பிரீமியம் ஸ்டோரி

தவைத் தட்டும்போது அப்படி யொரு குரல் கேட்கும் என்று நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை. தயங்கிய படியே வாசலில் நின்றிருந்தோம்.  மதியம் 3.30 மணியிருக்கும். வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை.  தபால் அலுவலகத்தை யொட்டிய சிறிய வீதி அது.

``வாசல்ல எந்த நாயோ வந்து கதவைத் தட்டிக்கிட்டு இருக்கு. கதவைத் திறந்து தொலைம்மா’’ என்று உள்ளிருந்து கனத்த ஆண் குரல் கேட்டது.

அடுத்த சில நிமிடத்தில் பச்சைக் கட்டம் போட்ட சேலை கட்டிய வயதான பெண் ஒருவர் மெதுவாக நடந்து வந்து கதவைத் திறந்தார். கதவு கிறீச்சிட்டது.

வாசலில் நின்றிருந்த எங்களை முறைத்துப் பார்த்தபடியே ``ஆரு வேணும்?’’ என்று கேட்டார்.

``நரசிம்மன் சார்’’ என்று சொன்னதும், அந்தப் பெண்ணின் முகம் இறுக்கமடைந்தது.

 ``உள்ளே போங்க’’ என்று பின்கட்டைக் காட்டினாள். 

தயங்கித் தயங்கி நாங்கள் மூவரும் உள்ளே நடந்தோம். ஹாலில் பிரம்பு நாற்காலி ஒன்றில் அழுக்கு உடைகள் கிடந்தன. ஆணியில் கறுப்பு நிற பேன்ட் தொங்கிக்கொண்டிருந்தது. ஓர் ஆள் தரையில் பாயை விரித்துப் படுத்துக்கிடந்தான். சட்டை அணியவில்லை. ஊதா நிற லுங்கி கட்டியிருந்தான்.  பருத்த அவனது தொப்பை நிறைய மயிர்கள். கழுத்துச் சதை சரிந்து தொங்கிக்கொண்டி ருந்தது. சிவப்பேறிய கண்கள். அவன் தலையைத் திருப்பி எங்களை முறைத்துப் பார்த்தான். 

சிற்றிதழ்: சிறுகதை

உள்ளறை ஒன்றில் டிவி ஓடிக்கொண்டி ருந்தது. ஒரு பெண், கட்டிலில் உட்கார்ந்து துவைத்த துணிகளை மடித்தபடியே டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீட்டின் சுவர்கள் பழுப்பேறி இருந்தன. ஜன்னல்களைக்கூடத் திறந்துவைத்திருக்க வில்லை. சுவரில் ஒரு சாய்பாபா காலண்டர் மட்டுமே தொங்கிக்கொண்டிருந்தது.

நீண்டோடிய  பழைய காலத்து வீடு. உள்ளே வடக்குப் பக்கமாக சிறியதோர் அறை. அதில் கிழிந்த சேலை ஒன்றை மறைப்பாகத் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்தச் சேலையை விலக்கிவிட்டு உள்ளே பார்த்தபோது, நரசிம்மன் ஸ்டீல் கட்டில் ஒன்றில்  உறங்கிக்கொண்டிருந்தார். முதுகில் வியர்த்து வழிந்திருந்தது. ஒரு கால், கட்டிலை விட்டு வெளியே எட்டியிருந்தது. நல்ல உயரம். கட்டில் அளவு போதவில்லை.  மெலிந்த கைகள். கதர் பனியனும் சாய வேஷ்டியும் அணிந்திருந்தார்.  அந்த அறையில் சின்னஞ்சிறிய ஜன்னல். 

டேபிள் ஃபேன் ஒன்று மர ஸ்டூலில் இருந்தது. அதுவும் ஓடவில்லை.  அவரை எழுப்புவதா வேண்டாமா என்ற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்படியே திரும்பிப் போய்விடலாம் என்று மோகன் சைகை காட்டினான். ஆனால், திருஞானம் அவரின் தோளைத் தொட்டு மெதுவான குரலில் ``அய்யா... அய்யா..!’’ என்று எழுப்பினான். அவர் ஆழ்ந்து உறங்கியிருக்கக்கூடும். அந்தக் குரல் அவரை எழுப்பவில்லை.

அறையில் சிறிய மண்பானை, கட்டிலின் அடியில் ஒரு தகரப்பெட்டி,  அருகில் சிறிய மரமேஜை. அதில் பாதி சாப்பிட்டு வைக்கப்பட்ட ஆப்பிள் பழத்தை  ஈ மொய்த்துக்கொண்டிருந்தது. நிறைய மாத்திரைகள், சூரண டப்பா கிடந்தது. கயிற்றுக்கொடியில் இரண்டு கதர்த்துண்டுகள்.

சுவரில் ஏதோ புத்தகம் ஒன்றிலிருந்து கிழித்து ஒட்டப்பட்ட பிரெஞ்சு கவிஞர் ரில்கேயின் புகைப்படம். இளவயது ரெய்னர் மரியா ரில்கே. அந்த அறையின் விநோதச் சூழலை ரில்கே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது போலிருந்தது.
ஐம்பது ஆண்டுகளில் நரசிம்மன் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்புத் தொகுப்பு. இரண்டு கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகள். அவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 

இதுவரை எந்த விருதும் அவருக்கு அளிக்கப் பட்டதில்லை. அவரது புத்தகம் எதற்கும்,  வெளியீட்டு விழா நடந்ததில்லை. புத்தகம் எதிலும், அவரின் புகைப்படம்கூட இருக்காது; சுயவிவரக் குறிப்பு எதையும் காண முடியாது.

இலக்கிய நிகழ்ச்சிகள் எதற்கும் அவர் அழைக்கப்பட்டதாக நினைவேயில்லை. ஆனால், தீவிரமாக இலக்கியம் வாசிப்பவர்கள் அவரை உன்னதமான கவிஞர் என்று நேசித்தார்கள். அடிக்கடி அவரது கவிதைகளை மேற்கோள் காட்டினார்கள்.

சிற்றிதழ்: சிறுகதை

கடந்த 15 ஆண்டுகளில் இலக்கியத்தின் போக்கு முற்றிலும் மாறிப்போனதால் நரசிம்மனைப் பற்றியோ, அவரது கவிதைகளைப் பற்றியோ அறியாத ஓர் இளம்தலைமுறை உருவாகி விட்டிருந்தது. அவர் உயிருடன் இருக்கிறார் என்பதுகூட எவரது நினைவிலும் இல்லை.

`முடிவிலி’ என்ற கவிதை இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட கவிதைகளை வாசித்தே, அவர்களும் நரசிம்மனை அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர் தங்கள் ஊரில்தான் வசிக்கிறார் என்பது  திருஞானத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன்தான் ‘தேடிப் போய் கவிதை கேட்போம்’ என்ற ஆலோசனையை முன்வைத்தான். அதற்காகவே வந்திருந்தார்கள்.

``அவர் தூங்கட்டும். நாம் போய்விடலாம்’’ என்று மெல்லிய குரலில் சொன்னேன்.

திருஞானம் அதை விரும்பாதவன்போல சத்தமாக ``அய்யா...’’ என்று மறுபடியும் அழைத்தான்.

அவர் விழித்துக்கொண்டவர்போல புரண்டு படுத்தார். தன் அறையில்  முன்னறியாத இளைஞர்கள் நிற்பதைக் கண்டு திகைத்ததுபோல அவரின் முகம் மாறியது. கண்களைக் கசக்கிக் கொண்டபடியே  கையை ஊன்றி எழுந்துகொள்ள முயன்றார்.  மார்பு எலும்புகள் புடைத்துக்கொண்டு தெரிந்தன. ஆள் மிகவும் ஒடுங்கிப்போயிருந்தார். பின்னந்தலையில் மட்டும் கொஞ்சம் நரைமயிர்.  தனது கண்ணாடியைத் தேடிப் போட்டுக்கொண்டு தலையணையைச் சற்று சாய்த்து வைத்தபடியே ``வந்து ரொம்ப நேரமாச்சா?’’ என்று கேட்டார்.

``இப்போதான் வந்தோம். நீங்க தூங்கிட்டிருந்தீங்க’’ என்றான் மோகன்.

``வெயிலு ஜாஸ்தியா இருக்கு… வெக்கை தாங்க முடியலை. கபீரைப் படிச்சுக்கிட்டிருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்’’ என்று, தன் தலையணை ஓரமாக இருந்த சிறிய ஆங்கில நூல் ஒன்றைக் கையில் எடுத்துக் காட்டினார்.

அந்த அறையில் பூச்சிமருந்தின் வாசனைபோல ஏதோ ஒரு வாசனை அடித்துக்கொண்டிருந்தது.

``உட்கார சேர் கிடையாது. அப்படியே தரையில உட்காருங்க. அந்த ஃபேனை ஓரமா தள்ளி வெச்சிருங்க’’ என்றார் நரசிம்மன்.

மூவரும் கட்டிலையொட்டியே உட்கார்ந்து கொண்டோம். அவர் எங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

திருஞானம்தான் சொன்னான், `` `அகவுலகு’ன்னு ஒரு சிற்றதழ் நடத்திக்கிட்டு இருக்கோம். அதுக்கு உங்ககிட்ட கவிதை கேட்கலாம்னு வந்தோம்.’’

``காலேஜ்ல படிக்கிறீங்களா?’’ என்று கேட்டார்

``நான் பழக்கடை வெச்சிருக்கேன். இவன் இன்ஜினீயரிங் படிச்சான். ஆனா முடிக்கலை. மோகன் டியூஷன் சென்டர் நடத்துறான்’’ என்றான் திருஞானம்.

``மூணு பேரும் எழுதுவீங்களா?’’ என்று கேட்டார் நரசிம்மன்.

``நாங்க ரெண்டு பேரும் கவிதை எழுதுவோம். இவன் டிரான்ஸ்லேட் மட்டும் பண்றான். போன இஷ்யூல கூட வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் டிரான்ஸ்லேட் பண்ணியிருக்கான்’’ என்று என்னை அடையாளம் காட்டினான்.

``நல்ல பொயட். நானும் வாசிச்சிருக்கேன்’’ என்றபடியே நரசிம்மன் ஏதோ யோசனையில் ஆழ்ந்துபோனார். அறைக்குள் வெக்கை தாங்க முடியவில்லை. வியர்வை கழுத்தடியில் வழிய ஆரம்பித்திருந்தது.

``பத்திரிகை பேரு என்ன சொன்னீங்க?’’ என்று கேட்டார் நரசிம்மன்.

``அகவுலகு’’ என்றான் திருஞானம்.

``நல்ல பேரு... எத்தனை இஷ்யூ வந்திருக்கு?’’

``மூணு. வரப்போறது நாலாவது. அதுக்குத்தான் கவிதை கேட்டு வந்திருக்கோம்’’ என்றான் திருஞானம்.

``நான் கவிதை எழுதுறதை விட்டு இருபது வருஷமாச்சு. அதான் உங்களை மாதிரி புதுசா நிறைய கவிஞர்கள் வந்துட்டாங்களே.. இனிமே நாங்க எதுக்கு? ’’

``அப்படியில்லையா... உங்க கவிதைகள் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். `சோடியம்’னு தமிழ்க் கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு வெச்சது சூப்பர்... அதுவும் ஐம்பது வருஷத்துக்கு முன்னாடியே! நீங்க எக்ஸ்பிரிமென்டலா நிறைய எழுதியிருக்கீங்க.  இன்னைக்கு உள்ள கவிதைக்கு அதுதான் முன்னோடி’’ என்றான் மோகன்.

``நான் கெமிஸ்ட்ரி  படிச்சவன். அந்த வாடை என் கவிதையில இருக்கத்தானே செய்யும்’’ என்று மெலிதாகப் புன்னகை செய்தார்.

``உங்க புத்தகம் எதுவும் இப்ப பிரின்ட்ல இல்லை. அதை ரீ-பிரின்ட் கொண்டு வரலாமே ’’என்று கேட்டான் மோகன்.

``யாரு படிக்கப்போறா? வெளியான காலத்துலேயே  நூறு பொஸ்தகம்தான் வித்துச்சு. ரெண்டாயிரம் வருஷக் கவிதை மரபு இருக்கிற தமிழ்மொழியில ஒரு கவிஞனோட பொஸ்தகம் ரெண்டாயிரம் விக்கிறது இல்லை. இதுதான் யதார்த்தம்’’ என்றார் நரசிம்மன்.

சிற்றிதழ்: சிறுகதை

``இப்பவும் கவிதைகள் குறைவா தான் விக்குது’’ என்றான் திருஞானம்.

அவர்கள் அறையை நோக்கி கனத்த காலடி ஓசையுடன்  யாரோ வரும் சத்தம் கேட்டது. நரசிம்மன் முகம் மாறியது.

ஹாலில் படுத்துக்கிடந்த அந்த ஆள் உரத்த குரலில் சொன்னான், ``எதிர்த்த வீட்டு வாசலையொட்டி பைக்கை நிறுத்தினது யாரு? முதல்ல அதை எடுங்க. அவங்க சத்தம் போடுறாங்க.’’

மோகன் எழுந்துகொண்டான்.

அந்த ஆள்,  நரசிம்மனை முறைத்தபடியே  திரும்பிப் போனான். அவன் உருவம் மறைந்தவுடன் நரசிம்மன் ஒடுங்கிய குரலில் கேட்டார், ``உள்ளே வரும்போது உங்களைத் திட்டினாங்களா?’’

திருஞானம் அமைதியாக இருந்தான்.

``இந்த வீட்ல யாருக்கும் என்னைப் பிடிக்காது. வெறுப்பு... இன்ன அளவுக்குன்னு சொல்ல முடியாத வெறுப்பு. யாராவது என்னைப் பார்க்க வந்துட்டா போதும். அவங்கமேலயும் விஷத்தைக் கக்குவாங்க. இப்போ போனானே அவன் என் மூத்த பையன். உள்ளே இருக்கிறது என் பொண்டாட்டி. ஒருத்தருக்கும் என்னைப் பிடிக்கலை. ஏன் சொல்லு... நான் படிக்கிறது எழுதுறது பிடிக்கலை. பொஸ்தகம் படிச்சிக் கெட்டுப்போயிட்டேனாம். அரைலூஸாம்.  இப்போகூட என் பென்ஷன் பணம் வரத்தான் செய்யுது. அதை வாங்கிச் செலவு பண்ணத்தான் செய்றாங்க. என்ன ஜென்மங்களோ...  இவங் களைத் திருத்த முடியாதுன்னு விட்டுட்டேன். வெறுப்புலயே வாழுறது இருக்கே... அது நரகம். தாந்தே நரகத்தைப் பற்றி எழுதியிருக்கானே அது எல்லாம் ஒண்ணுமேயில்லை. இந்த நரகம் எனக்குப் பழகிப்போச்சி.’’

``எங்க அப்பாவுக்கும் புத்தகம் படிக்கிறது பிடிக்காது’’ என்றான் திருஞானம்.

அதைக் கேட்டுத் தலை அசைத்தபடியே நரசிம்மன் சொன்னார், ``எல்லா வீட்லயும் அப்படித்தான். ‘புத்தகம் படிக்க ஆரம்பிச்சா, சுயசிந்தனை வந்துடும். அப்புறம் நாம சொல்றதைக் கேட்க மாட்டாங்க’ன்னு பயம். குடிகாரனைக்கூட வீடு அனுமதிக்கும்...  கவிதை எழுதுறவனை அனுமதிக்காது. அதுக்குப் பேருதான் பண்பாடு.’’

அதைச் சொல்லும்போது அவரின் குரலில் கோபமும் ஆதங்கமும் உக்கிரமாக வெளிப்பட்டன.

மோகன் பைக்கை ஓரமாக எடுத்து விட்டு உள்ளே வந்திருந்தான்.

அவன் தரையில் உட்கார முயன்ற போது நரசிம்மன் ``பானையில இருந்து கொஞ்சம் தண்ணி குடுப்பா’’ என்று கேட்டார்.

மோகன் பானைக்குள் டம்ளரை நுழைத்தான். பானையில் தண்ணீர் இல்லை.

``தண்ணீர் கேட்கட்டுமா?’’ என்றான் திருஞானம்

``யாரும் கொண்டுவந்து தர மாட்டாங்க. அப்படியே எழுந்து  சமையற்கட்டுக்குள்ளே போயி தண்ணி பிடிச்சிக் கொண்டுட்டு வா’’ என்றார் நரசிம்மன்.

திருஞானம் மண்பானையை எடுத்துக்கொண்டு சமையற்கட்டை நோக்கி நடந்தான்.

தலை கவிழ்ந்தபடியே நரசிம்மன் சொன்னார், ``மனுஷன் ரொம்ப நாள் வாழக் கூடாதுப்பா. வாழ்ந்தா எல்லா அவமானத்தையும் பட்டு தான் ஆகணும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் பாத்ரூம்ல  வழுக்கி விழுந்துட்டேன். இடுப்பு எலும்பு உடைஞ்சிபோச்சி.  மூணு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். சரியாகி வீட்டுக்கு வந்து பார்த்தா, ஒரு பொஸ்தகம் இல்லை. எல்லாத்தையும் தூக்கி பழைய பேப்பர் காரன்கிட்ட போட்டு ட்டாங்க. என்னாலே அதைத் தாங்க முடியலை. அழுதேன்.

`இனிமே படிச்சி என்ன செய்யப் போறீங்க?’ன்னு கேட்கிறான் மகன். படிக்கிறதுக்கு வயசு இருக்கா என்ன? இப்படி ஒரு முட்டாப்பயலைப் பெத்து வெச்சிருக்கேன்னு தலையில அடிச்சுக்கிட்டேன்.  பொஸ்தகம் மட்டுமில்லை. கவிதை எழுதி வெச்சிருந்த நோட்டு, பழைய டயரி எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டாங்க.  நான் செத்து ப்போன பிறகு என்ன நடக்குமோ, அதை முன்னாடியே பார்த்துட்டேன்.  நல்லவேளைக்கு பழைய வேஷ்டி வைக்கிற பெட்டியில நாலு பொஸ்தகம் வெச்சிருந்தேன். அதுதான் மிச்சம். அதைத்தான் திரும்பத் திரும்பப் படிச்சுக்கிட்டே இருக்கேன். பொஸ்தகம் எப்போ என்னை விட்டுப் போச்சோ. அப்பவே நான் சவம்.  வெறும் சவம். பொணம்தான் பொஸ்தகம் படிக்காது.’’

அதைச் சொல்லி முடிக்கும்போது அவரின் கண்களில் நீர் வழிந்தது. புறங்கையால் அதைத் துடைத்தபடியே சொன்னார், ``உங்களுக்கு என் பேரன் வயசுதான் இருக்கும். தாத்தன் மாதிரி சொல்றேன், படிக்கிறது எழுதுறதுன்னு எல்லாம் போதும். நீங்களாவது புத்தியோடு வாழுங்க.’’

இதே அறிவுரைதான் வீட்டிலும் சொல்கிறார் கள் என்ற எரிச்சலில் மோகன் சொன்னான், ``யாருக்காகவும் என்னை மாத்திக்கிட முடியாது.’’

நரசிம்மன், மோகனை வெறித்துப்பார்த்த படியே இருந்தார். பிறகு, ஒப்புக்கொள்பவர்போல சொன்னார், ``நானே அப்படித்தானே இருக்கேன். ஏதோ ஆற்றாமையால சொல்லிட்டேன். என் கதையை விடுங்க. உங்களைப் பற்றிச் சொல்லுங்க. சிற்றிதழ் நடத்த இதுவரைக்கும் எவ்வளவு கைக்காசு செலவு செய்திருக்கீங்க?’’

``20,000-க்கும்மேல இருக்கும்’’ என்றான் திருஞானம்.

``உங்களை மாதிரி நான் எந்த எழுத்தாளரையும் தேடிப் போய்ப் பார்த்ததில்லை. கூச்சம், பயம். கவிதை எழுதுறவனுக்கு எதுக்கு தோழமைங்கிற நினைப்பு. வாசகர் யாராவது கவிதை நல்லாயிருக்குனு பாராட்டினாகூட கூச்சமாதான் இருக்கும். நான் அம்மணமா குளிக்கிறதை, யாரோ பார்த்துட்ட மாதிரி தோணும்.’’

``புகழைக் கேட்டுக் கூச்சப்படுறதெல்லாம் உங்க காலத்தோடு முடிஞ்சிபோச்சு’’ என்றான் மோகன்.

``தம்பி வந்ததுலயிருந்து ஒரு வார்த்தைகூடப் பேசலை. டிரான்ஸ்லேட்டர்னா பேசக் கூடாதா?’’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார் நரசிம்மன்.

``எனக்குப் பேசத் தெரியாது’’ என்றேன்.

``நானும் அப்படித்தான் இருந்தேன். வீடு படுத்தின பாட்ல இப்போ லொடலொடன்னு உளறிக்கிட்டே இருக்கேன். ’’

``பிடிக்காத வீட்ல எதுக்காக இருக்கீங்க... தனியா போயி இருக்கவேண்டியதுதானே?’’ என்று கேட்டான் மோகன்.

``பயம். தனியா இருக்க பயம். அதுக்காகத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பயத்திலிருந்து விடுபடுறதுக்குப் பதிலா, பயத்தை வளர்த்துக் கிட்டே இருந்திருக்கேன். இப்பவும் பயம் போகலை.’’

``செத்துப்போயிருவோம்கிற பயமா?’’

``இல்லைப்பா... வாழத் தெரியலைங்கிற பயம். சோடியம் இருக்கே. அது தண்ணியோடு சேர்ந்தா நெருப்பு வந்துரும். அது இயல்பு. நான் அப்படியான ஆளு. தண்ணியோடுகூட சேர முடியலை.’’

``ஒருவேளை பெரிய கவிஞரா நீங்க அங்கீகரிக்கப்பட்டிருந்தா... வீடு ஏத்துக்கிட்டி ருக்குமா?’’ என்று கேட்டான் மோகன்.

``பணம், பேரு, புகழ் இல்லை பிரச்னை. `உனக்கு மட்டும் ஒரு உலகம், உனக்கு மட்டும் ஒரு ரசனை எதுக்கு இருக்கணும்?’னு வீடு நினைக்குது. அதை விட்டுட்டு நானும் டிவி சீரியல் பார்த்துக்கிட்டு, ஊர்வம்பு பேசிக்கிட்டு, அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் பட்டிருந்தா வீடு ஏத்துக்கிட்டிருக்கும். நமக்கு நடக்கிற பெரும்பாலான அனுபவங்கள் வெளிப்படுத்த முடியாதவை. எந்த வார்த்தையும் நுழையாத வெளியில்தான் அது நிகழுதுன்னு ரில்கே சொல்றான்.  அதை முழுசா உணர்ந்திருக்கேன். உடம்பா நான் நரசிம்மன். வயசு 82. ஆனா, கவிஞனா என் வயசு 2,000-த்துக்கும்மேல.  நான் சொல்லில் வாழுறவன்; என்னை, சொல்லுக்குள் ஒளித்துவைத்துக் கொள்பவன். ஒவ்வொரு சொல்லும் ஒரு குகை. அதுக்குள்ளேதான் நான் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கேன். ’’

திருஞானம், வியப்போடு அவரைப் பார்த்துக் கொண்டி ருந்தான். திடீரென அவரது தோற்றம் உருமாற்றிவிட்டதைப் போன்றிருந்தது. சமையற் கட்டை நோக்கிச் சென்ற நரசிம்மனின் மனைவி சத்தமாகச் சொன்னாள், ``வெட்டிக் கதை பேசினதெல்லாம் போதும்... கிளம்புங்க.’’

சட்டென விளக்கின் சுடர் அணைக்கப்பட்டது போல நரசி ம்மனின் பேச்சு ஒடுங்கியது. இருள் கவிழ்ந்துவிட்டதைப் போலவே உணர்ந்தோம்.

``கிளம்புறோம்யா’’ என்றான் மோகன். அவர் சுவரைப் பார்த்துத் திரும்பியபடியே மௌனமாகத் தலையாட்டினார். ஏமாற்றத்தை மறைக்க விரும்பியவனைப்போல  திருஞானம் பானையிலிருந்து தண்ணீர் மோந்து குடித்தான்.
நரசிம்மன் மெல்லிய குரலில் கேட்டார், ``எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?’’

``சொல்லுங்கய்யா.’’

``வீட்டை விட்டு வெளியே போயி வருஷக் கணக்காகுது. வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றிக்கிட்டு வீட்டுக்குள்ளேயே நடந்துக்கிட்டி ருக்கேன். என்னைத் தெருமுனை வரைக்கும் கூட்டிக்கிட்டுப் போய் வர முடியுமா?’’

``போகலாம்யா.’’

``சிரமம் ஒண்ணும் இல்லையே!’’

``முக்குக் கடையில போயி டீ குடிக்கலாம்யா’’ என்றான் மோகன்.

அவர் எழுந்துகொண்டார். இப்போதுதான் அவரின் உயரம் முழுமையாகத் தெரிந்தது. ஆறடிக்கும்மேல்.  ஊன்று கோலைக் கையில் பிடித்தபடியே கழுத்தை இட வலமாகத் திருப்பிக்கொண்டார்.

பிய்ந்துபோன ரப்பர் செருப்பு ஓரமாகக் கிடந்தது. அதை அணிந்துகொண்டபடியே அறையிலிருந்து வெளியேறினார்.

ஏதோ யோசனைக்குப் பிறகு தனது ஊன்றுகோலை ஓரமாக வைத்துக்கொண்டு என் தோளில் கை போட்டுக்கொண்டார்.

``நீயும் என்னைப்போல உசரம். என்னைப் பிடிச்சி க்கிடுவேல்ல’’ என்று கேட்டார்  நரசிம்மன்.

தலையாட்டினேன். வயதான தந்தையை அழைத்து ப்போவதைப்போல அவரை நடத்திக் கூட்டிக்கொண்டு போகத் தொடங்கினேன். ஹாலைக் கடக்கும்போது அந்தப் பெண் சத்தமிடுவது கேட்டது. ``இந்தா, எங்க போற...  ரோட்ல விழுந்து சாகுறதுக்கா? சொன்னா கேளு... உள்ளே போ.’’

அவர் அந்தக் குரலை சட்டைசெய்யவில்லை.   ``வீட்டை விட்டுப் போனா... அப்படியே போயிடு’’ என்று அந்தப் பெண் கத்திக்கொண்டிருப்பது கேட்டது. வாசலுக்கு வந்தபோது தெருவை வெறித்துப் பார்த்தார். அவருக்குக் கண்கள் கூசின. என் தோளை அழுத்திப் பிடித்தபடியே தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

``வேற ஊரு மாதிரி இருக்கு... தெரு ரொம்பச் சின்னதாகிட்டதா தோணுது’’ என்றார்.

நாங்கள் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நரசிம்மன் மிக மெதுவாக நடந்தார்.  பத்தடி நடந்த பிறகு, திரும்பி வீட்டைப் பார்த்தார். பெருமூச்சு விட்டபடியே சொன்னார், ``நான் கட்டின வீடு. எனக்கே அதைப் பார்த்தா பயமா இருக்கு.’’

திருஞானம் அதைக் கேட்டுச் சிரித்தான். என்னால் சிரிக்க முடிய வில்லை. நாங்கள் தெருமுனைக்கு வந்தபோது வெயில் வடிந்து கொண்டிருந்தது. பள்ளி விட்டு, சிறார்கள் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

முக்குக் கடையில் பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

நரசிம்மன், பள்ளிச்சிறார்களை ஆசையாகப் பார்த்துக்கொண்டி ருந்தார். பிறகு ஆதங்கத்துடன் சொன்னார், ``என்னோட எழுத ஆரம்பிச்சவங்க எல்லோரும் போய்ச் சேர்ந்தாச்சு. நான் ஒருத்தன்தான் பாக்கி.  இந்தத் தலைமுறைக்கு எங்களை யாரையும் தெரியாது. உங்களை மாதிரிதான் நாங்களும்  20 வயசுல ட்ரிப்ளிகேன்ல ரூம் எடுத்துக்கிட்டு ராப்பகலா கவிதையைப் பற்றிப் பேசிக்கிட்டு இருந்தோம். சிற்றிதழ் நடத்தினோம். என் கவிதைகள் எல்லாமே சிற்றிதழ்ல வந்ததுதான். பெரிய பத்திரிகை எதுவும் என்கிட்ட கவிதை கேட்கவேயில்லை. சிற்றிதழ்ங்கிற வார்த்தையே எவ்வளவு அழகா இருக்கு, காட்டுப்பூ மாதிரி.  சிற்றதழ்ங்கிறது சிற்றோடை மாதிரி. அதுக்குள்ள மட்டுமே வளர்ற மீனு இருக்கும். அதைக் கடல்ல கொண்டு விட்டா செத்துப்போயிடும். நான் அப்படித்தான்’’ என்றபடியே தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிலிண்டர் ஏற்றிக்கொண்டு மூன்று சக்கர வண்டி ஒன்று கடந்து போனது. அந்த வண்டி எழுப்பும் சத்தத்தை குழந்தையைப்போல ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் நரசிம்மன். பிறகு, திருஞானத்தைப் பார்த்துச் சொன்னார், ``யாராவது நம்மைப் பார்ப்பாங்கன்னு நினைச்சா நட்சத்திரம் ஒளிர்ந்துகிட்டு இருக்கு, தன்னை வெளிப்படுத்திக்கிடுறதுதான் அதோட சந்தோஷம். கவிஞனும் அப்படித்தான். நீங்க எல்லாரும் என்னைப் பார்க்க வந்தது சந்தோஷம். எனக்கு டீ வேணாம். குடிச்சா, நெஞ்சு எரியும். ரொம்ப நாளா ஒரு கவிதை எழுதணும்னு தோணிக்கிட்டே இருக்கு. மனசுல நாலைந்து வரி ஃபார்ம் ஆகியிருக்கு. அதைச் சொல்லட்டும்மா?’’

இருபது ஆண்டுகள் எதையும் எழுதாத மனிதர், தன் மனதின் மூலையிலிருந்து பீறிடும் சுனையின் தண்ணீரை அள்ளித் தருவதைப்போல நடுங்கும் குரலில் தன் கவிதையின் மூன்று வரிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். டீக்கடைப் பாடலின் உரத்த ஓசையில் அது தெளிவாகக் கேட்கவில்லை. அதை அவரே உணர்ந்திருக்கக்கூடும். சட்டென கவிதை சொல்வதை நிறுத்திவிட்டு ``என்னை வீட்ல விட்ருங்க’’ என்றார்.

நான் அவரை வீட்டில் விட்டு வருவதாகச் சொன்னேன். மோகன் தலையாட்டினான்.

வீட்டின் வாசல் வரை வந்தவர்,  படியேறும் போது சொன்னார், ``இப்படி என்னைப் பார்க்க வராதீங்க. யாராவது பார்க்க வந்தாதான் மனசு ரொம்பக் குற்றவுணர்வாகுது. நான் செத்துட்டேன்னு நினைச்சுக்கோங்க.. அதுதான் நீங்க எனக்குச் செய்ற உபகாரம்!’’

நரசிம்மன் படியேறியதும் உள்ளே அந்தப் பெண்ணின் கோபக்குரல் கேட்டது. அவர் நடுங்கிய கால்களுடன் தள்ளாடியபடியே உள்ளே போய்க்கொண்டிருந்தார்.

- எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு