியாக என்னை ஒருமுறை பார்த்துச் சிரித்துச் சென்றாள்.

மணியைப் பார்த்தேன், பத்தைத் தாண்டியிருந்தது. வேலைக்குச் செல்லத் தயக்கமாக இருந்தது. வருடக் கடைசி என்பதால், நான் வேலைபார்க்கும் வங்கியில் நிறைய அலுவல்கள் இருந்தன. வேறு வழியில்லை, போய்த்தான் ஆகவேண்டும். ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வங்கியில் சென்று இறங்கினேன். சற்றுத் தாமதமாகியிருந்தது. உள்ளே நுழையும்போதே கணக்கர் வந்து ``மேனேஜர் உங்களைக் கேட்டார்” என்றார். வேகவேகமாக அவரது அறைக்குச் சென்றேன்
``குட் மார்னிங் சார்.”

``என்ன பிரபாகர், லேட்டா?” என்றார், கணினியிலிருந்து பார்வையை அகற்றாமல்.

நான் எதுவும் பேசாமல் அமைதியாக சுவரை வெறித்துப் பார்த்தேன். மரியாவின் உருவம் மங்கலாய்த் தெரிவதுபோல் இருந்தது.

``பிரபாகர்.”

``சார்.”

``என்ன யோசனை, அந்த சாப்ட்வேர் கம்பெனி ஆடிட்டிங் ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க, நாளைக்குள்ள அனுப்பணும்.”

நான் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன். என்னால் எந்த வேலையும் இன்று செய்ய முடியாது. மனம் முழுக்க மரியாதான் நிறைந்திருந்தாள். வேகவேகமாகச் சென்று எனது அறையில் அமர்ந்துகொண்டு எனது கணினியை ஆன் செய்தேன். அதன் திரையில் மரியாவின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் விரியத் தொடங்கியது.

`மரியாவை எப்போது கடைசியாகப் பார்த்தோம்?’ நனவுகளில் ததும்பிக்கொண்டிருக்கும் மரியா, திரும்பவும் எனது நினைவுகளில் நிறையத் தொடங்கினாள்.

``கடலுக்குள் போகலாமா” ஸ்டீபன் அத்தனை உற்சாகமாய் அன்று வந்து கேட்டான்.

``கடலுக்குள்ளா... எப்படி?”

``துரையண்ணா, மீன் பிடிக்கிற போட்ல கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கார்.”

துரையண்ணா என்பவர் எங்களது வகுப்பில் உள்ள எட்வினின் மாமா. ஆழ்கடலுக்குள் மீன் பிடித்து வரும்போதெல்லாம் எங்களுக்கு ஏராளமான வண்ண வண்ணக் கிளிஞ்சல்களையும் சங்குகளையும் எடுத்து வந்து தருவார். கடற்கரையில் சில மாலைப்பொழுதுகளில் ஆழ்கடலைப் பற்றியும், மீன் பிடிக்கும் சாகசங்கள் பற்றியும் நிறைய கதைகளைச் சொல்வார். நீளும் அவரது சாகசக் கதைகளில் கிறங்கிப்போய் இருட்டியதற்குப் பிறகும்கூட நாங்கள் அந்தக் கடற்கரையின் மணலில் அமர்ந்திருப்போம்.

``இல்ல, வேணாம். பயமாயிருக்கு” என்றேன். நிஜமாகவே கடலுக்குள் செல்ல எனக்கு பயம்.

``அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா. ரொம்ப உள்ளேயெல்லாம் இல்ல. பக்கத்துலயே போயிட்டு அர மணி நேரத்துல வந்துடலாம்.”

``இல்லடா, அப்பா விட மாட்டார்.”

``சொல்லாத, அர மணி நேரத்துல என்ன தெரியப்போகுது?”

ஸ்டீபன் ஒரு முடிவோடுதான் இருந்தான். எனக்குத்தான் கொஞ்சம் பயமாக இருந்தது. அரைமனதாக ``சரி’’ என்றேன்.

ஒரு சனிக்கிழமை மதிய வேளையில் எல்லாம் தயாராக இருந்தன. துரையண்ணா உற்சாகமாகக் கிளம்பி, எங்களுக்கு முன்பே ரெடியாக இருந்தார். படகு, சுத்தமாகத் துடைக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி மீன் வாடை அதிலிருந்து வந்தது. நான், வின்சென்ட், எட்வின் மூவரும் அந்தப் படகில் ஏறி அதன் மரபெஞ்சுகளில் உட்கார்ந்திரு ந்தோம். ஸ்டீபன் எங்களின் படகை நோக்கி தூரத்தில் வந்துகொண்டி ருந்தான்.

``எலேய், ஸ்டீபன் யாரடா கூட்டிட்டு வர்றான்?” என்றார் துரையண்ணா.

நான் அப்போதுதான் அவர்களைப் பார்த்தேன். ஸ்டீபன்கூட வருவது... ஆம். மரியா.

எனக்குள் ஏதோ செய்தது. ஆயிரம் தேவாலய மணிகள் ஒருசேர ஒலிப்பதுபோலிருந்தது. படகிலிருந்து கீழே இறங்கி அவர்களை நோக்கி வேகமாக ஓடினேன். அவர்களை இடித்துவிடுவதுபோல் அவர்களின் அருகே சென்று நின்றேன். மூச்சு வாங்கியது. மரியாவின் கேசம், இப்போதும் காற்றில் அலைந்துகொண்டிருந்தது. என்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

``என்ன பிரபாகர், பயம் போச்சா?” என்றான் ஸ்டீபன் கேலியாக.

`எனக்கா... பயமா..?’ என்பதுபோல அவனைப் பார்த்தேன். ``மரியாவே `பயப்படாம வர்றேன்’னு சொல்லிட்டா” என்றான் பெருமையாக.

``அவ அளவுக்கு எனக்கு தைரியம் இல்லைடா” என்றேன், மரியாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

``ஆமா, பிரபாவுக்கு தைரியம் பத்தாது” என்றாள். அவள் வேறு எதையோ குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்பது புரியாமல், ஸ்டீபன் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தான்.

``எலே... யாருக்காவது நீச்சல் தெரியுமா?” என்றார் துரையண்ணா சத்தமாக.

என்னைத் தவிர எல்லோரும் ``எனக்குத் தெரியும்’’ என, கை தூக்கினார்கள்.

`பிரபாவுக்கு தைரியம் பத்தாது’ என மரியா சொன்னது நினைவுக்குவந்தது. ``எனக்கும் தெரியும்” என நானும் கை தூக்கினேன். அது பொய் என மரியா யூகித்திருப்பாள்போல. ஏனென்றால், அதற்கும் சிரித்தாள்.

அந்தச் சிறிய படகு, அலையில் தவழ்ந்துகொண்டே அந்தப் பெருங்கடலுக்குள் நுழைந்தது. மரியா எனக்கு எதிரே இருந்த மரபெஞ்சில் அமர்ந்துகொண்டு கடலையே பார்த்துக்கொண்டி ருந்தாள். எப்போதும்போல வெண்ணிற உடையில் இருந்தாள். அவளுடைய கண்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டேன். கடலைவிட ஆழமான கண்கள்.

படகின் தளும்பலும், உப்புக்காற்றின் வீச்சும், படகிலிருந்து எழும்பிய மீன் வாடையும் சேர்ந்து எனக்குள் எதுவோ செய்தன. ஆனால், அதைக் கஷ்டப்பட்டு மறைத்துக்கொண்டேன். மரியாவுக்கு முன்னால் வாந்தியெடுத்தால், அவள் சொன்னது உண்மையாகி விடும். நான் ஒரு சோப்ளாங்கி என முடிவுசெய்துவிடுவாள். துரையண்ணா, ஏதேதோ கதைகளைப் பேசிக்கொண்டே அலைகள் அடங்கிய கடல்பரப்புக்குப் படகைக் கொண்டுவந்து சேர்த்தி ருந்தார். கடல், அவ்வளவு அமைதியாக இருந்தது. அதைப் பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது.

``எவனாவது நீச்சல் அடிக்கணும்னா இங்க குதிங்க” என்றார் துரையண்ணா.

`கடலில் குதிப்பதா?’ அந்த நினைப்பே படபடப்பாக இருந்தது. ஆனால், அதற்குள் எட்வினும் ஸ்டீபனும் குதித்துவிட்டார்கள். ஒரு கிணற்றில் நீந்துவதைப்போல அவர்கள் கடலில் நீந்தினார்கள். சற்று நேரத்தில் துரை யண்ணாவும் குதித்து விட்டார். மிக லாகவமாக நீந்திக்கொண்டே அந்தப் படகிலிருந்து சற்று தூரம் சென்றுவிட்டார். இப்போது நானும் மரியாவும் மட்டும் படகில் அத்தனை தனியாக. சுற்றிலும் நீல நிறப் பாய்போல விரிந்த கடல், அதன் மத்தியில் நானும் மரியாவும்.

மரியா - சிறுகதை

``நீ குதிக்கலயா?” அவள் குரலில் கிண்டல் தொனி இருந்தது.

``இல்ல குளிரும்” என்றேன்.

``உனக்கு நீச்சல் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். ஏன் சும்மா பொய் சொல்ற?”

``இல்லயே எனக்குத் தெரியும். நாங்க ஹூப்ளியில இருக்கும்போது நிறைய முறை கோவா போயிருக்கோம். அங்க கடல்லதான் குளியலே” என்றேன் பெருமையாக.

அவள் அதை நம்பவில்லை என்பது, அவளது முக பாவனையிலேயே தெரிந்தது.

``வேணும்னா குதிக்கட்டுமா, நீந்திக்காட்டவா!” என எழுந்தேன். படகு மெலிதாக ஆடியது. அவள் கொஞ்சம் தடுமாறி தனக்கு முன்னால் இருந்த பெஞ்சைப் பிடித்துக்கொண்டாள். நான் படகின் ஓரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.
``சரி நம்புறேன், நீ என்னையும் தள்ளிவிட்றாத, உட்காரு” என்றாள் கேலியாக.

``நீ நம்பலைன்னு உன் முகத்துலயே தெரியுது, குதிக்கிறேன் பாரு” எனச் சொல்லிவிட்டு படகின் ஓரத்துக்குச் சென்று குதிப்பதுபோல பாவனை செய்தேன். படகின் மறுபுறம் இருந்த கயிற்றைப் பற்றி எட்வினோ யாரோ ஏறுவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். படகு அந்தப் புறமாய்ச் சாய, நான் நின்றுகொண்டிருந்ததால் என்னால் உடனடியாக படகின் அந்தச் சாய்வைச் சமாளிக்க முடியாமல் நிலைதடுமாறி, படகின் ஓரத்தில் சாய்ந்தேன். இப்போது படகு பலமாக நான் இருக்கும் புறம் சாய, நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்தேன்.

கடலின் உப்புத்தண்ணி வாயிலும் மூக்கிலும் நிறைய, யாரோ எனது கால்களை பலமாகப் பிடித்துக் கடலுக்குள் இழுப்பதுபோல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கடலின் ஆழத்தில் மூழ்கிக்கொண்டி ருந்தேன். எனது மூச்சு அடைத்தது. என் கைகளை மட்டும் மேலே நீட்டி, தண்ணீரை வேக வேகமாக விலக்க முயன்று, `தப தப’வென அடித்தேன். அதற்குள் எனது பார்வை மங்கத் தொடங்கியது. மங்கிய பார்வையில் நான் கடைசியாக மரியாவைப் பார்த்தேன். படகின் ஓரத்தில் நின்று கத்திக்கொண்டிருந்தவள், திடீரென அவளும் கடலுக்குள் குதித்தாள். சற்று நேரத்தில் எனது முடியைப் பற்றி யாரோ இழுப்பதுபோல் இருந்தது. எனது கையில் ஏதோ ஒன்று மாட்டியது. அதை நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். எனது நினைவுகள் மங்கத் தொடங்கின. யாரோ என்னை மேலே இழுத்துப் போட்டார்கள். வெண்ணிறத் துப்பட்டா ஒன்று எனது கையைச் சுற்றி மாட்டிக்கொண்டிருந்தது. எனக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. சற்று நேரத்தில் எனக்கு அருகே மரியாவும் கிடத்தப்பட்டது மட்டும் தெரிந்தது. அதன் பிறகு நான் முற்றிலுமாய் நினைவிழந்து போனேன்.

கண்விழித்தபோது மருத்துவ மனையில் இருந்தேன். என் அருகே உட்கார்ந்திருந்த அம்மா, நான் கண் விழித்ததைப் பார்த்ததும் வாரி அணைத்துக்கொண்டு கதறி அழுதாள். நடந்ததெல்லாம் என் நினைவுக்கு வர, சற்று நேரமானது. அவை அத்தனையும் நினைவுக்கு வரும்போது நான் கேட்ட முதல் கேள்வி ``மரியாவுக்கு என்னாச்சு?” அம்மா அதற்கு பதில் சொல்லவில்லை. இன்னும் அதிகமாக அழுதாள். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்லாமல் மதுரையில் இருந்த என் பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். மரியாவைப் பார்க்க வேண்டும் என எல்லோரிடமும் நான் கெஞ்சினேன். அதை யாருமே கேட்கவில்லை. படகின் ஓரத்தில் நின்று கத்திக்கொண்டிருந்த மரியாவின் முகம் திரும்பத் திரும்ப எனக்குள் விரிந்துகொண்டேயிருந்தது. தூக்கத்திலிருந்து நிறைய நாள்கள் எழுந்து, மரியாவை நோக்கி நடந்தேன். களங்கமற்ற அந்த முகத்தை நோக்கி இருள் முழுக்க நடந்தேன். அந்த முகம் எனக்குள் இருந்து மறைய நீண்டகாலமானது. அதன்பிறகு, நான் மரியாவைப் பார்க்கவே இல்லை.

``சார், மேனேஜர் கூப்பிடுறார்” என்ற குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீண்டு வந்தேன். அன்றைய நாளில் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மரியா ஒரு பெரும்பாரமாய் எனது மனது முழுவதும் நிறைந்து கொண்டாள். வழக்கத்தைவிடச் சற்று முன்பாகவே அன்று வங்கியிலிருந்து கிளம்பினேன். மரியா என்கூடவே வருவது போலிருந்தது. திரும்பவும் அவள் வர வேண்டும். இந்த முறை அவளிடம் கேட்க வேண்டும், பேச வேண்டும் ``மரியா என்னை மன்னித்துவிடு. நான் ஒரு கோழை.”

நந்தனம் மெட்ரோ ரயில்நிலை யத்தில் நுழையும்போது அதன் வாயிலில் மரியா நின்றிருந்தாள். எனக்கு அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது. அதே வெண்ணிற உடை, அதே வெண்ணிறத் துப்பட்டா. `இது என்ன தற்செயலா அல்லது அவள் என்னை வேண்டுமென்றே தொடர்ந்து வருகிறாளா?’ என்ற சந்தேகம் எழுந்தது. நான் அவள் அருகே போய் நின்றேன். அவள் எனக்கு எந்தக் கவனமும் கொடுக்காமல் என்னைத் தாண்டிச் சென்றாள். நான் அவளைத் தொடர்ந்து சென்றேன். நகரும் படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றாள். நானும் அதில் ஏறி ஒவ்வொரு படியாய் முன்னேறி அவளுக்கு அருகே இருந்த படியில் சென்று நின்றுகொண்டேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். கருணை நிரம்பிய அவளது முகத்தை அவ்வளவு அருகில் பார்த்தேன். தலை சுற்றியது. கால்கள் தடுமாறின. அப்படியே மயங்கிக் கீழே விழப்பார்த்தேன். அவள் ஓர் அடி கீழே வந்து எனது கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளது கூரிய நகங்கள் என் முன்னங்கையில் பதிந்தன.

``உன்மேல் எந்தத் தவறுமில்லை பிரபா” என் காதருகே வந்து சொல்லிவிட்டு, வேகவேகமாக நடந்தாள். நான் அவளை விடாமல் தொடர்ந்து மேலே ஏறி நடைமேடையில் அவளைத் தேடினேன். அவள் எங்கும் இல்லை. சற்றுமுன் சென்ற ரயிலில் ஏறிச் சென்றிருக்க வேண்டும்.

மனம் முழுவதும் குழப்பமாய் இருந்தது. `ஏன் மரியா வந்தாள்? எப்படி என்னைக் கண்டுகொண்டாள்? ஏன் என்னிடம் எதுவும் பேசாமல் சென்றாள்? என்னைப் பற்றி ஏதாவது விசாரித்திருக்கலாமே? தொடர்ந்து வந்தவள் ஏன் திடீரென அவ்வளவு வேகமாய் மறைந்துபோனாள், மறைந்துதான் போனாளா அல்லது எனக்குத் தெரியாமல் இன்னும் என்னைத் தொடர்ந்து வருகிறாளா?’ என, பதிலற்ற பல கேள்விகளைச் சுமந்துகொண்டு வீடு போய்ச் சேர்ந்தேன்.

மரியா - சிறுகதை

துக்கமும் குழப்பமும் ஏமாற்றமும் எனப் பல உணர்வுகள் நெஞ்சை அழுத்த, கைப்பையை ஓரமாய் வீசிவிட்டு, படுக்கையில் போய்ச் சாய்ந்தேன். குழந்தைகள் ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தன. மனைவி இன்னோர் அறையில் கணினியில் ஏதோ மூழ்கியிருந்தாள்.

``அம்மா... அப்பா வந்தாச்சு” என்ற குரல் கேட்டு, நான் வந்ததை உணர்ந்துகொண்டு அங்கு இருந்து எழுந்து என்னிடம் வந்தாள்.

``கீதா, இன்னைக்கு ஒண்ணு நடந்துச்சு. சொன்னா நீ நம்ப மாட்ட” என்றேன்.

அவள் அதைப் பொருட்படுத்தாமல், ``என்ன சீக்கிரமா வந்துட்டீங்க, `வருஷக் கடைசி, வேலை அதிகம்’னு சொன்னீங்க?” என்று சொல்லிக்கொண்டே எனது காலுறையைக் கழற்றினாள்.

``இன்னிக்கு நான் யார பார்த்தேன் தெரியுமா?” கண்கள் விரிய திரும்பவும் நான் அவளிடம் தொடர்ந்தேன்.

``குழந்தைங்களைக்கூட பார்க்காம, ஏன் வந்ததும் படுத்துட்டீங்க... அவ்வளவு டயர்டா இருக்கீங்களா?”

``கீதா, நான் சொல்ல வர்றதைக் கேளு” என்று பெரிதாய்க் கத்தினேன்.

அவள் அவ்வளவு அமைதியாக என்னைப் பார்த்தாள். எதுவுமே பேசவில்லை. எனது தலையைக் கோதிவிட்டு தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டாள். ``திரும்பவும் இன்னிக்கு மரியா வந்தாளா?” என்றாள் பொறுமையாக.
நான் அதிர்ச்சியாய் அவளது மடியிலிருந்து எழுந்து ``உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டேன்.

அவள் திரும்பவும் நிதானமாக என்னைத் தனது மடியில் படுக்க வைத்துக்கொண்டாள். “சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டுத் தூங்குங்க, எல்லாம் சரியாப் போயிடும்” என்றாள்.

எனக்குக் கண்ணீர் வழிந்தது. அவளின் மடியில் ஒரு குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழுதேன். ‘மரியா, மரியா’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே எனது முன்னங்கைகளைப் பார்த்தேன். மரியாவின் விரல் நகம் பதிந்த இடத்தில் ரத்தம் திட்டுத் திட்டாய் உறைந்திருந்தது. “இயேசுவின் ரத்தம்” எனச் சொல்லி,  பெருங்குரலெடுத்துச் சிரிக்கும் மரியாவின் சத்தம், வீட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து எனக்குள் கேட்டது.

- ஓவியங்கள்: ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism