Published:Updated:

`96'-ல விஜய் சேதுபதி- த்ரிஷா சந்திக்கிற நாள் திங்கள்கிழமை... அது ஏன் தெரியுமா?! ஹலோ ப்ளூ டிக் நண்பா தொடர் - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`96'-ல விஜய் சேதுபதி- த்ரிஷா சந்திக்கிற நாள் திங்கள்கிழமை... அது ஏன் தெரியுமா?! ஹலோ ப்ளூ டிக் நண்பா தொடர் - 1
`96'-ல விஜய் சேதுபதி- த்ரிஷா சந்திக்கிற நாள் திங்கள்கிழமை... அது ஏன் தெரியுமா?! ஹலோ ப்ளூ டிக் நண்பா தொடர் - 1

`96’ படத்தில் பள்ளி ரீயூனியனை ஞாயிற்றுக்கிழமையோ வேறு விடுமுறை நாளிலோ வைக்காமல் ஒரு திங்கட்கிழமையில் (மார்ச் 7, 2016) வைத்திருப்பார். படத்தின் இயக்குநர் பிரேம் குமாரிடம் பேசிக்கொண்டிருந்த போதுதான் தெரிந்தது அதற்கும் காரணம் உண்டு என!

ஜெயமோகன் முதல் ஜெனிஃபர் லாரன்ஸ் வரை சகலத்தையும் அணுஅணுவாய், மூலக்கூறு மூலக்கூறாய் ரசிக்கும் ஆசை. புத்தகம், சினிமா, அரசியல், சமூகம், விஞ்ஞானம், வரலாறு என‌ எல்லாவற்றையும் நுனியளவு சென்று தரிசிக்கும் தேடல். `பாற்கடலை நக்கிக் குடிக்க முனையும் பூனை’ எனக் கம்பன் சொன்னது போல், ஒரு கோப்பையில் பிரபஞ்சத்தை நிரப்பித் தரும் முயற்சி!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த `96’ படம், இன்னும் எவரும் கண்டறியாத‌ எத்தனையோ அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, பள்ளி ரீயூனியனை (வாட்ஸ்அப் குழும உரையாடலில் சிலர் கோரியபடி) ஞாயிற்றுக்கிழமையோ வேறு விடுமுறை நாள்களிலோ வைக்காமல் ஒரு திங்கட்கிழமையில் (மார்ச் 7, 2016) வைத்திருப்பர். படத்தின் இயக்குநர் பிரேம்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, அதற்கும் காரணம் உண்டு என!

அது அந்த ஆண்டின் சிவராத்திரி. ராம், ஜானுவின் உறங்கா இரவுக்கான‌ குறியீடாகிறது அது. வள்ளுவர் சொல்லிய‌ மணற்கேணிபோல் தோண்டத் தோண்டச் சுரக்கிறது `96’!

டிக் டாக் என்பது, நம்மூரில் ஒரு கொண்டாட்டம். என்னதான் கலாசாரச் சீரழிவு எனப் புகார் படித்துக்கொண்டிருந்தாலும், தமிழன் அதன் தீவிர ரசிகன்; கிட்டத்தட்ட அடிமை. காற்று, நீர், உணவு, சினிமா போல இதுவும் ஓர் அத்தியாவசிய சங்கதியாகிவருகிறது.

காரணம் எளிது. எவ்வளவோ பேரின் பல காலமாக அடக்கிவைக்கப்பட்ட ஆழ்மன அபிலாஷைகளுக்கு வடிகாலாக இருக்கிறது டிக் டாக். திரையில் ஆடும், பாடும், நடனமாடும் நாயகியாகக் கற்பனையில் தன்னை வரித்துக்கொண்டோருக்கு அதை நிஜத்தில் நடத்திப்பார்க்கும் கிளுகிளுப்பை டிக் டாக் அளிக்கிறது. ரௌடி பேபியின் `நெஞ்சு ஜிகுஜிகுஜா...'வுக்கு ஆகக் கடைசியாகவும் இருப்பதிலேயே சுமாராகவும் விம்மியது சாய்பல்லவி என்பதிலிருந்து மக்களின் கலாபூர்வத்தை எவ்வளவு வேகமாகவும் வீச்சுடனும் வெளிக்கொணர்கிறது அது என்பதை உணரலாம். அந்த வகையில் டிக் டாக் என்பது, நமது மாற்றுக் கலாசாரம். 

டிக் டாக் போன்ற செயலிகளால் வேலைபோயிருக்கும், விவாகரத்து நடந்திருக்கும். மறுபுறம் அவற்றின் மூலம் வாய்ப்புப் பெற்றோரும், மணம்புரிந்தோரும் இருப்பர். தொழில்நுட்பம் அப்படித்தான். காயமின்றி கத்தி வீசத் தெரிந்தால் கவலையில்லை.

`டிக் டாக் செயலி, சட்டம்-ஒழுங்கைச் சீரழிக்கும் ஆபாசத்துடன் இருப்பதால் அதைத் தடைசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டப்பேரவையில் சொல்லி இருக்கிறார். முதலில் அதைத் தமிழக அரசு தனியாகச் செய்ய முடியாது. இணையசேவை வழங்குநர்களைக் கட்டுப்படுத்த‌ மத்திய அரசின் அதிகார உதவி தேவை. அப்படியே செய்தாலும் இரு பிரதான‌ ஓட்டைகள் இருக்கின்றன. ஒன்று, டிக் டாக் என்பது ஓர் உதாரணம் மட்டுமே. அதுபோல் ஏராளம் உண்டு (உதா: டப்ஸ்மாஷ்). ஒவ்வொன்றாகக் கண்டறிந்து தடைசெய்ய வேண்டும். இதுவரை எத்தனை பாலியல் தளங்களை மத்திய அரசால் தடைசெய்ய முடிந்தது? தினமும் புதிதாய் முளைத்துக்கொண்டுதானே இருக்கின்றன! அடுத்தது தடைசெய்தாலும் புராக்ஸி முறையில் இவற்றின் சேவையைத் தொடர்ந்து கிடைக்கச் செய்ய முடியும். திரைத் துறைக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தும் தமிழ்ராக்கர்ஸைத் தடைசெய்ய முடியாமல்தானே இன்னும் நமக்கு விடிகிறது! ஆக, இது பூச்சாண்டி காட்டலாகத்தான் தோன்றுகிறது.

`தாழம்பூ’ என்றொரு கவிதைத் தொகுதி. தமிழினி வெளியீடு. எழுதியவர் பொன்முகலி.

காளஹஸ்தியில் ஓடும் ஸ்வர்ணமுகி ஆற்றுக்கு, `பொன்முகரி' என்றொரு பெயருண்டு. அதை `பொன்முகலி' என்றும் அழைப்பர். தங்க முகம்! கவிஞரின் பெயரில் நூலின் தலைப்பைவிட கூடுதல் கவித்துவம் வீசுகிறது. தமிழின் வழக்கமான கவிதைத் தொகுதிகள்போல் சோமாலியா குழந்தையாய்த் தோன்றாமல் 180 பக்கங்களில் போஷாக்காய் வந்திருக்கிறது. இதில் இரண்டு பிரதான‌ ஆச்சர்யங்கள். ஒன்று, இது எழுதியவரின் முதல் கவிதைத் தொகுதி. அடுத்தது, இதை எழுதியது ஒரு பெண்.

`காலம் என்பது நீண்ட சொப்பனம்' என்ற வரியைக் குறிப்பிட்டு, ``என்னுள் தெறித்து, நான் எழுதியிருக்கவேண்டிய வரி” என்று கவிஞர் பாதசாரி சிலாகித்ததைக் கண்டுதான் நூலை வாங்கினேன். ஏமாற்றவில்லை. பிரமிள், தேவதேவன் மற்றும் மனுஷ்ய புத்திரன் சாயைகளுடன் பல நல்ல கவிதைகளால் நிரம்பியிருக்கிறது தொகுப்பு. 

குறிப்பிடத்தக்க அம்சம் பேரியற்கையின் வண்ணம்தொட்டு வெண்தாளில் நிகழ்த்திய வானவேடிக்கையாய் ஜொலிக்கும் இதன் மொழிவீச்சு. சங்கப்பாடல் ஒன்றை நவீன நடையில் வாசிக்கும் பிரமையும் ஆங்காங்கே. சமீபத்தில் இவ்வளவு வசீகரமான சொற்செட்டை வாசித்த நினைவில்லை. குறைந்த பிழைகள். அழகான அட்டை!

பெரும்பாலும் காதல் பற்றிப் பேசும் கவிதைகளால் ஆனதுதான் இந்தத் தொகுப்பு என்றாலும், அவ்வப்போது சமூகக் கவலைகளும் படுகிறார்; மனதோடு அளவளாவுகிறார்; தத்துவங்களை விசாரிக்கிறார்.

`சொல்’ என்ற சொல், திரும்பத் திரும்ப வருகிறது (சொல்லில் வைத்தல், சொல்லை எடுத்து வருதல், அடைபட்ட சொல்). மரணம் நிறையவே பேசப்படுகிறது. அடிக்கடி மனிதர்கள் நட்சத்திரங்களாகிவிடுகிறார்கள். எங்கும் மஞ்சள் நிறம் நிரம்பியுள்ளது.

`உன்னுடைய மொழி / உன்னைக் கைவிடும்போது / நீ எழுதுவதை நிறுத்திவிடு', `உரத்த குரலில் / நான் முறையிடத் தொடங்கியபோது / கலாசாரத்தை மீறுவதாய்க் கூறி / சினந்தார்கள்', `கடவுள் என்னைப் படைத்தான் / கைமாறாக நானும் அவனைப் படைத்தேன்' என்று தொடங்கும் மூன்று கவிதைகள், தொகுப்பில் எனக்குப் பிடித்தவை. `அப்பா’, `அம்மாவிற்கு’, `நித்திலாவிற்கு’ (இரண்டும்) கவிதைகள் தனித்து நிற்கின்றன.

நீ என்னைக் காதலித்திருக்க வேண்டும்.
நீருக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிற ஒருவனைக்
கரைக்கு இழுப்பவனின் தீவிரத்துடன்.
கழுத்தெலும்பு உடைபட்ட குதிரையை
கருணைக்கொலை செய்பவனின்
அனுதாபத்துடன்.
முற்றிலும் இலைகள் உதிர்ந்த
ஒரு கருவேலமரத்தைப்போல,
எவரையும் கிழித்துவிடும்
கூரிய வன்மத்தின் முட்களோடு
நான் இருந்திருந்தாலும்,
கனிந்த முகத்தோடு
தனது மேடிட்ட வயிற்றைப்
பரிவோடு வருடுகிற
ஒரு கர்ப்பிணியைப்போல
நீ என்னைத் தொடர்ந்து நேசித்திருக்க வேண்டும்.

அவரது பாஷையிலேயே வழிமொழிவ‌தானால், `பொன்முகலி' , `சொற்களின் பேரரசி’!

கார்த்தி நடிப்பில் `தேவ்’ படம் கடந்த வாரம் வெளியானது. அதில் தாமரை `அணங்கே சிணுங்கலாமா…’ என்றொரு பாடல் எழுதியிருக்கிறார். வள்ளுவர் `அணங்குகொல்’ என்று `பெண் கடவுள்’ என்கிற பொருளில் பயன்படுத்தியிருந்தாலும் பொதுவாய் `அணங்கு’ என்றால் சினந்த பெண் தெய்வம். காளியைக் குறிக்கும்; கண்ணகியைக் குறிக்கும். மாலதி மைத்ரி அப்பெயரில் பெண்ணியப் படைப்புகளுக்கு எனப் பதிப்பகம் கண்டிருக்கிறார். வரி கேட்டவருக்கு முலையறிந்து இலையில் பரிமாறிய ஈழவப் பெண் நங்கேலியைக் குறியீடாக்கி நான் அப்பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.

மிக வலுவான சொல். இதில் போகிறபோக்கில் பிணங்கிச் சிணுங்கும் காதலியைக் குறிக்க அப்பதம் பிரயோகிக்கிறார் தாமரை. எதிர்ப்பொன்றும் வராதிருக்கக் கடவது. மற்றபடி, `எங்கடி நீ போனே…’ நெடுநாள் கழித்து எஸ்.பி.பி-யிடமிருந்து சுகமான ஒரு பிரிவாற்றாமைப் பாடல். `ஏழாம் அறிவு’ படத்தில் வந்த `யம்மா யம்மா…’ பாடலை நினைவூட்டுகிறது. அதே ஹாரிஸ் ஜெயராஜ் - எஸ்.பி.பி - கபிலன் கூட்டணி!

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களை கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு